ஈழப்போராட்டம் குறித்த பிரச்சனைகள்

ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் மூலோபாய தந்திரோபாய பிரச்சனைகள் என்கிற மூன்று நூல்களைக் கொண்ட நூற்தொகுதி ரகுமான் ஜான் அவர்கள் தொகுத்து, வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது.  இந்த நூல்களுக்குள் நுழையமுன்னர் நூலின் தொகுப்பாசிரியர் ரகுமான் ஜான் குறித்து இந்நூலிலேயே தரப்பட்டுள்ள அறிமுகத்தைப் பார்ப்போம்,

ரகுமான் ஜான் தமிழீழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர், ஈழப்போராட்டத்தை அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பில் அரசியல் தலையீடு செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக செயற்பட்டவர்.  விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தீப்பொறி, தமிழீழ மக்கள் கட்சி போன்ற பல அமைப்புகளினூடாக தொடர்ந்த இவரது அரசியல் பயணத்தில் கோட்பாட்டு செயற்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்தவர்.  உயிர்ப்பு, வியூகம் ஆகிய கோட்பாட்டு இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.  இப்போதும் தொடர்ந்தும் உரையாடல்களை நடத்திக்கொண்டிருப்பவர்[i]

இந்த அறிமுகத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாக ரகுமான் ஜான் அவர்களை முன்னிலைப்படுத்தியதாக இந்த உரையாடலைக் கொண்டு செல்வது என் நோக்கமில்லை.  அப்படி நிகழ்ந்துவிடக் கூடாது என்றும் விரும்புகின்றேன், ஆனால், ரகுமான் ஜான் ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டுப் பிரச்சனைகள் நூலின் முன்னுரையில் குறிப்பிடுவது போல

“இந்தத் தொகுதியில் நான் “உயிர்ப்பு சஞ்சிகைகளில் வந்த அனைத்துப் படைப்புக்களையும் அவற்றுடன் கூடவே எமது அமைப்பினுள் படைக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட பல்வேறு ஆவணங்களையும் எமது போராட்டத்தில் அக்கறையுள்ள ஆர்வலர்களதும் குறிப்பாக அடுத்த தலைமுறைப் போராளிகளதும் பார்வைக்காக முன்வைக்கிறேன்.  இதனைச் செய்யவேண்டும் என்று கடந்த காலத்தில் பலரும் வலியுறுத்தி வந்துள்ளபோதிலும் அப்போது இருந்த பல்வேறு காரணங்களினால் நான் அவ்வாறு செய்வதைத் தவிர்த்தே வந்துள்ளேன்.  ஆனாலும் ஒரு கட்டத்தில் புதியவற்றை படைப்பது என்பதைக் கடந்து இதுவரை படைத்தவற்றைப் பத்திரமாக அடுத்தவர்களுக்குப் பயன்படும் விதத்தில் கையளித்துவிடவேண்டும் என்ற சிந்தனை எழத் தொடங்குகின்றது.  அப்படிப்பட்ட ஒரு தருணத்திலேயே இதனைத் தொகுக்கவேண்டும் என்ற முடிவுக்கும் நாம் வந்தாக நேர்கிறது.[ii]

இலங்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன என்பதிலும், பெரும்பான்மையாக உள்ள சிங்களத் தேசிய இனத்தால் ஏனைய தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்பதுவும் ஒடுக்கப்பட்ட மக்களால் உணரப்பட்டபோது அதற்கெதிரான போராட்டங்கள் எழுந்தன.  இவ்வாறு போராடப் புறப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் இன ஒடுக்குமுறையுடன் சேர்த்து சாதிய, மத, மொழி, பாலின ரீதியான ஒடுக்குமுறைகளும் தொழிற்படும் விதத்தைக் கண்டறிந்ததுடன் இனங்களுக்கு இடையிலே நிலவுகின்ற முரண்களையும் / ஒடுக்குமுறைகளையும் கண்டுணர்ந்து ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் என்பது அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாக இருக்கவேண்டும் என்கிற சமூக நீதிக்கோட்பாட்டினை வந்தடைகின்றார்கள்.  அவ்வாறாக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் அமைப்பாக்கம் பெற்று ஒன்று திரள்வதே விளைதிறன் மிக்கதாகும்.  ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பதில் அதன் ஆரம்பக்கட்டங்களில் பங்கெடுப்பவர்கள் / முன்னெடுப்பவர்கள் பெரிதும் தன்னெழுச்சியுடன் அல்லது தன்னியல்புடனேயே வெளிக்கிளம்புவர்.  அவர்கள் ஒன்றிணைந்து அரசியல் பற்றிய பிரக்ஞையுடன் உரையாடி, கோட்பாடுகளின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து தெளிவுற்று அமைப்பாகிப் போராடுவது என்பது சற்றே மெதுவானதாகத் தோன்றினாலும் அதுவே நீண்டகால அடிப்படையில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தவல்லது. 

அமைப்பு வேலையொன்றின் நிமித்தமாக ஆரம்பநிலை அறிமுக உரையாடல்களுக்கான நூல்களைத் தேடிக்கொண்டிருந்தபோது ஜார்ஜ் தாம்சனின் நூலின் தமிழாக்கமாக மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை, திருமாவளவன் எழுதிய அமைப்பாய்த் திரள்வோம் ஆகிய நூல்களின் வரிசையில் வைத்து வாசித்து உரையாடவேண்டிய தொகுதியாக ரகுமான் ஜான் தொகுத்த இந்த நூல்களைக் குறிப்பிடுவேன்.  அந்த அடிப்படையில் இந்த நூல்களின் உள்ளடக்கத்தைப் பார்ப்போம்.

ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள்

ஈழப்போராட்டம் குறித்த ரகுமான் ஜானின் இந்த தொகுப்பு நூல்களில் முதலாவது நூலாக ஈழப்போராட்டத்தின் கோட்பாடு அரசியல் பிரச்சனைகள் என்ற நூல் அமைகின்றது.  ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களைத் தேடும்போது கோட்பாட்டு ரீதியான புரிதலிலும் வழிநடத்தலிலும் ஏற்பட்ட போதாமை ஒருமுக்கியமான காரணி என்ற அடிப்படையில் இந்தத் தொகுதியில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  “தமிழ் மக்களது அரசியலானது முதலாளித்துவ அரசியல் கோட்பாடுகளுக்கு அமைய ஆவணங்களாக முன்வைக்கப்பட்ட போதிலும், தமிழரது தேசியம் பற்றிய சமூக விஞ்ஞான நோக்கில் அமைந்த கோட்பாட்டு ரீதியான ஆய்வுகள் எதுவுமே இலங்கையில் தமிழர் தரப்பால் மட்டுமன்றி வேறு எந்தத் தரப்பினராலும் முன்வைக்கப்படவில்லை” என்று இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடப்படுகிறது.  இதற்கான காரணங்களாக க் குறிப்பிடப்படுவனவற்றை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்;

  • தமிழ் முதலாளித்துவ தலைமைகளிடமும் அவர்களைச் சுற்றியிருந்த மரபார்ந்த புத்திஜீவிகளும் விஞ்ஞானபூர்வமான கோட்பாடுகளில் நாட்டமுடையவர்கள் கிடையாது
  • தெற்கில் இருந்த இடது சாரிகள் சிங்கள தேசியவாதத்தின் கீழ்ப்பட்டவர்களாக இருந்தார்கள்
  • சிங்கள புத்திஜீவிகள் தரப்பில் அப்போது தமிழ்த்தேசியம் குறித்து ஆக்கபூர்வமான பார்வைகள் இருக்கவில்லை
  • தமிழ் இடது சாரிகள் பொருளாதாரவாத நோக்குடன் பார்த்தார்களேயன்றி தேசியப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை
  • போராளிகளது இயங்களில் தமிழ் தேசியத்தையும் தமிழ் சமூகத்தையும் பகுப்பாய்வு செய்யத் தேவையான கோட்பாட்டுப் பலமிக்க ஒருசிலர் இந்த அமைப்புகளில் இருந்தபோதும் அவர்களது கோட்பாட்டுப் புலமையை முழுமையாக உள்வாங்கி அதனை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளும் விசாலமான பார்வை போராளி இயக்கத் தலைமைகளிடம் இருக்கவில்லை

இந்த நூலில் உள்ள கட்டுரைகள், இந்தப் பின்னணியை நன்குணர்ந்து ஈழப்போராட்டம் குறித்த கோட்பாட்டு ரீதியான புரிதலை உருவாக்கும், அதற்கான உரையாடலை ஏற்படுத்தும் நோக்குடனானவையாக அமைந்துள்ளன.  ஈழத்தின் தேசிய விடுதலைப் போராட்டம் குறித்த கட்டுரை ஒன்றை எழுதுவதற்காக லெனினின் கட்டுரைகளை எடுத்தாண்ட நோபர்ட் (புதியதோர் உலகம் கோவிந்தன்) “ஒடுக்கும் தேசத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கமானது ஒடுக்கப்பட்ட தேசத்தில் தேசத்தின் பிரிவினைக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவேண்டும். ஒடுக்கப்படும் தேசத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினர் ஐக்கியத்திற்காகக் குரல் கொடுக்கவேண்டும்” என்ற வாசகத்தின் நடைமுறைச்சிக்கல்களை உணர்ந்து தேடத் தொடங்கி, “தோழர் லெனின் அவர்களது இந்தக் கட்டுரைகள் ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்படும் சமூகப் பிரிவினரிடையே பரஸ்பர நன்னம்பிக்கையை உருவாக்கும் நோக்கில் வரையப்பட்ட ஒரு தந்திரோபாய ரீதியிலான  நிலைப்பாடே” என்ற புரிதலுக்கு வந்து சேர்வது முதல், ஒடுக்குமுறைகள் தொழிற்படும் விதங்களைப் பற்றிய ஆய்வுகளின் வழியே இடையீட்டுச் செயற்பாடு (Intersectionality) என்ற இடத்துக்கு வந்துசேர்வது வரையான பயணம் குறித்து இந்த முன்னுரை குறிப்பிடுகின்றது.   

Sri Lanka – A Lost Revolution : Inside story of the JVP என்கிற றோகான் குணரத்ன எழுதிய நூலை வைத்து எழுதப்பட்டிருக்கின்ற கட்டுரை இடதுசாரிப் புரட்சிகர இயக்கமாக ஜேவிபி உருவான சூழலையும் அதன் வர்க்க இயல்பையும் ஆராய்வதோடு அது ஏன் தோல்வியுற்ற புரட்சியாக முடிந்தது என்பதையும் உசாவுகின்றது.  அதன் ஆரம்பத்தில் மக்களுடன் மக்களாக மக்களின் பலத்த ஆதரவைப் பெற்ற புரட்சிகர அமைப்பாக விளங்கிய ஜேவிபி, இந்தியப் பொருள்கள் பகிஸ்கரிப்பு, ஹர்த்தால், தொழிற்சங்க நடவடிக்கைகள் என்பவற்றில் வெற்றிகரமானதாக விளங்கியபோதும் பின்னர் அதன் தவறான அணுகுமுறைகள் காரணமாக “பாசிசத்துக்கு எதிராக இன்னொரு பாசிச அடக்குமுறையை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அமைப்பாக மாறி மக்கள் ஆதரவை இழந்ததையும் அதே சமகாலத்தில் பிரேமதாசாவின் “பொப்புலிச” நடவடிக்கைகள் பெற்ற மக்கள் ஆதரவையும் இந்தக் கட்டுரை விபரிக்கின்றது.  ஈழப்போராட்டத்தில் இயங்களினது தோல்விகள், படிப்பினைகள் குறித்து அக்கறைகொள்பவர்கள் வாசிக்க வேண்டியதாக இந்தக் கட்டுரை அமைகின்றது.

தனிநபர் பயங்கரவாதம் பற்றி என்கிற கட்டுரையில் தனிநபர் பயங்கரவாதத்தையும் அதன் தொடர்புடன் வருகின்ற அரசியல் கொலைகள் பற்றிய விளக்கத்தையும் அவற்றைப் புரிந்துகொள்வதற்கான பின்னணியையும் தருகின்றது,  அதுபோலவே மனத உரிமைகள் என்கிற கட்டுரை மனித உரிமைகள் குறித்த மேற்கு நாடுகள் கைக்கொள்ளும் நடைமுறைகளையும் மூன்றாம் உலக நாடுகளின் மீது திணிக்கப்படும் நடைமுறைகளையும் உரையாடலுக்கு உட்படுத்துகின்றது.  இந்த நூலிலுள்ள சிங்களப் பேரினவாதத்தின் இயக்கப் போக்கின் திசை, தேசியவாதம் குறித்த விவாதத்துக்கான முன்னுரை, பெண்களும் புரட்சியும், சிங்கள இனவாதம் தமிழ்த் தேசம் குறித்துக் கட்டமைத்துள்ள ஐதீகங்கள், தமிழ்த் தேச இருப்பை நீக்கம் செய்யும் சந்திரிக்காவின் தீர்வுத் திட்டம், முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் ஆகிய கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை.  இந்தக் கட்டுரைகள் குறித்த விடயங்களை வரலாற்றுப் பின்னணியிலும் கோட்பாட்டின் வெளிச்சத்திலும் புரிந்துகொள்ள முயல்வதுடன் புள்ளிவிபரங்களையும் சேர்த்தே முன்வைப்பனவாக அமைகின்றன. 

ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ)யின் தலைவர்களில் ஒருவரான ஏ. எம். கோதண்டராமனுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்தத் தொகுதியானது தமிழீழம் கட்சிக்குள் இடம்பெற்ற அமைப்புத்துறை குறித்ததும் தமது அமைப்புக் குறித்ததுமான விவாதங்கள், உரையாடல்கள், சுயவிமர்சனங்களின் தொகுப்பாக வெளிவந்துள்ளது.  ரகுமான் ஜானின் பதின்மங்களின் பிற்பகுதியில் அவருக்குக் இரசாயணம் கற்பிக்க வந்த பயஸ் மாஸ்ரர் ஊடாக அரசியல் பற்றிய அக்கறை ரகுமான் ஜானுக்கும் அவரது நண்பர்களுக்கும் ஏற்படுகின்றது.  பின்னர் அரசியல் காரணங்களால் பயஸ் மாஸ்ரர் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னரும் கூட ரகுமான் ஜானும் அவரது நண்பர்களும் குழுவாகச் செயற்பட்டு பாடசாலை பகிஸ்கரிப்பு, சுவரொட்டிகள் ஒட்டுவது, மாணவர் அமைப்புகளைக் கட்டுவது, கையெழுத்துப் பிரதிகள் வெளியிடுவது என்று செயற்படத் தொடங்குகின்றனர்.  படிப்படியாக விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தீப்பொறி என்று தமிழீழம் கட்சி வரை தொடர்ந்து பயணித்தது வரை சுருக்கமாகக் குறிப்பிடும் ரகுமான் ஜான், அமைப்புத்துறை, அரசியல் திட்டம் இவற்றின் இன்றியமையாத தேவை குறித்து இந்தத் தொகுதியில் குறிப்பிடுகின்றார்.  ஏ. எம் கோதண்டராமனுடான சந்திப்பின் பின்னர் அமைப்புத்துறை, அரசியல் திட்டம், மக்களுடனான ஊடாட்டம், சக அமைப்புகளுடனான உறவு, அமைப்புக்கான தொடர்பாடல் முறைமைகள் என்பன குறித்த அக்கறையுடன் அமைப்புக்குழு செயற்படுகின்றது. 

இவர்கள் இவ்வாறு செயற்படத் தொடங்கிய காலம் புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்தொழித்து முழுமையான அதிகாரத்தைச் செலுத்திக்கொண்டிருந்த காலம்.  தவிர புலிகளின் ராணுவ ரீதியான வெற்றி உள்ளிட்ட காரணங்களால் மக்கள் மத்தியில் புலிகளின் செல்வாக்கும் உயர்ந்து வந்துகொண்டிருந்த காலம்.  அத்தகைய சூழலில் கோட்பாடுகளை முன்வைத்து அமைப்பாக்கம் ஒன்றைச் செய்வது சவாலானதாக மாறுகின்றது.  அத்துடன், தன்னியல்பான நடவடிக்கைகளாக அரசியல் செயற்பாடுகளையும் அரசியல் எதிர்வினைகளையும் ஆற்றிவந்த அமைப்பின் அங்கத்தவர்கள்/ஆதரவாளர்களுக்கும் –  அமைப்புவிதிகளின்படி, அமைப்பின் மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் உள்வாங்கிச் செயற்படவேண்டும் என்கிற நிலைப்பாட்டிற்கும் இடையில் முரண்கள் எழுகின்றன.  நூலின் பகுதி ஒன்றாக இடம்பெற்றுள்ள தன்னியல்புவாதம் என்கிற 95 பக்கங்கள் நீண்ட கட்டுரை மிகமுக்கியமான ஒன்று.  அரசியலற்ற அரசியல், தன்னெழுச்சியான போராட்டம் என்கிற விடயங்கள் கவர்ச்சிகரமானதாக முன்வைக்கப்படுகின்ற சமகாலச் சூழலில் செயற்பாட்டாளர்களும், அக்கறைகொண்டோரும் நிதானமாக வாசித்து உரையாடவேண்டிய கட்டுரை இது.   

அமைப்பில் நிகழும் தேக்கத்தைக் களையவேண்டுமாயின் அடிப்படையில் இருக்கின்ற பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சிகள் பலன் தராதபோது பிரச்சனைகளை அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகளாக இனங்கண்டு கோட்பாட்டுத்தளத்தில் வைத்து உரையாடி தீர்வுகளை நோக்கி நகரவேண்டும் என்று தீர்மாணிக்கின்றார்கள்.  அதன் நிமித்தம் இடம்பெற்ற உரையாடல்களின்போது எழுந்த கேள்விகளையும் உரையாடவேண்டும் என்று வெளித்தெரிந்த விடயங்களையும் 23 தலைப்புகளின் தொகுக்கின்றார்கள்.  இந்தக் கேள்விக்கொத்து அமைப்பின் அங்கத்தவர்களிடம் பகிரப்பட்டு அவர்கள் தத்தம் குழுவினருடன் ஆரம்ப விவாதங்களைத் தொடங்க ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.  இதனை மிகவும் காத்திரமானதும் ஆக்கபூர்வமானதுமான ஒரு நடவடிக்கை என்று சொல்லமுடியும்.  இவ்வாறு தொகுக்கப்பட்ட 23 தலைப்புகளையும் அவற்றின் முக்கியத்துவம் கருதி பட்டியலிடுகின்றேன்:

  1. தன்னியல்புவாதம் குறித்து
  2. கோட்பாட்டுச் செயற்பாடு குறித்து
  3. உயிர்ப்பு குறித்து
  4. அரசியல் பத்திரிகை குறித்து
  5. அமைப்புத்துறை குறித்து
  6. தலைமறைவு வேலைமுறை குறித்து
  7. புரட்சி செய்வது என்பது தனியான ஒரு கலை என்று கூறப்படுவது குறித்து
  8. ஆட்களுக்கு வேலைகளும் வேலைகளுக்கு ஆட்களும் இல்லாத பிரச்சனை குறித்து
  9. அணிதிரட்டல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து
  10. குழு வேலைமுறை குறித்து
  11. அரசியல் ரீதியாக தலையீடு செய்வது குறித்து
  12. பேசாப்பொருளை பேசுபொருளாக்குவது குறித்து
  13. தளத்தை நோக்கி நகர்வது குறித்து
  14. இராணுவ வேலைத்திட்டம் குறித்து
  15. முஸ்லிம் மக்களை அணிதிரட்டுவதன் அவசியம் குறித்து
  16. தகவல் திரட்டுவதன் முக்கியத்துவம் குறித்து
  17. அமைப்பில் வெளிநாட்டுக் கிளைகளின் பாத்திரம் குறித்து
  18. கொங்கிரஸைக் கூட்டுவதற்கு முன்பாக நாம் செய்தாக வேண்டியவை
  19. லெனினுடைய கட்சிக் கோட்பாடு பற்றிய விமர்சன்ங்கள் குறித்து
  20. மக்களுக்கு அவசரமாக ஒரு மாற்றுத் தேவைப்படுவது குறித்து
  21. அமைப்பில் நபர்களைக் கையாள்வது குறித்து
  22. அமைப்புக் குழு தொடர்பான விமர்சனம் / சுயவிமர்சனம்
  23. இனிமேல் எவ்வாறு அமைப்பைக் கட்டப் போகின்றோம்?

இந்தத் தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட கேள்விகளின் சுருக்கமாகவும் பின்னர் அவை குறித்த விரிவான உரையாடல்கள், கோட்பாட்டு ரீதியான விளக்கங்களாகவும் மிகக் கனதியான ஆக்கங்களைக் கொண்டதாக இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது.

புளொட்டில் இருந்து ரகுமான் ஜானும் தோழர்களும் வெளியேறியதற்கான காரணம் குறித்து இந்நூலின் முன்னுரையில் ரகுமான் ஜான் குறிப்பிடுவதைப் பார்ப்பது இங்கே அவசியம் என்று கருதுகின்றேன்;

கழகத்தினுள் நாம் உடனடியாக முகம் கொடுத்த தீவிர பிரச்சனையானது அப்போது அமைப்பினுள் எழுந்து வந்த அராஜக, ஜனநாயக விரோத செயற்பாடுகளே.  ஆனால் இவை தொடர்பாக பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் அமைப்பிற்குள் பேசுவதற்கும் விவாதிப்பதற்குமான நிலைமைகள் இருந்திருப்பின் இந்தத் திறந்த விவாதங்கள் படிப்படியான மேலே குறிப்பிட்ட கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகளின் மூலங்களை நோக்கிப் படிப்படியாக நகர்ந்திருக்கும்[iii]

அமைப்புகளுக்குள் நிலவும் அராஜக ஜனநாயக விரோதப் போக்கை எதிர்ப்போருக்கு எதிராக அவதூறுகள் பரப்புவதும், அதிகாரத்தைப் பாவித்து ஒடுக்குவதும், அமைப்பில் இருந்து நீக்குவதும் அல்லது அவர்கள் விலகிச் செல்லும்படியான சூழலை உருவாக்குவதும், ஒழிப்பதும் அராஜகவாதிகள் இன்றுவரை செய்துவருவதாகத்தான் இருக்கின்றது. ஆயினும் தமிழீழ மக்கள் கட்சிக்குள் ஒரு முரண் உருவானபோது / அமைப்பில் தேக்கம் உருவானபோது விமர்சனம் / சுயவிமர்சனம் என்பன ஊக்குவிக்கப்படுகின்ற போக்கு முக்கியமானதாகப்படுகின்றது.  அமைப்புகளுக்குள் நிலவேண்டிய விவாதத்துக்கும் விமர்சனத்துக்குமான சுதந்திரம், ஜனநாயக மத்தியத்துவம் ஆகியவற்றினை நடைமுறைப்படுத்தியிருக்கும் இந்தப் போக்கு நேர்மறையானதோர் அம்சம்.  இத்தொகுப்பில் பல இடங்களில் லெனினும், ஜார்ஜ் தாம்சனின் மார்க்ஸ் முதல் மாசேதுங் நூலும் மேற்கோள் காட்டப்படுகின்றன, வெறும் மேற்கோள்களாகக் கடந்துசென்றுவிடாமல் அந்தக் கருத்தியல்களை உள்வாங்கி அவற்றை நடைமுறைப்படுத்தியிருக்கின்றார்கள்.  புரட்சிகர அமைப்புகள் என்று மட்டுமல்லாமல், நாம் இயங்குகின்ற அமைப்புகள், பொது நிறுவனங்கள் ஆகியவற்றின் செயற்பாடுகளின் மீதும் அவற்றில் எமது பங்கேற்புகள் குறித்தும் நாம் மேற்கண்ட சுயவிமர்சனங்களை எழுப்பிக்கொண்டே பயணிப்பதே ஆரோக்கியமான அமைப்புச் செயற்பாட்டிற்கு உதவும்.  இந்தத் தொகுப்பில் உள்ள உரையாடல்கள் தமிழீழ மக்கள் கட்சி என்ற அமைப்புக்குள் இடம்பெற்ற உரையாடல்கள் என்றபோதும் இவை அமைப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அனைவரும் உள்வாங்கி உரையாடவேண்டியன.  தன்னியல்புவாதம் / தன்னெழுச்சி என்பன வியந்துவைக்கப்பட்டு அமைப்புத்துறை, அரசியல் தலைமை என்பன உதாசீனம் செய்யப்படுகின்ற சமகாலப்போக்கில்

தன்னியல்பா அல்லது பிரக்ஞைபூர்வமான செயற்பாடா என்பதே இன்றைய தீர்க்கமான கேள்வியாகும்!!! தன்னியல்புவாதத்திற்கு முடிவு கட்டுவதன் மூலமாக பிரக்ஞைபூர்வமான செயற்பாட்டை முன்னெடுப்போம்![iv]

என்று சித்திரை 1997இல் வெளியான கட்டுரையை முடிவுரையாக கொண்டு இந்தப் பகுதி முடிவடைகின்றது.

ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சனைகள்

கோட்பாட்டுத் தெளிவு, அந்தப் பிரக்ஞையுடன் உருவாக்கப்பட்ட அமைப்புக்கான அரசியல் திட்டம், அமைப்புவிதிகள் என்பவற்றைப் போலவே, அதன் இலக்கை அடைவதற்கான மூலோபாயம், தந்திரோபாயம் என்பவற்றின் வகிபாகம் குறித்தும், அவை குறித்த அக்கறையும் கவனக்குவிப்பும் செலுத்தப்படாதவிடத்து தன்னியல்புவாதமும் தற்காலிகமான பரபரப்புகளைத் திருப்திப்படுத்தக்கூடிய குறுங்கால வெற்றிகளை நோக்கிய திசைதிரும்பலும் நடந்துவிடும் என்பதை வலியுறுத்துவதாக இந்த தொகுதி அமைகின்றது. 

விடுதலைப்புலிகள் அமைப்பானது மேலாதிக்கத்தைக் கையில் வைத்துள்ளது, ஆனால் அவர்களிடம் சித்தாந்த மேலாண்மை கிடையாது.  இந்த மேலாண்மையைக் கைப்பற்றுவதற்கான இன்னொரு சக்தி போட்டிபோடும் சாத்தியக்கூறு உள்ளது, இதுதான் எமது மூலோபாயத்தின் சாராம்சம் ஆகும் [v]

இந்த மூன்று தொகுப்புகளிலும் தனிப்பட்ட அளவில் எனக்கும் நான் ஈடுபட்டுவரும் செயற்பாடுகளிற்கும் அதிகம் தொடர்புபட்டதாக இந்தத் தொகுப்பினையே குறிப்பிடுவேன்.  இந்நூலின் சாரமாக அமைந்துள்ள முன்னுரையே மீண்டும் மீண்டும் வாசித்து உள்வாங்கி உரையாடல்களை நிகழ்த்தவேண்டியதாக உள்ளது.  குறிப்பாக இங்கே குறிப்பிடும் சித்தாந்த மேலாண்மையைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் தமிழீழக் கட்சியினர் எத்துணைதேரம் ஈடுபட்டார்கள் என்பதுவும் அதில் அவர்களால் எவ்வளவு வெற்றிபெற முடிந்து என்பதுவும் தெரியவில்லை; ஆனால் சமூக நீதிக் கருத்தியல் சித்தாந்த மேலாண்மையைக் கைப்பற்றுவதற்கான தேவை இன்று முன்னெப்போதும் இருந்ததை விட அதிகரித்துள்ளது.  ஒருவிதத்தில் தமிழ்நாட்டில் பெரியாரின் தாக்கத்தினாலும் திராவிட இயக்கங்களின் செல்வாக்கினாலும் சமூக நீதிக்கான குரல் வெகுஜனங்கள் மத்தியிலும் போய்ச்சேர்ந்து ஆழப்பதிந்தது. இடதுசாரிக் கட்சிகள் தொடர்ச்சியாக புத்தகப் பண்பாட்டைப் பரப்புவதிலும் கலை இலக்கியச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவந்தன, 90களுக்குப் பின்னர் தலித் சிந்தனையாளர்களும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சியினரும் இதேவிதத்தில் காத்திரமான பங்கையாற்றினர்.  இவற்றின் தாக்கத்தினால் தமிழ்நாட்டில் பண்பாட்டு அரசியல் பற்றிய பிரக்ஞை மக்களிடையே ஒப்பீட்டளவில் முன்னேறிய நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் பண்பாட்டு அரசியல் செயற்பாட்டாளர்களின் தாக்கத்தால் மதச்சார்பின்மையும் சமூகநீதியும் முன்னெடுக்கப்பட – ஈழத்திலோ பண்பாட்டுச் செயற்பாடு என்பது மதவாத சக்திகள் வளர இடம் கொடுப்பதாகவும் சமத்துவத்துக்கு எதிரான காரணிகளை நியாயப்படுத்துவதன் வாயிலாக சமூகநீதிக்கு எதிரானதாகவும் இருக்கின்றது.

எனவே, எமது தேச / இன விடுதலை குறித்துப் பேசும்போது அதன் சமூக உருவாக்கத்தைப் பற்றியும் அதன் சிக்கலான அமைப்புப் பற்றியும் தெரிந்துகொள்வதும் அவசியமாகும்.  இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஈழத்தமிழரின் சமூக உருவாக்கம் என்கிற கட்டுரை அதற்கான முனைவுகளை முன்னெடுக்கின்றது.  பொருளாதாரம், சாதியம், பால்வாதம், சைவ சித்தாந்தம், யாழ் மையவாதம் ஆகிய கட்டமைப்புகளைப் பற்றி ஆய்வும் அறிவும் ஈழத்தமிழரின் சமூக உருவாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்கு முக்கியமானவை என்று குறிப்பிடும் இந்தக் கட்டுரை அதற்கான வாதங்களை முன்வைக்கின்றது.  அதன் பின்வரும்

  • தமிழீழ மக்கள் கட்சியின் அரசியல் திட்டம்
  • தமிழீழ மக்கள் கட்சியின் மூலோபாயம், தந்திரோபாயம்
  • புரட்சிகர கட்சி என்றால் என்ன?
  • திட்டம் என்றால் என்ன?
  • மூலோபாயம், தந்திரோபாயம் என்றால் என்ன?

ஆகிய அத்தியாயங்கள் வழி தமிழீழ மக்கள் கட்சியின் அரசியல் திட்டம் பற்றியும், அதனை அடைவதற்கான மூலோபாயம், தந்திரோபாயம் என்பவை பற்றியும் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது.  குறிப்பாக தமிழீழ மக்கள் கட்சியின் அரசியல் திட்டம், மூலோபாயம் தந்திரோபாயம் ஆகிய 2 அத்தியாயங்களில் அகவொடுக்குமுறைகள், பிற தேசிய இனங்களுடனான உறவு, சர்வதேசியம், இந்தியா உடனான உறவு, பிற விடுதலை இயக்கங்களுடனான உறவு என்பன பற்றியும் அவை குறித்த மதிப்பீடுகளும் நிலைப்பாடுகளும் முன்வைக்கப்படுகின்றன.  இவற்றை நான் இங்கே முக்கியமாகச் சுட்டிக்காட்டுவதற்கான காரணம் உள்ளது, அது குறித்து வெளிப்படையாகப் பேச விரும்புகின்றேன். 

ஈழத்தில் நான் இருந்த காலப்பகுதி விடுதலைப் புலிகள் அதிகாரத்தில் இருந்த காலப்பகுதி. ராணுவ ரீதியில் விடுதலைப் புலிகள் பலம்பெற்றிருந்த காலப்பகுதி, தமிழீழம் என்று கோரப்பட்ட நிலப்பகுதியின் பெரும்பான்மையான பங்கு அப்போது புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.  சாதிய ஒடுக்குமுறை, பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவை நிகழ்ந்த பல சந்தர்ப்பங்களிலும் புலிகள் அவற்றுக்கு எதிராகத் தம் அதிகாரத்தை / பலத்தைப் பயன்படுத்திக் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவந்தார்கள்.  புலிகளின் சட்டக்கோவையிலும் சாதிய ஒடுக்குமுறை, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் என்பவை தண்டனைக்குரிய குற்றங்களாக வரையறை செய்யப்பட்டிருந்தன.  ஆனால் சாதியம், பெண்ணியம், பால்வாதம், யாழ் மையவாதம், சைவ சித்தாந்தம் / மதவாதம் போன்ற விடயங்கள் குறித்த பொதுவெளி உரையாடல்கள் அன்றைய காலப்பகுதியில் நிகழவில்லை என்பதுடன் அன்றிலிருந்து இன்றுவரை இவை குறித்துப் பேசுவது தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது என்று அவதூறு பரப்பும் போக்கும், தமிழ்த் தேசியத்துள் வைத்தே எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் தீர்வைக் கண்டுவிடலாம் என்கிற “சர்வநோக நிவாரணி” போக்குமே நிகழ்கின்றது.  ஒருவிதத்தில் இது ஆயுதங்களின் முனையில் “சமத்துவத்தை பேணும்படி செய்தது, ஆனால் பண்பு மாற்றத்தை உருவாக்குவதைத் தள்ளிப்போட்டது.    ஒரு விடயத்தை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகின்றேன், ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் என்பது நிபந்தனைகளுக்குட்பட்டதாக (Conditionally) ஒருபோதும் வரமுடியாது, வரவும் கூடாது. ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் சமூகநீதிக்கான போராட்டக் களத்தில் தோழமைச் சக்திகளாக ஒன்றிணைவதும் செயற்படுவதும் அவசியமானது. துரதிஸ்ரவசமாக சமகாலத்தின் பெரியாரியம், அம்பேத்காரியம், மார்க்சியம் போன்றவற்றையும் இவற்றை முன்னெடுத்த தலைவர்களையும் ஒன்றுக்கொன்று எதிரானவர்களாக முன்வைக்கின்றபோக்கும் ஒரு ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்களை இன்னொரு ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடுபவர்களுக்கு எதிராக அடையாளப்படுத்தும் போக்கும் அதிகரித்துவருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  இது உண்மையில் ஒடுக்குமுறையாளர்களைப் பலப்படுத்துவதாகவே அமையும்.

இந்நூலின் பின்னிணைப்பு 2 ஆக உள்ள கட்சித்திட்டம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? அது எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்து லெனின் என்கிற பகுதியில் திட்டம் குறித்தும் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் திட்டத்தின் படிநிலைகள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. உண்மையில் இந்த த் தொகுப்பில் உள்ள மூன்று நூல்களிலும் உள்ள கட்டுரைகள் அனைத்துமே தனித் தனியாக வாசித்து உரையாடி, சமகாலத்தில் ஏற்பட்டுள்ள புதிய நிலைமைகள், ஆய்வுத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய கண்டடைவுகள், சமூக நீதி குறித்து சமகால நிலையும் பிரக்ஞையும் ஆகியனவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு உரையாடவேண்டியவை.   

ஈழப்போராட்டத்தில் முன்னோடிகளில் ஒருவரான ரகுமான் ஜான் ராணுவவாதத்தின் வழி திசைதிரும்பிவிட்டிருந்த ஈழப்போராட்த்தை கோட்பாட்டுத் தலைமையை நோக்கி மடைமாற்றம் செய்ய முயன்றவர்களில் ஒருவர்.  தமிழீழ மக்கள் கட்சி என்கிற அவர் அங்கம் வகித்த அமைப்பும் உயிர்ப்பு, வியூகம் ஆகிய இதழ்களும் அவரது காத்திரமான பங்களிப்புகளைக் கொண்டவை.  இந்தத் தொகுதியில் அவர் முன்வைக்கின்ற சில மதிப்பீடுகளிலும் அவரது நிலைப்பாடுகளிலும் எனக்கு சில மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன.  நிச்சயம் உங்களில் சிலருக்கும் அப்படி இருக்கக்கூடும்.  ஆனால், ரகுமான் ஜான் இந்தத் தொகுப்புகளை தமிழ்ச் சமூகத்துக்குக் கையளித்திருப்பதன் வாயிலாக ஒரு உரையாடலை, அந்த உரையாடலின் வரலாற்றுப் பின்புலத்தையும் சொல்வதுடன் தொடக்கி வைத்துள்ளார்.  இந்த நூல்களை வாசித்து உரையாடலைத் தொடங்குவதே சரியானதாக இருக்கும்.  எமக்கு உரையாடல்களுக்கும் கற்கைகளுக்குமான வட்டங்கள் தேவையாக இருக்கின்றன, அவற்றை உருவாக்கி இதுபோன்ற நூல்களை வாசித்து உரையாடி சமூக நீதிக்கான போராட்டத்தையும் பயணத்தையும் முன்னெடுப்போம்.  ஈழப்போராட்டத்தை முன்னெடுத்த எந்த ஒரு இயக்கமும் தன்னுடைய கோட்பாட்டுப் பின்புலம், அமைப்புத்துறை சார்ந்த உரையாடல்கள், அரசியல் திட்டம், அமைப்பு விதிகள், மூலோபாயம், தந்திரோபாயம் என்பவற்றைத் தொகுத்து பொதுவெளியில் முன்வைத்து உரையாடலைத் தொடங்கவில்லை.  அதைச் செய்திருக்கும் ரகுமான் ஜானுக்குத் தோழமை நிறைந்த நன்றிகள்.  லெனின், மார்க்ஸ்-ஏங்கல்ஸ், கிராம்சி, பெரியார், அம்பேத்கார் போன்ற, சமூக மாற்றத்துக்காக செயற்பட்ட சிந்தனையாளர்களின் எழுத்துகளினதும் பேச்சுக்களினதும் தொகுப்புகளே நான் உள்ளிட்ட பின்னைய தலைமுறையினருக்கு வரலாற்றுப் பிரக்ஞையையும் கருத்தியல் வழிகாட்டலையும் கொடுத்தன, ஈழப்போராட்டம் என்பதே சாகசவாதமாகவும் பெருமிதமாகவுமே கட்டமைக்கப்பட்டு ஈழப்போராட்த்தின் தோல்வி என்பதையே தியாகம் எதிர் துரோகம் என்பதற்குள்ளேயே அடக்கிவிடுகின்றபோக்கு ஆறுதலடைய உதவலாம்; விடுதலை அடைய ஒருபோதும் உதவாது. அதற்கு தலைமைகளும் அமைப்புகளும் கோட்பாட்டுத் தெளிவைப்பெறுதலும் மக்களை அரசியல் மயப்படுத்துவதும் அவசியம்.  அதற்கு இப்படியான உரையாடல்கள் அவசியம்.


[i] ஈழப்போராட்டத்தில் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள்

[ii] ஈழப்போராட்டத்தில் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள் பக்கம் 18

[iii] ஈழப்போராட்ட்த்தில் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள் பக்கம் 21

[iv] ஈழப்போராட்த்தில் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள் பக்கம் 527

[v] ஈழப்போராட்த்தின் மூலோபாயம் தந்திரோபாயம் குறித்த பிரச்சனைகள் பக்கம் 16

  1. ஜூன் 25, 2022 அன்று ரொரன்றோவில் இடம்பெற்ற “ஈழப்போராட்டம் குறித்த பிரச்சனைகள் நூல் வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
  2. இக்கட்டுரை பெப்ரவரி 2023 தாய்வீடு இதழில் வெளியானது.

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑