நூலக நிறுவனத்தின் பொறுப்பொன்று காரணமாக அதன் எண்ணிம நூலகத்தில் இருக்கின்ற புத்தகங்களை தட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது மேமன் கவி தொகுத்த ”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” என்கிற நூலினைப் பார்த்ததும் அதன் தலைப்பு ஏற்படுத்திய கவனயீர்ப்பினால் உடனேயே தரவிறக்கி வாசிக்கத் தொடங்கினேன்.
நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் நான் ஊகித்துக் கொண்டதைப் போலவே 2001 ஆம் ஆண்டு ஈழத்து இலக்கியத்தின் மிக முக்கியமான இலக்கியச் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் எழுத்தாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவர் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் பணிகளுக்காக கௌரவ முதுகலைமாணிப் பட்டம் வழங்க முடிவெடுத்திருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எழுதிய கடிதம், மற்றும் அதன் தொடர்ச்சியான டொமினிக் ஜீவா அவர்களின் பதில், பத்திரிகைகள் மற்றும் சமூக மட்டத்தில் இவ்விடயம் ஏற்படுத்திய தாக்கம் என்பனவற்றைப் பற்றியும் அவற்றின் தொகுப்பாகவும் இந்த நூல் வெளிவந்திருக்கின்றது.
இந்தச் சம்பவம் அது நடந்த காலப்பகுதியில் பரவலான கவனத்தைப் பெற்றிருந்தது என்பதனால் இவ்விடயம் குறித்து முன்னரே அறியாதாவர்களின் நிமித்தம் சுருக்கமான அறிமுகமொன்றினை மட்டும் இங்கே தருகின்றேன். பொதுவாக பல்கலைக் கழகங்கள் வெவ்வேறு துறைகளில் தொடர்ந்து இயங்கியவர்களையும் பங்களிப்புகளைக் கொடுத்தவர்களையும் கௌரவிக்கின்ற நோக்குடன் கலாநிதிப் பட்டம் வழங்குகின்றதான ஒரு மரபு ஈழத்துப் பல்கலைக்கழகங்களுக்கு இருக்கின்றது. ஆனால் அந்த மரபிலிருந்து மாறுபட்டதாகவும் வினோதமானதாகவும் டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவரது சேவையை கௌரவிக்கும் நோக்குடன் ஐப்பசி 6, 2001 அன்று இடம்பெறவிருக்கின்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கௌரவ முதுகலைமாணி (M. Lit) பட்டம் வழங்க இருப்பதாக துணைவேந்தரிடமிருந்து டொமினிக் ஜீவா அவர்களிற்கு ஓகஸ்ட் 27, 2001 அன்று ஒரு கடிதம் எழுதப்படுகின்றது.
இந்தக் கடிதத்திற்குப் பதிலாக டொமினிக் ஜீவா எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,
“நான் கலை இலக்கியத் துறைக்கு ஆற்றி வரும் பணிக்காக என்னைக் கௌரவிக்கும் பொருட்டு தாங்கள் எனக்கு வழங்கவுள்ள கௌரவ முதுகலை மாணிப் பட்டம் கல்வித் தகைமை சார்பானதாக இருக்கிறது. இது எனக்கும் பலருக்கும் வியப்பை அளித்திருக்கின்றது. பல வினாக்களையும் எழுப்புகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாக எழுந்த இயக்கத்தில் என்னைப் போன்ற படைப்பாளிகளின் பங்களிப்பும் இருந்ததென்பது வரலாறு.
இந்த நினைவுகளோடு தாங்கள் தரவுள்ள விருதினைப் பெற்றுக்கொள்ள இயலாத சூழ்நிலையில் உள்ளேன் என்பதைத் தங்களுக்கு அறியத் தருகின்றேன். எவ்வாறாயினும் தங்களது அபிமானத்திற்கும் நல்லெண்ணத்திற்கும் எனது அன்பும் நன்றியும் உரியன”
இந்த நிகழ்வினை ஒரு தனித்த நிகழ்வாக துண்டித்துப் பார்க்காமல் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தில் நிலவிய ஆதிக்க மனநிலை, சாதிய மனநிலை என்பவற்றையும் பகுத்தறிவையும் முற்போக்கையும் மாணவர்களுக்குப் புகட்டி வளமான எதிர்கால சந்ததியை உருவாக்கவேண்டிய பல்கலைக்கழகம் எத்தனை மோசமான, சாதிய, ஒடுக்குமுறை மனநிலைகொண்டவர்களால் வழிநடத்தப்படுகின்றது என்பதையெல்லாம் இந்த நிகழ்வுடன் தொடர்புபடுத்தி நாம் உரையாடவேண்டும்.
கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த நிகழ்வையொட்டி தினகரன், வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் வெளியிட்ட கருத்துக்களையும் சுடர் ஒளி, மல்லிகை, ஆதவன், நவமணி, ஞானம் போன்ற பத்திரிகைகள்/இதழ்களில் இடம்பெற்ற விவாதங்களையும் செங்கை ஆழியான், தெளிவத்தை யோசப், கே. எஸ். சிவகுமாரன், செ, யோகநாதன், கம்பவாரிதி ஜெயராஜ், மாவை வரோதயன், குழந்தை வடிவேலன், அ. இந்திரராசா, கலைவாதி கலீல், ப. ஆப்டீன், சுதாராஜ், உட்பட பலர் எழுதிய கருத்துப் பகிர்வுகளையும் தொகுத்து மல்லிகைப் பந்தல் வெளியீடாக இந்த நூலினை மேமன் கவி கொண்டுவந்திருக்கின்றார். 2001 டிசம்பரில், இந்த நூல் வெளிவந்திருக்கின்றது, இந்தத் தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் விடயங்கள் முக்கியமானவையாக இருப்பதாலும் சமூகம் பற்றிய வாசிப்பொன்றினை நிகழ்த இது உதவும் என்பதாலும் மேமன் கவி அவர்களின் முக்கியமான ஒரு முயற்சியாக இதனைக் குறிப்பிடலாம்.
டொமினிக் ஜீவாவிற்கு ”கௌரவ” முதுகலை மாணிப்பட்டம் கொடுக்கப்படுவதற்கு முன்னதாக, தங்கம்மா அப்பாக்குட்டி, மில்க்வைற் கனகராஜா ஆகியோருக்கு அவர்களது ”சேவைகளை” கௌரவிக்கும் பொருட்டு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது என்பது இந்தத் தொகுப்பில் சுட்டிக்காட்டப்படுவதுடன் நாடகக் கலைஞர் குழந்தை சண்முகலிங்கத்திற்கு கௌரவ கலாநிதிப் பட்டம் அளித்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் செயலும் விதந்து போற்றப்படுகின்றது. பல்கலைக்கழக நிர்வாகம் குறித்துத் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வந்த கம்பவாரிதி ஜெயராஜ் எழுதி வீரகேசரியில் பிரசுரமான ”மல்லிகை ஜீவாவின் மறுபுரட்சி” என்கிற கட்டுரை இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது, ஜெயராஜின் சமூகம் சார்ந்த கருத்துகளுடன் அதிகம் முரண்பாடுகளே எனக்கு இருக்கின்றபோதும் இந்த விடயம் குறித்த ஜெயராஜின் அணுகுமுறை மிகவும் பண்புநேர்த்தியுடன் அமைந்திருக்கிறது குறிப்பிடவேண்டியது. சாதியம், சமூகவரலாறு என்பன குறித்த அக்கறையுள்ளவர்கள் வாசிக்கவேண்டிய தொகுப்புகளில் ஒன்று.
1. இக்கட்டுரை மே 2020 தாய்வீடு இதழில், சொல்லத்தான் நினைக்கிறேன் என்கிற எனது தொடரில் வெளியானது.
2. இந்நூலுக்கான நூலக இணைப்பு http://noolaham.net/project/668/66744/66744.pdf
Leave a Reply