சிறுபிராயம்
ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், பெண்நிலைவாதிகளின் முன்னோடிகளில் ஒருவரும் என்ற வகையில் தவிர்க்கவே முடியாத ஆளுமைகளில் குறமகளும் ஒருவர் ஆவார். 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற காங்கேசன்துறை என்கிற கிராமத்தில் ”முக்கந்தர்” எம். ஏ. சின்னத்தம்பி என்பவருக்கும் செல்லமுத்து என்பவருக்கும் மூத்தமகளாகப் பிறந்த இவரது உண்மைப்பெயர் வள்ளிநாயகி என்பதாகும். அந்நாட்களில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் இலங்கையில் பல பகுதிகளிலும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த வியாபாரங்களில் ஒப்பந்தக்காரராக குறமகளின் தந்தை பணியாற்றியதால் ஒப்பந்தக்காரர் என்பதற்குரிய தெலுங்குச்சொல்லான முக்கந்தர் என்பது அவரது பெயருடன் ஒட்டிக்கொண்டது. இவரது சிறுவயதுப் பிராயம் பெண்கள் கல்வி என்பது ஆரம்பநிலைகளில் இருந்தபோதும் பெண்கள் ஆரம்பக்கல்வி பெறுவது என்பது பரவலாகத் தொடங்கியிருந்த காலம். குறமகள் சிறுமியாக இருந்தபோது சின்னமேளம் பார்க்கவென்று நண்பர்களுடன் அடிக்கடி மதுரையின் வேதாரணியத்திற்குச் சென்றுவரும் அவரது தகப்பன், திரும்பிவரும்போது சிறு பிரசுரங்களையும், பத்திரிகைகளையும் கொண்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவற்றை வாசிப்பதன் ஊடாக குறமகளும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். அத்துடன், இந்திய சுதந்திரப்போராட்டம் பரவலாகவும், எழுச்சியுற்றும் இருந்த அந்தக் காலப்பகுதியில் வந்த பிரசுரங்களில் இடம்பெற்றிருந்த காந்தி, சரோஜினி நாயுடு, கமலா நேரு ஆகிய தலைவர்களின் பெயர்களும் செய்திகளும் குறமகளுக்கு ஒருவிதமான ஈடுபாட்டினை ஏற்படுத்தியிருக்கின்றன. அத்துடன் குறமகளின் தாயாரான செல்லமுத்துவும் நிறைய வாசிக்கின்ற ஒருவராக இருந்திருக்கின்றார். அத்துடன் குறமகளின் சித்தப்பா ஒருவரும் கல்கி, ஆனந்த விகடன் போன்ற தமிழகத்திலிருந்து வெளிவருகின்ற இதழ்களைத் தொடர்ச்சியாக வாங்கிவந்தார். இத்தகைய சூழல் குறமகளுக்கும் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டியது எனலாம். ஆபரணங்கள் அவசியமா என்கிற குறமகளின் கட்டுரை ஒன்று அவர் நாலாவது வகுப்பில் படிக்கின்றபோது வீரகேசரியிலும், போலி கொளரவம் என்கிற அவரது சிறுகதை அவரது பதினேழாவது வயதில் ஈழகேசரியிலும் வெளியாகின்றன.
தனது ஆரம்பக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியில் பெற்றுக்கொண்ட குறமகள் பருவமடைந்த பின்னர் பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க இளவாலை கன்னியர் மடத்தில் விடுதியில் தங்கி உயர் வகுப்பினைக் கற்கத் தொடங்கினார். இந்தக் கொன்வெண்ட் காலப்பகுதியே வள்ளிநாயகியாக இருந்த தான் குறமகளாக உருவாக காரணமாக அமைந்தது என்று குறமகள் நினைவுகூருகின்றார். அன்றைய விடுதி வாழ்வும், கன்னியர் மடக் கல்விமுறையும் குறமகளின் பல்துறை ஆளுமையை வளர்த்ததுடன், அவரது சிந்தனாமுறையையும் மாற்றியமைத்தது. உயர் வகுப்பினில் சிறப்பாகத் தேர்ச்சியடைந்த குறமகளுக்கு திருச்சியில் இருந்த Holy Cross Convent இல் உயர்கல்வி கற்கின்ற அனுமதியும் கிடைத்தது. ஆயினும் துரதிஸ்ரவசமாக அவர் இந்தியாவுக்குச் செல்லவிருந்த அதே தினம் அவரது தந்தைக்கு மாரடைப்பு வந்ததனால் அவரது மேற்படிப்புக் கனவு தேக்கமடைந்தது. ஆயினும் கல்வியைத் தொடரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த குறமகள் கோப்பாயில் இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து ஆசிரியர் பயிற்சிக்கல்வியைப் பெற்றுக்கொண்டார். அங்கு கல்விகற்ற காலத்திலேயே பிரவேச பண்டிதர், பால பண்டிதர் என்கிற சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார்.
000
ஆசிரியப்பணி
ஆசிரியராகத் தேர்வடைந்த குறமகள் தான் கல்விகற்ற பாடசாலையும் தனது வீட்டுக்கு அருகில் இருந்த பாடசாலையுமான நடேஸ்வராக் கல்லூரியிலேயே தனது ஆசிரியப் பணியினை 1956 அளவில் ஆரம்பித்தார். அங்கு ஐந்து ஆண்டுகள் கடமையாற்றிய பின்னர் மானிப்பாய் சோதிவேம்படி வித்தியாசாலையில் பணியாற்றினார். இங்கே கற்பித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தியாவில் உள்ள ஒரிசா மாநிலத்தில் உள்ள உத்கால் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகத் தனது பட்டப்படிப்பையும் நிறைவுசெய்தார். அப்போது மானிப்பாய் சோதிவேம்படி வித்தியாசாலையில் ஐந்தாம் வகுப்பு மாத்திரமே இருந்ததனால், மேல்வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்றார். அங்கிருந்து கொழும்புப் பல்கலைக்கழகம் சென்று அங்கே Diploma in Drama படிப்பினைத் தொடர்ந்தார். இந்த டிப்ளோமாப் பட்டத்தினைப் பெற்ற பின்னர் – அதுவரையும் அவர் கற்பித்துவந்த பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் நாடகம் ஒரு பாடமாக இல்லாத காரணத்தால் இளவாலை சென். ஹென்ரிசுக்கு மாற்றலாகிச் சென்றார். அதன்பின்னர் அலுத்கம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் சிலகாலம் பதில் அதிபராகவும் பணியாற்றினார். இக்காலப்பகுதியில் அவரது கணவரது உடல்நிலை பாதிப்படைந்தது. அதன்பிறகு 90ஆம் ஆண்டு முதல் சிலகாலம் கொழும்பு சைவமங்கையர் கழகத்திலும் பணியாற்றினார். 91ஆம் ஆண்டில் அவரது கணவரது இறப்பின் பின்னர் கனடாவுக்கு வந்த குறமகள் இங்கும் சிலகாலம் ரொரன்றோ கல்விச் சபையில் பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றினார். அவர் வாழ்ந்த காலத்திலும், அதன்பிறகும் அவரது மாணவர்கள் பலரும் அவர் மாணவர்கள் மீது கொண்டிருந்த அக்கறையையும், அர்ப்பணிப்பையும் பற்றி விதந்து கூறிவருகின்றனர்.
000
எழுத்துப்பணி
தனது சிறுவயதிலேயே எழுதத் தொடங்கியவராக குறமகள் இருந்தாலும் அவர் தொடர்ச்சியாக எழுதத் தொடங்கியது அவர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கற்ற காலப்பகுதியிலேதான். போலிக் கௌரவம் என்கிற அவரது முதலாவது சிறுகதை ஈழகேசரியில் பிரசுரமானது. அது சீதனம் என்பது வற்புறுத்தி வாங்கக்கூடாது, மனமுவந்து கொடுப்பதை வாங்கவேண்டும் என்கிற கருத்தினைக் கொண்டதாகவும் அப்படிக் கேட்கின்ற ஆண் உயர்வானவனாகவும் சித்திகரிப்பதாக அமைந்தது. அதன் பின்னர், சீதனம் பற்றிய அவரது நிலைப்பாடும் பார்வையும் மாற எழுதியதே கொள்கைத் தடாகத்தில் என்கிற சிறுகதை. இதுவே ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் சஞ்சிகையான கலைமலரில் இடம்பெற்று, முதற்பரிசும் பெற்ற கதையாகவும் இருக்கவேண்டும். இந்தக் கதையில் சீதனம் எவ்வளவு வேண்டும் என்று தாமாகக் கேட்கின்ற பெண்வீட்டாரிடம் சீதனமே வேண்டாம் என்று மறுக்கின்ற ஆணே உயர்வானவனாகச் சித்திகரிக்கப்பட்டிருப்பான். அதன் பின்னர் தொடர்ச்சியாக ஈழகேசரி, வீரகேசரி என்று ஆரம்பித்து சிந்தாமணி, இளம்பிறை, தினகரன், ஞானம், விளம்பரம், கலைச்செல்வி, தமிழர் தகவல், தாய்வீடு உள்ளிட்ட பல இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ச்சியாக எழுதிவந்தார். அதுதவிர, அப்போது இலங்கை வானொலியில் பிரபலமாக வானொலிச் சிறுகதைகள் வாசிப்பிலும் இவரது சிறுகதைகள் பல வாசிக்கபட்டன. குறமகள் என்ற பெயரிலேயே இவர் பரவலாக அறியப்பட்டபோதும் இராசாத்திராம், காங்கேயி, சக்திக்கனல், சத்தியப்பிரியா என்கிற புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.
1954 ஆம் ஆண்டுமுதலே எழுதிவந்தாலும் கூட இவரது முதலாவது நூல், அவரது மகளின் உதவியுடன் 1990 இலேயே குறமகள் கதைகள் என்கிற பெயரில் வெளியானது. இந்த நூலே யாழ் இலக்கிய வட்டத்தின் ஐம்பதாவது நூலென்றும் குறிப்பிடப்படுகின்றது. ஒரு விதத்தில் ஈழத்துப் படைப்பாளிகள் தொடர்ச்சியாக இயங்கினாலும் கூட அவர்களது ஆக்கங்கள் நூல்வடிவைப் பெறுவதற்கு எதிர்நோக்குகின்ற பொருளாதர, சமூக, பண்பாட்டு நெருக்கடிகளை இது சுட்டிக்காட்டுகின்றது எனலாம். அதைத் தொடர்ந்து உள்ளக்கமலமடி என்கிற சிறுகதைத் தொகுதியும், மாலை சூட்டும் நாள் என்கிற கவிதைத் தொகுதியும், மிதுனம், கூதிர்காலக் குலாவல்கள், அகணிதன் என்கிற நாவல்களும் எழுதியுள்ளார். தனது கணவரது பத்தாவது ஆண்டு நினைவஞ்சலி மலராக மாணவர்களுக்காக எழுதிய ஐந்து கட்டுரைகளைத் தொகுத்து இராமபாணம் என்கிற பெயரில் சிறுவெளியீடாக வெளியிட்டார். இதுதவிர வெவ்வேறு காலப்பகுதிகளில் அவரது குடும்பத்தினரின் இறப்புக்களின்போது குருமோகன் பாலர் பாடல் கோவை, அருள்நெறிக் கோவை, சக்திநெறிக் கோவை, குக நெறிக்கோவை, ஈழத்து றோசா என்கிற சிறு தொகுப்புகளையும் வெளியிட்டுவந்தார். ஈழத்தில் பரவலாகவும், தனித்துவமானதாகவும் இருந்த கல்வெட்டு வெளியிடுதல் என்பதற்கு மாற்றாக, இறந்தவர்களின் நினைவுகளைத் தொகுத்தல் என்பதாக இவற்றில் சிலவற்றை அடையாளங்காண முடிகின்றது.
குறமகள் மேடைப்பேச்சுக்களாலும், கட்டுரைகளாலும் பெரிதும் அறியப்பட்டிருந்தாலும் அவை தொகுக்கப்படவில்லை என்பது கவலைக்குரியதே. நூலாக்க வேண்டும் என்று தான் எழுதிய கட்டுரைகளை எல்லாம் ஒரு பெரிய பெட்டியில் போட்டு வைத்திருந்ததாகவும் தான் சுகவீனமுற்று சிலநாட்கள் மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்ததன் பின்னர் தான் ஏற்கனவே இருந்த வீட்டிலிருந்து புதிய இடத்திற்குக் குடிபெயர்நபோது அந்தப் பெட்டி தொலைந்துவிட்டது என்று இக்கட்டுரையாளருக்கு வழங்கிய நேர்காணலில் குறமகள் பதிவுசெய்திருக்கின்றார். உண்மையில் குறமகளின் ஆளுமை அதிகம் வெளிப்பட்டது அவரது கட்டுரைகளில் என்றே கருத முடிகின்றது. அவர் சிறுகதை, நாவல். கவிதை என்கிற படைப்பாக்க வடிவங்களை அதிகமும் தனது கருத்துநிலைகளை வெளிப்படுத்தும் ஊடகமாகவே பயன்படுத்தினாரே அன்றி அவற்றின் அழகியல் தன்மைகளில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றே கூறமுடிகின்றது
000
நாடகத்துறை
இலங்கையில் நாடகத்தில் டிப்ளோமாப் பட்டம்பெற்ற முதலாவது பெண்ணும் இவரே என்று குறிப்பிடப்படுகின்றபோதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இளவாலை கன்னியர் மடத்தில் கல்விகற்ற காலங்களில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய குறமகள், சிறந்த நடிகையாக அப்போது அறியப்பட்டிருந்தார். நாடகத்தில் டிப்ளோமாப் பட்டம் பெற்ற பின்னர் அதனைக் கற்பித்தும் வந்ததுடன் மிகுந்த ஆர்வத்துடன் நாடகங்களை எழுதி, இயக்கியும் நடிகராகவும் தொடர்ச்சியாகப் பங்கேற்றும் வந்தார். ஆயினும் இவர் எழுதிய நாடகங்களின் பிரதிகள் ஏதேனும் இப்போது கிடைக்கின்றனவா எனத் தெரியவில்லை. கலிங்கத்துக் காவலன் என்கிற இவரது நாடகம் அகில இலங்கை கலைக்கழக நாடகப் போட்டியில் பரிசுபெற்றது, அதுதவிர இராமர் யுத்த காண்டம், பாற்கடல் கடைந்த கதை என்கிற நாட்டிய நாடகங்களும் எழுதியுள்ளார். அத்துடன் கனடாவில் (ரிவிஐ) தொலைக்காட்சியிலும், இலங்கை ரூபவாஹினியிலும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தும் இருக்கின்றார்.
000
மேடைப்பேச்சு
ஆளுமைமிக்க பேச்சாளராக விளங்கிய குறமகள் பெண்விடுதலை, சமத்துவம், தேசிய விடுதலை போன்றவற்றை முன்வைத்து பல்வேறுமேடைகளில் பேசி இருக்கின்றார். ஈழப்போராட்டத்தில், போராட்டத்தின் தேவை குறித்தும், சுதந்திரமும் சமத்துவமும் எப்படி மறுக்கப்படுகின்றது என்றும் வெவ்வேறு நாடுகளில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டங்களின்போது பெண்களின் பங்களிப்பு எவ்வாறாக இருந்தது என்பதையும் தொடர்ந்து பேசிவந்திருக்கின்றார். கனடா வந்தபின்னர் அவர் உடல்நிலையால், ஒட்சிசன் சிலிண்டரை போகும் இடமெல்லாம் கொண்டு திரியவேண்டி வந்தபின்னரும் கூட அந்த ஒட்சிசன் சிலிண்டருடனே பல்வேறு கூட்டங்களிலும் சமூக நிகழ்வுகளிலும் பங்குபற்றியும், உரையாற்றியும் உரையாடல்களில் பங்கேற்றும் வந்திருக்கின்றார்.
000
யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி
பல்வேறு துறைகளில் மிகுந்த ஆளுமைகொண்டவராக குறமகள் விளங்கியிருந்தாலும் கூட அவரது மிக முக்கியமான பணி “யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு” என்கிற அவரது ஆய்வுநூலே. தனது டிப்ளோமா படிப்பிற்காக எழுதிய பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கையிற் பெண்கல்வி என்கிற கட்டுரை பெற்ற வரவேற்பும் புள்ளிகளும், பெண்ணியம் தொடர்பாக அவருக்கு இயல்பாக இருந்த் அக்கறையும் இந்த நூலை எழுதவான முதலாவது விதையாக அமைந்தது என்று குறமகள் தனது முன்னுரையில் பதிவுசெய்கின்றார். இந்த நூலானது ,
- யாழ்ப்பாணாப் பெண்களின் கல்விப்பாரம்பரியம்: 18 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை
- சைவமும் தமிழும் வளர்த்த செல்வி பார்வதியம்மையார்
- காந்திய வழி சமூக சேவையாளர் “தமிழ் மகள்” மாசிலாமணி மங்களம்மாள்
என்கிற மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது.
இதன் முதலாவது பகுதியில் ஐரோப்பியர் வருகையின் பின்னர் அவர்களால் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட கல்விமுறை பற்றியும், பெண்களுக்கான கல்வி என்பது எத்தகைய விடாமுயற்சிகளூடாக சாத்தியமானது என்றும் ஆராய்கின்றது. ஐரோப்பியர் இலங்கையில் அறிமுகப்படுத்திய கல்விமுறை முதலாக அவர்கள் ஆரம்பித்த பாடசாலைகள் உட்பட அனைத்தும் மதம் பரப்புதலை மூலநோக்காகக் கொண்டவையாகவும், தமது நிர்வாகத்தை இலங்கையில் உறுதியாக நிலைநிறுத்த அந்தக் கட்டமைப்பின் கீழ் பணியாற்றவுமானவர்களை உருவாக்குவதை நோக்கிய கல்வி அது என்பதையும் இந்தப் பகுதியினூடாக நிறுவுகின்ற குறமகள், அதே நேரம் நாவலர் முன்னெடுத்த தேசியகல்வி முயற்சிகள் பெண்கள் பற்றிய எந்தக் கரிசனமும் இல்லாதவையாகவும், அதற்கு எதிரானவையாகவும் இருந்தன என்றும் நிறுவுகின்றது. ஒல்லாந்தர் காலத்தில் சைவப் பெண்களை திருமணம் செய்கின்ற கிறித்தவ ஆண்களுக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் இருந்த நிலையில், பெண்களும் மதமாற்றம் செய்யப்பட்டும், கிறித்தவ பண்பாடு தெரிந்தும் இருந்தாலே கிறித்தவ குடும்பங்கள் உருவாகும் என்கிற எண்ணமே பெண்கள் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு உந்துதலாக அமைந்தது. ஆயினும் தமிழ்ப் பெண்கள் மீது இன்னும் கடுமையான அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதன் மூலமே இதனை எதிர்கொள்ளத் தொடங்கினார். பெண்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகளை அவர் ஒழுக்க விதிகளாக எழுதிப் பரவலாக பிரசாரம் செய்தார். அதன் பொருட்டு அதுவரை இலங்கையில் இல்லாமல் இருந்து இந்தியாவில் வழக்கத்தில் பிராமணப் பெண்கள் மத்தியில் இருந்த அடக்குமுறைகளையும், அடிமைத்தனத்தையும் இலங்கைக்கு இறக்குமதி செய்தார். இந்தத் தரவுகளை தர்க்கபூர்வமாக முன்வைத்து விமர்சனப் பார்வையுடன் காத்திரமானதாக இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது.
அதேநேரம் இந்த நூலில் மிக முக்கியமானதாக நான் கருதுவது மூன்றாம் பகுதியாக அமைந்துள்ள மாசிலாமணி மங்களம்மாள் பற்றிய பகுதியாகும். யாழ்ப்பாணத்தின் முதலாவது பெண்கள் இயக்கமாக 1902 இல் தனது பதினெட்டாவது வயதில் இவர் அமைத்த பெண்கள் சேவாசங்கம் என்கிற இயக்கம் கருதப்படுகின்றது. இந்தியாவில் காந்தியக் கொள்கைகளிலும், காங்கிரசிலும் ஈடுபாடு காட்டிய இவர் 1924 இல் கோவில்பட்டியில் நடந்த காங்கிரஸ் பெண்கள் மாநாட்டுக்குத் தலைமை தாங்குகின்ற அளவிற்குச் செல்வாக்கு வாய்ந்தவராக இருந்தார். 1926 இல் பெண்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கக்கூடாது என்றிருந்த தடை நீக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் மாநகரசபைத் தேர்தலிலேயே (1927) பெண்களைத் தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தபோது எழும்பூர்த் தொகுதியிலே ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் முத்துசுவாமி நாயுடுவை எதிர்த்துத் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். அத்துடன் 1923லேயே தமிழ்மகள் என்கிற பெண்களுக்கான இதழ் ஒன்றினை ஆரம்பித்து ஆசிரியராகவும் இருந்தவர். இந்த தமிழ்மகள் இதழானது 1970/71 இல் இவர் இறக்கும்வரை வெளியானது என்பதுவும் குறிப்பிடத்தக்கது. ஈழத்தின் மூத்த, முன்னோடி ஆளுமைகளில் ஒருவரும், பெண்ணியம் குறித்த அக்கறைய இயங்கியவருமான மாசிலாமணி மங்களம்மாள் கிட்டத்தட்ட வரலாற்றில் மறைக்கப்பட்டவராகவே இருந்தார். இவர் பற்றி முறையான ஆய்வின் மூலமாக மங்களம்மாளின் பங்களிப்பை சரியாக பதிவுசெய்தவர் குறமகளே. இன்றுவரை குறமகள் இந்த நூலில் செய்த ஆய்விற்கும், சேகரித்த தகவல்களுக்கும் அப்பாலாக மங்களம்மாள் பற்றிய பெரியளவு முக்கியமான பதிவுகள் எதுவுமே இடம்பெறவில்லை என்பது முக்கியமானது.
000
குடும்பம்
தான் ஒரு ஆளுமையாக, குறமகளாக உருவெடுத்ததற்கும் தொடர்ந்து இயங்கியதற்கும் தனது குடும்பத்தினர் உறுதுணையாக இருந்ததாக குறமகள் பல இடங்களில் பதிவுசெய்திருக்கின்றார். குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்த குறமகளுக்கு ராணி, அரசி, தேவி, ரதி என்கிற நான்கு சகோதரிகளும் நவநீதன் என்கிற இளைய சகோதரர் ஒருவரும் இருக்கின்றார்கள். திருமணமான பின்னர் மேற்படிப்புகளுக்காக இவர் தனது குழந்தைகளைப் பிரிந்து வேறிடங்களில் கல்விகற்றபோது இவரது சகோதரர்கள் இவரது குழந்தைகளைப் பராமரிக்க உதவி துணைபுரிந்திருக்கின்றனர். அதுபோல அவரது தந்தையும் தொடர்ச்சியாக அவரை ஆதரிப்பவராகவும் உற்சாகமூட்டுபவராகவும் இருந்திருக்கின்றார். பெற்றோரில் ஏற்பாட்டில் கல்வியங்காட்டைச் சேர்ந்த வேலுப்பிள்ளை இராமலிங்கம் என்பவருடன் குறமகளின் திருமணம் இடம்பெற்றது. தனது கணவரிடம் தான் முழுமையான சுதந்திரத்தை அனுபவித்ததாகவும், தனது தேர்வுகளை சுயமாக எடுக்கின்ற வெளி தனக்கு இருந்ததாகவும், தனது கணவர் அவற்றில் தலையிடுவதில்லை என்றும் தான் கூட்டங்களுக்குப் பேசச் செல்லுகின்றபோதெல்லாம் அவர் ஆதரவளிப்பதுடன் இயன்றவரை தானும் பார்வையாளராகக் கலந்துகொள்ளும் வழக்கத்தையும் கொண்டிருந்தார் என்றும் குறமகள் பதிவுசெய்திருக்கின்றார். குறமகள் தொடர்ச்சியாக குடும்ப உறவுகளின் மதிப்பீடுகள் பற்றி உயர்வாகப் பேசவும், குடும்பத்தை சரியாகப் பேணவேண்டிய அவசியத்தை வலியுறுத்தவும் அவரது குடும்பத்தினர் அவருக்கு அளித்த அபரிதமான ஆதரவும் காரணமாக இருக்கலாம். குறமகளுக்கு சசிகலா, கலாவாணி, குருமோகன், துளசிராம், குகபாலிகா என்கிற ஐந்து பிள்ளைகள். அவர்களில் குருமோகன் தனது மூன்றாவது வயதிலேயே இறந்துவிட்டார். அவரது கடைசி மகளான குகபாலிகா விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து 1997 ஆம் ஆண்டு பெரிய மடுவில் இடம்பெற்ற போரில் மரணமான மேஜர் துளசி ஆவார். இவரது நினைவாக குறமகள் தொகுத்து வெளியிட்ட ஈழத்து றோசா என்கிற நினைவுமலர் வெளியானது.
000
சமூகச் செயற்பாட்டாளராக
தனது ஆயுட்காலத்தில் 27 வருடங்கள் ஆசிரியராகவும், 8 வருடங்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளராகவும் கடமையாற்றிய குறமகள் தொடர்ந்தும், 75 வயதுக்கு அப்பாலும் கூட வெவ்வேறு அமைப்புகளினூடாக செயற்பட்டுவந்தார். குறமகளைப் பொறுத்தவரை அவர் முதன்மையாக சமூக மாற்றத்தையும், பெண்விடுதலையையும், சமத்துவத்தையும் வேண்டிநின்ற ஒரு செயற்பாட்டாளரே. தனது எழுத்துக்களையும் பேச்சுக்களையும் அவர் அந்த நோக்கத்திற்காகவே பிரயோகித்தார் என்றே கருதமுடிகின்றது. யாழ் இலக்கிய வட்டம், கலை இலக்கியக் களம், காங்கேன்துறை பட்டினசபை, இலங்கை ஆசிரியர் சங்கம், பெண்கள் ஆய்வு வட்டம், அன்னை கஸ்தூரிபாய் நிலையம், தென்னாசிய மாதர் சங்கம், கனடிய எழுத்தாளர் இணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் அங்கத்தவராகவும், நிர்வாகப் பதவிகளிலும் செயற்பட்டிருந்தார். அத்துடன் சாயி சமித்திகளை காங்கேசன்துறையிலும் கனடாவிலும் வெவ்வேறு காலப்பகுதிகளில் நிறுவி அவற்றின் வளர்ச்சிக்காகவும் உழைத்திருந்தார்.
ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலேயே அவர் தனது பேச்சகளால் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பவராக இருந்துவந்தார். கனடா வந்த பின்னரும் அவர் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி பல இடங்களில் பேசியும் எழுதியும் வந்தார். குறமகள் பெண்விடுதலை, தேசிய விடுதலை, சாதிய விடுதலை போன்ற விடுதலைப்போராட்டங்களுக்கு ஆதரவான மனைநிலையைக் கொண்டவராகவே இருந்தார். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்துநிலையைக் கொண்டவராகவே அவர் இருந்தபோதும் கூட, அவரது குடும்பச் சூழல் காரணமாக தனது ஊரில் இடம்பெற்ற சாதி ஒழிப்புக் கூட்டங்களில் தன்னால் மேடை ஏறிப் பேசமுடியவில்லை என்பதனை இந்தக் கட்டுரையாளர் எடுத்த நேர்காணலில் வருத்தத்துடனும் குற்ற உணர்வுடனும் பகிர்ந்துகொண்டிருந்தார். குறிப்பாக, புலம்பெயர் நாடுகளில் சாதியப் பாகுபாடு ஒழிந்துவிட்டது, ஊரில் சாதிய ஒடுக்குமுறை என்று பேசப்படுகின்ற கற்பிதங்களுக்கு எதிராக,
“இலங்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இங்கு வந்தபுதிதில் நாம் சமத்துவம் என்று சொல்லிக்கொண்டோம். ஆனால் மெல்ல மெல்ல இங்கே எமது சமூகத்தில் இருந்த எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் இங்கும் கொண்டுவந்துவிட்டோம். சாதிப் பாகுபாடு என்பது இங்கும் வலுவாகவே இருக்கின்றது. புதிய தலைமுறையினர் வேற்று இனத்தவர்களைத் திருமணம் செய்வதைவிட பிற சாதிகளில் திருமணம் செய்வதை ஆதிக்கசாதித் தமிழ்மனங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதேநேரம் வேற்று இனத்தவர்களைத் திருமணம் செய்கின்றபோது சாதியப் பாகுபாடு அழிந்துவிடும் என்றாலும் அத்துடன் சேர்த்து தமிழ் அடையாளமும் அழிந்துவிடும் என்பதே உண்மை.”
என்று யதார்த்தத்தை நேர்மையாக அந்த நேர்காணலில் பதிவுசெய்திருந்தார் குறமகள்.
000
இனி
குறமகளையும் அவரை ஒத்த ஆளுமைகளையும் எமது சமூகம் எவ்வாறு கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கின்றது என்பது குறித்து அக்கறைப்படவேண்டியிருக்கின்றது. ஒப்பீட்டளவில் அவர் அறியப்பட்ட ஆளுமையாக இருந்தார் என்பது உண்மையென்றாலும் அவர் ஆய்வு ரீதியாக அணுகப்படவில்லை என்றே கூறவேண்டும். 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அவரது 83 ஆவது பிறந்தநாளுக்குச் சிலநாட்களே இருக்கின்ற நேரத்தில் அவரை நேர்காணலுக்காகச் சந்தித்தபோதும் அவர் சரியான திட்டமிடலுடன், என்னென்ன எழுதுவது என்ற குறிப்புகளை எடுத்துவைத்து இயங்கிக்கொண்டிருந்தார். உடல்நிலையும், வயதும் சிறு தளர்வை அவரில் ஏற்படுத்தியிருந்தபோதும் கூட கம்பீரமாகவும் வெளிப்படையாகவும் உரையாடினார். அவரது முக்கிய பங்களிப்புகளாகக் கருதப்படக்கூடிய அவரது கட்டுரைகளைத் தேடித் தொகுப்பாக்கும் முயற்சியை முன்னெடுக்கவேண்டியது அவசியம். அவரது நூலாக்கம் பெற்ற நூல்களில் கூட யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கள் கல்வியைத் தவிர்ந்த ஏனைய நூல்கள், குறிப்பாக உள்ளக் கமலமடி, குறமகள் கதைகள் என்பன கிடைப்பது கடினமானதாகவே உள்ளது. எனவே குறமகளை ஆவணப்படுத்தும் முயற்சிகளை எடுப்பதுடன் குறமகள் பற்றிய ஆய்வினைச் செய்வதற்கும் ஆய்வுகளில் ஈடுபடும் மாணவர்களையும், ஆய்வாளர்களையும் தூண்டவேண்டும். அவர் சாந்திருந்த, பங்களித்த அமைப்புகள் இந்த முயற்சியை முன்னெடுப்பது நல்லதோர் முன்னுதாரணமாக அமையும்.
உசாத்துணை
- இந்தக் கட்டுரைக்கான பிரதான உசாத்துணையாக இந்தக் கட்டுரையாளர் குறமகளிடம் எடுத்த நேர்காணலே அமைகின்றது.
- யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கள் கல்வி நூல் – குறமகள்
- இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் – எம். புண்ணியாமீன்
- குறமகள் : நினைவழியா நினைவுகள் – நினைவுமலர்
- இக்கட்டுரை ஜீவநதி இதழில் 100வது இதழில் வெளியானது. நன்றி ஜீவநதி
- எனது எல்லா எழுத்துகளையும் முதலில் பார்த்த ஆருயிர் நண்பன் விசாகன் இல்லாத இடைவெளியை இக்கட்டுரையை பதிவேற்றுகின்றபோது உணர்கின்றேன். இக்கட்டுரையும் இனி நான் எழுதும் எல்லா எழுத்துகளும் அவனுக்கே அர்ப்பணம்…
- இப்புகைப்படம் கனடாவில் ஓவியர் கருணாவால் எடுக்கப்பட்டது.
- குறமகளுடனான நேர்காணலுக்கு https://arunmozhivarman.com/2016/03/09/kuramahal/
Leave a Reply