நானும் என் வாசிப்பும்.

எப்போது நேரம் கிடைத்தாலும் ஏதோ பெரும் கடன் போல உடனே ஏதாவதொரு புத்தகத்தை தூக்கி படித்துக்கொண்டிருக்கும் என்னை ஒரு விநோத ஜந்துவாக அடிக்கடி என் நண்பர்கள் பார்ப்பது வழக்கம். சற்று விலத்தியிருந்து யோசிக்கும்போது எனக்கும் என்னுடைய வாசிப்புப் பழக்கம் பற்றிய ஆதாரமான சில கேள்விகள் இருந்தாலும் இந்த தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கத்தால் நான் அடைந்தது அதிகம். அதிலும் போரின் உக்கிரத்தால் வேறு எந்த விதமான பொழுது போக்கு வசதிகளும் கைகூடாத அந்த நாட்களில் புத்தகங்கள் என்னை சில ஆண்டுகளுக்கு தத்து எடுத்திருந்தன.

சிறுவயதில் கொழும்புவில் இருந்த எனது பெரியப்பா மூலமாக எமக்கு நிறைய புத்தகங்கள் வந்து சேரும். பெரியப்பா தனது கல்லூரிப் படிப்பை இந்தியாவில் படித்தவர். தமிழ் நாட்டில் மொழிப்போர் வீறு கொண்டிருந்த அந்த நாட்களில் திமுகவுடன் பெரும் ஈடுபாட்டுடன் இருந்தவர். அவர் கொழும்புவில் இருந்து எமக்கு அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம், பூந்தளிர், பாலமித்ரா போன்ற சஞ்சிகைகளையும், பல புத்தகங்களையும் தொடர்ந்து அனுப்புவார். இதனால் புத்தகங்களுடனான எமது தொடர்பு வலுவாகவே வளர்ந்துவந்தது. அந்த நாட்களில் எமது வீட்டில் எமது விவாதங்கள் கூட புத்தகங்கள் மீதானவையாகவே இருந்துவந்தன. அது போல பெரும்பாலான நண்பர்கள் கூட புத்தக வாசிப்பின் அடிப்படையிலேயே அமைந்தனர். கிட்ட தட்ட சத் சங்கம் என்றூ சொல்லப்படுவது போன்ற ஒரு அமைப்பு இது. போரின் கொடுமை என்னை ஈழத்தை விட்டு தூக்கியெறிந்த போது, இந்த சத் சங்கத்தைவிட்டும் நான் தூக்கி எறியப்பட்டேன். தனி மனிதனாக என் வாழ்வின் அடிப்படைகளை அசைத்த ஒரு தாக்கம் இது. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, ஒரு வன வாசத்துக்குப் பின்னர் அண்மையில் கனேடிய எழுத்தாளர்களான செல்வம், டிசே தமிழன், நிவேதா, தேவகாந்தன், மெலிஞ்சி முத்தன் போன்றவர்களுடன் அருமையான வாய்ப்புகள் வந்துள்ளன. எதிர் வரும் நாட்களின் அழகிய சில த்ருணங்களை அமைத்துத் தரப்போகின்ற அறிமுகங்கள் இவை என்கிற நம்பிக்கை ஆழமாக உண்டு.


2

சலனங்கள் தொலைந்த அமைதியான நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடந்து போன நினைவுகளை மீட்டிப் பார்க்கும் சுபாவம் அனேகமாக எல்லாரிடத்திலும் இருக்கின்றது. அண்மையில் வாசித்து முடித்த சில அருமையான புத்தகங்கள் தந்த அமைதிக்கும் / அமைதி இன்மைகளிற்கும் (முக்கியமாக the long way gone வாசித்து முடித்த போது பெரும் அமைதியின்மை ஏற்பட்டது) நடுவே என் சிறு வயதில் வாசித்த சில புத்தகங்களின் நினைவுகள் மீண்டும் மீண்டும் புரண்டு கொண்டிருந்தன. ஆகச் சிறு வயதில் ஒன்று, இரண்டு….. பத்து வரை எண்ணத் தெரியும் என்று பெருமையாக சொல்லியிருக்கின்றோம். பின்னர் உலகிலேயே பெரிய எண் 100 என்று சில காலம் நினைத்திருக்கின்றோம். திடீரென்று ஒருவன் மில்லியன் என்று ஒரு எண் இருக்குதாம். ஒன்றுக்குப் பின்னால 6 சைபராம் என்று சொன்னபோது அவன் ஒரு பிறவி மேதை போன்றே காட்சி தந்தான். அதையும் தாண்டி, சிவபெருமானின் அடியும் முடியுமான இலக்கம் என்று ஒரு இலக்கத்தை சொல்லி இன்னொருவன் பேராச்சரியங்களுக்குள் எம்மை தள்ளினான். இப்போது நினைக்க சிரிப்பாக இருந்தாலும், அந்த வயதில் அது தானே எமக்கான நிஜம். அது போல பால்யத்தில் வாசித்த புத்தகங்கள் எல்லாம் அவற்றுக்குரிய முக்கியத்துவத்தை இழந்திருந்தாலும் அந்த வயதில் அவை எழுப்பிய உணர்வுகள் நிஜம்.

நான் முதல் முதல் வாசித்த நாவல் கே. டானியல் எழுதிய தண்ணீர். அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு எந்த வித தகுதியும் இல்லாத 10வது வயதில் அதை வாசித்தேன். மிக ஆழமான வாசிப்புக்குரிய அந்த நாவலின் ஆழத்தை அப்போது அடைய முடியாதபோதும் அடித்தட்டு மக்கலின் வாழ்க்கை முறையை அறிய அந்த நாவல் உதவியது. இதன் பின்னர் செங்கை ஆழியாணின் காட்டாறு. இந்த புத்தகத்தை வாசித்த பின்னர் ஏனென்று சொல்லத் தெரியாத சில காரணங்களால் என்னை இந்த நாவல் அதிகம் கவர்ந்திருந்தது. அதைத் தொடர்ந்து செங்கை ஆழியானின் நிறைய புத்தகங்கள், குறிப்பாக கிடுகு வேலி, பிரளயம், யானை, ஆச்சி பயணம் போகிறாள், நடந்தாய் வாழி வழுக்கியாறு போன்றனவற்றை வாசித்தேன். அந்த காலப்பகுதியில் இலங்கையில் இந்தியப் புத்தகங்கள் தடை செய்யப்பட்டிருந்தது என நினைக்கிறேன். சரியாக நினைவில் இல்லை. இதனால் எனது வயதுக்கு சற்றும் பொருத்தமில்லாத சொந்தக்காரன், மலைக்கொழுந்து, செ. கணேசலிங்கனின் நிறைய புத்தகங்கள் (முக்கியமாக செவ்வானம், போர்க்கோலம் போன்றன) என்றூ வாசித்துத் தள்ளினேன்.

இந்தியப் புத்தகங்களில் தொடக்க காலத்தில் வாசித்தவை ராஜேந்திரகுமாரின் “வரமாட்டியா மம்மி?” என்றா குறு நாவல். இந்தக் கதையின் முடிவு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். இப்பொழுது மீண்டும் ஒரு முறை இதே கதையை வாசிக்கவேண்டும் தேடிவருகிறேன். கிடைக்கவில்லை. அதுபோலவே அகிலனின் கொள்ளைக்காரன், பால் மரக் காட்டினிலே, மு. வரதராசனின் மண் குடிசை, கரித்துண்டு, ரா. கி. ரங்கராஜன் மொழி பெயர்த்த கையில்லத பொம்மை என்ற கதை என்று நிறைய புத்தகங்களை 90 ஆண்டு போர் மீண்டும் வெடித்திருந்த காலப் பகுதியில் வாசித்தேன். இதற்கு முன்னரே 1987ம் ஆண்டு இந்திய ராணுவத்துடன் போர் உக்கிரமடைந்திருந்த காலப் பகுதியில் சத்திய சோதனையையும் வாசித்திருந்தேன். அந்த வயதில் (அப்போது 8 வயது) வாசித்து முடித்தேனே தவிர அதில் சொல்லப் பட்ட விடயங்கள் பெரும்பாலும் புரியவேயில்லை. ஆனால் 91,92ல் வெறி பிடித்தது போல ஒன்றன் பின்னர் ஒன்றாக பொன்னியின் செல்வன், வேங்கையின் மைந்தன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பாண்டிமா ராணி, கடல் புறா என்று வாசித்துத் தள்ளியபோது அவை இலகுவாக புரிந்தே இருந்தன. இதனால்தான் முன் கதைச் சுருக்கத்தில் பாலகுமாரன் தான் 13 வயதிலேயே பொன்னியின் செல்வன் வாசித்தேன் என்று ஆச்சர்யமாக சொல்லும்போது இதிலென்ன ஆச்சர்யம் என்றுதான் தோன்றியது. உண்மையில் இலங்கையில் பெரும்பாலான வாசிப்புப் பழக்கம் இருப்பவர்கள் தம் 12 / 13ம் வயதிலேயே கல்கியை வாசித்துத் தள்ளியிருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் கதைக்கும் போது பொன்னியின் செல்வன் வாசித்தோம் என்பதை விட எத்தனை தர்ம் வாசித்தோம் என்றுதான் பேசிக் கொள்வது வழக்கம். உண்மையில் பொன்னியின் செல்வனை அது கல்கியில் தொடராக வந்த போது வரும் சித்திரங்களுடன் பார்ப்பது எப்போதும் ஒரு சுகமான அனுபவ்ம்தான். வர்த்தமானன் பின்னர் மலிவு விலைப் பதிப்பாக பொன்னியின் செல்வனை எந்தச் சித்திரங்களும் இல்லாமல் வெளியிட்டார்கள். சப்பென்றுதான் இருந்தது.

இதற்கு அடுத்த காலகட்டத்தில் அதாவது என் 15வது 16வது வயதுகளில் பாலகுமாரனுக்கு தாவினேன். அந்தக் காலம் சுஜாதாவை தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தகாலம். முதன் முதலாக பாலகுமாரனின் நெல்லுக்கு இறைத்த நீர் புத்தகம் வாசித்ததாய் ஞாபகம். விசாகன் வீட்டில் இருந்து திரும்பி ஒரு செக்கல் பொழுதில் ஒரே அமர்வில் வாசித்து முடித்த புத்தகம். அதன் பிறகு பாலகுமாரனைப் படிப்பதே தலையாய கடமை என்று வீட்டில் தேடித் தேடி ஒவ்வொரு பாலகுமாரனின் புத்தகமாய் வாசிக்கத் தொடங்கினேன். உள்ளம் கவர் கள்வன், வன்னி மரத்தாலி, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, க்டற்பாலம் சிறுகதைத் தொகுப்பு என்று வாசிக்க வாசிக்க ஆச்சரியங்களையே அள்ளி இறைத்துச் சென்றார் பாலகுமாரன். இதன் பிறகு கொழும்பு வந்து கனடா வந்து இரும்புக் குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், அகல்யா, கரையோர முதலைகள், பயணிகள் கவனிக்கவும், சினேகமுள்ள சிங்கம் என்று வாசித்த பாலகுமாரனின் நாவல்கள் பாலகுமாரனை மிஞ்சி எந்த எழுத்தாளனும் வரப் போவதில்லை என்றே என்னை அப்போது எண்ண வைத்தது. பின்னர் “ஆப்பிள் பழம் உருட்டி விடப்பட்ட விளைவோ என்னமோ” அவரது எழுத்துகள் பிடிக்காமல் போக ஆரம்பித்தது. இது பற்றி ஏற்கனவே இரண்டு பதிவுகள் எழுதி இருக்கிறேன். (ஒன்று, இரண்டு)

கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் கொழும்புவில் நான் இருந்தபோது பெரியப்பாவுடன் அதிகம் கதைத்து அவருக்கு இருந்த திராவிட இயக்கங்கள் மீதான பற்றால் நான் திராவிட இயக்க புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். கருணாநிதி எழுதிய கிட்டத்தட்ட எல்லாப் புத்தகங்களையும் வாசித்து இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் முரசொலி இணையத் தளத்துக்கு சென்று உடன்பிறப்புக்கு கடிதத்தை வாசிப்பதை தவறாமல் செய்து வந்தேன். உண்மையில் திராவிட இயக்க எழுத்துக்களை இவ்வளவு தீவிரமாகத் தொடர்ந்ததால் எனக்கு ஏற்பட்ட முக்கிய பலன் அதன் போலித்தனங்களை அறிந்து கொண்டது தான். திராவிட இயக்கங்கள் என்று மட்டுமல்ல, நம்பிக்கை அதிகம் வைத்து நாம் கொண்டாடிய அமைப்புகள் பின்னர் எவ்வாறு மக்கள் நலன் என்ற விடயத்தில் இருந்து நீர்த்துப் போனார்கள் என்ற அனுபவத்தை 95/96 காலப் பகுதியில் இருந்து ஈழத்திலும் கண்டு வருகிறேன். அமைப்புகள் எல்லாமே எடுக்கும் முனைவுகளும், முன்னெடுப்புகளுமே தம்மை அமைப்பு ரீதியாக நிலையாக்கவே அன்றி மக்கள் நலனை முன்வைத்தல்ல என்பதை காலம் எமக்கு திரும்ப திரும்ப அனேக ரணங்களுடன் காட்டியே வருகின்றது.

உண்மையில் எனது வாசிப்பு அனுபவத்தில் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம் முக்கியம் வாய்ந்தது. கனடா வந்த ஆரம்ப காலங்களில் எனக்கு வாசிப்புப் பழக்கம் உள்ள எந்த நண்பர்களும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு தோழி இருந்தாள். அவளுடனான நட்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. வாசிப்பு அனுபவத்தில் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருந்த பாலகுமாரனும், திராவிட க் கட்சி சார்ந்தவர்களின் எழுத்துக்களையும் தாண்டி வேறு வாசிப்புத் தேவைப்பட்டது, ஆனால் தொடர்புகளும் நூல்களும் கிடைக்கவில்லை.  இந்த நேரத்தில் குமுதமும், விகடனும் வாசித்து என் இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்வதே அதிக சாத்தியமூட்டுவதாக இருந்தது. ஆனால் நான் மாற்றாக தேர்ந்தெடுத்தது சுஜாதாவை.  தன் கட்டுரைகளிலும், சமயங்களில் கணேஷ் – வசந்த் கதைகளிலும் கூட சுஜாதா நிறைய எழுத்தாளர்களை அறிமுகம் செய்துவைத்தார். மெல்ல அவர் அறிமுகம் செய்து வைப்பவர்களை குறித்துக் கொண்டு அவற்றை வாசிக்கத் தொடங்கினேன். சுஜாதாவைப் பாப்பனப் பன்னாடை என்றும், எழுத்துலக விபச்சாரி என்று திட்டினார்கள், அப்படித் திட்டுவதையே ஒரு சுய மோகமாகக் கொண்டு மகிழ்ந்தார்கள். இவர்கள் எல்லாரும் ஒரு முறை இதய சுத்தியுடன் யோசிக்க வேண்டும். இப்போது அவர் செய்த பணிகளை யார் செய்கிறார்கள். அவரில் நீங்கள் கண்ட தவறைப் போல பன்மடங்கு தவறுகளை உங்களிலும் இன்னொருவர் காட்டமுடியும், அப்போது சுட்டிக் காட்டுபவர் உங்களுக்கு சொல்லும் பேர்கள் நீங்கள் சுஜாதாவை வசையாடிய அதே வரிகளாகத் தான் இருக்கும். வெகுஜன எழுத்துக்கும் தீவிர எழுத்துக்கும் பாலமாக இருந்தவர் சுஜாதா. அந்த இழப்பு இன்னும் சில ஆண்டுகளிலேதான் அதிகம் உறைக்கும்.

இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய நாட்களில் என் வாசிப்பு மன நிலை முற்றிலும் மாறி இருக்கின்றது. அல் புனைவுகளை வாசிப்பதில் தான் அதிகம் ஈடுபாடு வருகின்றது. அ-புனைவுகளை வாசிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இருக்கின்றேன், போதிய நேரம் கிடைக்காத போதும், கிடைக்கும் நேரமெல்லாம் வாசிப்பு அனுபவமாக மாற்றியே வருகின்றேன். பெரும் எதிர்பார்ப்புடன் வாசிக்கும் சில எழுத்துகள் ஏமாற்றங்களாய் முடிவதும் உண்டு. ஜி. நாகராஜன் மறைந்த பின்னர் அவரது கையெழுத்தில் இருந்து எடுத்து வெளியிடப்பட்டதான முன்னுரையுடன் அவரின் சிறுகதைகள் தொகுப்பில் இருக்கும் “ஆண்மை” கதை முழுக்க முழுக்க ஏமாற்றமாயே போனது. குடும்பத்தின் ஏழ்மைக்காக தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கும் பெண்ணின் நிலை அறிந்து அவளை விட்டுச் செல்வதுதான் ஜி. நாகராஜன் சொல்லும் ஆண்மையோ என்றே தோன்றியது. ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைந்து கிடைப்பது வாழ்க்கை மட்டுமல்ல, இலக்கியமும்தான்.

என் நட்சத்திர வார அறிமுகத்தில் சொன்னது போலவே

The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
– Robert Frost

One thought on “நானும் என் வாசிப்பும்.

Add yours

  1. வரமாட்டியா‌ மம்மி‌ படித்து நானும் அழுதிருக்கிறேன்…அந்த புத்தகம்‌ தற்போது அமேசான் கிணடிலில் உள்ளது… இது தவிர
    காகித புத்தகமாக பாக்கெட் நாவல் அசோகனிடம் கேட்டிருக்கிறேன்..அவர்‌தறபோது பழைய புத்தகங்களை‌புதிதாக அச்சிட்டு‌க்கொண்டிருக்கிறார்…

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: