ஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ

கௌரவன்

கௌரவன்பாரதக்கதை என்பது அனேகம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் மிக மிகப் பெரும்பாலோனோர் முழுமையாக வாசித்திராத தொன்மங்களில் ஒன்றாகும்.  எனக்கு ஏழு / எட்டு வயதிருக்கும்போது வாசித்த கைக்கடக்கமான மகாபாரதப் பிரதி முதலே மகாபாரதத்தின் மீதான் என் ஈர்ப்பு அதிகரித்தே சென்றது.  ஆயினும் வாசித்த குறிப்பிடத்தக்க அளவிலான முதலாவது மகாபாரதம் என்றால் ராஜாஜி எழுதிய “வியாசர் விருந்து” தான் நினைவுக்கு வருகின்றது.  இராமாயணத்துடனான எனது அறிமுகமும் ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் ஊடாகவே நிகழ்ந்தது இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது ஆகும்.  அந்த வகையில் பல்வேறு மகாபாரதங்களை வாசித்திருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான ஒன்றாக ஆனந்த் நீலகண்டன் ஆங்கிலத்தில் Ajaya  என்ற பெயரில் எழுதி, நாகலட்சுமி சண்முகம் கௌரவன் என்ற பெயரில் தமிழாக்கம் செய்த நூல் அமைகின்றது.

சிறுவயதில் மகாபாரதம் படித்தபோது துரியோதணன் பற்றிய அறிமுகம், அவன் தீயோர்களுடன் சேர்ந்தான் என்றும், ஒழுக்கம் குறைந்தவர்கள் அவனது நண்பர்களாக இருந்தனர் என்றும், அவன் கல்வியில் மந்தமாக இருந்தான் என்றும் அமையும்.  ஆனந்த் நீலகண்டன் இந்த இடத்தில் இருந்து தனது துரியோதணனை வேறுபடுத்திக் காட்டத் தொடங்கிவிடுகின்றார்.  அவனால் வேதக் கல்வியை ஏற்கமுடியவில்லை.  அது பற்றிய கேள்விகள் அவனுக்கு இருக்கின்றன.  குறிப்பாக வேதக்கல்வி ஊடாக சொல்லப்படும் சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றி அவனுக்குக் கடுமையான விமர்சனம் இருக்கின்றது.  அவன் சமூகத்தில் இருக்கின்ற ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடன் கரிசனை கொண்டவனாக இருக்கின்றான்.  இதுவே அவனது சேர்க்கை சரி இல்லை என்பதாக எமக்குச் சொல்லித்தரப்பட்டு இருக்கின்றது.  போர் மீது ஆர்வம் இல்லாதவனாக, அதிகார போதையை மறுப்பவனாக அவன் இருக்கின்றான்.  இதையே எமக்கு அவன் பயந்தவன் என்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

கேரளத்தில் இருக்கின்ற ஒரு துரியோதணன் கோயில் பற்றியும், அக்கோயிலுக்கான நிலம் துரியோதணனால் வழங்கப்பட்டதாகவும், அதற்கான அர்ச்சகர்களாக தாழ்த்தப்பட்ட குறவர் இனத்தைச் சேர்ந்தவர் ஒருவரே இருக்கவேண்டும் என்பது அவன் உத்தரவாக இருந்ததாகவும், இன்று வரை அக்கோயிலில் பரம்பரை பரம்பரையாக அதே குறவரின் வழிவந்தவர்களே இருப்பதாகவும் கூறுகின்ற ஆனந்த நீலகண்டன் அக்கோயிலிற்கு தான் சென்றபின்னர் துரியோணன் பற்றிய தொடர்ச்சியான சிந்தனைகளின் வழியாக, மகாபாரதத்தில் தமது நியாயத்துக்காக நேர்மையாக போராடி மடிந்த எதிர்நாயகர்களின் கதையாக தான் அஜய (தமிழில் கௌரவன்) எழுதியதாகக் குறிப்பிடுகின்றார்.  இதன் இரண்டாம் பாகமும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகிவிட்டதாக அறியமுடிகின்றது.  வாசிப்பிலும் தொன்மங்களிலும் ஆர்வம் இருப்பவர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டியது கௌரவன்!

000

பாராளுமன்றத் தேர்தல் | ரூத் எலன் ப்ரோஸோ – சில பாடங்கள்

கனடாவின் 42வது பொதுத்தேர்தல் நிறைவேறி முடிவுகளும் வெளியாகிவிட்டன.  ஆரம்பநாட்களில் வெளியான தேர்தல் கணிப்புகளில் இருந்து பெரிதும் வேறுபட்டதாக தேர்தல் பெறுபேறுகளின் நிலைவரம் இருக்கின்றது.  இத்தனைக்கும் தேர்தலுக்கு மிக அண்மை வரை என்டிபி கட்சியினர் வெற்றி பெறும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாகவே கணிப்புகள் கூறிவந்தன.   ஆயினும் சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற 109 இடங்களில் இருந்து 65 இடங்களை இழந்து வெறுமே 44 இடங்களை மட்டுமே இம்முறை என்டிபி கட்சியினரால் தக்கவைத்துக்கொள்ள முடிந்திருக்கின்றது.
கடந்த தேர்தலைப் பொறுத்தவரை அப்போது வீசிய என்டிபி அலையின் காரணமாகவும் ஏனைய கட்சிகளின் மீது எழுந்திருக்கக் கூடிய அதிருப்தி காரணமாகவும் அவர்களின் பெரும் எழுச்சி நிகழ்ந்தது.  நிறையப் புதியவர்களின் வெற்றிகளையும் கூட அது சாத்தியப்படுத்தியிருந்தது. ஆயினும் அவ்வாறு வெற்றிபெற்றவர்கள் பலராலும் ஏன் அந்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்பது மிக எளியமையான கேள்வி.  இது பற்றிய உசாவல்களை ரூத் எலன் ப்ரோஸோவின் வெற்றியுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது ஒரு விதத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

யார் இந்த ரூத் எலன் ப்ரோஸோ என்பதற்கு சென்ற தேர்தலுக்குப் பின்னர் பரவலாக ஊடகங்களில் இடம்பெற்ற ஒரு செய்தியை நினைவூட்டவேண்டி இருக்கின்றது.  கடந்த தேர்தலில் கியூபெக் மாநிலத்தில் கிட்டத்தட்ட Bloc Québécois கட்சியினர் தமது செல்வாக்கை முழுமையாக இழந்திருந்தனர்.  Bloc Québécois இனர் இழந்த செல்வாக்கினை என்டிபி கட்சி தன்வசமாக்கி இருந்தது.  அந்த அலையில் ரூத் எலன் ப்ரோஸோ பெற்ற வெற்றி எல்லாரையும் பெரிதும் ஆச்சரியப்படுத்தியிருந்தது.  தனது தேர்தல் தொகுதியான Berthier-Maskinongé இற்கே அந்தத் தேர்தல் வரை சென்றிராதவர் ரூத் எலன் ப்ரோஸோ.  அது மட்டுமல்ல, தேர்தல் பரப்புரையைக் கூட அவர் செய்யவேயில்லை.  ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் பரப்புரைக்காகச் செலவளித்த கணக்குகள் பகிரப்பட்டிருக்கின்றன.  அதில் 2011 தேர்தலுக்கு ரூத் எலன் ப்ரோஸோ செலவளித்தது எந்தப் பணமும் செலவளிக்கவில்லை ($ 00.00) என்றே பட்டியலிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.  2011 தேர்தலுக்காக பரப்புரை சூடு பிடித்திருந்த தேர்தலை ஒட்டிய வாரத்தில் ரூத் எலன் ப்ரோஸோ தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக லாஸ்வெகாஸ் சென்றிருந்தார்.  இதனை ஊடகங்கள் சுட்டிக்காட்டி தனது தேர்தல் பரப்புரைக்காக ஒருநாள் கூட தேர்தல் தொகுதிக்குச் சென்றிராதவர் 3 நாட்கள் பிறந்தநாளைக் கொண்டாட லாஸ்வெகாஸ் சென்றிருக்கின்றார் என்று கடுமையாக விமர்சித்திருந்தன.  இப்படியெல்லாம் இருந்தும் அவர் தேர்தலில் கிட்டத்தட்ட 40% ஆன வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.  அதுவும் அந்தத் தொகுதியில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றிருந்த Bloc Québécois வேட்பாளரைத் தோற்கடித்தே அவர் வெற்றியீட்டியிருந்தார்.  அந்தத் தேர்தலில் வீசிய என்டிபி அலை அவ்வளவு வேகமானதாக இருந்தது.  தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அவர் மீது கவனம் குவிந்தபோது அவர் மீதான எதிர்மறை விமர்சனங்களும் அதிகரித்தன.

அந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பொருத்தமான வேட்பாளர் எவரும் கிடைக்காத நிலையில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்படவேண்டும் என்று கடமைக்காக நிறுத்தப்பட்டவரே இவர் (ஆங்கிலதில் Paper Candidate).  இவரது தந்தை பிரெஞ்சு மொழியைப் பேசுபவர் என்றாலும் இவர் சிறுவயதியிலேயே கிங்ஸ்டன் நகருக்குச் சென்றிருந்ததால் இவருக்கு சரளமான பிரெஞ்சு மொழி தெரிந்திருக்கவில்லை.  அவ்வாறு இருக்கின்றபோது 98%ம் பிரெஞ்சு மொழியைப் பேசுகின்ற, 77% ஆன மக்களுக்கு ஆங்கிலம் முற்றிலும் தெரிந்திராத தொகுதியில் இவர் பெற்ற வெற்றியானது இன்னமும் கேள்விகளை எழுப்பியது.  ஆனால் இவற்றையெல்லாம் அவர் மிகுந்த முதிர்ச்சியுடன் கையாண்டார் என்றே கூறவேண்டும்.  முதலில் வாரம் ஒன்றுக்கு மூன்று மணித்தியாலங்கள் என்று பிரெஞ்சு றுத் எல்லென்மொழியை சிரத்தையுடன் கற்கத் தொடங்கினார்.  முதன்முதலில் பத்திரிகையாளர்களை எதிர்கொண்டபோது அவர்கள் கேள்விகளை பிரெஞ்சில் கேட்டபோது திணறிய இவர், சில மாதங்களிலேயே பிரெஞ்சினை சரளமாகப் பேசுகின்ற அளவிற்கு தேர்ந்தார்,  நேர்காணல்கள், பத்திரிகையாளர் சந்திப்பு என்பவற்றை துணிவுடன் எதிர்கொண்டார்.  தேர்தலில் தேர்வாகும்வரை தனது தொகுதியில் காலடிகூட பதிக்காத இவர், தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடந்து தொகுதி மக்களுடன் இயல்பாகவும் நெருக்கமாகவும் பழகத்தொடங்கினார்.  அவரது எளிமையும் எப்போதும் இலகுவாக அவர்களாக அணுகப்படக்கூடியவராக அவர் இருந்தது மக்களுக்கு ரூத் எலன் ப்ரோஸோ மீது ஈர்ப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தியது.  அவரது தொகுதி நிறைய முதியவர்களைக் கொண்டது.  அவர் மக்களுடன் தொடர்ச்சியாகப் பேசி, பேசி அவர்களது தேவைகள் என்ன, மக்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்விதம் உயர்த்துவது, மருத்துவ வசதிகள், ஓய்வூதியம், வேலைவாய்ப்பு போன்றவை தொடர்பாக அவர்கள் எதிர்கொள்ளுகின்ற சிரமங்கள் போன்ற  விடயங்களைப் புரிந்துகொண்டார்.  கார்ல்ரன் பல்கலைக்கழகத்தில் இருந்த மதுபானசாலையில் உதவி முகாமையாளராகப் பணியாற்றியவர் ரூத் எலன் ப்ரோஸோ.  CBC இற்கு வழங்கிய நேர்காணலில் தான் மதுபானசாலையில் வேலை செய்தபோது பொறுமையாக வாடிக்கையாளர்கள் சொல்வதைக் கேட்பதற்குப் பழகியிருந்ததாகவும், அந்த அனுபவம் தொகுதி மக்களுடன் பேசி அவர்களைப் புரிந்துகொள்வதற்கு உதவியதாகவும் குறிப்பிடுகின்றார்.  பாடசாலையில் படிக்கின்ற காலத்திலேயே தன் 16வது வயதில் தாயான இவர், தனது துணைவர் இவர் தாயாகும் முன்னரே பிரிந்துசென்றபோதும் தனது படிப்பினைக் கைவிடாது உயர் பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்தார்.  இதனால் தமது குழந்தைகளை துணைவர் இன்றி வளர்த்துவரும் தாய்மாரின் பிரச்சனைகளை அவர் நன்கு அறிந்திருந்தார்.  தனது பாராளுமன்ற உரைகளிலும் இவற்றுக்காகக் குரல் கொடுத்தார்.  இவர் தேர்தலில் வெற்றி பெற்றபோது ஊடகங்கள் இவரை Vegas Girs, Bartender, Barmaid, Singlemom என்று குறிப்பிட்டுத் தொடர்ந்து கேலி பேசி வந்தபோதும், பாராளுமன்ற உறுப்பினர் என்கிற பதவிக்கு முற்றிலும் தகுந்தவராக தன்னைத் தொடர்ந்து தயார்ப்படுத்திக்கொண்டார்.  அவரை விமர்சித்த அனைத்து ஊடகங்களும் மெல்ல மெல்ல அவரைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியதுடன் தமது ஆதரவையும், புகழாரங்களையும் செலுத்தத் தொடங்கின.     விரைவிலேயே கட்சியில் Vice Chair என்கிற பதவியும் கிடைத்தது.  2015ல் இடம்பெற்ற தேர்தலில் என்டிபி கட்சி பெரும் சரிவைச் சந்தித்தபோதும், எந்த அலையும் அவர்களுக்குச் சாதகமாக வீசாதபோதும் ரூத் எலன் ப்ரோஸோ 42% ஆன வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றும் இருக்கின்றார்.  இதில் இருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றது என்றே சொல்லவேண்டும்.

 


 

இக்கட்டுரை தாய்வீடு பத்திரிகையில் நான் எழுதும் பத்தியில் நவம்பர் 2015ல் இடம்பெற்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: