வயல் மாதா முகநூல் உரையாடலின் பதிவு

“வயல் மாதா” சிறுகதைத் தொகுப்பிற்கான எதிர்ப்புகள் குறித்து நான் பதிவுசெய்த கருத்து பின்வருமாறு;

“வயல் மாதா” சிறுகதைத் தொகுப்பிற்கான எதிர்ப்புகளை எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் என்கிற வகையிலேயே பலரும் அணுகியிருந்தார்கள்.  தற்போது, அதிலுள்ள வயல் மாதா கதை, அந்தக் கதையை எழுதிய எழுத்தாளரின் ஊரில் நடந்த விடயத்தை, அதில் சம்பந்தப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களை அடையாளங்காணக்கூடிய விதத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரிகின்றது.  இந்த இடத்தில் எழுத்தாளரின் பொறுப்புணர்வு பற்றியே நாம் பேசவேண்டி இருக்கின்றது.  மானுட நேயத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அக்கறையையும் விட இலக்கியமோ படைப்புச் சுதந்திரமோ பெரிதல்ல.

குறித்த நூலை காசு கொடுத்து வாங்கியவர்கள் அதனை எரித்துத் தம் எதிர்ப்பைக் காட்டியதை நூலக எரிப்புடன் தொடர்புபடுத்திய சில பதிவுகளையும் பார்க்கமுடிந்தது. இது குறித்தும் நிதானமாக நாம் உரையாடவேண்டும், காசு கொடுத்துப் புத்தகத்தை வாங்கியவர்கள் அதனை எரித்துத் தம் எதிர்ப்பைக் காட்டுவது ஒரு எதிர்ப்புச் செயற்பாடென்றே நான் கருதுகின்றேன்.  சமூகநீதிக்கெதிரான நூல்கள், அரசியல் சட்டம் போன்றவற்றை எரித்துத் தம் எதிர்ப்பைக் காட்டுகின்ற செயற்பாடுகள் பெரியார் உள்ளிட்ட பலரும் செய்தவையே.  அவை வன்முறையாக முன்னெடுக்கப்படாத வரை, புத்தகங்கள் பலாத்காரமாகப் பறித்து எரிக்கப்படாத வரை, அந்தப் புத்தகங்களை விற்பவர்கள் / வாசிப்பவர்கள் மிரட்டப்படாதவரை அந்த எதிர்ப்புச் செயற்பாடுகளுக்கான சுதந்திரமும் உள்ளதென்றே நம்புகின்றேன்”

இதில் எந்த இடத்திலும் “வயல் மாதா சிறுகதையில் வரும் பிரதான பாத்திரங்களின் பெயர்கள் உண்மைச் சம்பவத்தோடு தொடர்புபட்டு இருப்பதாகவும் அடையாளம் காணப்பட்டதாகவும்” நான் கூறவில்லை. அதனை வேறொருவர் கூறியிருக்கும்போது எனது பதிவின் கீழும், என் பதிவு குறித்த உங்கள் பதிவின்கீழும் டானியல் ஜெயந்தன் இவ்வாறு பதிவிடுவது ஏன் என்று புரியவில்லை. 

மேலும் இக்கதை குறித்த எனது பதிவிற்கான எதிர்வினையாக டானியல் ஜெயந்தன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்;

“நீங்கள் கூறும் தொடர்புடையவர்களின் பெயர்கள் அவர்களது அடையாளங்கள் இதில் எங்கும் நான் குறிப்பிடவில்லை. ஏன் உண்மைச்சம்பம் நிகழ்ந்த ஊர் பெயர் கூட அதில் இல்லை எங்கோ நிகழ்ந்த ஒரு நிகழ்வு அதை புனைவாக்கி இருக்கிறேன் இது எல்லா சமுகங்களிலும் இடம்பெறும் நிகழ்வுதானே என்று கூட சொல்லலாம் அல்லவா ?”

தான் சம்பந்தப்பட்டவர்களின் உண்மைப் பெயர்களையோ உண்மைச் சம்பவம் நிகழ்ந்த ஊரையோ குறிப்பிடவில்லை என்பதைத் தான் டானியல் ஜெயந்தன் தனக்கான நியாயமாக முன்வைக்கின்றார்.  அதன் தொடர்ச்சியாக டானியல் ஜெயந்தன்

“எங்கோ நிகழ்ந்த ஒரு நிகழ்வு அதை புனைவாக்கி இருக்கிறேன் இது எல்லா சமுகங்களிலும் இடம்பெறும் நிகழ்வுதானே என்று கூட சொல்லலாம் அல்லவா”

என்று சொல்கிறார்.  உண்மைச் சம்பவம் ஒன்றைக் கதையாக்கியிருக்கின்றார் என்ற குற்றச்சாற்றிற்கு தான் எப்படியெல்லாம் தர்க்கித்துப் பதில் சொல்லலாம் என்று முயற்சிக்கின்றாரே அன்றி, தான் வாழ்ந்த சமூகத்தில் / தனக்குத் தெரிந்த மனிதர்களின் கதையை எழுதினார் என்கிற விமர்சனத்துக்கு நேரடியான அல்லது பொறுப்பான பதிலைச் சொல்வதற்கு டானியல் ஜெயந்தன் இன்றுவரை முயலவேயில்லை என்பதைத்தான் இது வெளிப்படுத்துகின்றது. 

மேலும் இக்கதை குறித்து டானியல் ஜெயந்தன் சொல்லுகின்ற விடயங்கள் முன்னுக்குப் பின் முரணாகவே உள்ளன, //யாரையும் நோகடிக்கவில்லை. புனைவாகவே எழுதினேன். சந்தர்ப்ப சூழ்நிலை பொருந்திவிட்டது// என்று டானியல் ஜெயந்தன் சொல்லியிருக்கின்றார்.  புனைவாகவே எழுதினேன், சந்தர்ப்ப சூழ்நிலை பொருந்திவிட்டது என்கிற பதில் எவ்வளவு அபத்தமானது.  ஒன்று டானியல் ஜெயந்தன் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது, அது கற்பனையில் எழுதப்பட்டது என்று சொல்லவேண்டும் அல்லது ஒரு உண்மைக் கதையைத் தான் எழுதினேன், அதை இந்த நோக்கத்திற்குத்தான் எழுதினேன் என்பதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தவேண்டும்.  அதைவிடுத்து எந்தப் பொறுப்பையும் ஏற்காமல் இருக்கின்றபோது எழுத்தாளரின் பொறுப்புணர்வுபற்றித்தான் பேசவேண்டி இருக்கின்றது. இந்தக் கதைக்கான எதிர்ப்பினை மதவாதிகளின் எதிர்ப்பு, பாசிசம், நூலக எரிப்புக்கு நிகரானது, அறியாமை, எழுத்துச் சுதந்திரம் என்பவற்றுடன் எல்லாம் தொடர்புபடுத்திப் பார்க்கின்ற டானியல் ஜெயந்தன் இன்றுவரை தனக்கு இருந்திருக்கவேண்டிய பொறுப்புணர்வு பற்றிச் சிந்திக்கவே இல்லை.

பாதிக்கப்பட்டவர்களின் குரல்களைப் பேசக்கூடிய பிரதிகளை, அவர்களுக்கு நீதி கோரக்கூடிய பிரதிகளை உண்மைச் சம்பவங்களை அதில் சம்பந்தப்பட்டவர்களின் அடையாளங்களுடன் எழுதக் கூடாதா என்ற கேள்வியை யாரேனும் முன்வைக்கலாம்.  எழுதலாம்; ஆனால் புனைவென்று சொல்லி எழுதாமல் நேரடியாகக் கட்டுரையாகவே, சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்துடன் அ-புனைவாக எழுதுவதே அறம் என்பது என் நிலைப்பாடு.  குறித்த வயல் மாதா கதையில் ஒரு உண்மைச் சம்பவம் புனைவாக எழுதப்பட்டிருக்கின்றது என்பதற்கு அப்பால், கத்தோலிக்கத்தால் / மதவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதிவேண்டித்தான் இந்தக் கதையே எழுதினேன் என்பது டானியல் ஜெயந்தனின் நிலைப்பாடாக இருந்தால் அதை வெளிப்படையாகத் தன்னும் சொல்லவேண்டும்.  ஆனால் டானியல் ஜெயந்தன் இன்றுவரை ஓர் உண்மைச் சம்பவத்தைக் கதையாக எழுதிவிட்டேன் என்பதற்குக் கூட பொறுப்பேற்கவில்லை.

000

காசு கொடுத்துப் புத்தகத்தை வாங்கியவர்கள் அதனை எரித்துத் தம் எதிர்ப்பைக் காட்டுவது ஒரு எதிர்ப்புச் செயற்பாடென்றே நான் கருதுகின்றேன்.  அவை வன்முறையாக முன்னெடுக்கப்படாத வரை, புத்தகங்கள் பலாத்காரமாகப் பறித்து எரிக்கப்படாத வரை, அந்தப் புத்தகங்களை விற்பவர்கள் / வாசிப்பவர்கள் மிரட்டப்படாதவரை அந்த எதிர்ப்புச் செயற்பாடுகளுக்கான சுதந்திரமும் உள்ளதென்ற கருத்துடன் இப்போதும் இருக்கின்றேன். 

இலக்கிய வாதிகள் சில சிறப்புச் சலுகைகள் கொண்டவர்கள். சில மீறல்களை அவை துஷ்பிரயோகங்களாக இருந்தாலும் கூட இலக்கியவாதிகள் செய்யலாம், அதனைச் சமூகம் தான் புரிந்துகொள்ளவேண்டும் என்கிற வாதங்களே “நவீன இலக்கியம் தெரிந்தவர்கள்” என்கிற போர்வையில் செய்யப்படுவதாக உணர்கின்றேன்.

000

இவற்றுக்கு அப்பால் இன்னொரு விடயத்தையும் சொல்லவேண்டும், வயல் மாதா சிறுகதைத் தொகுப்பினை எரித்தமைக்குப் பின்னால் கத்தோலிக்க மதவாத சிந்தனை இல்லையா என்ற கேள்வி எழலாம். நிச்சயம் இருக்கின்றது என்றே நானும் கருதுகின்றேன். அதேநேரம் தனது பதிவொன்றில் டானியல் ஜெயந்தன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்;


“இதில் எழுத்தாளர்கள், கத்தோலிக்க பாதிரியார் ஒருவரும், ஆண்கள், பெண்கள் என சுமார் ஐம்பதுக்கு உட்பட்ட கத்தோலிக்க ஆண்மீக பணியகத்தில் அங்கம் வகிக்கும் பொதுமக்களையும், நட்பின் அடிப்படையில் புத்தக வெளியீட்டுக்கு அழைத்திருந்தேன்”

டானியல் ஜெயந்தனின் பதிவின் மூலமே கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தில் பணியாற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் என்று தெரிகின்றது.  இவ்வாறு நட்பின் அடிப்படையில் டானியல் ஜெயந்தன் அழைத்த கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தில் பணியாற்றியவர்களுடன் அவர் கத்தோலிக்க மதவாதம் குறித்து உரையாடல்களைச் செய்திருக்கின்றாரா? இந்நூல் குறித்து அவர்களுடனான உரையாடல்கள் மதவாதம் குறித்து நிகழ்ந்தனவா? கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தில் அங்கம் வகிக்கும் பொதுமக்களை அழைத்து இந்த நூல் வெளியீட்டை டானியல் ஜெயந்தன் செய்யும்போது அவரது நோக்கம் முரண் உரையாடல் ஒன்றைச் செய்யவேண்டும் என்ற பிரக்ஞையுடன் இருந்ததா? அவர் அந்தப் பொதுமக்களுடன் செய்துகொண்டிருந்த உரையாடலின் தொடர்ச்சியாக இருந்ததா என்பதையும் நாம் கேட்கவேண்டியிருக்கின்றது.

இந்தக் கதைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்குப் பின்னால் இருக்கக் கூடிய “பெண்ணின் பெருமையைப் பேணல் என்கிற” ஆணாதிக்க சிந்தனையும் வெளிப்படையானதே; ஆயினும் டானியல் ஜெயந்தன் இக்கதையில் வீணே பாவித்துள்ள பெண்ணுடலை இழிவுபடுத்தும் தன்மையுடைய சித்திரிப்புகளும் “தூசனச் சொற்களின்” பிரயோகமும் ஆணாதிக்கத்தின் வெளிப்படைத்தன்மைகளே.

000

இந்த உரையாடலின்போது புதிய சொல்லில் வெளிவந்த பதினோராம் இலக்கக்கோவை கதை பற்றிய குறிப்பொன்றினையும் டானியல் குறிப்பிட்டிருந்தார்.  புதிய சொல்லின் ஆசிரியர் குழுவில் ஒருவர் என்றவகையில் அந்தக் கதையை வெளியிட்டமைக்கு இப்பொழுதும் பொறுப்பேற்றுக்கொள்கின்றேன்.  ஆயினும் அந்தக் கதை தொடக்கி வைத்த உரையாடலின் வழியிலேயே, சாதியம் சார்ந்த வசையாடல்களையும் பெண்ணுடலை இழிவுபடுத்தும் “தூணைச் சொற்களையும்” பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக இது வழக்கத்தில் இருக்கின்றது தானே என்று சொல்லி இப்படியான வசையாடல்களை இன்னும் இன்னும் வழக்கமானதாக்கிவிடக்கூடாது என்பதில் நான் உறுதியானேன். அப்பொழுது ரஞ்சி உட்பட பலர் எழுப்பிய அந்தக் கேள்வியை நான் கவனத்தில் எடுத்துச் சிந்தித்ததாலும் இன்னும் பலருடன் திறந்த உரையாடல்களை மேற்கொண்டதாலுமே அந்த விழிப்புணர்வு ஏற்பட்டது.  நீங்கள் சொல்வதுபோல டிசைன் டிசைனாக விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கவில்லை! 2016 இல் வெளிவந்த புதிய சொல் இதழில் அந்தக் கதை வந்தது, நான் அந்த இடத்திலேயே தேங்கிவிடவில்லை.    

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑