பெரியார் தாத்தா நூல் அறிமுகம்

தமிழ் ஸ்டூடியோ அருணின் செயற்பாடுகளை மிக நீண்டகாலமாக ஆர்வத்துடன் பார்த்துவருகின்றேன்.  பேசாமொழி என்கிற இணைய இதழ், Pure Cinema என்கிற புத்தக விற்பனைக்கான இணையத்தளம், படச்சுருள் என்கிற திரைப்படம் குறித்த சிற்றிதழ், திரைப்பட திரையிடல்கள், திரைப்படம் குறித்தும், திரை ஆளுமைகளுடனும் உரையாடல்கள் என்று பல்வேறு வேலைத்திட்டங்களின் மூலமாக தனது நோக்குகளை நோக்கிய பயணத்தைத் தளர்வில்லாமல் முன்னெடுப்பவர் அவர்.  அந்தப் பயணத்தினதும் அவரது வேலைத் திட்டத்தினதும் தொடர்ச்சியாகவே அவர் எழுதி “மகிழ்” வெளியீடாக வந்துள்ள பெரியார் தாத்தா என்கிற சித்திரக் கதைப் புத்தகத்தையும் கருதுகின்றேன். 

சிந்தனையாளர்கள், சமூக நீதிக்கான போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்கள் பற்றி சிறுவர்களுக்கான அறிமுகநூல்கள் தமிழில் மிகக் குறைவாகவே வந்துள்ளன.  இன்னும் குறிப்பாக சிறுவர்களைக் கவரும் விதத்தில் வண்ணப்படங்களுடனும், பெரிய எழுத்துருக்களுடனும், சிறுவர்களைக் கவரும் விதத்திலான கதை சொல்லும் முறையுடனும் வெளிவந்த நூல்கள் என்று பார்த்தால் இன்னும் அரிதாகவே இருக்கின்றது.  இந்தச் சூழலில், அருண் எழுதியுள்ள பெரியார் தாத்தா, செவ்வக வடிவில், அழகிய வண்ணத் தாள்களில், வண்ணப்படங்களுடன் பெரிய எழுத்துருவில் சிறுவர்களைக் கவரும் விதத்தில் வெளிவந்திருக்கின்றது.  தனது மகனான மகிழ்மாறனின் முதலாவது பிறந்த தினத்தின்போது இந்நூலை அருண் வெளியிட்டிருக்கின்றார். 

கதை கேட்க விரும்பாத குழந்தைகள் எங்குதான் இருக்கக்கூடும்? எமது பால்யம் வீட்டில் பெரியவர்களிடம் விடாது கதைகளைக் கேட்டு, கதைக் கேட்கும் சுவாரசியத்தில் தூக்கத்துடன் போராடி கடைசியில் கதைகேட்டபடியே தூங்கிவிடும் வழக்கத்தை கொண்டிருந்தது.  இன்று பரபரப்பான வாழ்க்கை முறையும், இலத்திரனியல் கருவிகளின் பயன்பாட்டின் அதிகரிப்பும் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் நேரத்தை மட்டுமல்லாமல் குடும்பத்தினர் ஒன்றாக இருந்து ஒருவருடன் ஒருவர் பேசும் பழக்கத்தைக் கூட வெகுவாகக் குறைத்துவிட்டன.  பெரியார் தாத்தா கதையில் சிறுவனான மாறனின் தந்தையோ இப்போதும் மாறனுக்குத் தூங்கும்போது கதைசொல்லும் வழக்கத்தைப் பழக்கமாகக் கொண்டிருக்கின்றார்.  கதை என்ற பெயரில் மூட நம்பிக்கைகளையும் புராணங்களையும் சொல்லும் வழக்கத்திலிருந்து மாறி, குழந்தைகளுக்கு விழிப்புணர்வையும் பிரக்ஞையும் தூண்டுகின்ற விதமான கதைகளைச் சொல்பவராக மாறனின் தந்தை சித்திரிக்கப்படுகின்றார்.  இன்றளவும் பெற்றோர் தமது பிள்ளைகளுடன் கதைக்கத் தயங்கும் Good Touch, Bad Touch பற்றி கதையாக மாறனுக்குச் சொல்வது குறிப்பிடவும் கவனத்திற்கொள்ளவும் அவசியமானது. 

பெரியார் போன்ற ஒரு ஆளுமையின் கருத்துகளை குழந்தைகளுக்கு எடுத்துச் செல்வது என்பது இலகுவான காரியமல்ல. மேலும், குழந்தைகளுக்கு சரியான முறையில் இந்தக் கருத்துகளைச் எடுத்துச் செல்லாமல் மேலோட்டமாகச் சொல்லும்போது அவை எதிர்மறைத் தன்மையையும் விலகலையும் ஏற்படுத்திவிடக் கூடும்.  இந்தக் கரிசனத்தை இந்நூலின் உருவாக்காத்தின்போது அருண் கடைப்பிடித்திருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.  அவர் முதற்கட்டமாக, பெரியாரை ஜீன்ஸ், ட்ராக் பாண்ட்ஸ், கறுப்புக் கண்ணாடி, டி சர்ட் அணிந்த புறத்தோற்றத்திலும் “நவீன” மனிதராக இங்கே அறிமுகப்படுத்துகின்றார். 

பெரியாரை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதற்கான சித்திரக் கதைகளோ பாடல்களோ வெளிவந்துள்ளனவா என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் தேடியிருந்தேன்.  அப்போது பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் வெளியீடாக வந்துகொண்டிருக்கும் பெரியார் பிஞ்சு என்கிற இதழினைக் காணக் கிடைத்தது.  தற்போது மக்ஸ்ரர் ஊடாகவும் இந்த இதழ்களை வாசிக்க முடிகின்றது; இதன் பழைய இதழ்கள் சிலவற்றினை http://periyarpinju.com/ என்கிற இணையத் தளத்திலும் பார்க்கலாம்.  பெரியார் பிஞ்சு இதழில் சித்திரக் கதை வடிவில் சில பக்கங்களில் பெரியாரின் கருத்துகளும் வரலாறும் வெளியிடப்படுவது வழக்கம் என்றாலும் அதில் பயன்படுத்தப்படும் மொழி குழந்தைகளுக்கான மொழியாக இருப்பதில்லை.  மாற்றாக பெரியார் தாத்தாவில் குழந்தைகளுக்கேற்ற இலகுவான மொழியும், பெரிய எழுத்துருக்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.  (குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் பெரியாரையும் அவர் சிந்தனைகளையும் அறிமுகம் செய்யும் பாடல்களை https://www.youtube.com/@pkdktamil என்கிற யூ ட்யூப் தளத்திலும் காணலாம், இனிமையான முறையில் இசைத் தொகுப்புச் செய்யப்பட்டிருக்கின்ற இந்தப் பாடல்கள் குழந்தைகளைக் கவரும் விதத்திலும் உள்ளன).

குழந்தைகளுக்கான கல்விமுறையில் ஓர் உபாயமாக, அவர்கள் பின்னாளில் அறிவியலிலும் சமூகவியலிலும் கற்கவும் அறிந்துகொள்ளவும் போகின்ற கருத்தாக்கங்கள் குறித்தும் ஆளுமைகள் குறித்தும் எளிய அறிமுகங்களைச் செய்துவைப்பது கடைப்பிடிக்கப்படுகின்றது.  இன்னொரு விதத்தில் இது குழந்தைகள் கற்றுக்கொள்வதில் தம்மை நெருக்கமாகப் பிணைத்துக் கொள்வதற்கும், அவர்களது தேடல்களைத் தூண்டுவதற்கும் உதவுகின்றது.  இங்கே பெரியார் தாத்தா கதாபாத்திரம் மூலமாக மாறனுக்கு ஐன்ஸ்டின், நியூட்டன், தோமஸ் அல்வா எடிசன், கிரகாம் பெல், ரைட் சகோதர ர்கள், பற்றிய எளிய அறிமுகங்கள் செய்துவைக்கப்படுகின்றது.  அத்துடன். லேசர் தொழினுட்பத்தைக் கண்டுபிடித்த தியடோர் மைமன் குறித்தும் அந்தத் தொழினுட்பத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்றும் கதையின் முக்கிய இழையாகச் சொல்லப்படுகின்றது.  அதுபோல தாவரங்களின் வளர்ச்சியை அளவிடும் Crescograph கருவியைக் கண்டுபிடித்த ஜெகதீஸ் சந்திரபோஸ் குறித்தும் அறிமுகம் செய்துவைக்கப்படுகின்றது. 

பெரியார் தன் வாழ்நாளெல்லாம் சுயமரியாதை, சமத்துவம் என்பவற்றை முன்னிறுத்தி சமூக நீதிக்காகப் போராடியவர், சாதி ஒழிப்பும், பெண் விடுதலை, பகுத்தறிவு, அரசியல் பிரக்ஞை, உள்ளிட்டதாக பல தளங்களில் செயற்பட்டவர் அவர்.  இன்று சூழலியல், நிலங்கள் பறிக்கப்படல், போன்ற பல்வேறு தளங்களில் நிகழும் சுரண்டல்களுக்கு எதிராக அறிவியலை ஆயுதமாகக் கொண்டு போராடுகின்ற நவீன பெரியாராக பெரியார் தாத்தா என்கிற ஃபண்டசி அமைகின்றது.  அதேநேரத்தில் பார்ப்பனியம், சாதியம் ஆகியவற்றையும் கடந்துவிடாமல் போகிற போக்கில் அழுத்தமாகச் சொல்லிச் செல்வதாக பெரியார் தாத்தா அமைந்திருக்கின்றது. 

இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்திருக்கின்ற பல்வேறு விடயங்களில் மூன்று விடயங்களைக் குறிப்பாகச் சொல்வது அவசியம் என்று கருதுகின்றேன். 

  1. கதையின் தொடக்கத்தில் மாறன் பெரியாரிடம் ”அவங்கன்னு சொல்லாத தாத்தா, எப்பவுமே பேர சொல்லு, எங்கப்பா அது இது, அவங்க, அந்த மரம், இந்த மரம் அப்படியெல்லாம் பேசாம என்னவா இருந்தாலும் அதோட பேர சொல்லணும்னு சொல்லியிருக்காரு” என்று சொல்வான்.  இது ஒரு முக்கியமான விடயமென்று கருதுகின்றேன்.  கதையின் முடிவுப்பகுதியில் மரங்களைப் பற்றி அறிமுகம் செய்யும்போது பெரியார் ஒவ்வொரு மரத்தையும் அதன் பயனையும் மாறனுக்கு அறிமுகம் செய்வார்.  நாம் வாழும் சூழலில் இருக்கின்ற உயிருள்ள, உயிரற்ற ஒவ்வொரு பொருட்கள் குறித்தும் நாம் சிறிதளவாவது, குறைந்த பட்சம் அவற்றின் பெயரும் பயன் / வரலாறும் என்ன என்றாவது அறிந்துகொள்வது அவசியம். 
  2. மரங்கள் நடுவதன் அவசியம் குறித்தும் இயற்கைவளங்கள் அழிக்கப்படுவது குறித்து உரையாடுவதன் தொடர்ச்சியாக உணவுச் சங்கிலிகள் குறித்து அறிமுகம் செய்யும்போது “மரங்கள் நிறைய இருக்கணும், அதுலயும் எதுக்கும் பயன்படாத மண்ணுக்கும் பொருந்தாத மரங்களை வைக்காம எல்லாருக்கும் பயன்படுற, மண்ணோடு உறவாடுற மரங்களை முன்வைக்கனும்” என்று சொல்வது முக்கியமானதாகும்.
  3. இந்தக் கதை முழுவதும் பெரியார் தாத்தாவும் மாறனும் உரையாடுபவர்களாக, கருத்துகளைப் பகிர்ந்துகொள்பவர்களாகவே வருகின்றார்கள்.  மாறன் சொல்கின்ற கருத்துகளையும் கேட்டு அவற்றுக்கு மேலதிக விளக்கங்களைக் கொடுப்பவராகவும், சில சந்தர்ப்பங்களில் மாறனின் கருத்துகளையேற்றுத் தன்னைத் திருத்திக் கொள்பவராகவும் பெரியார் தாத்தா பாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பது முக்கியமானதாகும்.

Marxists Internet Archive திட்டத்தின் சிறுவர் இலக்கியம் என்கிற பக்கத்தில் அதன் நோக்கமாக சோசலிசக் கல்வியின் பொறுப்பையும் சவால்களையும் அறிந்துகொள்வதற்கும் வரலாற்றுணர்வுடன் அடுத்த தலைமுறையினர் வளர்வதற்கும் தேவையான தகவல் வளங்களையும் ஆவணங்களையும் வழங்குவதாகும் என்று குறிப்பிடுகின்றது. சமூகநீதி குறித்தும், கல்வி முறை குறித்தும் அக்கறைகொண்டவர்கள் இதனைக் கருத்திற்கொண்டு சிந்தனையாளர்கள் குறித்தும் அவர்களது கருத்தியல் பின்புலங்கள் குறித்தும் குழந்தைகளிடமும் சிறுவர்களிடமும் எடுத்துச் செல்லவேண்டும்.  அதற்கான முயற்சிகளில் ஒன்றாகவே அருண் எழுதியுள்ள பெரியார் தாத்தாவினைப் பார்க்கின்றேன்.  சூரியராஜின் வரைபடங்களும் க. ரவீந்திரனின் வடிவமைப்பும் இந்த நூலை குழந்தைகளுக்கு நெருக்கமானதாக்குவதற்கு உதவியிருக்கின்றன.  மாறனும் பெரியார் தாத்தாவும் காட்டுக்குப் போய் விலங்குகளுக்கு எப்படி உதவிசெய்தார்கள் என்பது பெரியார் தாத்தாவின் அடுத்த பாகமாக வருமென்று இந்தநூலின் இறுதியில் குறிப்பிடப்படுகின்றது, பெரியார் தாத்தாவின் பயணம் தொடரட்டும்.

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑