செப்ரம்பர் 2023 முகநூல் குறிப்புகள்

செப்ரம்பர் 12, 2023

பாரதி இறப்புக் குறித்து…

பாரதியார் செப்ரம்பர் 12, 1921 அன்று அதிகாலை 1 மணிக்கு இறந்தார், இதனை செப்ரம்பர் 11 என்று குறிப்பிட்டுவருகின்றார்கள். உண்மையில் பாரதியார் இறந்தது செப்ரம்பர் 12, 1921 என்பதே சரியானது.  அதுமட்டுமல்ல, பாரதியார் யானையால் தாக்கப்பட்டு அதிலிருந்து மீளமுடியாமல் விரைவில் இறந்தார் என்றும், அவர் யானையால் தாக்கப்பட்டது ஜூன் 1921 என்பதால் யானையால் தாக்கப்பட்டு 3 மாதங்களின் பின்னர் இறந்தார் என்றும் இருவிதக் கருத்துகளே தொடர்ந்தும் கூறப்பட்டு வந்தது. 

ஆயினும் பாரதியார் யானையால் தாக்கப்பட்ட நிகழ்வை வைத்து கோவில் யானை என்கிற படைப்பு ஒன்றை எழுதினார் என்பதை வைத்து, அது ஜனவரி 1, 1921 சுதேசமித்திரனில் வெளியானது என்பதைக் கண்டறிந்து பாரதியார் யானையால் தாக்கப்பட்டது டிசம்பர் 1920 ஆக இருக்கவேண்டும், அதன்பின்னர் உடல் நலிந்தாலும் அவர் பத்துமாதங்கள் வரை உயிர்வாழ்ந்தார் என்பதை “பாரதியின் இறுதிக்காலம்” என்கிற நூலில் ய. மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார்.  அவசியம் படிக்கவேண்டிய நூல் இது.

செப்ரம்பர் 18, 2023

திரைப்படப் பாடல்களைக் கேட்பது என்பது எனக்கு ஏனோ அவற்றின் பாடல்வரிகளின் மீதான விருப்பாகவே இருந்துவந்துள்ளது.  சிறுவயது முதலே திரைப்படப் பாடல்களைக் கேட்பதும், கிட்டத்தட்ட 9 வயதான காலப்பகுதியில் இருந்தே எனக்கு விருப்பமான பாடல்களை ஒலிநாடாக்களில் பதிவுசெய்து கேட்பதுவும் சேமிப்பதுவும் எனது வழமையாகவும் இருந்துவந்துள்ளது.

பாடகர் எஸ்பி பாலா, பாடகி எஸ். ஜானகி, இசையமைப்பாளர் இளையராஜா என்ற வரிசையில் அவர்களுக்கும் முன்னதாக பாடலாசிரியரான வைரமுத்துவே எனக்கு ஆரம்பத்தில் பெருவிருப்புக்குரியவராக இருந்தார்.  பின்னர் நா. முத்துக்குமார். 

நா. முத்துக்குமாரின் பலபாடல்களால் நான் கவரப்பட்டு அவரது பாடல்களைத் தேடித் தேடிக்கேட்கத் தொடங்கியிருந்தபோது ஒரேயொரு முறை அவருடன் தொலைபேசி மூலம் பேசும் வாய்ப்பு காலம் செல்வம் அவர்களின் மூலம் கிடைத்தது.  மிகச் சில நிமிடங்களே நிகழ்ந்த அந்த உரையாடலில் அவரது பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லி சில பாடல்களைக் குறிப்பிட்டுவிட்டு அந்தவாரம் நான் இசைத்தட்டை வாங்கிக் கேட்டிருந்த சிவப்பதிகாரம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அற்றைத்திங்கள் வானிடம், சித்திரையில் என்னவரும் ஆகிய பாடல்களையும் நா. முத்துக்குமாரே எழுதியிருந்தார் என்ற அனுமானத்தில் அவரிடம் அந்தப் பாடல்களைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தேன்.  இந்தப் பாடல்களில் வந்திருந்த

// கண்ணான கண்ணுக்குள்ளே…
காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்…
தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட…
தித்திப்பு நெஞ்சில் வரும்…//

என்கிற வரிகளும்

 // காணுகின்ற காதல், என்னிடம்
நான் தெடுகின்ற யாவும், உன்னிடம்//

என்கிற வரிகளையும்   நான் குறிப்பிட்டிருந்தேன்.  இந்த வரிகளை காதலியும் மனைவியுமான மதனிக்கு வரைந்த மடலொன்றிலும் எழுதியதால் இப்போதும் நினைவில் இருக்கின்றது, 

அவற்றை மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்ட நா. முத்துக்குமார், உரையாடல் முடியும் நேரத்தில் நான் குறிப்பிட்ட சிவப்பதிகாரம் படப்பாடலை எழுதியது யுகபாரதி என்று சொல்லி, யுகபாரதி தனக்கு நெருக்கமான நண்பன் என்றும் சொல்லி யுகபாரதி எழுதிய சில பாடல்களையெல்லாம் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.  உண்மையைச் சொல்வதானால் யுகபாரதி அப்போது எனக்குப் பெரிதாகப் பரிச்சயமாகவில்லை.  அப்போது மட்டுமல்ல, 2006/2007 இல் இது நடந்து 10, 12 ஆண்டுகள் வரையும் கூட எனக்கு யுகபாரதி எனக்குப் பரிச்சயமில்லை. 

இந்தக் காலப்பகுதியில் ஆனந்த விகடனின் தீபாவளி மலர் ஒன்றில் வந்திருந்த குஞ்ஞுண்ணி கவிதைகள் பற்றிய யுகபாரதியின் கட்டுரை ஒன்றினை வாசித்து நல்லதோர் வாசிப்பு அனுபவத்துக்கு ஆட்பட்டிருந்தேன்.  இப்படியான நுன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள எனக்கமைந்தோர் நண்பர் தீபன் சிவபாலனும் த. அகிலனும்.  அப்போதுதான் அகிலனுக்கு வாய்த்த யுகபாரதியுடனான நேரடி அனுபவங்களை அகிலன் பகிர்ந்துகொண்டார்.  தொடர்ந்து யார் இந்த யுகபாரதி    என்று தேடுகையில் பெருமதிப்புக்குரிய எனது வழிகாட்டி வளர்மதியின் இணையத்தளத்தில் பார்த்து யுகபாரதி குறித்து வளர் குறிப்பிட்ட பல நினைவுகளும் சேர்ந்துகொண்டன. 

அண்மைக்காலமாக யுகபாரதி எழுதிய புத்தகங்களை எல்லாம் தேடித்தேடிப் படித்துக்கொண்டேயுள்ளேன்.  முன்னர் ஒரு முறை குறிப்பிட்ட து போல யுகபாரதியின் எழுத்துகளை வாசிப்பது என்பது ஆருயிர்த்தோழன் / தோழியிடனுன் நெருக்கமாக உரையாடுவதுபோன்ற நெகிழ்வையும் நிறைவையும் தருகின்றது.  கடந்த மூன்று நாட்களாக யுகபாரதியும் “ஒரு பாட்டு கொஞ்சம் பின்னணி” என்கிற நூலை வாசித்தேன்.  தான் எழுதிய, தான் ஏதோ ஒரு விதத்தில் முக்கியமகாக் கருதிய 51 பாடல்களை எழுதிய பின்னணி குறித்து இந்த 272 பக்கப் புத்தகத்தில் யுகபாரதி எழுதியுள்ளார். 

நட்பையே வாழ்வின் முதன்மையான உறவாகக் கருதுகின்ற எனக்கு, நண்பருடன் உரையாடும் உணர்வைத்தந்த இந்தப் புத்தகத்தில் உள்ள 51 பாடல்களையும் யூ ட்யூப் இணைப்பாக முதலாவது பின்னூட்டமாகப் பகிர்ந்துள்ளேன்.   

செப்ரம்பர் 27, 2023

அண்மையில், தியடோர் பாஸ்கரன் எழுதிய எம் தமிழர் செய்த படம் நூலினை வாசித்தேன், அதில் இறுதியாக இடம்பெற்றுள்ள நேர்காணலில் திராவிட இயத்தினர் திரைத்துறையினை எவ்விதம் பயன்படுத்திகொண்டனர் என்கிற கேள்விக்கான பதில், திராவிட இயக்கத்தினர் திரைத்துறையில் ஏற்படுத்திய தாக்கத்தினை மிகவும் மேலோட்டமானதாக மதிப்பீடு செய்வதாக இருக்கின்றது.  திராவிட இயக்கத்தினரால் பொதுவான சீர்திருத்தக் கருத்துகளை மட்டுமே திரைப்பட ங்களில் வெளிப்படுத்தக் கூடியதாக இருந்தது என்று கூறுவதுடன், அதற்கான காரணங்களாக திராவிட இயக்கத்தினர் வசனகர்த்தாக்களாகவே இருந்தார்கள், இயக்குனர்கள் வேறு ஒருவராக இருந்தமையையும் குறிப்பிடுகின்றார்.

இதற்கான தொடர் உரையாடலாக திராவிட சினிமா இயக்குனர்கள் சுபகுணராஜனின் இந்தக் கவனக்குவிப்பு அமைகின்றது. 

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑