அத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்

அரசர்களும் ராஜ்யங்களும் நிறைந்த அரச கதைகள் கேட்பதென்பது எல்லாருக்கும் சிறு வயதில் பிடித்தமானதொன்றே. எனக்கும் என் பத்தாவது வயதில் ஏற்பட்டிருந்த இந்த மோகத்துக்கு அம்புலிமாமாவும் அதில் வெளியாகி வந்த அரச கதைகளும் பெருந்துணை செய்தன. அதே நேரம் எமக்கும் பாடமாக இருந்த வரலாறும் அதனை சுவாரஸ்யமாக கற்றுத்தந்த ஆசிரியர்கள் சண்முகராஜாவும், கோபியும் வரலாற்றுப் புதினங்களை வாசிப்பதில் பெரும் ஆவலை தூண்டியிருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக அப்போது ஏதோ வெறி பிடித்ததுபோல பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வேங்கையின் மைந்தன், பாண்டிமாதேவி, பார்த்திபன் கனவு என்று வாசித்து தள்ளியிருக்கின்றேன். எல்லா விதமான பொழுது போக்குகளும் தடுக்கப்பட்டிருந்த அந்த காலத்தில் சாரத்தை, அல்லது போர்வையை தோளில் கட்டியபடி, மரக் கொப்புகளை வெட்டி செய்த வில்லும், அம்பும், வாளுமாக கையிலேந்தியபடி வீட்டுப் பின் வளவுகளில் நானும் சகோதரர்களும் அலைந்திருக்கின்றோம். வரலாற்று நாயகர்களையும், அவர் வீரப் பிரதாபங்களையும் பேசிப் பேசியே இறுமாந்திருந்த அந்த நாட்களின் பசுமை இப்போதும் அடிமனதில் இருக்கின்றது.

ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கின்றபோது வரலாற்றுப் புதினம் என்பதே தாம் நிலை நிறுத்த விரும்பிய ஒருவனின் புகழை கூறுவதற்காக புனையப்பட்டதொன்றே என்று புலனாகின்றது. வரலாறு என்பது கூட அதுதானே? எந்த நாட்டின் வரலாறு உண்மையை மட்டும் பேசுகின்றது? அப்படி பேசுவது சாத்தியமான ஒன்றுதானா? அமெரிக்க புகழ் பாடும் ஊடகங்களில் “சே” எப்படி சித்திகரிக்கப்பட்டுள்ளார்? இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்ட வி.பி.சிங் இறந்தபோது இந்தியா டுடேயில் அவர் பற்றி வெளியான செய்தி எல்லாருக்கும் நினைவில் இருக்கும் என்று நினக்கின்றேன். இதே வகையில்தான் ஒரு காலத்தில் என் கனவு நாயகர்களாகவே இருந்த ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலமும் இருந்திருக்கின்றது என்று பின்னாளில் தெளிவாக புரிந்து கொண்டேன். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய திருஞான சம்பந்தர்தான் சமணர்களை தூக்கிலேற்ற தூண்டினார் என்பதை ”சம்பந்தர் செய்த் அற்புதங்கள்” என்று பட்டியலிட்டு எழுதி புள்ளிகளும் பெற்றிருக்கிறோம் என்று நினைக்கும்போதே வெறூப்பாக இருக்கின்றது. ஏனைய மதங்களின் வரலாற்றுப் பக்க்கங்களை திருப்பியபோதும் இது போன்ற அதிர்ச்சிகளே காத்திருக்கின்றன. இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் எல்லாம் மன்னர்களின் வரலாறுகளே தவிர மக்களின் வரலாறுகள் இன்னும் எழுதப்படவே இல்லை. மன்னர்களின் வரலாறுகள் கூட வென்றவர்களின் பார்வையில்தான் கதை சொல்கின்றனவே தவிர தோற்றுப்போனவனின் வரலாறும், சிறுபான்மையினரின் வரலாறும் கூட எழுதப்படவில்லை. இந்த வகையில்தான் நான் அண்மையில் வாசித்த தேவகாந்தன் எழுதிய “கதாகாலம்” என்கிற மகாபாரதத்தின் மறு வாசிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

-2-

மகாபாரதக் கதையை தெரியாதவர்கள் எவரும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை அதை முழுதாக தெரிந்தவர்கள் எவரும் இல்லை என்பதும். வேத காலத்தின் இறுதியில் நடந்ததாக சொல்லப்படும் இந்தக் கதை இன்று வரை கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகையில் “தர்மத்தின் வாழ்வதை சூது கவ்வும்; தர்மம் வெல்லும்” என்ற அறத்தை காக்கும் நோக்கில் அதன் நாயக்ர்களாக சொல்லப்படும் பாண்டவர்களும், கிருஷ்ணனும் அதிகம் புனிதப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் தேவகாந்தனின் மீள்வாசிப்பில் கதை சொல்லிகள் கதையை வாழ்வியல் யதார்த்ததுடன் அணுக்கமாக, அதன் கதை மாந்தர்களை எல்லா மனிதர்களைப் போலவே நல்ல, தீய குணங்கள் நிரம்பியவர்களாக சொல்லிச் செல்லுகின்றார். அதைவிட முக்கியமாக, பாரதக் கதை நடப்பதில் முக்கிய பங்கெடுத்த, ஆனால் மற்றைய பிரதிகளில் பெரிதும் பேசப் படாத கதை மாந்தர்களான சத்தியவதி (மச்ச கந்தி), அம்பை (சிகண்டி), காந்தாரி, குந்தி, திரௌபதி, சகாதேவன், சுபத்திரை போன்றவர்களின் உணர்வுகள் பெரிதும் பேசப்படுகின்றன. பாரதக் கதையை கண்ணன் நடத்தினான் என்று கண்ணனை தெய்வமாக்கி இதிகாசங்கள் சொல்ல, பாரதக் கதையை அத்தினாபுரத்துப் பெண்களே நடாத்தினார்கள் என்றும் கண்ணன் தந்திரம் மிகுந்த, அர்ச்சுணனின் நண்பன் மாத்திரமே என்று சொல்லி கதையை கொண்டு செல்கின்றார் தேவகாந்தன்.

-3-

கதையில் பிடித்த சில பக்கங்கள்

காந்தாரி

தன் கணவனுக்கு கண் தெரியாது என்று தன் கட்புலனை இறக்கும்வரை துறந்தவள் காந்தாரி என்று சொல்லி காந்தாரியை “தாம் எதிர்பார்ர்கும்” பெண்மையின் இலக்கணம் என்று சொல்வதை கேட்கும்போதெல்லாம், கணவனுக்காக பார்வை துறந்தாள்; சரி. ஆனால் தானும் பார்வையை மறுத்ததால் தம் பிள்ளைகளை சரியாக வளர்க்காமல் விட்ட பழி அவளுக்குரியதுதானே? என்று யோசித்திருக்கின்றேன். ஆனால் காந்தாரி தான் கண் தெரியாத திருடராஷ்டிரனைத்தான் கல்யாணம் செய்யப்போகிரேன் என்று தெரியாமல் பீஷ்மக் கனவுகளுடன் இருந்தவள் என்றும், அதற்கான எதிர்ப்பாகவே தன் கண்களை மறைத்து துணிகட்டி மணவறை வந்தாள் என்றும் சொல்லும்போது அதிகாரத்துக்கு எதிரான சற்றுப் பலவீனமான எதிர்க்குரலாகவே காந்தாரி தெரிகின்றாள். “இதுபற்றிக் கேட்டபோது “திருடராஷ்டிரன் சாம்பிப் போனான். அவள் தன்னையோர் அபாக்கியவதியாய்ச் சபையில் அடையாளப்படுத்தியதாய் அவன் எண்ணிப் புழுங்கினான். ஆனால் சபையோ அவளின் பதி பக்தியாய் அதைக்கண்டு மெய் மறந்திருந்தது.-பக்.21)”

குந்தி

பாரதக் கதையை பொறுத்தவரை அதீதமான அமானுஷ்யத் தன்மை வாய்ந்த கதாபாத்திரமாகவே குந்தியின் பாத்திரத்தை பார்க்கமுடிகின்றது. ஆனால் கதாகாலத்தில் வரும் குந்தியோ தொடர்ச்சியாக கட்டுடைக்கப்படுகின்றாள். (ஒரு வாசகனாக பாரதத்தை வாசித்தபோது குந்தி பற்றி என்னுள் உருவாகியிருந்த விம்பம் கதாகாலத்தில் வரும் கட்டுடைக்கப்பட்ட குந்தி பாத்திரமே). முதலில் குந்தி புத்திரர்களை எடுத்துக்கொள்வோம். குந்தி துர்வாச முனிவருக்கு செய்த பணிவிடையால் மகிழ்ந்த அவர் கொடுத்த வரம் மூலமே அவளுக்குப் பிள்ளைகள் பிறந்தன என்பதே இதுவரை சொல்லப்பட்டது. ஆனால் கதாகாலத்தில் துர்வாசருக்கு பணிவிடை செய்த நாட்களில் ஏற்பட்ட இயற்கையான உடல் உறவின்மூலமே குந்தி கர்ப்பமாகி கர்ணனை ஈன்றாள் என்றும், அவள் கருவுற்று இருந்ததால்தான் யாககாலம் முடிந்து துர்வாசர் வெளியேறிய பின்னரும் கூட அவள் அங்கேயே தங்கி இருந்து கர்ணனை ஈன்று ஆற்றோடு போகவிட்டாள் என்றும் சொல்லப்படுகின்றது. (தகாப் புணர்ச்சியின் விளைவுகளை தாய் தன் குழந்தையில் சுமத்திவிட்டு தப்பிக்கொண்ட தருணம் அது – பக்.24) இதே வகையில்தான் உறவுகொள்வதற்கான உடற்தகுதி அற்ற பாண்டுவின் மறைமுகமான ஆதரவுடன் வனவுலா சென்று பிறருடன் கூடி பிற மூன்று பிள்ளைகளையும் ஈன்றாள் (அந்நாட்களில் வழக்கத்தில் இருந்த நியோகம் எனும் முறை இது).

குந்தி பற்றிய இன்னுமொரு விபரிப்பு மாத்ரி, பாண்டுவுடன் உடன் கட்டை ஏறியபோது சொல்லப்பட்டுள்ளது. மாத்ரியுடன் உடல் நிலை இடம் தராதபோதும் பாண்டு கூடலில் ஈடுபட்ட்தே அவன் இறப்புக்கு காரணம் என்று சொல்லி குந்தி எழுப்பிய இழிமொழிகள் கேட்க முடியாதே மாத்ரி சிறு குழந்தையாக இருந்த சகாதேவனின் கண் முன்னரே தீயில் வீழ்ந்து இறந்தாள் என்றும் அன்று உணர்ந்த சோகமும் தனிமையுமே சகாதேவனை ஞானத்தேடலில் ஆழ்த்திற்று என்றும் சொல்கிறார். சற்று யோசித்தால், வம்ச விருத்திக்கான உடல்நிலையான தகுதி இல்லாதவன் பாண்டு. இது தெரிந்தும் அத்தினாபுர பெரியோர்கள் குந்தி மேல் பழி போட்டு மறுதாரமாய் மாத்ரியை மணம் செய்துவைக்கின்றனர். இன்று நடப்பதும் இதுதானே? அசுவத்தாமா மட்டுமல்ல, குந்தியும் இன்று வாழ்ந்துகொண்டே இருக்கிறாள்.

கணவனை இழந்து நாடு திரும்பிய குந்தி அங்கு தன் பிள்ளைகள் இரண்டாம் பட்சமாய் நடத்தப்படுவது கண்டும், தன் பிள்ளைகள் பாண்டுவின் புத்திரர்கள் என்ற பொருள்பட ”பாண்டவர்” என்று மட்டும் அழைக்கப்பட காந்தாரியின் புத்திரர்கள் “கௌரவர்கள்” என்று, மரியாதைக்குரியவர்கள் என்று பொருள்பட அழைக்கப்படுவது கண்டு மனம் வேகுகின்றாள். இதற்கு காரணம் பாண்டவர்கள் பாண்டுவுக்குப் பிறக்காமல், தானும் மாத்ரியும் செய்த “வனவுலா”வின் விளைவால் பிறந்தவர்கள் என்பதை சத்தியவதியும், பீஷ்மனும் அறிந்திருப்பார்களோ என்றும், முழுமையான அரச குலப் பெண் இல்லை என்பதால்தான் இப்படி ஓரங்கட்டப்படுகின்றோமோ என்றும் பலவாறாக சந்தேகித்து, முடிவாக இனி தன் பணி பாண்டவர்கள் ஐவரையும் அத்தினாபுர மன்னர்களாக ஆக்குவதொன்றே என்று தீர்க்கமாகின்றாள். தம் வாழ்வின் இன்பங்கள் எல்லாம் தம் மணவாழ்வினால் பறிக்கப்பட்ட இரண்டு பெண்களான காந்தாரியும், குந்தியும் தம் பிள்ளைகள் அத்தினாபுர அரசுக்கட்டேற வேண்டும் என்று காய் நகர்த்தினார்கள். ஒரு நல்ல எச்சம் பாரதக் கதை. மோசமான எச்சம் ஏறத்தாழ குருவம்சம் முழுதுமே அழிந்தது ஒன்று. நல்லது நடக்க வேண்டும் என்று எத்தனை தீயதும் செய்யலாம் என்ற மோசமான நீதி சொல்லப்பட்டது.

திரௌபதி

பாரதக் கதையை வாசிக்கும்போது திரௌபதிக்கு இழைக்கபட்ட அநியாயத்தை எத்தனை பேர் யோசித்துப் பார்த்திருக்கின்றோம். சுயம்வரத்தின்போது தகப்பன் அவளை தான் வைத்த வீர விளையாட்டிற்கான பரிசுப் பொருளாக்கினான். சூதட்டத்தின்போது தர்மன் அவளை தன் உடமைப் பொருளாக்கினான். திரௌபதி என்ற பெண்ணை பெண்ணாக யார் பார்த்தார்கள்?. ஐவீரும் ஒருவீராய் …. என்று அன்னை சொன்னதின் வழியொழுகினார்கள் என்று உரை எழுதுவதை விடுத்து, அன்னை சொன்னால் கூட ஏற்க முடியாத அறம் இதென்றல்லவா பாண்டவ புத்திரர்கள் மறுத்திருக்கவேண்டும். பாடசாலையில் பரிசாக பெற்றுவரும் விளையாட்டுக் காரை “எல்லாரும் சேர்ந்து விளையாடவேண்டும்” என்று அம்மா சொல்வதுபோல அல்லவா குந்தியும் சொல்கின்றாள். ஒவ்வோராண்டும் ஒவ்வொருவருக்கு அவள் உடமை என்று முறை வைத்துக் கொண்டார்களாம். இதனால், ஒருவனின் கருவை தாங்கிய நிலையில் இன்னொருவனின் உடமையாக போகின்றாள் திரௌபதி. எவ்வளவு கொடுமை இது. திரௌபதி சிரித்ததற்கான பழிவாங்கலே சூதாட்டம் என்றால், ஒரு கேலிச் சிரிப்பும் ஒரு துகிலுரிவும் நேர் சமமா?. சூதாட்ட அவையிலே அதிகம் அவமானப் பட்டவள் திரௌபதி. தீர்க்கமுடியாத அவமானம் அது. அதனால்தான் அவள் பாண்டவர்களுக்குள் இருக்கும் பழிவாங்கும் நெருப்பு வனவாசம், அஞ்ஞாத வாசம் என்று அணைந்துவிடக்கூடாது என்று அவர்கள் கூடவே சென்று, சூதாட்ட சபையிலே செய்த சபதங்களை தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தாள் என்று கதாகாலத்தில் கதை சொல்லி சொல்வது யதார்த்தமானதாகவே இருக்கின்றது. விராட நாட்டில் போரில் அர்ச்சுணன் வெளிப்படுகிறான். அஞ்ஞாதவாச காலம் முடியமுன்னரே அர்ச்சுணன் வெளிப்பட்டான் என்ற சலசலப்பு எழுகின்றது. தர்க்கரீதியாக அந்தக் குற்றச்சாற்று சரியானதே என்று சகாதேவனும் உணர்கின்றான். இதை அறிந்த திரௌபதி சகாதேவனிடம் சென்று பேசிவிட்டு பின் கிருஷ்ணனிடமும் பேசுகின்றாள். அப்போதெல்லாம் அவளுக்கு எந்த சமரசமும் ஏற்பட்டுவிடாமல் நிச்சயம் போர் நடைபெறவேண்டும் என்ற முனைப்பே இருக்கும். இதை தேவகாந்தன் “கூந்தல் அவளைச் சிறைப் பிடித்துள்ளதாய்க் கண்டுகொண்டிருந்தான் கிருஷ்ணன்” என்பார். அதாவது பழிவாங்கும் உணர்ச்சி அவளுக்குள் இருக்கவில்லை. பழிவாங்கும் உணர்ச்சிக்குள் அவள் மூழ்கிப் போய் இருந்தாள் என்கிறார். இறுதியில் சத்தியவதியிடமிருந்து காந்தாரிக்கும், குந்திக்கும், பின் திரௌபதிக்கும் தாரைவார்க்கப்பட்ட அத்தினாபுரத்து சோகங்கள் எல்லாம் திரௌபதியிடமிருந்து உப பாண்டவர்களின் மனைவியருக்கும், அபிமன்யு மனைவி உத்தரைக்கும் தாரைவார்க்கப்படுகின்றன.

……………………………………மீதி அடுத்த பதிவில்

33 thoughts on “அத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்

Add yours

 1. ஆரியர்களால் பெருமையாக கருதப்படும் மகாபாரதம் மற்றும் ராமாயணம் இரண்டுமே தகாத உறவையே எடுத்துக் காட்டுகின்றன. இதையெல்லாம் ஒரு காலத்தில் ஆவலாக வாசித்தேன் என்று என்னும்போது என் முகத்தில் நானே காரி உமிழாலாமோ என்று தோன்றுகிறது

  Like

 2. பவுத்தறிவு என்று கேனத்தனமாக தேவகாந்தனும் நீங்களும் உளறுகிறீர்கள்

  Like

 3. //i don't like this one//பிடிக்கவில்லை என்று மொட்டையாக சொல்வதைவிட, ஏனென்று சொன்னால் தொடர்ச்சியான புரிதல்களுக்கு உதவும் என்று நினைக்கின்றேன்

  Like

 4. வணக்கம் இதிகாசம்/மகாபாரதம் மற்றும் ராமாயணம் இரண்டுமே தகாத உறவையே எடுத்துக் காட்டுகின்றன. இதையெல்லாம் ஒரு காலத்தில் ஆவலாக வாசித்தேன் என்று என்னும்போது என் முகத்தில் நானே காரி உமிழாலாமோ என்று தோன்றுகிறது/தகாத உறவுகளைவிட, அடிமைத்தனம், போர் வெறி, இப்படி எத்தனையோ…நானும் இப்போ அப்படி தான் உணர்கின்றென். ஆனால் உண்மையில் நடண்டஹ் விடயத்தை காலத்துக்கு காலம் ஹீரோ வேர்ஷிப்புக்காக இவர்கள் புகழ்ந்து திரித்தும் இப்படி நேர்ந்திருக்கலாம்

  Like

 5. //பவுத்தறிவு என்று கேனத்தனமாக தேவகாந்தனும் நீங்களும் உளறுகிறீர்கள்//என்னால் உங்களை புரிந்து கொள்ள முடிகின்றது. நிஜம் எப்போதும் கசக்கத்தான் செய்யும்…

  Like

 6. // யாத்ரீகன் said… மிகுந்த வித்தியாசமான பார்வை.. சுவாரசியமான உரைநடை.. அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்..//நன்றிகள் யாத்ரீகன்

  Like

 7. 'Paruvam' by S.Bhyrappa is also a good re-interpretation of Mahabharata.The story and structure of Mahabharata itself is in such a way that it leaves open to multiple interpretations and view-points each of which is correct from that angle.

  Like

 8. // BooksForLife said… 'Paruvam' by S.Bhyrappa is also a good re-interpretation of Mahabharata. The story and structure of Mahabharata itself is in such a way that it leaves open to multiple interpretations and view-points each of which is correct from that angle.//பருவம் நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் பாரதத்தில் எமக்குள் யோசித்தால் எல்லாருக்கும் அவரவர்க்கான நியாயங்கள் அழுத்தமாகவே இருக்கின்றன. பகிர்வுக்கு நன்றி

  Like

 9. நல்லதொரு சிந்தனை, பாண்டுவுக்கு பிரச்சினை இருந்தும் குந்திக்குத்தான் பிரச்சினை என்பது போல சித்தரித்து மறுமணம் செய்து வைத்தது இன்றும் தொடர்கிறது. இதை எமது ஊர்களில் ஒரு சொல்லாடல் மூலம் சொல்வார்கள் "செத்தவன் பெண்டிலை கட்டினாலும் விட்டவன் பெண்டிலை கட்டக்கூடாது". ஒருவன் மனைவியை புறந்தள்ளி வைத்தால் அது மனைவியிலேயே பிழை என்ற ஒரு 'அசட்டு துணிச்சலான' நியாயம் இருந்திருக்கிறது. இப்பொழுதெல்லாம் ஓரளவு அவை குறைந்து கொண்டு வருகின்றன என்பது ஆரோக்கியமானதே. ஆனால் சிலவற்றை இலக்கிய சுவைக்காக மட்டும் படிக்கலாம் என எண்ணுகிறேன். அதற்கு அப்பால் எல்லாவற்றையும் சிந்திக்கும் பொழுது இப்படியான அழுக்குகளை அலச வேண்டித்தான் வரும்.உங்களின் எழுத்து நடை மெருகேறிக் கொண்டே வருகிறது. தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  Like

 10. நீங்கள் எஸ்.ரா அவர்கள் எழுதிய உப பாண்டவம் வாசித்து இருக்கிறீர்களா?அதுவும் மகாபாரதத்தை வேறுபட்ட கோணத்தில் சொல்லும் கதை தான்.சிறு வயதிலேயே மகாபாரதம் வாசித்து கண்ணனும் அபிமன்யுவும் என் கதா நாயகர்கள் ஆகி விட்டிருந்ததால் எனக்கு மகாபாரத்தத்தின் மாறுபட்ட கோணத்தை ஏற்றுக்கொள்ள கடினமாகவே இருந்தது.என்னை பொறுத்த வரையில் மகாபாரதத்தில் திரௌபதி தான் மிகவும் துன்பங்களை அனுபவித்த கதாபாத்திரம். 5 பேரை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியதிலிருந்து அனுபவித்ததுமுழுவதுமே துன்பம் தான். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கணவருடன் வாழச்சொல்லி condition போட்டது மட்டும் அல்லாமல் அவளது பிள்ளைகளை தொடுவதற்கு கூட அனுமதிகொடுக்கப்படவில்லை. பிள்ளை பிறந்தவுடன் திரௌபதியின் சகோதரன் தனது பாஞ்சால நாட்டிற்கு எடுத்து சென்று வளர்க்கிறான். திரௌபதி தனது பிள்ளையை தருமாறு அழும்போதுஅடுத்த கணவருக்கு மனைவியாக தயாராகுமாறு குந்தி தெரிவிக்கிறார்.வாழும் காலத்தில் வாழ விடாமல் செய்து விட்டு இன்று கற்புக்கரசிஎன்ற பட்டத்தை கொடுத்து கடவுளாக்கி வைத்துள்ளோம்.

  Like

 11. அபிமன்யு இறந்த போது உணர்ச்சிவசப்பட்ட அர்ச்சுனனும், கடோத்கஜன் கொல்லப்ப்பட்ட போதுஅழுத பீமனும் உபபாண்டவர்களை பாண்டவர்கள் என நினைத்து அசுவத்தாமன் கொல்லும்போது அப்பாடா நாம் தப்பி விட்டோம் என்ற நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்.அப்போது திரௌபதி மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்.திரௌபதி தான் இறக்கும் போது முதன் முதலில் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.பாண்டவர்கள் ஐவரையும் மணம் செய்ய சொல்லி வற்புறுத்தல்,மாத்ரியை உடன் கட்டை ஏறச்செய்தல்,…..என்றுகுந்தியின் அரசியல் தான் பெரிதும் நடந்திருக்கிறதையே உணரக்கூடியதாக‌இருக்கிறது.உபபாண்டவத்தில் அதிகம் பேசப்படாத துரியோதனனின் சகோதரி துச்சலை, மனைவி பானுமதி(?) பற்றி கூட குறிப்பிட்டுள்ளார். கௌரவர்கள் 100 பேருடைய பெயரும் குறிப்பிட்டுள்ளார்.சகுனியை கூட வித்தியாசமான கோணத்தில் சொல்லியுள்ளார்.இராமாயணம், மகாபாரதம் போன்றவை உண்மையா கற்பனையா என்று சண்டை போட்டுகாலத்தை ஓட்டுவதை விட்டுவிட்டு அதில் சொல்லப்படும் உண்மைகளை ஆராய வேண்டும் என்றுஎங்கோ படித்த நினைவு. நீங்கள் குறிப்பிட்ட நாவல் நான் வாசித்ததில்லை.எனது மதிப்புக்குரிய எளுத்தாளர் எஸ்.ரா எழுதியதால் மட்டுமேஎனக்கு உபபாண்டவத்தில் சொல்லப்பட்ட உண்மைகளை உணரக்கூடியதாக இருந்தது. வேறு யாராவது எழுதியிருந்தால் நான் எழுத்தாளரை திட்டி புத்தகத்தை அரைகுறையில் மூடிவைத்திருப்பேன். பல நாட்கள் ஏன் உபபாண்டவம் வாசித்தேன் என்று கூட கவலைப்பட்டு இருக்கிறேன். சின்ன வயதில் இருந்தே நான் நேசித்த மகாபாரதத்தின் புனித விம்பத்தைமுழுமையாக என்னால் உடைக்க முடியவில்லை.**** எழுத்தாளர் பாவண்ணன் மொழிபெயர்த்த பருவம் நாவலும் இதே போன்ற‌ஒரு கதை அமைப்பு கொண்டது என்று நண்பர் ஒருவர் கூறினார்.

  Like

 12. பாரத கதை முழுவதும் தமக்கு பிறரை அடிமையாக்க ஆரியர்ரும் வடவரும் செய்த கட்டு என்பதுதான் உண்மைஇதை இப்போதும் நாம் தாம் சுமந்து கொண்டுள்ளோம்

  Like

 13. கதியால் said…//ஆனால் சிலவற்றை இலக்கிய சுவைக்காக மட்டும் படிக்கலாம் என எண்ணுகிறேன். அதற்கு அப்பால் எல்லாவற்றையும் சிந்திக்கும் பொழுது இப்படியான அழுக்குகளை அலச வேண்டித்தான் வரும்.//நாம் இப்படியான புராண கதைகளை எல்லாம் அறம் சொல்லும் புத்தகங்களாகவே படிக்கின்றோம். ஆனால் உண்மையில் இவற்றில் கொட்டிக் கிடப்பவை குப்பைகளே. இலக்கிய சுவை என்று சொன்னால் கூட, கமராமாயாணத்துடன் ஒப்பிடும் பொது மகாபாரதத்தின் சிலக்கிய சுவை தூசு.

  Like

 14. கம்ப ராமாயணத்தின் இலக்கியச் சுவைக்குக் காரணம் அது வால்மீகி ராமாயணத்தின் வெறும் மொழிபெயர்ப்பாக மட்டுமன்றி , வெறும் கருவை மட்டும் வைத்துக்கொண்டு , கம்பரால் பாத்திரங்களுக்கு புனிதத் தன்மையும் தெய்வீகத் தன்மையும் கொடுத்து இட்டுக்கட்டி இயற்றபட்டமையாலாகும். வால்மீகி ராமாயணத்தில் சிறிதளவேனும் இருந்த நேர்மை கம்ப ராமாயணத்தில் முற்றாக இல்லை. ஒரு உதாரணம் , வால்மீகி சீதையை , ராவணன் தோளில் தூக்கிச் சென்றான் என்று கூற , கம்பரோ , தரையோடு பெயர்த்து சென்றான் அணைக் கூறி "கற்பு" என்னும் போலி அடக்கு முறையை நிறுவ முயற்சிக்கிறார். இதற்கு வால்மீகி மற்றும் கம்பரின் பிறப்பும் குலமும் முக்கிய காரணம் நானும் குளங்களை குறிப்பிட்டு ஒரு ஜாதிக் கலவரத்தை இங்கே ஏற்படுத்த விரும்பவில்லை.

  Like

 15. வாசுகி said…//திரௌபதி தான் மிகவும் துன்பங்களை அனுபவித்தகதாபாத்திரம். 5 பேரை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியதிலிருந்து அனுபவித்ததுமுழுவதுமே துன்பம் தான். //உண்மைதான். அதேபோல அபிமன்யூவின் மனைவி உத்தரையின் நிலையை யோசித்துப் பாருங்கள். அபிமன்யுவின் தாயின் நிலையை யோசித்துப் பாருங்கள். ஜெயமோகன் பத்மவியூகம் என்ற ஒரு கதை எழுதியிருந்தார். காலச்சுவடில் வெளியானது. அதில் அதில் பாரதப் போரின் இறுதிநாளுக்குப் பின்னரான் நினைவு மீட்டல்களாக அபிமன்யுவின் தாய் சுபத்திரையின் பார்வையில் சில விடயங்களை சொல்லியிருப்பார். விரிவான ஆழ்மான பதிவு. நிறைய வாசிக்கின்றீர்கள் என்று புலப்படுகின்றது. நன்றிகள் வாசுகி

  Like

 16. வாசுகி said… //உபபாண்டவர்களை பாண்டவர்கள் என நினைத்து அசுவத்தாமன் கொல்லும் போது அப்பாடா நாம் தப்பி விட்டோம் என்ற நிலையில் தான் இருந்திருக்கிறார்கள். அப்போது திரௌபதி மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்.//உண்மைதான். இதை கண்ணனின் ராஜதந்திரம் என்றூ நியாயப்படுத்துகின்றார்கள். என்னை பொறுத்தவரை இது வரை பேசப்பட்டவை எல்லாம் அதிகாரங்களின் வெற்றிகளே. அந்த வெற்றிகளுக்காக பறிக்கப்பட்ட சராசரி மனிதர்களின் நிலை பேசப் படக்கூட இல்லை // சின்ன வயதில் இருந்தே நான் நேசித்த மகாபாரதத்தின் புனித விம்பத்தை முழுமையாக என்னால் உடைக்க முடியவில்லை.// அப்படித்தான் நாம் வளர்க்கப்பட்டுவிட்டோம். ஆனால் புனிதப்படுத்தப் பட்டவைஎ எல்லாம் எந்த விமர்சனத்தையும் எதிர்நோக்காதவையகி பின் கால ஓட்டத்தில் காலவதியாகிவிட்டதுதான் உண்மை… // **** எழுத்தாளர் பாவண்ணன் மொழிபெயர்த்த பருவம் நாவலும் இதே போன்ற‌ ஒரு கதை அமைப்பு கொண்டது என்று நண்பர் ஒருவர் கூறினார்.//இன்னுமொரு வரும் எனக்கு இந்தக் கதை பற்றி பின்னூட்டைட்டார். தேடிப் பார்க்கின்றேன்

  Like

 17. //அறிவழகன் said… பாரத கதை முழுவதும் தமக்கு பிறரை அடிமையாக்க ஆரியர்ரும் வடவரும் செய்த கட்டு என்பதுதான் உண்மை இதை இப்போதும் நாம் தாம் சுமந்து கொண்டுள்ளோம்//நமது வழிபாட்டுமுறையைக்கூட மாற்றி, எமக்கு இதுக்கள் என்று பெயர் வைத்ததுகூட இப்படியான ஒரு செயல்தான். தொடர்ச்சியான வாசிப்பு மற்றும் தேடல் மூலம் எல்லாரும் இதக் க்டக்க வேண்டும் என்பதே என் விருப்பும்

  Like

 18. //அதேபோல அபிமன்யூவின் மனைவி உத்தரையின் நிலையை யோசித்துப் பாருங்கள்.அபிமன்யுவின் தாயின் நிலையை யோசித்துப் பாருங்கள். //எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.அப்படிபார்த்தால் கர்ணனின் மனைவி,கர்ணனின் மகனின் மனைவி, கௌரவர்கள் 100 பேரது மனைவி, அவர்கள் பிள்ளைகளின் மனைவி…..இப்படி எல்லோரும் பரிதாபமானவர்கள் தான். ஆக மொத்தத்தில் அஸ்தினாபுர பெண்களேபரிதாபத்துக்கு உரியவர்கள் தான்.திரௌபதியின் நிலை போல் அல்ல சுபத்திரையினது.அர்ச்சுனனை தானாகவே விரும்பி தான் மணம் செய்தார்.அதற்கு அவளது சகோதரன் பலராமன் எவ்வளவு எதிர்ப்பும் புத்திமதியும் சொன்னதாக‌ மகாபாரதத்திலேயே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அர்ச்சுனனின் பூரண அன்புக்குரியவளாக‌ இருந்தாள். மகன் அபிமன்யுவும் அவளிடம் தானே வளர்ந்தான்.தற்போது நடந்து முடிந்த ராமாயண யுத்தத்தை(ஈழ‌) எடுத்துக்கொண்டால் கூட, முடிந்து இன்னும் 3 மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் எத்தனை கற்பனை, கட்டுக்கதைகள்.மகாபாரதம், ராமாயணம் நடந்தது பல பல நூறாண்டுக்கு முன்.இப்போது நாம் படிக்கும் மகாபாரதத்தில் உண்மைகளை விட கற்பனை தான் அதிகமாக‌ இருக்க வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் சொன்னது போல் ஹீரோயிசம் காட்ட வெளிக்கிட்டதால் வந்த வினையாக கூட இருக்கலாம்.உபபாண்டவம், பருவம், கதாகாலம் போன்றவை மகாபாரதத்தை வேறு கோணத்தில் அணுகுபவை. அதற்காக அது தான் உண்மை என்றும் சொல்ல முடியாது. நாம் சிந்திப்பதற்கு உதவியிருக்கிறது. மீண்டும் ஒரு தடவை வியாசர் விருந்து வாசித்தால் அதில் சொல்லப்பட்டது தான் சரி மாதிரியும் இருக்கும்.எனக்கென்றால் மகாபாரதத்தை விட ராமாயணம் தான் இந்த காலத்தில் கதைக்கப்பட வேண்டியது என நினைக்கிறேன். இவ்வளவு காலமும் விபீஷணன் தான் நல்லவன் என்று நினைத்திருந்தேன். இப்ப தான் தெரிகிறது அவன் காட்டிக்கொடுத்தவன் என்பது.மொத்தத்தில் இந்த இதிகாசங்களை ஆராய்வதை மறக்க‌ எனக்கு ஏதாவது மருந்து கிடைத்தால் நல்லது என நினைக்கிறேன். கிருஷ்ணா என்னை இப்படி சோதிக்கிறாயே.

  Like

 19. வணக்கம் அருண்,எப்பவுமே ஜெயித்தவர்கள் கதை தான் எடுபடுகிறது..அன்று தொடக்கம் இன்று வரை இதுதான் நிதர்சனமான உண்மை.மகாபாரதம் அருமையான புனைகதை..எழுதியவரின் விருப்பு வெறுப்புகளை தவிர்த்து கதையை நிச்சயமாக புனைய முடியாது. எழுதியவரின் வக்கிர எண்ணங்களாலும், அதிகார இச்சைகளாலும் நிறைந்துள்ளது இக்கதை. இந்த கதையை நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிடுவது முட்டாள்த்தனமானது. (ஆனாலும் இன்றுவரை அபிமன்யுவின் பாத்திரச் சித்தரிப்பு என்னைக் கவர்ந்ததொன்றாகவே உள்ளது.)ஒரு கதையின் மறுவாசிப்பின் அதிர்வுகள் நிச்சயமாக மறுவாசிப்பிடுபவரின் எழுத்துவன்மையின் ஆழத்திலே தான் தங்கியுள்ளது. இதை நான் உணர்ந்தது சிறுவயதில் நான் வாசித்த கலைஞரின் கும்பகர்ணனைப் பற்றிய ஒரு புத்தகத்தில் தான்…புத்தகத்தின் பெயர் "மாவீரன் கும்பகர்ணன் "என்பதாய் நினைவு.இப் புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது கம்பனின் ராமன் பற்றிய என் பிரமிப்புகளும் கரைந்து போனது."கதாகாலம்" அப்படியொரு அதிர்வை வாசிப்பவரிடையே ஏற்படுத்தி இருந்தால் பாரதம் எழுதியவரின் எழுத்துவன்மைக்கு கிட்டவாகவே.. "கதாகாலம்" ஆசிரியரின் எழுத்து வன்மையும் உள்ளதாக கருதலாம்.

  Like

 20. கண்டும் காணான் said… //கம்பரால் பாத்திரங்களுக்கு புனிதத் தன்மையும் தெய்வீகத் தன்மையும் கொடுத்து இட்டுக்கட்டி இயற்றபட்டமையாலாகும். வால்மீகி ராமாயணத்தில் சிறிதளவேனும் இருந்த நேர்மை கம்ப ராமாயணத்தில் முற்றாக இல்லை. ஒரு உதாரணம் , வால்மீகி சீதையை , ராவணன் தோளில் தூக்கிச் சென்றான் என்று கூற , கம்பரோ , தரையோடு பெயர்த்து சென்றான் அணைக் கூறி "கற்பு" என்னும் போலி அடக்கு முறையை நிறுவ முயற்சிக்கிறார். இதற்கு வால்மீகி மற்றும் கம்பரின் பிறப்பும் குலமும் முக்கிய காரணம் நானும் குளங்களை குறிப்பிட்டு ஒரு ஜாதிக் கலவரத்தை இங்கே ஏற்படுத்த விரும்பவில்லை.//இருக்கலாம். கம்ப ராமாயணம் தான் ராமனை முற்றிலும் புனிதப் படுத்துகின்றது. ராமன் மீது வைக்கப்படக்கூடிய எல்லா குற்றச்சாற்றுக்களுக்கும் ரமனின் சார்பில் கம்பனே விளக்கம் தருகிறர். ஆயினும் கம்பனின் எழுத்துவன்மையும், இலக்கியச்சுவையும் ராமனை ஏற்றுக்கொள்ளாதவர்களால் கூட ராமாயணத்தை ஏற்றுக்கொள்ளச்செய்துவிடுகின்றது

  Like

 21. வாசுகி said…// //அதேபோல அபிமன்யூவின் மனைவி உத்தரையின் நிலையை யோசித்துப் பாருங்கள்.அபிமன்யுவின் தாயின் நிலையை யோசித்துப் பாருங்கள். // எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.அப்படிபார்த்தால் கர்ணனின் மனைவி,கர்ணனின் மகனின் மனைவி, கௌரவர்கள் 100 பேரது மனைவி, அவர்கள் பிள்ளைகளின் மனைவி….. இப்படி எல்லோரும் பரிதாபமானவர்கள் தான். ஆக மொத்தத்தில் அஸ்தினாபுர பெண்களே பரிதாபத்துக்கு உரியவர்கள் தான்.//வாசுகி, கதாகாலத்தின் சாரமே அத்தினாபுரத்துப் பெண்களின் அழுகையைப் பற்றித்தான் சொல்லுகின்றது. அதே நேரம் நான் அபிமன்யுவின் தாய் மற்றும் மனைவி பற்றிச் சொன்னது பத்மவியூகம் கதை சொல்லும் நோக்கில். போரின் ஆரம்ப நாட்களிலேயே அபிமன்யு இறந்துவிடுவான். இந்த நேரத்தில் போரை முன்னெடுக்க திரௌபதியும் ஒரு காரணம். இறுதியில் அவளுக்கு பட்டத்து ராணி என்ற அந்தஸ்து கிடைத்தது. . // உபபாண்டவம், பருவம், கதாகாலம் போன்றவை மகாபாரதத்தை வேறு கோணத்தில் அணுகுபவை. அதற்காக அது தான் உண்மை என்றும் சொல்ல முடியாது. நாம் சிந்திப்பதற்கு உதவியிருக்கிறது. மீண்டும் ஒரு தடவை வியாசர் விருந்து வாசித்தால் அதில் சொல்லப்பட்டது தான் சரி மாதிரியும் இருக்கும்.//வியாசர் விருந்து பிழை, உபபாண்டவமும், கதாகாலமும்தான் சரி என்றூ ஒருபோதும் நான் சொல்லவில்லை ஆனால் இப்படியான மறூவாசிப்புகள் மூலம் எமக்கு மற்றவர்களின் பக்க நியாயங்களையும் புரிந்துகொள்ளமுடியும். அதைத்தான் சொல்ல வந்தேன். // மொத்தத்தில் இந்த இதிகாசங்களை ஆராய்வதை மறக்க‌ எனக்கு ஏதாவது மருந்து கிடைத்தால் நல்லது என நினைக்கிறேன். கிருஷ்ணா என்னை இப்படி சோதிக்கிறாயே.//சோதனைகளுக்கு மன்னிக்கவும்…நன்றிகள் வாசுகி…

  Like

 22. //வியாசர் விருந்து பிழை, உபபாண்டவமும், கதாகாலமும்தான் சரி என்றூ ஒருபோதும் நான் சொல்லவில்லை //நீங்கள்ஒருபோதும் சொல்லவில்லை. நானும் நீங்கள் சொன்னதாக எழுதவில்லை. எனது வசன அமைப்பு அப்படியான ஒரு புரிதலை தந்திருந்தால் மன்னிக்கவும்.நீங்கள் சொல்வது போல் மற்றவர்களின் பக்கம் இருக்கும் நியாயங்களை புரிந்துகொள்ள அத்தகைய புத்தகங்கள் உதவும். கிருஷ்ணா என்னை இப்படி சோதிக்கிறாயே.//சோதனைகளுக்கு மன்னிக்கவும்…//இந்த வசனத்தை பின்னூட்டத்தில் நான் எழுதியிருக்க கூடாது. உங்களது பதிவிற்கும் அதற்கும் தொடர்பில்லை.நான் முதன்முதலில் வாசித்த புத்தகம் (6 வயதில்?) கண்ணன் கதைகள் 1, 11 என்ற‌ அழகான கண்ணன் படங்கள் உள்ள சிறுவர் நூல். நீல நிறத்தில்தலையில் மயில் இறகு, கையில் புல்லாங்குழல் என்று இருந்த அந்த கண்ணன் கடவுள் என்பதையும் தாண்டி என் துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பனாக எப்போதும் என் நினைவில் இருக்கிறான். ‌உபபாண்டவம் வாசித்த போது அந்த நண்பனை இழந்திடுவனோ என பயமாக இருந்தது. அதனால் தான் மேல் சொன்ன வசனம் எழுதினேன்.உங்களது தரமான பதிவில் நான் இட்ட கும்மி பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன்.நன்றி.

  Like

 23. வணக்கம் வாசுகி//வியாசர் விருந்து பிழை, //நான் முதன்முதலில் வாசித்த புத்தகம் (6 வயதில்?) கண்ணன் கதைகள் 1, 11 என்ற‌ அழகான கண்ணன் படங்கள் உள்ள சிறுவர் நூல். நீல நிறத்தில்தலையில் மயில் இறகு, கையில் புல்லாங்குழல் என்று இருந்த அந்த கண்ணன் கடவுள் என்பதையும் தாண்டி என் துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பனாக எப்போதும் என் நினைவில் இருக்கிறான். ‌உபபாண்டவம் வாசித்த போது அந்த நண்பனை இழந்திடுவனோ என பயமாக இருந்தது. அதனால் தான் மேல் சொன்ன வசனம் எழுதினேன்.//நீங்கள் சொல்லும் இதே புத்தகத்தை நானும் வாசித்திருக்கின்றேன். உண்மையில் நான் கூட கண்ணனை ஒரு நண்பனாகத்தான் அதிகம் நினைத்திருக்கின்றேன். சிறுவயதில் காலை நேரத்தில் அடிக்கடி “காக்கை சிறகினிலே….” என்ற ஏழாவது மனிதன் படத்தில் இடம்பெற்ற பாரதி எழுதிய கண்ணன் பாடலை கேட்கும் போதெல்லாம் பரவசமாகத்தான் இருந்தது.அது போல பாலகுமாரன் கிருஷ்ண அர்ச்சுணன் என்று ஒரு நாவலும், கிருஷ்ண துளசி என்று ஒரு நாவலும் எழுதினார். பாலகுமாரத் தனமான சில விடயங்கள் அதில் இருந்தாலும் அவற்றை வாசித்த போது நிறைய பிடித்திருந்தது. நீங்கலும் வாசித்துப் பாருங்கள். மேலும் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…..(டி.எம்.எஸ்) ஆயர் பாடி மாளிகையில்……… (எஸ். பி. பி) என்ற பாடலும் எனக்கு அதிகம் பிடித்த பாடல்களாக இப்போதும் இருக்கின்றன..//உங்களது தரமான பதிவில் நான் இட்ட கும்மி பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன்.//அப்படி இல்லை. தொடர்ச்சியான ஒரு கருத்து பற்றிய உரையாடல்கள் எப்போதும் தெளிவையே தரும்…மீண்டும் சந்திப்போம்

  Like

 24. L.பைரப்பாவின்- பருவம்M.D.வசுதேவன் நாயரின் -இரண்டாம் இடம்மகாராஸ்டிர எழுத்தாளர் ஒருவரின் -யுகத்தின் முடிவில் போன்ற படைப்புகளும் மகாபாரத்ததை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றன.

  Like

 25. பாண்டவர்களின் பிறப்பின் மர்மம் பற்றி பாரத்தில் வியாசர் சில Clueகள் தந்துள்ளார்தர்மன் விதுரரின் மகன் என்பதை மகாபாரதத்தின் இறுதியில் வியாசர் எடுத்து கூறுகின்றார்."யாரோ விதுரனோ அவனே தர்மன் யரோ தர்மனோ அவனே விதுரன்"

  Like

 26. வணக்கம் பாரதி..// எப்பவுமே ஜெயித்தவர்கள் கதை தான் எடுபடுகிறது..அன்று தொடக்கம் இன்று வரை இதுதான் நிதர்சனமான உண்மை.//எல்லாக் கதை சொல்லிகளிலும் ஒவ்வொரு பார்வை இருக்கும். எதையும் முழுதாக ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை. // இந்த கதையை நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிடுவது முட்டாள்த்தனமானது.//ஆனால் இந்தக் கதைகள் நீதி நூல்களாகவும், அறம் சொல்பவையாகவும் கருதப்படும் சூழலில் அவற்றை சீர்தூக்கி அலசவேண்டிய கட்டயம் இருக்கின்றது

  Like

 27. வணக்கம் சஞ்சய்//.பைரப்பாவின்- பருவம்M.D.வசுதேவன் நாயரின் -இரண்டாம் இடம்மகாராஸ்டிர எழுத்தாளர் ஒருவரின் -யுகத்தின் முடிவில்போன்ற படைப்புகளும் மகாபாரத்ததை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றன.//நீங்கள் சொன்ன இந்த மூன்று புத்தகங்களையும் நான் இதுவரை வாசிக்கவில்லை. நிச்சயம் வாசிக்க முயலுகின்றேன்.

  Like

 28. கதாகாலம் பற்றி சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். படிக்க வேண்டும் என்று ஆவல் ஏற்படுகிறது. இது பற்றி நானும் என் தளத்தில் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன், முடிந்தால் பாருங்கள். உங்கள் பதிவுகளையும் சுட்டி இருக்கிறேன்.http://koottanchoru.wordpress.com/2009/07/15/தேவகாந்தனின்-கதாகாலம்/

  Like

 29. நன்றிகள் rvநீங்கள் எனது பதிவில் பின்னூட்டமிட்டதும், பின்னர் கதாகாலம் பற்றி உங்கள் பதிவில் எழுதியதும், தேவகாந்தன், என். கே. மகாலிங்கம், நோலகம் பற்றியெல்லாம் இணையத்தில் தேடியதும் மிகுந்த மகிழ்வளிக்கின்றது.தேவகாந்தன் தற்போது கனடாவில், டொரண்டோவில்தான் வசித்து வருகின்றார். அவர் அற்புதமான எழுத்தாற்றல் கொண்டவர். ஆனால் அதற்குரிய கவனிப்பை பெறாதவர். ஜெயமோகன் உள்ளிட்ட பல இந்திய எழுத்தாளர்களிடம் நல்ல அறிமுகம் இருந்தும் (இந்தியாவிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்) எவருமே அவர் பற்றி அறிமுகம் செய்துவைக்கவில்லை என்றா வருத்தம் எமக்கு உண்டு. எனக்குத் தெரிந்து சுஜாதா சில தடவைகள் இவர் பற்றி குறிப்பிட்டிருக்கின்றார்.இதில் இன்னொரு குறிப்பிடத்த்க்க விடயம் நூலகம் திட்டம். எந்த விதமான லாப நோக்கமும் இல்லாமல், இலங்கைத்தமிழ் நூல்கள் நூலகம் இணையத் தளத்தில் மின் நூலாக கிடைக்கின்றன. இதன் இணைய முகவரி http://www.noolaham.orgநீங்களும் சென்று பாருங்கள். பிறருக்கும் அறிமுகம் செய்து வையுங்கள். கதாகாலம் வாசித்த பின்னர் உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்

  Like

 30. Ellathaiyum munnukku irunthu paartha maathiri kunthi thevi yai thappaaka kathaikka vendam.Ithhu pavathirku uruyathu.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: