அரபிக்கடலோரம் என்ற சக்கரியா எழுதி சுகுமாரன் மொழி பெயர்த்த பத்திகளின் தொகுப்பை கொழும்பு பூபாலசிங்கம் புத்தக நிலையத்தில் வாங்கினேன். பத்தி எழுத்துகளை வாசிப்பவர்களுக்கும், தீவிர வாசகர்களுக்கும் சக்கரியா பற்றிய அறிமுகம் அவசியமில்லை. முக்கியமான மலையாள எழுத்தாளர். பத்திரிகையாளர், ஊடக ஆலோசகர், பத்தியாளர், விவசாயி, சினிமா, சிறுகதை – நாவல் எழுத்தாளர் என்ற பல தளங்களில் செயல்படுபவர் சக்கரியா. தொடர்ச்சியாக ஆங்கிலம், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் எழுதுகிறார். காலச்சுவடு இதழுக்காக பிரத்தியேகமாக இவர் எழுதிய பத்திகளே இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் நாட்டில் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், புகழ் பற்றி சலித்துக் கொள்ளும் போதெல்லாம் சாரு நிவேதிதா கேரளாவில் சக்கரியாவுக்கு கிடைக்கும் மரியாதை, சக்கரியாவின் படைப்புகளுக்கு ஊடகங்களில் தரப்படும் மரியாதை என்று ஒப்பிட்டுக் கொள்வது வழக்கம், ஆனால் இந்த இடத்தில்தான் சிக்கலே புறப்படுகின்றது. தமிழ்நாட்டின் மோசமான அரசியல் (இந்த இடத்தில் மோசமான என்பதை விட வலுவான வேறு வார்த்தைகள் இருந்தாலும் பொறுத்திப் பார்க்கலாம் – என் பிரத்தியேக உபயோகத்தில் இத்துப் போன), சமூக, இலக்கிய, ஊடக, திரைப்படச் சூழல்கள் பற்றி எழுதும்போதெல்லாம் சாரு கேரளாவில் இப்படி நடக்குமா என்று எழுதுவார். ஆனால் சக்கரியா என்ன சொல்கிறார் என்றால் “இந்தக் குறிப்புகளில் கேரளத்தை அதிகமாக விமர்சித்தும் தமிழ் நாட்டைக் கூடுதலாக பாராட்டியுமிருக்கிறேனா என்று சிலர் என்னிடம் கேட்பதுண்டு, சரிதான். கேரளத்தை எவ்வளவு விமர்சித்தாலும் போதாது.- அந்த அளவுக்கு மகா பாக்கியங்களைத் தொலைத்துவிட்டு ஒட்டாண்டியாகிக்கொண்டிருக்கும் சமூகம் அது. அரசியல்கட்சிகளும், ஊடகங்களும் மதங்களும் அதிகாரிகளும் அறிவுஜீவிகளுமே அதில் பிரதானமான குற்றவாளிகள். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் அதிகாரிகளும் புனிதர்களல்ல என்று தெரியும். ஆனால், தமிழோடும் தமிழரோடுமுள்ள அடிப்படையான நன்றியுணர்வு அவர்களிடம் எங்கோ மறைந்திருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான், ஆளும் கட்சிகள் மாறிவரும் போதும் தமிழ்நாடு முன்னோக்கிச் செல்கின்றது. இங்கே ஆடம்பர மாடங்களின் நிர்மாணம்தான் முன்னேறுகின்றது, கூடவே மதவெறியும், சாதி வெறியும்…”.
கேரளம் பற்றிய அபரிதமாக வைத்திருந்த நம்பிக்கைகளை ஒரு முறை கேள்விக்குள்ளாக்குகின்றது கேரளத்தின் கடைசி அறிவுஜீவி என்று ஒரு சாரரால் அழைக்கபடும் சக்கரியாவின் எழுத்து. இதில் சக்கரியா சொல்கின்ற முக்கிய விடயங்களில் ஒன்று தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளும்கட்சி ஒரு நல்ல திட்டத்தை அறிமுகம் செய்தால் அந்தக் கட்சி ஆட்சியை விட்டுப்போனாலும் அடுத்து ஆளும் கட்சி நிறைவேற்றும், அதே நேரம் அதற்கான முழு உரிமையயும் தானே எடுத்துக் கொள்ளும் என்பது. மக்களைப் பொறுத்தவரை நல்ல திட்டங்கள் நிறைவேறியே வருகின்றன என்கிறார். தமிழ்நாட்டு அரசியலைச் சலிப்புடனே பார்த்து வளர்ந்த தலைமுறையச் சேர்ந்தவன் நான். தமிழ் நாட்டு அரசியல் பற்றி எனக்கு பத்து வயது கூட ஆகியிராத காலத்தில் வாசித்து வளர்ந்த விடயங்களே எம்ஜிஆர் தன் ரசிகர்களை (அல்லது தொண்டர்களை) கத்தி வைத்திருக்க சொன்னது, ஆனந்த விகடன் ஆசிரியர் சிறையிடப்பட்டது, ஜெயில் சிங்கும் எம்ஜிஆரும் செய்து கொண்ட கடித பரிமாற்றங்கள் என்று துக்ளக் இதழில் (கற்பனையில்) வெளியான கடிதங்களில் செய்யப்பட்ட அரசியல் ரீதியான கிண்டல்கள் இப்படியான மொன்னைத்தனங்கள் தான். என்னால் சக்கரியா சொல்கின்ற சில கருத்துகளை ஜீரணிக்க முடியாமலே இருக்கின்றது எனினும், கேரளா தன் கம்பீரமான பீடத்தில் இருந்து பல படிகள் கீழிறங்கி விட்டதோ என்றே தோன்றுகின்றது. அதே நேரம் சில கட்டுரைகளில் சக்கரியா மீதிருந்த கம்பீரமான மரியாதை கூட சற்று அசையவே செய்கின்றது. “காஞ்சியில் கைது: ஒரு மலையாளத் திரைக்கதை” என்ற கட்டுரையில் அவர் எழுதுகிறார் “செல்வி ஜெயலலிதாவுக்கு (நானறிந்த வரையில் அவர் ஆழ்ந்த இறை நம்பிக்கையாளர்) காஞ்சி மடாதிபதியை சட்டத்தின் முன் கொண்டுவரும் முதுகெலும்புண்டென்றால் நான் அதைத் தனிநபரின் சக்தியாக மட்டும் பார்க்கவில்லை, தனி நபரின் செயலாற்றலும் தமிழ் சமூகத்தின் செயலாற்றலும் ஒன்றிணைந்த நடவடிக்கை இது….” என்கிறார். உண்மையிலேயே ஜெயலலிதா ஆட்சியில் பாராட்டவேண்டிய விடயங்களில் முக்கியமான ஒன்று காஞ்சி சங்கராச்சாரியார் கைது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் முதல், அப்போதைய ஆளுங்கட்சி தலைவர்கள் வரை அனைவரையும் அலற வைத்த நிகழ்வு அது. அதற்காக ஜெ வுக்கு ஒரு பாராட்டு என்றாலும், அதை ஜெயலலிதா செய்ய “நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே” என்ற நக்கீர குணம் மட்டுமே காரணம் என்று சொன்னால் நரசிம்மராவ் கூட சிரித்துவிடுவார். வேண்டுமானல், வெகுஜன நம்பிக்கைகளைத் தாண்டிக் கூட எடுத்த முடிவை செயலாற்றக்கூடிய வல்லமை தமிழக அரசியல்வாதிகளுக்குண்டு என்று சொல்லலாம். அப்படி சொல்லும் போது அந்த வல்லமை தானே வேலை நிறுத்தம் செய்தவர்களை வேலை நீக்கம் செய்யும் சட்டங்களாகவும் மாறியது என்றும் சொல்லலாந்தானே?. சங்கராச்சாரியார் கைது விவகாரத்தில் அவர் குற்றம் செய்தவர், எனவே தண்டிக்கப்படவேண்டியவர் என்று ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி முடிவெடுப்பவராக அவர் இருந்திருந்தால், நியாயமான ஆட்சியை அமைத்திருந்தால் ஒரு போதும் கருணாநிதிக்கு – ரஜினி மட்டுமல்ல ஒட்டுமொத்த “வருங்கால முதல்வர்களும்” சேர்ந்து வாய்ஸ் கொடுத்திருந்தால் கூட – மீண்டும் ஒரு முறை ஆட்சி அமைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. ஜெயலலிதா ஆட்சிக்காலம் முழுவதும் நாள்தோறும் ஏதாவது பரபரப்புகளை உருவாக்கிக் கொண்டேயிருந்தார். அபத்தங்களும், பழிவாங்கல்களும், அதிகார வெறியும் வெளிப்படையாகவே ஆட்சியாளர்களால் காட்டப்பட தொடங்கிய காலம் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம். எல்லாவிதத்திலும் ஜெயலலிதாவைவிட தான் முன்னோடியாக இருக்க ஆசைப்படும் கருணாநிதி, ஜெயலலிதாவால் கூட கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்கு அபத்தங்கள் நிறைந்த நாட்களை தற்போது தமிழ் நாட்டில் தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறார். (இதில் மறுப்பிருப்பவர்கள் கருணாநிதி கடந்த ஒரு வருடத்தில் விட்ட அறிக்கைகளை ஒன்று விடாமல் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.)
இந்தப் தொகுப்பில் மிக முக்கியமான கட்டுரைகயாக நான் கருதுவது பிளாச்சிமடையில் கொகோ கோலா நிறுவனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் பற்றிய “மாயாவித் திருடர்கள்” என்ற கட்டுரை. பிளாச்சிமடையில் கொகோ கோலா தொழிற்சாலை நிறுவப் பட்டதால் (இது நிறுவப்பட்டது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பின்னர் தொழிற்சாலை மூடப்பட்டது கம்பூனிஸ்ட் ஆட்சிக்காலத்தில்) நிலத்தடி நீரில் பெரும் பகுதி அவர்களாலேயே உறிஞ்சப்பட ஆதிவாசிகளுக்கு நீர் கிடைப்பதில்லை, கொகோ கோலாவில் பூச்சி கொல்லி மருந்துகள் கலந்திருக்கின்றன என்று சொல்லி போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்ச்சியாக தொழிற்சாலை இயங்க தடை விதிக்கப்பட்து. இது பற்றி சக்கரியா சொல்லும் வாதம் வலுவானது. தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு வரும் காய்கறிகள் எல்லாமே பூச்சிகொல்லிகளில் மூழ்கிக் குளித்தே வருகின்றன. கேரளா குடிநீர் வாரியம் விநியோகம் செய்யும் குடிநீரில் கூட நச்சுக் கூறுகள் கலந்திருக்கின்றன. 90% ஆனவர்கள் காலவதியானதும், தடை செய்யப்பட்டதுமான மருந்துகளை பயன்படுத்தும் மாநிலத்தில், 60% ஆனவர்கள் கலப்படம் செய்த மதுவை குடிக்கும் ஒரு மாநிலத்தில் தடை செய்யப்பட்டது வெறும் 0.5% மக்கள் மட்டும் குடிக்கும் கொகோ கோலா பானம் தடை செய்யப்படுகின்றது என்றால் ஏன் என்ற கேள்விகள் எழத்தானே செய்யும். அதற்கும் அவரே காரணம் சொல்கிறார். “இந்த உண்மைகள் வந்தனா சிவாவுக்கும், மேத பட்கருக்கும், வீரேந்திர குமாருக்கும் அவசியமில்லை. அவர்களுக்குத் தேவை கொக்கோ கோலா போராளிகள் என்ற சர்வதேசப் பெருமை. மகசேசே போன்ற விருதுகள். குடிநீரில் விஷமிருந்தால் யாருக்கு நஷ்டம்?. காய்கறியிலும் பழத்திலும் விஷமிருந்தால் அவர்களுக்கு என்ன? கொகோ கோலாதானே நட்சத்திரம்”. பெரு முதலாளிகள் மீதான எதிர்ப்பு, உலகமயமாக்கலுக்கு எதிர்ப்பு என்ற வாதங்களில் நிறையவே நியாயங்கள் இருக்கின்ற அதே வேளை, இந்த எதிர்ப்புகளுக்கு பின்புலத்தில் இருப்பவர்கள் பல சந்தர்ப்பங்களில் உள்ளூர் முதலாளிகளகவும் தாம் சார்ந்த சமூகத்தின் தலைவர்களாக தம்மை நிறுவிக் கொண்டவர்களுமாகவே இருக்கின்றார்கள் என்பது நிச்சயம் சிந்திக்கவேண்டியதே.
அமிர்தானந்தமயி பற்றிய அலசல்களும் நிறையவே இருக்கின்றன. என் சொந்த அனுபவத்தில் அமைப்பு என்ற வடிவத்தை நான் நிறையவே வெறுக்கிறேன். சமூக அக்கறையும், தீர்க்கமான சிந்தனையும் கொண்டவர்களும் கூட அமைப்பு என்ற வடிவத்துக்குள் சிறைப்படும் போது முற்றிலும் நீர்த்துப் போய்விடுகிறார்கள். உதாரணமாக பெரியாரைச் சொல்லலாம். பெரியார் என்றாலே பொதுவாக திராவிடர் கழகம்தான் நினைவுக்குவரும். இன்றும் தி.கவும், அதன் வழி வந்த கட்சிகளும் தம்மை பெரியாரின் வழிவந்தவர்களாகவே சொல்லிக் கொள்ளுகிறார்கள். நானும் ஒரு பெரியாரிஸ்ட் என்று அறிக்கை விடுகிறார்கள். பெரியாரையும், திராவிடர் கழகங்களையும் தொடர்பறுத்துப் பார்க்கமுடியாமல் இருக்கும் போது, இன்றைய “பெரியாரிஸ்டுகள்” செய்யும் கூத்துக்களைப் பார்த்தால் பெரியாரின் சிந்தனைகள் எத்தனை தூரம் அவர் சார்ந்திருந்த அமைப்பினூடாக நீர்த்துவிட்டன?. சென்ற ஆண்டு கூட அமிர்தானந்தமயி கனடா வந்த போது கனேடியப் பத்திரிகைகள் எல்லாமே அது பற்றி செய்திகள் வெளியிட்டதுடன் அவரது நிதி விடயங்கள் தொடர்பாக சில கேள்விகளையும் எழுப்பி இருந்தன. இன்று நான் காணும் பெரும்பாலான மதத்தலைவர்கள் எல்லாமே ஒரு “கார்பரேட்” வடிவத்துக்குள் தாராளமாகவே வந்துவிட்டனர். தனிமையில் தொடர்ச்சியான தியானம், தேடல்கள் மூலமாக உயர்ந்த தத்துவ விசாரங்களையும், ஆன்மீக அனுபவங்களையும் அடைந்தவர்களே ஞானிகள். ஆனால் எம். எஸ். உதயமூர்த்தி பாணியில் மனநலக் கட்டுரைகளை எழுதித் தள்ளும் நவீன “கார்ப்பரேட்” சாமியார்கள் முறையான தியான அனுபவத்தைக் கூட அடைவார்களா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கின்றது. அமிர்தானந்தமயி மீதான சக்கரியாவின் குற்றச்சாற்றுகள், பெரும்பாலான “நவீன சாமியார்களுடன்” தொடர்பு படுத்திப் பார்க்க கூடியவையே.
இந்த நூலை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த சுகுமாரன் தன் முன்னுரையில், இதில் சொல்லப்படும் கருத்துகள் சிலவற்றில் எனக்கு முழுமையாக உடன்பாடில்லாத போதும் அவர் கருத்துக்களில் குறுக்கிடாமல் ஒரு மொழி பெயர்ப்பாளராக எனது பணியை சரியாக செய்திருக்கிறேன் என்று கூறுவார். சக்கரியாவின் கருத்துக்களில் பூரணமான உடன்பாடில்லாவிட்டாலும் கூட அவர் எழுத்துக்களை, அவர் எழுப்பும் கேள்விகளை, முன்வைக்கும் வாதங்களை நிச்சயமாக கவனிக்கவே வேண்டும். அவரது எழுத்துகள் ஏற்படுத்தும் சலனங்களும், அதை ஒட்டிய கேள்விகளும் எம்மை நிச்சயம் விசாலப்படுத்தும்.
பின் குறிப்பு – 01
” The Indian citizen is not committed to a nation except when they have a stupid cricket match with Pakistan “ என்று இவர் பேட்டி ஒன்றில் கொடுத்ததாக படித்திருந்தேன். கிட்டத்தட்ட இதே கருத்தினை தன் அண்மைய திரைப்படத்தில் இலங்கை இயக்குநர் பிரசன்ன விதானகேயும் அழகாகக் காட்டியிருப்பார். முக்கியமான சம்பவங்கள் கடந்து செல்லும்போதெல்லாம் பின் புலத்தில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பப்படும் டிவியையும், ஸ்கோர் கேட்ப்பவர்களையும் காட்டியிருப்பார். இவரது திரைப்படத் தொகுப்பு ஒன்றையும் கொழும்புவில வாங்கி வந்தேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்வேன்.
Leave a Reply