therikathaiதேரிக்கள் என்கிற பௌத்தப் பிக்குணிகள் பற்றி நாம் பெரிய அளவில் அறியவில்லை என்றே நினைக்கின்றேன். அதிலும் முக்கியமாக ஈழத்தைப் பொருத்தவரை அங்கே தொடர்ந்து நடைபெறும் இன ரீதியிலான போரும், அதனடிப்படையில் பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்ட “பௌத்த சிங்கள” விம்பம் காரணமாக தமிழர்கள் அதிலும் 80களில் பிறந்த தலைமுறையினர் பெருமளவில் பௌத்தம், மற்றும் சிங்களம் என்கிற விடயங்களையே ஒவ்வாமையுடனேயே பார்த்துவந்தனர். அதிலும் குறிப்பாக தமிழர்கள் கணிசமான அளவில் பௌத்த மதத்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்று சொல்வதைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் கூட நிறையப்பேர் இருப்பதை அவதானித்து இருக்கின்றேன். இது போன்ற சூழலில், பௌத்தம் பற்றிய வாசிப்புகள் தமிழ்ச் சூழலில் நடைபெற்றது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது என நினைக்கின்றேன். ஒரு தலைமுறை யுத்தத்துக்குள்ளேயே பிறந்து வளர்ந்திருக்கின்ற ஈழத்துச் சூழலில் சிங்களவர் பற்றியும், பௌத்தம் பற்றியும் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லும்போது அது மைய நீரோட்டத்தில் உள்ளோரால் இலகுவாக ஏற்கப்படாது என்றாலும் கூட வரலாறு, தேசியம், இனப்பிரச்சனைகள் / இன முரண்கள் போன்றவற்றை ஆராயும்போது அரசியல் பொருளாதாரக் காரணிகள் அளவுக்கு அல்லது பண்பாட்டுக் காரணிகளும் ஆராயப்படவேண்டியவை என்பதே தெளிவுக்கான வழியாகும். ஈழத்தில் இருக்கின்ற இனப்பிரச்சனை தொடர்பாக நேரடியாக எந்த சம்பந்தமும் இல்லாதபோதும் தேரிகாதை என்கிற பௌத்த பிக்குணிகளின் பாடல்களின் தொகுதி கிமு 6ம் நூற்றாண்டில், அதாவது புத்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து காதல், குடும்பம், குழந்தை என்கிற வட்டத்தை மீறிச் செயல்பட்ட ஓரளவு தம் எதிர்க் குரலைப் பதிவு செய்த பிக்குணிகளைப் பற்றிய வாசிக்க வேண்டிய ஒரு பதிவாக இருக்கின்றது. இதன் மூலத்தைப் பாலி மொழியில் இருந்து ரைஸ் டேவிட்ஸ், கே ஆர் நோர்மன் ஆகியோர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க, ரைஸ் டேவிட்ஸின் மொழி பெயர்ப்பை ஆங்கிலம் வழித் தமிழுக்கு அ. மங்கை மொழிபெயர்த்துள்ளார். பௌத்தம் பற்றியும், பௌத்த நூல்கள், தத்துவம் பற்றியும் எனக்கு ஆழமான அறிவும் வாசிப்பும் இல்லாததால் ஒரு பகிர்வாக / அறிமுகமாக இந்த நூல் பற்றிய சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

கௌதம புத்தரின் இறப்பிற்குப் பிறகு பௌத்த நூல்கள் அவற்றின் பாடுபொருட்களுக்கு ஏற்பத் தொகுக்கப்பட்டன. இவ்வாறு திரிபிடகம் உருவானது. இந்தத் திரிபிடகம் விநயபிடகம், ஸுத்தபிடகம் (இந்த நூலில் ஸூத்தபிடகம் என்று குறிப்பிடப்பட்டாலும் வேறு சில இடங்களில் சூத்திர பிடகம் என்றும் குறிப்பிடப்படுகிறது) , அபிதம்மபிடகம் என்கிற மூன்று தொகுதிகளைக் கொண்டது. சுருக்கமாகச் சொன்னால் விநயபிடகம் சங்கத்தின் ஒழுக்க நெறிகளைப் பற்றியும், அபிதம்மபிடகம் மெய்யியல் குறித்தும், ஸூத்தபிடகம் புத்தரின் போதனைகளையும் இதர கூற்று வகைப்பட்ட நூல்களையும் கொண்டிருக்கின்றன. இவற்றில் முறையே விநயபிடகம் இரண்டு உட்பிரிவுகளையும், அபிதம்மபிடகம் 7 உட்பிரிவுகளையும் கொண்டிருக்க, ஸூத்தபிடகத்தில் இருக்கின்ற ஐந்து பிரிவுகளில் ஒன்றான குட்டக நிகாயத்தின் 15 உட்பிரிவுகளில் ஒன்றாக தேரிகாதை வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக ஆன்மீகம் என்பது நாளாந்த வாழ்க்கையை நிராகரிப்பதாகவே கட்டமைக்கப்படுகின்ற போது தேரிக்களின் வாழ்வில் தினசரி வாழ்வும் ஆன்மீக வாழ்வும் எதிரும் புதிருமாக இல்லாமல் தினசரி வாழ்க்கையைக் கடப்பது என்பது அதைப் புறந்தள்ளுவது அல்ல, அதன் இருப்பை அங்கீகரித்து அதனூடாகப் பயணித்து மீள்வதாக இருக்கின்றதை இந்தப் பாடல்களின் ஊடாக அறியக்கூடியதாக இருக்கின்றது. நிப்பாணம் என்று சொல்லப்படுகின்ற நிலையை அடைந்த பின்னர் பெண்கள் அதற்கு முன்னர் எப்படி இருந்தோம், எப்படி அந்த நிலையை அடைந்தோம் என்று சொல்லுகின்ற வகையிலேயே தேரிகாதையின் பாடல்கள் அமைக்கின்றன.

 உதாரணத்துக்கு வாசித்தி என்கிற தேரியின் பாடல்களைப் பார்ப்போம். தனது மகன் சிறு வயதிலேயே இறந்ததைக்கண்டு பித்து நிலைக்கு உள்ளான இந்தப் பெண், எவரும் அறியாமல் மனம் போன போக்கில் சென்று மிதிலையை அடைகின்றார். அங்கு புத்த பகவனைக் கண்டு அவர் தம்மத்தை விளக்க வாசித்தி உலகு துறந்து சங்கத்தில் சேர்கிறார். அவர் பாடும் பாடல் இப்படி அமைகின்றது

இங்கும் அங்கும் பித்துப் பிடித்தவளாய்
மித மிஞ்சிய சோகத்தில் பைத்தியமாகி
என் குழந்தைக்காய் வேதனைப்பட்டு
மேலும் கீழும் சுற்றித் திரிந்து

எவர் சொல்லும் செவிக்கேளாமல்
அம்மணமாய் பரட்டைத் தலையோடு
தெருவோரங்களில் சாலை மருங்கில்
வசித்துக் கழித்தேன் பசியோடும் தாகத்தோடும்
மூன்று நெடிய ஆண்டுகள்.

கடைசியாகக் கண்டேன் பகவனை
மிதிலை நகரில் அவர் நுழைந்தபோது
கட்டுக்கடங்கா மனங்களை அடக்கும் புத்தரை
அச்சம் தீர்க்கும் மா தவத்தோனை

தடுமாறி அலைந்த என்மனம் திரும்பியது என்னிடம்.
பிறகு அவரைக் கண்டு முழந்தாளிட்டேன்
அவர் காலடி அமர்ந்து போதம் கேட்டேன்
நம் அனைவருக்கும் அருள் பாலிக்கும்
கோதமன் எனக்கும் போதித்தான்

அவர் கூறியது கேட்டேன்.
உலக வாழ்வின் இடுக்கண் தொலைத்தேன்
அவர் வழி நடந்தேன்.
நன்னிலை அருளும் வழி உணர்ந்தேன்.

என் சோகங்கள் வெட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு
வேரொடு சாய்க்கப்பட்டு முற்றான முடிவை அடைந்தபின்
உணர்கிறேன் – அறிந்து கொள்கிறேன்
என் துயரங்களின் அடிநாதம் எவை என

நூலில் அ.மங்கை குறிப்பிடுவது போல தேரிக்களின் பாடல்கள் தமது போராட்டங்கள், சிரமங்களைக் கூறுவதோடு, தனி வாழ்வு சார்ந்த அன்றாட வாழ்வில் காணக்கூடியவற்றைப் பேசுகின்ற தன்னிலைக் கூற்றுகளாக அமைக்கின்றன. தேரிக்களின் போராட்டம் என்று சொல்லும் போது கூட குடும்ப வாழ்வின் நடைமுறைச் சிக்கல்கள், உறவுகளுடன் ஏற்படுகின்ற சிக்கல்கள் அல்லது உறவுகளால் ஏற்படுகின்ற அழுத்தங்களாகவே பெரிதும் குறிப்பிடப்படுகின்றன. அதிலும் உரல், உலக்கை, கணவனில் இருந்து விடுபடல் என்கிற பதம் முத்தா எழுதிய (11வது) பாடலிலும் சுமங்களாவின் தாய் எழுதிய (23ம்) பாடலிலும் குறிப்பிடப்படுகின்றது.

முத்தாவின் பாடல்
அப்பா … விடுதலை! களிப்பூட்டும் தளை நீக்கம்!
கோணலான மூன்றிலிருந்து தளை நீக்கம்-
உரல் உலக்கை கூண் கணவனிடமிருந்து விடுதலை.
பிறவித் துயர் சாக்காட்டில் இருந்து தளை நீக்கம்.
என்னைப் பின்னிழுத்தவற்றை வீசி எறிந்தாயிற்று.

சுமங்களாவின் தாய்
விடுதலை பெற்றவள் ஆனேன்!
எப்பேர்ப்பட்ட விடுதலை – உரல் உலக்கையிலிருந்து!
சமையல் பாத்திரங்களின் கரியும் அழுக்கும் அப்பியபடி
கொடுமைக்கார கணவன் எப்போதும் செய்யும்
குடைகளைவிடக் கேவலமாய் என்னை நடத்த…..

முந்தைய காமமும் வெறுப்பும் அகற்றி
கிளைவிட்டுப் பரவும் நிழலில் அமர்ந்து
எண்ணத்தில் திளைக்கிறேன் நிதானமாய்.
ஓ! எனக்கு இது ஏற்புடையதே.

சமூகத்தை எத்தனைவிதமான தளைகள் பிணைத்திருந்தாலும், பெண்களைப் பொறுத்தரை அவர்கள் மீது சுமத்தப்படும் குடும்ப பாரமும் கணவர்களால் எதிர்நோக்குகின்ற சிக்கல்களுமே முதன்மையான தளைகளாகவே அன்றும் கூட தெரிந்திருக்கின்றன. நூலுக்கு நல்லதோர் முன்னுரையை வழங்கியிருக்கின்ற உமா சக்கரவர்த்தி இதைச் சுட்டிக்காட்டியே, அடக்குமுறை எங்கே இருக்கின்றதோ அங்கே நிச்சயம் அந்த அடக்குமுறைக்கான எதிர்க்குரலும் இருந்து கொண்டேதான் இருக்கும்; அன்றைய காலங்களில் ஆண்களின் கீழ் பெண்கள் அடிமைப்பட்டு இருந்தனர் என்றால் நிச்சயம் அதற்கான எதிர்க்குரலும் இருந்தே இருக்கும் எனவே பெண்ணியச் சிந்தனைகள் ஏதோ இன்று வந்தவை என்று குற்றம் சொல்வது தவறு என்கிறார். சோமா என்கிற தேரியின் பாடலில் சோமாவைப் பார்த்து, உனது வேலையெல்லாம் சமையலறையில் சோற்றினைப் பதம் பார்ப்பதுதானே, அதைக்கூடச் சரியாகச் செய்யத் தெரியாத நீ ஏன் தவம், துறவு, ஞானம் எல்லாம் தேடுகிறாய் என்று கேட்க, அதற்கு தேரி நீ சொல்லும் வாழ்வின் சாரங்கள் எனக்குத் தேவையில்லாதன, எனது தேடல்கள் அதையெல்லாந் தாண்டியனவாக இருக்கின்றன என்று பதிலளிக்கின்றார். இந்தப் பாடல்கள் 60, 61,62ம் பாடல்களாக இருக்கின்றன.

மாரன்:
முற்றுந் துறந்த முனிவரும் அடைய
அரிதான நிலை எட்ட அவாவுகின்றாய்
இரு விரல் நுனிகொண்டு
வெந்த சோறு பதம் காணும்
பெண் நீ…
ஹூம்! உனக்கெப்படி அதை அடைய இயலும்?

சோமா:
எமக்கு-
வளரும் ஞான நெறியில் மனம் பதித்து
உறுதியாக முற்செல்வோருக்கு-
தம்மத்தின் நெறி நுழைபுலம் உணர்ந்தோருக்கு-
பெண் இயல்பு எப்படித் தடையாகும்?

நுகர்வின்பம் தோல்வியுறும்போது
அறியாமை அடர் இருள் இரு மடங்காய்ப் பிளக்கும்.
தீயோனே! அழிவு தருவோனே! போ அப்பாலே!
அறிவாய் இதனை, அங்கு உன் வேலை பலிக்காது.

பௌத்தம் பற்றியும், தேரிக்கள் பற்றியும் வாசிப்பதற்கு நல்லதோர் அறிமுகமாக அ. மங்கை தொகுத்திருக்கின்ற தேரிகாதை என்கிற இந்த நூலைக் கொள்ளலாம் என்றாலும் கூட, இதையே ஒரு முதன்மை நூலாகக் கொள்வதற்கு மொழிபெயர்ப்பு ரீதியில் சில சங்கடங்கள் இருக்கவே செய்கின்றன. தனக்கு மரபுக் கவிதையில் போதிய பயிற்சியின்மையால் புதுக்கவிதை வடிவில் மொழிபெயர்ப்பைச் செய்ததாக மங்கை கூறி இருக்கின்றார். வடிவத்தில் இருக்கின்ற இந்த வேறுபாட்டைத் தவிர்த்துப் பார்க்கலாம். ஆனால் 411வது பாடலில் வருகின்றது
“சோப்பு, சீப்பு, கண்ணாடி, நறுமணப் பொருட்கள் கொண்டு
அவரை அலங்கரித்தேன் பணிமகளாய்”
என்று. சோப்பு போன்றவை கிமு 6 அல்லது 5ம் நூற்றாண்டுகளில் இருந்திராது என்கிற அளவில், ஒரு மொழிபெயர்ப்பில் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வது பொறுத்தமற்றது என்றே நினைக்கின்றேன். அது தவிர சோமா என்கிற தேரியின் 61வது பாடல்

நுகர்வின்பம் தோல்வியுறும்போது
அறியாமை அடர் இருள் இரு மடங்காய்ப் பிளக்கும்.

தீயோனே! அழிவு தருவோனே! போ அப்பாலே!
அறிவாய் இதனை, அங்கு உன் வேலை பலிக்காது.

என்றிருக்கின்றது. அதே நேரம் சேளா என்கிற தேரியின் பாடல் என்று குறிப்பிடப்படும் 59வது பாடல்

நுகர்வின்பம் தோல்வியுறும்போது
அறியாமை அடர் இருள் இரண்டாய்ப் பிளக்கும்.
தீயோனே! அழிவு தருவோனே!
போ அப்பாலே!
அறிவாய் இதனை, அங்கு உன் வேலை பலிக்காது.

என்றிருக்கின்றது.  அதாவது இரண்டு பாடல்களுக்கும் இரண்டாம் வரியில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சொற்கள் தவிர எந்த வேறுபாடும் இல்லை. பாலியில் இருக்கின்ற மூல நூலில் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இது போலவே ஒரே பாடலா இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தாமல் மொழிபெயர்ப்பாளரைக் குறைசொல்ல முடியாதென்றாலும் கூட, அப்படி ஒரே பாடலாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் மிகக் குறைவென்றே கருதுகிறேன்.
இங்கு கூறப்படும் தேரிக்கள் போலவே பிற மதங்களிலும் இல்வாழ்வைத் துறந்து பெண் துறவிகளானவர் இருக்கக்கூடும் என்றாலும் கூட, மிகப் பழங்காலத்திலேயே எழுபதிற்கு மேற்பட்ட பிக்குணிகள் பற்றிய 522 பாடல்கள் இப்படித் தொகுக்கப்பட்டிருப்பது முக்கியமான ஒன்றென்றே நினைக்கிறேன். இத்தனைக்கும் உமா சக்கரவர்த்தி எழுதி இருக்கின்ற முன்னுரையில் புத்தருக்கு பெண்களை பௌத்தத்தில் சேர்த்துக் கொள்வதில் இருந்த விருப்பம் இருக்கவில்லை என்றும் இதை ஒட்டி ஆனந்தருக்கும் புத்தருக்கும் தொடர்ச்சியாக விவாதங்கள் நடந்ததாகவும் குறிப்பிடுகிறார். புத்தரின் வளர்ப்புத்தாய் பௌத்தத்தில் சேர விரும்பியபோதும் புத்தர் அவரை கூட சேர்த்துக் கொள்ளவில்லை என்றும், அவரிட்ட பத்து நிபந்தனைகளில் வயதில் ஆக மூத்த பிக்குணி கூட வயதில் மிகச் சிறிய பிக்குவை வணங்கவேண்டும் என்பதுவும் ஒன்றென்றும் அது குறித்து ஆனந்தர் கேள்வி எழுப்பி, பாலினம் பற்றி பாரபட்சம் காட்டாது வயதினடிப்படையில் வணங்கும் மரபிருக்கவேண்டும் என்றபோது புத்தர் பிற சமயங்கள் கூட அதனை அனுமதிக்கவில்லை என்று கூறி நிராகரித்ததாகவும் கூறப்படுகின்றது. இது பற்றி மேலதிக வாசிப்புகள் ஊடாகவே அறிந்துகொள்ள முடியும் என்றாலும், அப்படி வாசிப்பதற்குத் தேவையான அறிமுகத்தைத் தந்துள்ளது தேரிகாதை.

1.  புத்தக விபரம்

தேரிகாதை : பௌத்த பிக்குணிகளின் பாடல்கள்
சந்தியா பதிப்பகம்
தமிழில் அ. மங்கை
2. இங்கே பாவிக்கப்பட்டுள்ள படம் விருபா.கொம் தமிழ்ப் புத்தக தகவல் திரட்டில் இருந்து பெறப்பட்டது.  நன்றி விருபா