இந்த மே மாதம் 5வது தமிழியல் மாநாட்டில் கலந்து கொள்ள கனடா வந்திருந்த கார்மேகம் என்கிற ஜவகர்லால நேரு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்ட மாணவரை(நாட்டாரியல் பற்றி அதிகம் அக்கறையும், தேர்ச்சியும் கொண்டவர்) நண்பர்கள் சந்தித்து ஒரு மாலை நேரத்தில் சிறிது உரையாடினோம். எழுதப் பட்ட வரலாறுகளை சற்றே மறந்துவிட்டு நாட்டாரியல் பற்றியும், பண்பாட்டு அம்சங்கள், அவற்றின் தொன்மை பற்றியும் வாசிக்கும்போது அல்லது பேசிக் கொண்டு மெல்ல மெல்லப் பின்னோக்கி செல்லும் போது எம் மக்களின் உண்மை வரலாறுகள் பற்றி மெல்ல அறிய முடிகின்றது. நாம் படிக்கும் வரலாறுகளும், கல்விக் கூடங்களில் படிப்பிகின்ற வரலாறுகளும், அரசாங்கங்கள் நூதனசாலைகளிலும், ஆவணாங்களிலும் சேமித்து வைக்கின்ற வரலாறும், ஆளும் வர்க்கம் எப்படி வரலாறு இருந்திருக்கவேண்டும் என்று விரும்புகிறதோ அந்த வரலாறாக இருக்க, உண்மையான வரலாறு எவராலும் சீண்டப்படாமல் பாழடைந்த கட்டடங்களிலும், எவருமே தேடாத நூல்களிலும், கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையிலும், அவர்களிடையே வாய் வழிப் பேச்சுக்களாகவுமே நிலைத்திருக்கின்றது. வரலாற்றை அறியவேண்டிய தேவை, எழுதப்பட்ட வரலாறுகளின் நீட்சியால் ஒடுக்கப்பட்ட அனைவருக்குமே உண்டு. கார்மேகம் பேசிக் கொண்டிருக்கும்போது தொ. பரமசிவன் பற்றி அடிக்கடி குறிப்பிட்டார். (அதே போல சோ தர்மன் பற்றியும் குறிப்பிட்ட போதும் சோ. தர்மன் கதைகளில் இருக்கின்ற சில அரசியல்கள் பற்றி எனக்கு முரண்பாடுகள் உண்டு; அதே நேரம் நான் சோ. தர்மனை முழுமையாக வாசிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளுகின்றேன்). தாழ்வுக்கும் இழிவுக்கும் உரியதாகக் கறுப்பு நிறம் கருதப்பட்டதன் சமூக வரலாற்றுக் காரணிகள் யாவை?இக்கேள்விக்கான விடையை சமூக அமைப்பில் காண இயலாது. மாறாக அதிகாரம் சார்ந்த அரசியல் அமைப்புக்குள்ளே தேடவேண்டும். அதுவும் தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னரே தேட வேண்டும்.
கி.பி. 1310 முதல் 1323 வரை தமிழ்நாடு இசுலாமியர் படையெடுப்பால் அலைக்கழிந்தது. மீண்டும் 1383ல் விஜய நகரப் பேரரசின் தளபதிகளின் படையெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விஜய நகரப் பேரரசு இசுலாமியருக்கு எதிராக வைதிக நெறியை உயர்ந்த இலட்சியமாகக் கொண்டு தோன்றிய அரசமரபாகும். ஆட்சியதிகாரம் விஜய நகரப் பேரரசின் தள்பதிகளின் கைக்கு மாறியவுடன் தமிழ்நாடு ஒரு பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொண்டது. அதாவது வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிறமொழி பேசும் ஆட்சியாளர்களிடம் மாறியது. இந்த ஆட்சியாளரைத் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறத் தொடங்கினர். பிராமணர் தொடங்கிச் சக்கிலியர் ஈறாக இந்தக் குடியேற்றம் அமைந்தது. பிராமணர், பிராமணரை அடுத்த ‘மேல் சாதியினரான’ புலால் உண்ணாத ரெட்டியார், ராஜுக்கள் இவர்களுக்கு அடுத்த படிநிலைகளில் அமைந்த நாயுடு (வெலமா, கம்மவார், கவர, காப்பு, பலிஜா), இவர்களுக்கும் அடுத்த நிலையில் உள்ள ஆசாரிகள், பெரும்பாலும் புன்செய் நிலத்து விவசாயிகளான நாயக்கர், மிகத் தாழ்நிலையில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியர், தோட்டி வேலை செய்யும் சக்கிலியர் என இவர்களை வகைப்படுத்துக் காணலாம். இவர்களோடு செளராட்டிரப் பகுதியிலிருந்து ஏற்கனவே வெளியேறி ஆந்திரத்தில் இருந்த நெசவுத் தொழில் செய்யும் சாதியான செளராட்டிரர்களும் தமிழகத்தில் வந்து குடியேறினர். இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தனித்து வளர்ந்திருந்த சைவ, வைணவ மதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. வைதிக நெறியே முன்னிறுத்தப்பட்டது. ‘இந்து மதம்’ அதிகாரத்தில் அமர்ந்தது. தமிழ் அக்காலத்தில் ஆட்சி மொழியாக இல்லை. ஆட்சியாளர்களின் மொழியாகிய தெலுங்கு பேணப்பட்டது. அரசியல் அதிகாரத்தில், வைதிக நெறியின் காவலர்களான பிராமணர்க்கும் சம்சுகிருதத்திற்கும் முன்னுரிமை தரப்பட்டது.
இவர்களின் ஆட்சி முடியும் தறுவாயில் கி.பி. 1700க்குப் பிறகு உருது பேசும் வடநாட்டு முசுலீம்கள் அங்காங்கே சில பகுதிகளில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். மிகச்சில பகுதிகளில் பிரஞ்சுக்காரரும் ஏனைய பகுதிகளில் பிரிட்டிஷ்காரர்களும் ஆட்சியைக் கைப்பற்றினர். கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கையிலே வைத்திருந்த அனைத்து ஆட்சியாளர்களும், தமிழர்களின் சாரசரி நிறத்திலிருந்து வேறுபட்ட சிவந்த நிறமுடையவர்கள். அவர்களால் ஆதரிக்கப்பட்ட வடநாட்டில் இருந்து வந்த இசுலாமிய ஞானிகள், ஐரோப்பியத் பாதிரிமார்கள், பிராமணர்கள் ஆகிய அனைவரும் தமிழர்களைவிடச் சிவந்த நிறமுடையவர்கள். எனவே ஐந்து நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரமும், அரசியல் சித்தாந்தங்களையும் நடைமுறைகளையும் உயர்ந்த்திப் பிடிக்கின்ற ஆன்மீக அதிகாரமும் சிவந்த நிறமுடையவர்களின் கையிலேயே இருந்தது. எனவே இந்த நிறம் அதிகாரத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, மேட்டிமையின் சின்னமாக, அழகு நிறைந்ததாகக் காட்டப்பட்டது. சுருக்கமாகச் சொல்வதானல், தமிழ் பேசும் பெருவாரியான மக்கள் கூட்டத்தாரின் மரபுவழி அழகுணர்ச்சி மனிதத் தோலின் நிறத்தைப் பொறுத்த மட்டில் திசைமாற்றம் பெற்றது. எதிர்நிலையில் சொல்வதனால். கருப்பு நிறமுடைய மக்கள் அழகற்றவர்களாகவும், ஆளப்படுவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னமாகவும் கருதப்பட்டனர். இன்றளவும் இதுவே தொடர் கதையாகி வருகிறது.
எனவே தான் ‘கறுப்பு – சிவப்பு’ என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த பிரச்சனையன்று. அது மரபுவழி அழகுணர்ச்சியிலிருந்து திசை மாற்றப்பட்டவர்களின் அதிகார வேட்கைக்கும் மரபுவழிச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட எளிய மக்களுக்கும் இடையிலே நிலவிவரும் ஒரு முரண்பாடு ஆகும்.
காலம் இணையத் தளத்தின் வலைப் பூ முகவரிhttp://kaalammagazine.wordpress.com/
LikeLike
கிருஷ்ணன் கோயிலாகவும் (நெல்லியடி)- நீவிர் சொல்வது துன்னாலை வல்லிபுர ஆழ்வார் கோவிலையா???
LikeLike
சரியாகத் தெரியவில்லை கிருத்திகன்,கட்டுரை ஆசிரியர் இந்தக் கோயில் 1950ல் இந்தக் கோயில் கிருஷ்ணர் கோவிலாக மாறியதென்று குறிப்பிடுகிறார். அதை வைத்துத்தான் பார்க்கவேண்டும். நான் இணைப்புக் கொடுத்த காலம் கட்டுரையை வாசித்தீர்களா?
LikeLike