கொல்லப்படும் பெண்குழந்தைகளும், காணாமல் போகும் பெண் குழந்தைகளும்

gendercideIt’s not a child.  It’s a girl baby, and we can’t keep it.  Around these parts, you can’t get by without a son.  Girl babies don’t count.”   சீனாவில் பிறந்து தற்போது லண்டனில் வசித்து வரும் ஸு ஸின்ரன் (Xue Xinran) எழுதிய The good woman of China என்கிற புத்தகத்தில், சீனாவில் பெண் குழந்தைகள் பிறக்கின்ற போது பொதுப்புத்தி எவ்வாறு அதை எதிர்கொள்ளுகின்றது என்பதை மேலே சொன்ன வரிகளில் தெரிவித்து இருக்கின்றார்.  It’s a girl baby, and we can’t keep it என்கிற அவர்கள் மன நிலைக்கு கை மேல் பலனாக இன்னும் 10வருடங்களில் சீனாவில் இருக்கின்ற ஒவ்வொரு 5 இளைஞர்களிலும் ஒருவர் தனக்கான பெண் துணை இல்லாது வாழ நேரிடும் என்று chinese academy of social sciences (CASS) என்கிற அமைப்பு எச்சரித்துள்ளது.  அதாவது 2020 அளவில் சீனாவில் இருக்கப் போகின்ற  ஆண்களின் எண்ணிக்கை அங்கே இருக்கப் போகின்ற பெண்களின் எண்ணிக்கையை விட 30 முதல் 40 மில்லியன்களால் அதிகமாக இருக்குமாம்.சீனா என்றவுடனே அதன் ஒரு பிள்ளைக் கொள்கை நினைவுக்கு வந்து விடும்.  வீட்டுக்கொரு பிள்ளை என்பதைச் சட்டமாக பின்பற்றும் சீனாவில் இருப்பவர்கள், ஆண் பிள்ளைகளே பிற்காலத்தில் தமக்கு உதவுவார்கள், தம்மைப் பராமரிப்பர் என்ற நம்பிக்கையில் பெண் குழந்தைகளை பிறந்த உடனேயே கொன்று விடுவது நடக்கக் கூடும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும் அந்தத் கொள்கையையே முழுக் காரணம் என்று கூறிவிடமுடியாது.  சீனாவில் ஒரு பிள்ளைக் கொள்கை 1979ல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.  ஆனால் ஆண் குழந்தைகள் பிறப்பது 90களில் இருந்துதான் அதிகரித்துச் செல்லுகின்றது.  தவிர 90களுக்குப் பின்னர் சீனாவில் மாத்திரமல்லாது இந்தியா, தைவான், தென்கொரியா, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை பெண் குழந்தைகளின் எண்ணிக்கையைவிட அதிகரித்து வந்திருக்கிறது.  ஆனால் இந்த நாடுகளில் சீனாவில் இருப்பது போல ஒரு பிள்ளைக் கொள்கை இல்லை.  நிக் எபர்ஸ்டாட் (Nick Eberstadt) என்கிற புள்ளிவிபரவியலாளர் சொல்வது போல ஆண் குழந்தைகள் மீது சமூகத்தில் இயல்பாகவே அதீத விருப்பம் இருக்கின்ற சூழலில் கருவிலேயே குழந்தையின் பாலினத்தினை அறிந்துகொள்ளும் தொழினுட்பமும் வேகமாக பரவியதே இதற்கான முக்கிய காரணமாக இருக்கவேண்டும்.  உதாரணமாக, இந்தியாவில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கானிங் மூலம் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ளும் சோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் 20 மில்லியன் பெண் குழந்தைகள் பிறக்கப்போகும் குழந்தைகளின் பாலினம் தொடர்பான பெற்றோரின் தேர்வு காரணமாக கொல்லப்பட்டிருப்பதாக 2007ல் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகள் பிறக்கின்ற விகிதம் இயற்கையிலேயே சமமாக இருப்பதில்லை.  பொதுவாக 100 பெண் குழந்தைகளுக்கு 103 – 106 வரையான ஆண்குழந்தைகள் பிறக்கின்றன.  அதே நேரம் நோய்த் தொற்று போன்ற காரணிகளால் ஆண் குழந்தைகள் இறக்கும் விகிதமும் பெண் குழந்தைகளை விட அதிகமாகவே இருக்கின்றது.  இந்த அடிப்படையில் இயற்கையில் (அதாவது 25 ஆண்டுகளின் முன்னர், பெண் குழந்தைகளை கருவிலேயே கலைத்தல் போன்ற புறக் காரணிகள் தாக்கம் செலுத்தும் முன்னர்) வாலிப வயதை அடையும் போது ஆண்கள் – பெண்களும் எண்ணிக்கையில் சமநிலையை எய்துகின்றனர்.  ஆனால் மேற்குறித்த நாடுகளில் ஆண்  – பெண் குழந்தைகளின் பிறப்பில் இருக்கும் ஏற்றத் தாழ்வு இந்தக் காரணங்களைத் தாண்டியதாகவே இருக்கின்றது.  குறிப்பாக சீனாவில் 2000 – 05 ல் ஒவ்வொரு 100 பெண் குழந்தைகளிற்கும் 124 ஆண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன.  இதே எண்ணிக்கை ஆர்மேனியாவிலும் அசர்பைஜானிலும் 117 ஆகவும், ஜோர்ஜியாவில் 112 ஆகவும், தென் கொரியாவில் 110 ஆகவும், இந்தியாவில் 108 ஆகவும் உள்ளது.

பெண் சிசுக் கொலை என்றவுடன் நாம் அதிகம் அறிந்திருப்பது இந்தியாவையே.  அப்படி இருக்கின்ற போது இந்த எண்ணிக்கை குறைவாக தோன்றலாம், ஆனால் இந்தியாவில் பிறந்த பின் கொல்லப்படும் / கைவிடப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கின்றது.  அதாவது 1981 -91 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளின்படி இந்தியாவில் பிறக்கின்ற ஒவ்வொரு 1000 பெண் குழந்தைகளிலும் 109 -119 வரையான – அதாவது 10% இலும் அதிகமான பெண் குழந்தைகள் 4 வயதிற்குள்ளாகவே இறந்தோ அல்லது காணாமலோ போய்விடுகின்றனர்.  தவிர இந்தியாவில் மாவட்ட ரீதியில் பார்க்கின்றபோதும் இந்த எண்ணிக்கையில் காணப்படும் வேறுபாடு அதிகரித்தே வருகின்றது.  உதாரணமாக ஆண் – பெண் குழந்தைப் பிறப்பு விகிதாசாரம் 125 : 100 என்ற அளவில் 1991ல் ஒரே ஒரு மாவட்டத்திலேயே இருந்தது.  இதுவே 2001ல்  -அதாவது பத்தே வருடங்களில்- 46 மாவட்டங்களாக உயர்ந்துள்ளது.  இங்கே சொன்ன இதே பத்தாண்டுகளில்தான் அல்ட்ரா டவுண்ட் ஸ்கானிங் வசதிகள் அதிகரித்து எல்லா இடங்களிலும் எளிதாக அணுகக் கூடியதாக  அதிகரித்தன என்பது ஒரு எளிய அவதானமாகும்.  இந்தியாவிலோ அல்லது சீனாவிலோ கருவில் இருக்கின்ற பிள்ளையின் பாலினத்தை அறிந்து கொள்வதற்கான சோதனைகளிற்கான கட்டணம் வெறும் 500 இந்திய ரூபாய்களாக இருக்கின்றபோது அதன் தொடர்ச்சியாக தமக்கு பெண் குழந்தைகள் விருப்பத்துக்குரியன அல்ல என்கிறபோது இலகுவாக கருக்கலைப்பை செய்துவிடுகின்றனர்.  மருத்துவம் என்பது முழுக்க முழுக்க வியாபாரமாகி வருகின்ற சூழலில் ( அண்மையில் விஜய் தொலைக்காட்சி நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் ஒரு மருத்துவர், மருத்துவத்துறை நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அது வியாபாரமே என்றும் அவ்வாறு செய்வதில் தவறேதும் இல்லை என்றும் வாதிட்டது இங்கே ஞாபகப்படுத்தப்பட வேண்டியது).  1994, 95ல் முறையே இந்தியாவிலும் சீனாவிலும் பாலினத்தின் காரணமாக நடக்கின்ற கருக்கலைப்புகள் சட்ட விரோதமானவை என்று சட்டமியற்றப்பட்டாலும் இன்றுவரை இவ்வாறான கருக்கலைப்புகள் நடந்து கொண்டே இருக்கின்றன.  தவிர குழந்தை பிறந்தபின்னரும் கூட அவை பெண் குழந்தைகளாக இருக்கின்ற போது கொன்றுவிடுவது கூட சில மருத்துவமனைகளிலும், நிறையக் கிராமங்களில் ஊர் மருத்துவச்சிகளாலும் நடந்துகொண்டே இருக்கின்றது (கருத்தம்மா திரைப்படம் இது பற்றிய நல்லதோர் பதிவாகும்).  2007ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இருக்கின்ற ரட்லாம் என்ற ஊரில் இருந்த “மிஷன்” மருத்துவமனை ஒன்றின் பின்புறமாக  புதைக்கப்பட்டிருந்த 390 பெண்குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இதே ஆண்டு யுனிசெஃப் நிறுவனம் இந்தியாவில் இருந்து 50 மில்லியன் பெண் குழந்தைகள் காணாமல் போயிருப்பதாக அறிவித்திருந்தது.

பொதுவாக இது போன்ற காரணங்கள் பற்றிக் குறிப்பிடும்போது இதெல்லாம் மக்களின் கல்வியறிவுக் குறைவு அல்லது வறுமை போன்ற காரணிகளால் நடைபெறுவன என்றே பொது மனநிலை இருக்கின்றது.  ஆனால் மொனிக்கா தாஸ் குப்தா (Monica Das Gupta) உலக வங்கிக்காக செய்த ஆய்வுகளின் அடிப்படையில் எழுதிய “Why is son preference so persistent in east and south Asia?’ என்கிற ஆய்வறிக்கை பொதுப்புத்தியில் இருக்கின்ற இது போன்ற நம்பிக்கைகளை விட முக்கிய காரணிகளாக பொருளாதாரக் காரணிகளும். சமூக – கலாசார காரணிகளும் இருப்பவற்றைக் காட்டுவதுடன், பெண்குழந்தையென  அறிந்தவுடன் கருக்கலைப்பு செய்வோரில் கல்வியறிவும், பொருளாதார வசதிகளும் படைத்தவர்களே கணிசமாக இருக்கின்றனர் என்பதையும் காட்டுகின்றது.  சீனா, இந்தியா, தென்கொரியா ஆகிய மூன்று  நாடுகளை அடிப்படையாக வைத்து  அந்நாடுகளில் அதிகரித்து செல்லும் ஆண் குழந்தைகளின் பிறப்பில் தாக்கம் செலுத்தக் கூடிய கலாசார பொருளாதாரக் காரணிகளை விரிவாகவும் தெளிவாகவும் கவனத்தில் எடுத்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கையில் குறிப்பிடப்படும் விடயங்கள் முக்கியமானவையாகவும், ஏற்றுக்கொள்ளக் கூடியனவாகவும் இருக்கின்றன.

  1. இந்தச் சமூகங்களில் பெண்கள் பொதுவாக ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்,  இதனால் பெண் பிள்ளைகளை பெறுவதை விட ஆண் பிள்ளைகளை பெறுவது மரியாதைக்குரியதாக பார்க்கப்படுகின்றது
  2. இந்தச் சமூகங்களில் பொதுவாக மகன் வழியாகவே குடும்பப் பொறுப்புகள் கொண்டு செல்லப்படுகின்றன. மகளானவள் திருமணமாகி வேறு குடும்பத்துள் நுழைபவள் என்றும், மகனே பெற்றோரை அவர்களின் வயோதிபத்தில் பராமரிக்கும் பொறுப்புடையவன் / பராமரிக்கக்கூடியவன் என்றும் பொதுப்புத்தியில் உறைந்து போய் இருக்கின்ற நம்பிக்கை.
  3. இந்தியாவைப் பொருத்தவரை பெண்களை விட ஆண்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் அதிகம் என்பதாலும், பெண்கள் திருமணத்தின் போது சீதனம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்க, ஆண்கள் சீதனம் வாங்குபவர்களாக இருக்கின்றமை. அல்ட்ரா சவுண்ட் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் இந்தியாவில் மருத்துவர்கள் கருக்கலைப்பிற்கு “இன்று 500 ரூபாய் இழப்பதன் மூலம் எதிர்காலத்தில் 50,000 ரூபாய் இழக்கப் போவதை தவிருங்கள்” என்று விளம்பரம் செய்திருந்தனராம். இதில் குறிப்பிடப்படும் 500 ரூபாய் கருக்கலைப்பிற்கான கட்டணம், 50,000 ரூபாய் கொடுக்கப்படப் போகும் சீதனம். இதில் என்ன முரண் நகை என்றால் இந்தியாவைப் போலவே ஆண்குழந்தைகள் பிறக்கும் விகிதாசாரம் அதிரித்துச் செல்லும் சீனாவிலும், தென் கொரியாவிலும் திருமணங்களின் போது மணமகனின் பெற்றோர் ஏற்கவேண்டிய செலவுகள் மணமகளின் பெற்றோர் பொறுப்பெடுக்க வேண்டிய செலவுகளை விட சராசரியாக 3-4 மடங்கு அதிகமாக இருக்கின்றது.  தவிர மணமக்களுக்காக மணமகனின் பெற்றோர் வீடு வாங்கி கொடுக்கின்ற வழமையும் இருக்கின்றது.
  4. 60 களின் பிற்பகுதியில், குறிப்பாக 70களில் குடும்பக்கட்டுப்பாடு பற்றிய பிரச்சாரங்கள் முன்னெடுக்க்ப்படுகின்றன. இதனால் ஒரு குடும்பத்தில் பிறக்கும் முதலாவது பிள்ளைகளின் பாலினங்களில் இருக்கின்ற விகிதாசாரங்கள் ஒரளவு சமனாக இருப்பினும் (சராசரியாக 106:100); இரண்டாவது மூன்றாவது பிள்ளைகள் என்று போகின்ற போது இந்த விகிதாசாரம் பன்மடங்கு அதிகரித்துச் செல்கின்றது.  உதாரணமாக இந்த விகிதாச்சாரம் தென் கொரியாவில் 195:100ஆகவும்; சீனாவில் 155:100ஆகவும்; தைவானில் 135:100 ஆகவும் இருக்கின்றது.

பின் குறிப்புகள்

  1. Genderside என்ற பிரயோகம் முதலில் Mary Anne Warren ஆல் பயன்படுத்தப்பட்டது.  கருக்கலைப்பு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட இவர், குழந்தையின் பாலினத்தின் காரணமாக செய்யப்படும் கருக்கலைப்புகள் பற்றி Genderside: The Implications of Sex Selection என்று 1985ல் எழுதிய புத்தகத்தில் இந்தப் பிரயோகம் பயன்படுத்தபப்பட்டது.
  2. இந்தக் கட்டுரையில் இருக்கின்ற தகவல்களையும் தரவுகளையும் கீழ்க்காணும் இடங்களில் இருந்து பெற்றுக் கொண்டேன்.

 i – Genderside: What Happenedn to 100 million baby girls – The Economist

 ii – Why is son preference so persistent in East and South Asia? – The World Bank

 iii – http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article1403517.ece

  1. சீனாவின் ஒரு பிள்ளைத் திட்டம் என்ற கட்டுரையில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். சீனாவின் எல்லா மாகாணங்களில் இந்தக் கட்டுப்பாடு இல்லை என்ற போதும், பெருமளவிலான மாகாணங்களில் இக்கட்டுப்பாடு இருப்பதாலேயே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

காலம் இதழ் 36, மார்கழி 2010ல் வெளியானது

One thought on “கொல்லப்படும் பெண்குழந்தைகளும், காணாமல் போகும் பெண் குழந்தைகளும்

Add yours

  1. Very nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good article

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: