அன்று வந்ததும் அதே நிலா; இன்று வந்ததும் அதே நிலா

தனது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் பின்னர் வழமையான தெனாவெட்டுடன் ஜெயமோகன் எழுதியிருக்கும் கட்டுரைகள் தொடர்பாக பி.கே. சிவகுமார் எழுதிய “ஓர் அமெரிக்கத் தமிழனின் சிந்தனைகள்” என்ற கட்டுரை திண்ணையில் வெளியாகி இருக்கின்றது.  இந்தக் கட்டுரையை வாசித்த போது, 2011 இல் கனடாவிற்கு வந்திருந்த ஜெயமோகன் ரொரன்ரோவில் இடம்பெற்ற குறும்பட விழாவில் கலந்துகொண்ட பின்னர் அவரது உரையில் கனடாவுக்கு சிறுவயதில் வந்து இங்கேயே படித்த இளைஞர்களை நோக்கி நீங்கள் ஜானகிராமனை படித்திருக்கின்றீர்களா என்று கேட்டு தி. ஜானகிராமன் உட்படச் சிலரைப் (எல்லாரும் ஜானகிராமன் தலைமுறை எழுத்தாளர்கள்) படிக்கவேண்டும் என்று சொன்னதோடு தொடர்ந்து கூறினார் எமது பண்பாடுகளை, வாழ்வை அறிந்திருகாதவர்களால் நல்ல குறும்படங்களை / படைப்புகளை கொடுக்க முடியாதென்று கூறியிருந்தமையே நினைவுக்கு வந்தது.   எந்தவிதப் பின்புலமும் அறியாத முன்முடிவுகளுடனும் மேதாவித்தனம் என்று நினைத்துச் செயற்படும் அசட்டுக் கருத்துகளே அன்றைய உரையில் ஜெயமோகன் தெரிவித்தவை. 

இது குறித்து அப்போதே ஒரு கட்டுரை எழுதியிருந்தேன், அதிலிருந்து குறிப்பிட்ட இந்தப் பகுதியை மாத்திரம் பகிர்ந்துகொள்கின்றேன்.  முழுமையாக கட்டுரை முதலாவது பின்னூட்டமாகவும், பிகே சிவகுமாரின் கட்டுரை இரண்டாவது பின்னூட்டமாகவும் தரப்பட்டுள்ளது.

//அடுத்து இந்தப் படங்களை எடுத்த இளைஞர்களை தி. ஜானகிராமன் உட்படச் சிலரைப் (எல்லாரும் ஜானகிராமன் தலைமுறை எழுத்தாளர்கள்) படிக்கவேண்டும் என்று சொன்ன ஜெமோ, தொடர்ந்து கூறினார் எமது பண்பாடுகளை, வாழ்வை அறிந்திருகாதவர்களால் நல்ல குறும்படங்களை / படைப்புகளை கொடுக்க முடியாதென்று,  அதை முன்வைத்தே அவரிடம் சொன்னேன் இன்று புலம் பெயர் நாடுகளில் தம் படைப்புகளைச் செய்யும் நிறைய இளைஞர்கள் புலம்பெயர் நாடுகளிற்குச் சிறு வயதிலேயே வந்தவர்கள்.  அவர்கள் படைப்புகளில் காட்டுபவை கூட புலம்பெயர் மக்களின் பிரச்சனைகளே.  அதை அவர்கள் தமது கோணத்தில் இருந்து சொல்வதற்கு அவர்களுக்கு ஈழத்து / தமிழகத்து வாழ்க்கை முறை அல்லது பண்பாடு பற்றித் தெரியவேன்டும் என்று சொல்லமுடியாது என்று.  இத்ததைய படைப்புகளைச் செய்பவர்களுல் பலர் இளைஞர்கள்.  தமிழில் வாசிப்பதில் சிக்கல் உடையவர்கள்.  அவர்கள் தம் பெற்றோரின், பேரன் பேத்திகளின் தாயக வாழ்வை அவதானங்களினூடாகவே அணுகுபவர்கள்.  அதையே சுட்டிக் காட்டினேன்.  இதை ஜெமோ எந்த இடத்திலும் கூறவுமில்லை. மேலும் புலம்பெயர்ந்து இங்கேயே கல்விகற்ற இவர்கள் பாடசாலைக் கல்வியில் ஒன்பதாம் தரம் முதலாகவே பாடத்திட்டத்திலேயே செவ்வியல் இலக்கியங்களை வாசிக்கின்றார்கள்.  ஒவ்வோராண்டும் ஷேக்ஸ்பியரின் ஏதாவது ஒரு படைப்பு இவர்களுக்குப் பாடத்திட்டத்திலேயே இருக்கின்றது.  எனவே அவர்கள் தமிழில் வாசிக்காவிட்டாலும், ஜெயமோகன் கேட்ட ஜானகிராமன், சுந்தர ராமசாமி உள்ளிட்டவர்களை தெரியாமல் இருந்தாலும் கனடியப்பாடத்திட்டத்தின் ஊடாகவே இலக்கிய பரிச்சயம் கொண்டவர்கள்.  இதுபற்றிய அறிதல் ஜெயமோகனுக்கு இருக்கவும் இல்லை என்பதையும் சுட்டினேன்.//

எனது கட்டுரையின் முழுமையாக வடிவத்தினை இந்த இணைப்பில் காணலாம் – https://arunmozhivarman.com/2011/06/13/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/

பிகே சிவகுமாரின் கட்டுரைக்கான இணைப்பு

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑