பெரியாரின் திருக்குறள் குறித்த கருத்துகள் தொடர்பாக

பெரியாருடைய எழுத்துகள், பேச்சுகள், செயற்பாடுகள் சுயமரியாதை என்பதை நோக்கியதாகவே இருந்தன. அந்த வகையில் மொழி குறித்த பெரியாரின் கருத்துகள் பெருமிதத்தாலோ, வெறுப்பினாலோ எழுந்தவை அல்ல; அவை சுயமரியாதையை நோக்கிய அவரது பயணத்தில் குறித்த காலகட்டங்களில் மொழி, இலக்கியம், பழந்தமிழ் நூல்கள் என்பனவும் அவற்றை எழுதியோரும் தாங்கி நிற்கும் கருத்துகள் மக்களின் சுயமரியாதை உணர்வில் எவ்விதத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்கிற வகையிலான விமர்சனங்களே.

தமிழ்மொழி மீது இந்தி, சமஸ்கிருதம் என்பன திணிக்கப்பட்டபோது மொழியை உரிமை என்கிற வகையில் பிரக்ஞைபூர்வமாக அணுகி செயற்பட்டவர் பெரியார்.  திருக்குறள் மாநாடு உள்ளிட்ட பெரியாரின் பல்வேறு செயற்பாடுகள் இதற்கு வெளிப்படையான உதாரணங்கள்.  “மனிதர் ஈடேற வழி பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே” என்று குறிப்பிட்ட பெரியார், மொழியின் அடிப்படையில் தமிழர்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டபோது இவர்களுக்கு மொழியுணர்ச்சி இல்லையே என்றும் சாடினார். 

அதேநேரம், சுயமரியாதை உணர்வு குன்றியிருந்தமைக்கு தமிழின் பழைய இலக்கியங்களில் இருந்த அடிமைத்தனமான கருத்துகளும், அவற்றில் திணிக்கப்பட்டிருந்த / உரையாசிரியர்கள் திணித்துவிட்டிருந்த வைதீகக் கருத்துகளும் காரணம் என்கிற விதத்தில் பெரியார் அவற்றைக் கடுமையாகச் சாடியும் இருக்கின்றார்.

திருக்குறள் பற்றிய பெரியாரின் கருத்துகள் குறித்து மீண்டும் மீண்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.  திருக்குறள் பற்றியும் வள்ளுவர் பற்றியும் பெரியாரின் எழுத்துகளும் பேச்சுகளும் தொகுக்கப்பட்டு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடாக 348 பக்க நூலாக வெளிவந்துள்ளது.  இணையவெளியெங்கும் அவதூறாளர்கள் பரப்பிவரும் போட்டோ சொப் தொகுப்புகளை விலக்கி நேரடியாக பெரியார் எழுத்துகளைப் படிக்கின்றபோதே தெளிவேற்படும்.

பெரியாரின் 90வது பிறந்தநாள் செய்தியென்று ஒரு நறுக்கினை முகநூலில் காணமுடிந்த து. அதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் உள்ளது.  பெரியாரின் பேச்சும் எழுத்தும் என்ற வலைப்பக்கத்தில் பெரியாரின் பிறந்தநாள் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன, அதிலுள்ள 90வது பிறந்தநாள் செய்தியினை கீழே பகிர்ந்துள்ளேன்.  கவிஞர் கருணானந்தம் எழுதிய தந்தை பெரியார் முழுமுதல் வரலாறு என்கிற நூலிலும் இதே செய்தியே குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் 90-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 90-வது பிறந்தநாள் செய்தி

எனது நிலை

எனக்கு வயது 90.

உடல் நிலை மிகவும் மோசம். கைகால் நடுக்கம் அதிகம். சிறுநீர் கழிக்கும்போது சப்தம் போட்டுக்கொண்டுதான் கழிக்கிறேன் அதாவது அவ்வளவு வலி. தூக்கம் சரியாய் வருவதில்லை.

நினைத்தபோது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலியேற்பட்டு சில ஏப்பமோ காற்றுப் பிரிவோ ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது. உண்ட உணவு சரியானபடி ஜீரணமாவதில்லை. முன்போல் உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை. எந்தக் காரியம் பற்றியும் மனதிற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை. களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. நெஞ்சில் வலி திடீரென ஏற்படுவதும் வந்த பிறகு குறைவுதுமாக இருக்கிறது. எதைப் பற்றியும் சலிப்பும், வெறுப்பும் ஏற்பட்டு விடுகிறது.

சுருக்கமாக சொல்வதானால் வாழ்வே வெறுப்பாக இருக்கிறது.

என்றாலும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள்.

அந்தப் படி என்னை மக்கள் அழைக்காமல் இருப்பதற்காகவே எனது வழிச் செலவுத் தொகையை ரூ.100-ல் இருந்து ரூ.150ஆக ஏற்படுத்தி விட்டேன்.

நூறு ரூபாய் எனக்கு வண்டிச் செலவு, ரிப்பேர் செலவு, வைத்தியச் செலவு முதியவைகளுக்கு அனேகமாக சரியாய்ப் போய் விடும். சில சமயங்களில் போதாமல் போகும். ஒரு தடவையில் 2,3 பயணம் ஏற்பட்டால் ஒரு அளவு மீதியாகி பிரசாரத்திற்கு பயன்படும்.

இப்போது எனக்குப் பெரிய வண்டி வரப்போகிறது. செலவு அதிகமாகும். எனக்கு பிராசாரத்திற்கே வேறு அநேக செலவு இருக்கிறது. எனக்கு இனி பிரசாரத்தில் ஆசை இல்லை. ஒரு வாரப்பத்திரிக்கைத் துவக்கி அதற்கு ஆசிரியனாக இருந்து எழுதிக் கொண்டு இருக்க வேண்டும் எனபதில் தான் ஆசை அதிகமாக இருக்கிறது. வெளியாக்கப்பட வேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது. இதற்காக எளிதில் காணமுடியாத ஒரு தனி இடத்திற்கு போகலாமா அல்லது ஈரோட்டிற்கே போய் விடலாமா என்று கூட எண்ணுகிறேன்

இனி என் ஆயுள் எவ்வளவு இருக்க முடியும் என்பதில் எனக்கு கவலை இல்லை. இருந்தவரைக் தொண்டு செய்யலாம் என்றுதான் திட்டம் போடுகிறேன்.

ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதும், ஏற்படுவதும் இயற்கையேயாகும். அது போல் என் முடிவும் இருக்கலாம்.

பொதுவாக என் மனம் குழப்பமாக இருக்கிறது. துறவி ஆகிவிடுவேனோ என்னவோ !

ஈ.வெ.ராமசாமி கழக தோழர்களுக்கு:

சுய மரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களும், தி.மு.க.விலும், காங்கிரசில் உள்ளவர்களில் பகுத்தறிவு, தமிழர் இனஉணர்ச்சி உள்ளவர்களும், அரசியலில் அதிகாரிகளாய், குமாஸ்தாக்களாய், பணியாளர்களாய் உள்ளவர்களில் தமிழர் உணர்ச்சியாளர்களாய் இருப்பவர்களும் தங்கள் தங்கள் வீட்டில், தொழில் மனைகளில் வாகனங்களில் உள்ள கடவுள், மத, புராண, இதிகாச கதைகள் முதலியவை சம்பந்தமான உருவப்படங்கள் எதுவானாலும் அவைகைள அப்புறப்படுத்திவிட வேண்டும், கணடிப்பாய் அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று மிக்க மரியாதையாய் வணக்கமாய் வேண்டிக் கொள்ளுகிறேன்.

பார்ப்பனரைப் பார்த்து பிழையுங்கள்

அரசாங்கப்பணி மனையில் தொங்கும் படங்களை எடுத்துவிடுங்கள் என்று சொன்னவுடன் எல்லாப் பார்ப்பனர்களுக்கும் எவ்வளவு ஆத்திரம் வந்தது ? நீங்கள் தான் பார்த்தீர்களே இராஜாஜி மிரட்டுகிறார் , “மித்திரன்’ ‘தினமணி” “இந்து” “மெயில்” “எக்ஸ்பிரஸ்” முதலிய பார்ப்பன பத்திரிகைகள்

மிரட்டுகின்றன ; விஷமப் பிரசாரங்கள் செய்கின்றன. இந்த ஒரு பிரச்சனையைக் கொண்டே தி.மு.க ஆட்சியையே கவிழ்க்கப் பார்க்கின்றனர். ஏன் ?

தங்கள் ஜாதி உயர்வும், நம் ஜாதி இழிவும் அந்தப் படங்கள் தொங்குவதில் உயிர்வாழ்கின்றன. அவை(படங்கள்) போய்விட்டால் உயர்வு தாழ்வு போய்விடுமே என்கின்ற கவலைதானே மற்றபடி அப்படங்களில் என்ன இருக்கின்றது? அவர்கள் சமுதாய உயர்வுக்கு அவர்கள் (பார்ப்பனர்கள்) அவ்வளவு பாடுபடுகின்றார்கள்.

நமக்கு மானஉணர்ச்சி வேண்டாமா ?

நமக்கு புத்தி-மான உணர்ச்சி இருக்க வேண்டாமா ? அந்தப் படங்களில் கடவுள் இல்லை என்பதற்குஆக அவற்றை எடுத்து எறியாவிட்டாலும் நமது ஈனநிலை, இழிவு நிலை பார்ப்பான் உயர்வு நிலை அதில் இருக்கிறது என்பதற்கு ஆகவாவது அவற்றை நமது அரசியல் பணி மனைகளிலிருந்தும் அதைவிட நமது வீடுகளிலிருந்தும் தொழில் ஸ்தாபனங்கங்களிலிருந்தும் எடுத்து எறிய வேண்டாமா என்று கேட்கிறேன்.

தோழர்களே! இனியாவது செய்து நீங்கள இழி ஜாதிமக்கள் அல்ல என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டாமா ?

உங்கள் தாயார், சகோதரி, மனைவி, மகள்கள் பார்ப்பானுக்கு வைப்பாட்டி, காமக்கிழத்தி ஆனவர்கள் அல்ல, ஆக வேண்டியவர்கள் அல்ல என்பதை காட்டிக்கொள்ள வேண்டாமா ?

இதற்குஆக நான் 45 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறேன். அதன் பலன் இதுவாகவாவது (இந்தப்படங்களை அப்புறப்படுத்த வாவது) பயன்பட்டது என்று இருக்க வேண்டும்.

என் 90-வது பிறந்தநாள் பரிசாக செய்து காட்டுங்கள்

நம் நல்வாய்ப்பாக தி.மு.க. ஆட்சி ஏற்பட்டது, அதை ஒழியும்படி செய்தீர்கள் ஆனால் பிறகு உங்கள் கதி என்ன ஆவது ? நானும் இனியும் (90க்கு மேல்) வாழ முடியுமா ? எனக்குப்புறம் உங்களுக்கு இதை யார் சொல்லுவார்கள் ? தி.மு.க. ஆட்சிக்கு அப்புறம் யார் இந்த உத்தரவு போடுவார்கள் ? எல்லோரும் மாறான காரியத்தை அல்லவா செய்வார்கள் ! நீங்கள் பழைய நிலைக்குத்தான் போக வேண்டி இருக்கும். ஆகவே எனக்கு 90-வது ஆண்டு பிறந்தநாள் பரிசாக இதையாவது செய்யுங்கள் செய்து காட்டுங்கள் என்று வணங்கி கேட்டுக் கொள்கிறேன். இது கிடைக்கப் பெற்ற ஒவ்வொருவரும் இதை மற்றவருக்குப் படித்துகாட்டுங்கள்.

ஈ.வெ.ராமசாமி

குறிப்பு: இந்த அறிக்கை வந்த சமயம் அண்ணா சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார். இதைப் படித்துவிட்டு மனம் பதைபதைத்து பெரியார்க்குக் கடிதம் எழுதினர்.

நன்றி: https://periyarpechumezhuthum.blogspot.com/2017/09/90.html

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑