புலம்பெயர் நாடுகளின் அரசியலும், புலம்பெயர் தமிழர்களும்: செய்யவேண்டியது என்ன

கனேடிய பாராளுமன்றத் தேர்தல்கள் நிறைவுபெற்று ஹார்பர் தலைமையின் கீழான வலதுசாரி பழமைவாதக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியக் கைப்பற்றி இருக்கின்றது.  அதே நேரம் புதிய ஜன நாயகக் கட்சி (NDP) கனேடியப் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக இரண்டாவது அதிக இருக்கைகளைக் கைப்பற்றி, உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ளது.  தொடர்ச்சியாக NDP கட்சியை அவதானித்துவந்ததன் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் எனது விருப்பத்துக்குரிய கட்சியாகவும்  NDPயினரே இருந்துவந்துள்ளனர்.  இதுவரை காலமும் நிறைய இடங்களில் என்டிபி கட்சியனர் பற்றிக் கூறியபோதெல்லாம், அவர்கள் நல்ல கட்சிதான், ஆனால் அவர்கள் வெல்ல மாட்டாகள், எனவே தாராளவாதக் கட்சி (Liberal) அல்லது பழமைவாதக் கட்சி தான் எமது தேர்வாக இருக்கவேண்டும் என்பதே பெரும்பாலான தமிழர்களின் தேர்வாக இருந்துள்ளது.  இந்த நிலையில் இந்தத் தேர்தலில் என்டிபி கட்சியினர் பெற்ற வரவேற்பு, இனிவருங் காலங்களில் கனேடியத் தமிழர்கள் எந்த விதமான சாக்குப் போக்கும் சொல்லாது புலம்பெயர் அரசியலில் தம்மை வலுவாக நிலைநிறுத்தவும், தமது வாக்குப் பலத்தைக் காட்டவும் நிறைய நம்பிக்கைகளையும் ஏற்படுத்தியுள்ளது.  கனடா மாத்திரமல்லாது, எல்லாப் புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்கள் தம்மை அரசியல் ரீதியாக நிலைநிறுத்துவது புலம்பெயர் தமிழர்களின் நலனுக்கும், தாயகத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கும், இலங்கையில் தமிழர்கள் தமது சுய உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ச்சியாக முன்னெடுக்கும் போராட்டத்தை இன்னும் வலுப்படுத்தவும் மிக முக்கியமானதாகும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பழமைவாதக் கட்சிய சார்பாக ராகவன் பரஞ்சோதியும், புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக ராதிகா சிற்சபேசனுமாக இரண்டு தமிழர்கள் போட்டியிட்டிருக்கின்றனர்.  தமிழர்கள் கனடாவில் மிகக் குறைவான அடர்த்தியிலேயே வாழ்வதால் தமிழர் ஒருவர் பாரளுமன்றத் தேர்தலில் வெல்வது சாத்தியமில்லாதது என்பதை முறியடித்து ராதிகா சிற்சபேசன் சுமார் 5000 வாக்குகள் வித்தியாசத்தில், அதாவது மொத்த வாக்குகளில் 40.53%இனைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றார்.  அதே நேரம் ராகவனின் அரசியல் காரணமாகவும், அவர் சார்ந்திருக்கும் CMR வானொலி கட்டியெழுப்பிய ராகவனின் விம்பத்திற்கும், அதே நேரம் ராகவன் ஆங்கில ஊடகங்கள் ஊடாக தன்னை வெளிப்படுத்திகொண்ட விம்பத்திற்கும் இடையில் இருக்கின்ற பாரிய வித்தியாசத்தின் காரணமாகவும் ராகவன் செய்கின்ற சுயநல அரசியல் வெற்றிபெறக்கூடாதென்று விரும்பினபோதும், ராகவன் தனது தொகுதியில் 12,828 (31.85%) வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றதைக் குறிப்பிடவே வேண்டும்.  அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் 14,113 (35.04%) வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.  எனவே இந்தத் தேர்தல் கனேடியக் கட்சிகளுக்கும், கனேடிய மக்களுக்கும் கனேடியத் தமிழர்கள் வாக்குகளின் அடிப்படையில் பலமானவர்கள் என்பதைத் தெளிவாகக் காட்டி இருக்கின்றது.  இந்த அடிப்படையில் கனேடிய அரசியலில் நாம் கவனம் செலுத்தவேண்டிய விடயங்கள் பற்றிப் பகிரலாம் என நினைக்கிறேன்.

  1. இந்தத் தேர்தலில் ராகவன் பரஞ்சோதியும், ராதிகா சிற்சபேசனும் வேட்பாளராக தெரிவாக நாளில் இருந்து இவர்கள் போட்டியிடும் தொகுதியில் வாழும் தமிழர்கள் இவர்கள் தமிழர்கள் என்பதற்காக இவர்களுக்கே வாக்களிக்கவேண்டும் என்ற கருத்து பல இடங்களிலும் பரப்பப்பட்டது.  தேர்தலுக்குச் சிலநாட்களுக்கு முன்னர் பொன். பாலராஜன் (இவர் நாடுகடந்த தமிழீழ அரசின் அரசவைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது)  எழுதிய கட்டுரையிலும் “ராகவனையும் ராதிகாவையும் வெல்ல வைப்பது இலட்சக்கணக்கில் கனடாவில்  வாழ்கின்ற சமூகத்திற்கு முக்கிய பொறுப்பாகும்.  கட்சி பேதங்களை மறந்து, நாம் தமிழர்களாக நம் தமிழர்களை ஆதரிப்போம்” (தாய்வீடு மே 2011) இவ்வாறான ஒரு கருத்தை முன்வைத்தே கட்டுரையே நிறைவு செய்திருந்தார்.  இங்கே எனக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது ராகவன் சார்ந்து இருக்கின்ற கட்சியின் அரசியல்.  பழமைவாதக் கட்சியின் தேர்தல் விளம்பரமே, sun sea கப்பலில் வந்த அகதிகளைக் காட்டி “Canada wants to welcome those who want to build a better future; but our openness doesn’t extent to criminals to target Canadian generosity” என்கிற வெறுப்பூட்டும் கருத்தொன்றைச் சொன்னதை நினைவுறுத்த விரும்புகின்றேன்.  இந்த விளம்பரம் பற்றி எந்த சந்தர்ப்பத்திலும் பழமைவாதக் கட்சியினரோ அல்லது ராகவனோ எந்த வித வருத்தத்தையும் தெரிவிக்கவேயில்லை.  ஏற்கனவே முன்னொரு தேர்தலில்  பழமைவாதக் கட்சி வெல்வதற்கே அதிகம் வாய்ப்பிருப்பதால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதே சாதுரியமானது என்று சொல்லி தமிழ் அமைப்புகள் பழமைவாதக் கட்சியினருக்கு தமது ஆதரவை அள்ளி வீச, ஆட்சிக்கு வந்த பழமைவாதக் கட்சியினர் ஆட்சிக்கு வந்த கையோடு செய்த வேலையே விடுதலைப் புலிகளை கனடாவில் தடை செய்ததுதான்.  அதன் தொடர்ச்சியாக உலகத் தமிழர் அமைப்பும் 2008ல் தீவிரவாத அமைப்பாகக் கூறி தடை செய்யப்பட்டது.  எனவே வெல்கின்ற கட்சிக்கு வாக்களிக்கின்ற சாதுரியம் என்கின்ற முட்டாள்த் தனத்தையெல்லாம் ஒதுக்கிவிட்டு தமிழர்கள் தம் அரசியல் என்னவென்பதிலும், அரசியல் தெரிவுகள் என்னவென்பதிலும் தெளிவாக இருக்கவேண்டும்.   இந்தத் தேர்தலில் தமிழர்கள் பழமைவாதக் கட்சியினருக்கு வாக்களிப்பதும், அதன் சார்பாக நின்ற ராகவனுக்கு வாக்களிப்பதும், அப்படி வாக்களித்தவர்கள் பழமைவாதக் கட்சியினரின் அரசியலை முழுமையாக நிராகரித்துக் கொண்டே, ராகவன் தமிழர் என்பதற்காக அவருக்கு வாக்களித்திருந்தால் கூட, அது தமிழர்கள் பழமைவாதக் கட்சியினரின் அரசியலை ஏற்றுக் கொள்கின்றார்கள் என்ற சமிக்ஞையாகவே கருதப்படும்.
  2.  இந்தத் தேர்தல் பற்றி தமிழ் விண் உள்ளிட்ட ஊடகங்களிலும், கனேடியத் தேர்தல் தொடர்பாக தேடகம் அமைப்பினர் ஒழுங்குசெய்திருந்த கூட்டம் ஒன்றிலும், குறித்த கட்சியில் இடம் தராததாலேயே சிலர் வேறுகட்சிகளில் தேர்தல்களின் நிற்கின்றனர் என்கின்ற வாதம் முன்வைக்கப்பட்டது (தாராளவாதக் கட்சியினரை முன்வைத்தே இந்த வாதம் முன்வைக்கபட்டது.  அதாவது அவர்களைத் தமிழர்கள் ஆதரித்தும் அவர்கள் தமிழ் வேட்பாளர்களை அனுமதிக்கவில்லை ஆனால் பழமைவாதக் கட்சியினர் தமிழர்களை வேட்பாளராக நிறுத்துகின்றனர்.  எனவே அவர்களை ஆதரிக்கவேண்டும் என்பது அவர்களது வாதம்).  உண்மையில் மக்கள் எவ்வளவு தூரம் அரசியல் தெளிவில்லாமலே இருக்கின்றனர் என்பதையே இது காட்டுகின்றது.  அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வது என்பது ஒருவர் தான் ஏற்றுக் கொள்கின்ற அரசியல் தத்துவம், கொள்கை, செயற்திட்டம் என்பதுவன் தொடர்புடையது மாத்திரமல்லாது அவற்றுடன் நேரடியாகத் தொடர்புகொண்டது.  இப்படி இருக்கின்ற போது ஒருவர் தன்னை வேட்பாளராக நிறுத்துகின்ற கட்சியில்தான் சேர்வேன் என்று சொல்வதோ அல்லது அப்படி ஒருவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதோ எந்த விதத்திலும் ஏற்க முடியாதது.  இது போன்ற அரசியல் தெளிவின்மையின் இன்னொரு வெளிப்பாடாகவே, எல்லாக் கட்சிக்கும் தமிழர்கள் தமது வாக்குகளைப் போடவேண்டும் என்கிற கருத்து முன்னெடுக்கப்பட்டதையும் சொல்லவேண்டும்.  பரவலாக எல்லாக் கட்சிக்கும் தமிழர்கள் வாக்களிப்பதன் மூலமாகவே எல்லாத் தரப்பில் இருந்தும் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்கிற விளக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது.  இப்படியான ஒரு கருத்துருவாக்கத்தை  தமிழர்களுக்கென்றொரு தெளிவான அரசியல் இருந்தால் முன்வைத்திருக்கவே முடியாது.  எல்லாருக்கும் ஆதரவளிப்போம் என்பது, அந்தக் கட்சிகளின் கொள்கைகளைப் பரிசீலனை செய்யத் தேவையில்லை என்று நீட்சியுறும் என்பதைக் கவனிக்கவேண்டும்.
  3. புலம்பெயர் நாடொன்றில் எம்மை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தச் செய்யக்கூடிய இலகுவான வழி தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதும் தமது அரசியல் என்ன என்பதைத் தெளிவாக முன்வைப்பதுமாகும்.  இதற்கு தமிழர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல் கதைப்பதைத் தவிர்த்து, தொடர்ச்சியாக தத்தமது நாட்டு அரசியலை உன்னிப்பாக அவதானிக்கவேண்டும்.  அது மாத்திரமல்லாது தொடர்ச்சியாகச் செய்யப்படுகின்ற சட்டத் திருத்தம் போன்றவற்றையும் அவதானிக்கவேண்டும்.  புலம்பெயர்நாடுகளில் இயங்குகின்ற தமிழர் அமைப்புகள் தத்தம் புலம்பெயர் தேச அரசியல்கள் பற்றியும் தொடர்ச்சியான கருத்தரங்குகளையும், கூட்டங்களையும் ஒழுங்குசெய்யலாம்.  முடியுமானால் அவற்றை தமிழில் மொழிபெயர்த்து பரவலாக மக்களைச் சென்றடையச் செய்யலாம்.  கனடாவைப் பொறுத்தவரை வருகின்ற ஒக்ரோபர் மாதம் ஒன்ராரியோ மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.  கனடாவில் இருக்கின்ற தமிழர்களில் மிகப் பெரும்பான்மையானோர் ஒன்ராரியோவிலேயே இருப்பதால் இந்தத் தேர்தலில் தமிழர்கள் நிதானமாக தமது தேவைகள் எவையென்பதையும், அவற்றில்  எவற்றுக்கு முன்னுரிமை என்பதையும் ஆராய்ந்து தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவேண்டும்.
  4. இங்கு மக்களிடம் அரசியலைக் கொண்டுசெல்வது பற்றிப் பேசும்போது ஊடகங்கள் பற்றிப் பேசவேண்டிய தேவைவருகின்றது.  நாம் பொது மனநிலையில் தமிழகத்து ஊடகங்கள் பற்றிய விம்பம் ஒன்றை வைத்திருக்கின்றோமே, அதே நிலையில்தான் கனடாவில் இருக்கின்ற முக்கியமாக ஊடகங்களான (முக்கியமான என்கிற போது அதிக மக்களைச் சென்றடைகின்ற என்கிற வகையில் அவை பெறுகின்ற முக்கியத்துவம் என்ற பொருளில் மாத்திரமே உபயோகிக்கின்றேன்) CTBC, CMR, உதயன் பத்திரிகை போன்றவையும் அதிக மக்கள் பார்க்கின்ற தமிழ் விண் போன்ற இணைய ஊடகங்களும் இருக்கின்றன.  எனவே மக்களுக்கு சரியான முறையில் அரசியலை முன்னெடுக்க விரும்புபவர்கள் இந்த ஊடகங்களை நம்பிப் பயனில்லை.  சிறு பிரசுரங்கள், வலைப்பதிவுகள் மூலமாக ஒரு குறிக்கபட்ட மக்களைச் சென்றடையலாம் என்றாலும், ஒரு மாற்று ஊடகத்திற்கான தேவை இருந்துகொண்டே இருக்கின்றது.
  5. அடுத்து கனடாவில் இருக்கின்ற எந்த ஒரு கட்சியோ அல்லது அவற்றின் பிரதிநிதிகளோ தம்மை கனடாவில் தடைசெய்யப்பட்டதோர் அமைப்பின் ஆதரவாளர்களாக வெளிக்காட்டிக்கொள்ள விரும்பமாட்டார்கள்.  அவர்களால் செய்ய முடியாததும் கூட.  அவர்கள் உண்மையில் ஈழப் பிரச்சனையில் ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்களாக இருந்தாலும் கூட அவர்கள் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதியாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவே மாட்டார்கள்.  இதை ஏன் சொல்கிறேன் என்றால், கனேடிய நாடாளுமன்றத்திற்கு ஒரு ஈழத்தமிழர் தெரிவாகி இருக்கின்றார் என்றதும், தமிழர் தரப்பில் இருந்தே மாவீரர் தினம் போன்றவற்றிற்கு அவர் அழைக்கப்படலாம் அல்லது புலிக்கொடி ஏந்தப்படுகின்ற இடங்களிற்கும் அவர் அழைக்கப்படலாம்.  அதே நேரம் அவர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் போது உடனே அவரைத் தமிழர்களுக்கு எதிரானவர் என்றும் முத்திரை குத்த சிலர் முயல்வர்.  இந்த உள் அரசியலில் தமிழர்கள் மிக அவதானமாக இருக்கவேண்டும்.  கனேடிய நாடாளுமன்றில் தமிழர் ஒருவர் அங்கம் வகிப்பது அவர் அங்கே எழுச்சிக் குரலெழுப்பி ஈழத்தமிழர் பிரச்சனையைத் தீர்த்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பில் அல்ல.  மாறாக, தமிழர்களின் வாக்குப் பலத்தையும், சமூகத்தில் அவர்கள் அரசியல் ரீதியில் தமிழர்கள் அடைகின்ற வலுவான நிலையையும் நிரூபித்தாவது எமது பிரச்சனைகளுக்கு புலம்பெயர் நாட்டு அரசாங்கங்களைக் குரலெழுப்ப வைப்பதற்காக..

(இது ஒரு கட்டுரையில் நிறைவடைகின்ற விடயம் மாத்திரமல்ல.  தொடர்ச்சியாக அக்கறை உள்ளோர் தங்கள் பார்வையில் புலம்பெயர் நாடுகளின் அரசியலும், புலம்பெயர் தமிழர்களும்  என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதுவதன் மூலம்  புலம்பெயர் நாடுகளின் அரசியலும், புலம்பெயர் தமிழர்களும் என்கிற தொடர்ச்சியான உரையாடல்களை சாத்தியப்படுத்தலாம்.  தொடர்வோம்.  பேசுவோம்.)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: