ஓகஸ்ட் 3, 2023
சீமானும் அவர் பேசும் விடயங்கள் சமூகநீதிக்கு எதிரான, மானுட விரோதமானவையாகவே பல ஆண்டுகளாக இருக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டபோது அதில் உள்ள பாசிசக் கருத்துகள் குறித்த உரையாடல்கள் நடந்தன. அவை கீற்று இணையத்தளத்தில் வெளியாகி இருந்தன. பின்னர் ஆழி பதிப்பகம் அவற்றைத் தொகுத்து “எங்கே செல்கிறது நாம் தமிழர் கட்சி” என்ற நூலாக வெளியிட்டும் இருந்தது.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் ஒரு பாசிச அறிக்கை என்பதைக் கோட்பாட்டு ரீதியாக நிறுவிய, வளர்மதி எழுதிய முக்கியமான கட்டுரையும் இத்தொகுப்பிலேயே இடம்பெற்றிருந்தது.
“நாம் தமிழர் இயக்கம்: ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப்போகும் ஆகப்பெரிய சவால்” என்கிற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தது. இக்கட்டுரைக்கான இணைப்பு முதலாவது பின்னூட்டமாகத் தரப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 8, 2023
ஏ. எஸ். பண்னீர்செல்வம் எழுதிய கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று நூலிலும் கலைஞர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தின் வடிவமைப்பில் இருந்த இந்த நவீன சிந்தனை பற்றிக் குறிப்பிட்டிருப்பார். நவீன தமிழகத்தை கட்டமைத்த சிற்பி கலைஞர் என்கிற இந்த உரையாடலில் உள்ள பல்வேறு விடயங்கள் கலைஞரின் தொலைநோக்குப் பார்வைக்கும் அவருக்கு இந்த சமூக முன்னேற்றம் குறித்த சிந்தனைக்கும் வெளிப்பாடுகளாக அமைவன.
ஓகஸ்ட் 10, 2023
சுற்றமும் நட்பும் என்கிற பொருண்மையில் அமைந்த, இயக்குனர் ராமுடனான இந்த உரையாடலை முக்கியமானதாகப் பார்க்கின்றேன். ரொரன்றோவில் பெரிதாகப் பேசப்படாத ஒருவிடயமாக அதே நேரத்தில் மக்கள் மத்தியில் – தமிழ் கனேடியர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள – அதிகரித்துவரும் உறவுகள் / குடும்பங்களுக்குள் ஏற்பட்டுள்ள உடைவு / விலகல், தனிமை, போதைப் பொருட் பாவனை, வன்முறை போன்ற விடயங்கள் பற்றி உரையாடவேண்டியுள்ளது. 15 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட வயதுகளில் தமிழ் கனேடிய இளைஞர்கள் மத்தியில் தற்கொலைகள் கடுதியாக அதிகரித்துள்ளது. இவற்றுக்கான தீர்வுகளை நோக்கிய உரையாடலுக்கான முக்கிய புள்ளிகளை இந்த உரையாடலில் ராம் முன்வைக்கின்றார். கேட்டுத் தொடர்ந்து உரையாடவேண்டும். 5 பாகங்களில் அமைந்த இந்த உரையாடலின் அடுத்த 4 பாகங்களைப் பின்னூட்டமாகத் தந்துள்ளேன்.
ஓகஸ்ட் 12, 2023
தமிழ்நாட்டில் நாங்குநேரி என்கிற கிராமத்தில் நடந்துள்ள சாதி வெறியினால் செய்யப்பட்ட கொடூரமான தாக்குதல் மனதை அலைக்கழித்தபடியே உள்ளது. இதனை வெறுமனே தமிழ்நாட்டில் நடந்த பிரச்சனையாக மட்டும் கடந்துபோய்விடாமல் ஈழத்தவர்களும் அக்கறைகொள்ளவேண்டி இருக்கின்றது.
நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றி, நமது குடும்பங்களிலும், குடும்பத்தவர், உற்றார், உறவினர், நண்பர்கள் மத்தியில் சாதியம் தொழிற்படும் விடயங்கள் குறித்தும் சாதிய ஒழிப்புப் பற்றிய விழிப்புணர்வு பற்றியும் உரையாடவேண்டியது முதன்மையான அவசியமாக இருக்கின்றது. இதற்குமேலாக ஈழத்தவர்கள் கோயில்கள், பாடசாலைகள், இதர பொது நிறுவனங்கள், இதர புழங்குவெளிகள் என்பவற்றில் உள்ள சாதிய ஒடுக்குமுறைகள் குறித்தும் வெளிப்படையாக உரையாடுவதோடு சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.
சாதிதான் சமூகம் என்றால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்பதைத்தான் நாம் உரத்துச் சொல்லவேண்டி இருக்கின்றது.
August 24, 2023
கலைமுகம் இதழின் 75வது இதழ் வெளியாகி இருக்கின்றது. எண்ணிக்கை அளவில் மாத்திரம் அல்லாமல் அதன் உள்ளடக்கத்திலும் இது ஒரு சாதனையென்றே சொல்லவேண்டும். குறிப்பாக வாசகர்களின் கருத்துகளை உள்வாங்கி சிரத்தையுடன் இதழின் உருவாக்கத்திற்கு அயராது உழைக்கும் எமிலுக்கும் திருமறைக் கலாமன்றத்தும் பாராட்டுகள்.
இந்த இதழில் பெருமதிப்புக்குரிய எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான நண்பர் எஸ்.கே. விக்னேஸ்வரன் அவர்களிடம் நான் எடுத்த நேர்காணலின் முதற்பகுதியும் வெளியாகியிருக்கின்றது.
August 24, 2023
சந்திராயன் தான் இப்போதைய பேச்சுப்பொருளாக இருக்கின்றது. அறிவியலின் பாய்ச்சல் என்ற அளவில் அதனை ஒரு சாதனையாகக் கொண்டாடுவதைப் புரிந்துகொள்ளமுடிகின்றது. புராணங்களையெல்லாம் அறிவியலாகச் சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றிவரும் போக்கு (இந்தியாவிலும் அண்மைக்காலமாக ஈழத்திலும்) அதிகரித்துவருகின்ற வேளையில் இது நடந்தேறியிருப்பதையும் கவனிக்கவேண்டும்.
ஆயினும், சந்திராயன் நிலவில் தலையிறங்கிய செய்தியைப் பார்த்தவுடன் Casteless Collective இன் எப்படி எப்படி என்கிற பாடலில் வருகின்ற
//நிலவுக்கு போக கூட வசதி இருக்குதா
இந்த மலமள்ளும் கைகளுக்கொரு வசதி இருக்குதா
கூடி நின்றா போராட்டம்
ஆதங்கமா ஆர்ப்பாட்டம்
ஓட வைச்சுச் சுடுவதற்கா சுதந்திரம்//
என்ற வரிகள் தான் நினைவுக்கு வந்தன. இந்தியாவிலும் ஈழத்திலும் மாத்திரம் அல்லாமல் புலம்பெயர் நாடுகளிலும் இன்றும் இன, சாதிய, மத, பாலினம் போன்றவற்றை வைத்து ஒடுக்குமுறைகளைப் பிரயோகிக்கின்ற போக்கும் இந்த அடையாளங்களால் தமக்குக் கிடைத்த சலுகைகளையும் அவற்றால் பெற்ற அடைவுகளையும் பெருமையாகக் கருதுகின்ற போக்கும் நிலைபெற்றும் அதிகரித்தும் இருக்கின்றது.
சுயமரியாதையும் சமத்துவமும் நிறைந்த சமூகநீதியே அவசியம். அதற்குத்துணைபோகாத அறிவியல், கலை, இலக்கியம் அனைத்தும் வீணே!
ஓகஸ்ட் 26, 2023
வழமைபோல இந்தப் பிறந்தநாளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் வாழ்த்துகளும் அன்பும் இந்த நாளை இன்னும் சிறப்பாக்கியதோடு தொடர்ந்து இயங்குவதற்கான உந்துதலையும் தருகின்றன. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எனக்கும் எப்போதும் உவப்பானவை. தைப்பொங்கலைத் தவிர வேறெந்த பண்டிகைகளையும் கொண்டாடும் வழக்கமோ, வாழ்த்துச் சொல்லும் வழக்கமோ எனக்கில்லை. அதுபோல தந்தையர் தினம், அன்னையர் தினம் என்பவற்றையும் கொண்டாடுவதில்லை. இதனால் பிறந்தநாட்களை இன்னும் கொண்டாட்டமாக அணுகுவது வழக்கம். இயன்றவரை உறவினர்கள், நண்பர்களின் பிறந்தநாட்களின்போது நேரடியாக அழைத்துச் சிலநிமிடங்களாவது பேசிவிடுவது என் வழக்கம்.
சிறுவயது முதலே நண்பர்களுடன் நேரம் செலவிடுவது என்பது எனக்கு மிகவும் பிரியமானது. அதனாலோ என்னவோ ஒவ்வொரு பிறந்தநாட்களின்போதும் நெருக்கமான நண்பர்கள் சிலரவாது உடனிருப்பார்கள். அதிலும் குறிப்பாக கனடா வந்த முதல் பன்னிரண்டு ஆண்டுகளும் – அதாவது திருமணம் ஆகும் வரை, பிறந்தநாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்கு நண்பர்களுடனேயே இருந்திருக்கின்றேன், குறிப்பாக தீபன், சுரேஷ், ரதன், நிரு, சுதா, நிமலன், அஜந்தன் போன்ற நண்பர்கள் பெரும்பாலான பிறந்தநாள் தொடங்கும்போது உடனிருந்திருக்கின்றார்கள். அப்போது திருமணம் முடியவில்லை என்றாலும் சில பிறந்தநாட் கொண்டாட்டங்களை எனது நண்பர்களூடாக மதனியே ஒருங்கிணைத்திருக்கிறார். இதெல்லாம் பேறென்றே சொல்லவேண்டும். நேற்றும் அத்தனை ஆயத்தங்களையும் ஏற்பாடுகளையும் மதனியே செய்திருந்தார். அனைவருக்கும் அன்பும் நன்றியும். வாழ்தல் இனிது!
(1996 இல் வந்த எனது பிறந்தநாள் தான் நான் ஈழத்தை விட்டு வெளியேறுமுன் கொண்டாடிய கடைசிப் பிறந்தநாள், இன்றும் மனதுக்கு மிக நெருக்கமான நாள் அது, 2007, 2008 இல் வந்த பிறந்தநாட்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக முக்கியமானவை. அந்தப் படங்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன்)
ஓகஸ்ட் 31, 2023
சமூகநீதியை முன்னெடுக்கும்போது அது யார் யாருக்கெல்லாம் எரிச்சலூட்டும் என்பதையும் அதற்காக இப்படியும் ஒரு பக்கம் இருக்கு, கருத்துச் சொல்லும் சுதந்திரம், இப்படிச் சிலர் சொல்கிறார்கள் என்கிற பாவனைகளுடன் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது நாம் கண்டுகொண்டதுதான். தினமலரில் வெளிவந்த செய்தி ஏற்படுத்தியிருக்கின்ற இந்த விழிப்புணர்வு இன்னும் பரவி, பிரக்ஞைபூர்வமாக கருத்தியில் தளத்தில் சமூகநீதிக்காக ஒன்றிணையவேண்டிய சமகாலத்தின் அவசியம்.
இன்றைய காலத்தில் சனாதனத்துக்கு எதிரான குரலையோ அல்லது (இதில் and/or என்பது இன்னும் பொருத்தமானது) சமூகநீதிக்கான குரலையோ வெளிப்படுத்துபவர்கள் மீது தொடர்ந்து அவதூறுகளையும், எதிர்ப்பிரச்சாரத்தையும் வெளிப்படுத்துகின்ற தினமலர், காலச்சுவடு, கிழக்கு பதிப்பகம், ஜெயமோகன் மற்றும் இவர்கள் சார்ந்த அமைப்புகள், ஈழத்தில் அண்மைக்காலமாக பெருகிவரும் மதவாத அமைப்புகள், அவர்களுடன் தொடர்புடையோர், இன்னும் குறிப்பாக கனடாவில் அண்மைக்காலமாக பரவலாகிவரும் இந்துத்துவ அமைப்புகளுடனும் செயற்பாடுகளுடனும் தொடர்புடையோர் உள்ளிட்ட அனைவர் குறித்தும் நாம் பிரக்ஞை பூர்வமாக அணுகுவது முக்கியமானது.
குறிப்பாக ஈழத்தவர்கள், நான் உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் உள்ளோர் இது தமிழ்நாட்டுப் பிரச்சனை என்று நழுவிவிடாமல் தாம் வாழும் பிரதேசங்களில் இவை எவ்விதம் தொழிற்படுகின்றது என்றும் விழிப்புணர்வடைவது முக்கியமானது.
Leave a comment