கொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள்

Sapiens: A Brief History of Humankind என்கிற புகழ்பெற்ற நூலை எழுதிய யுவால் நோவா ஹராரியைப் (Yuval Noah Harari) பற்றி அனேகம் பேர் அறிந்திருப்பீர்கள்.  இஸ்ரேலைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான யுவால் நோவா ஹராரி, 2014 இல் ஆங்கிலத்தில் வெளியான அவரது Sapiens: A Brief History of Humankind என்கிற நூலின் மூலம் பெரும் புகழ்பெற்றவர் (இதன் மூலவடிவம் 2011 இல் ஹீப்ரூ மொழியில் வெளியானது).  50 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த நூல் இதுவரை 14.5 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றது.    அதற்குப் பிறகு வெளியான அவரது Homo Deus: A Brief History of Tomorrow, 21 Lessons for the 21st Century ஆகிய நூல்களும் பலத்த வரவேற்பைப் பெற்றவையே. தற்போது உலகளாவிய ரீதியில் பரவியிருக்கின்ற கொரொனாத் தொற்று மற்றும் அதன்விளைவுகள் பற்றிய யுவால் நோவா ஹராரி எழுதிய மூன்று கட்டுரைகளை இதுவரை படித்திருக்கின்றேன்.

In the Battle Against Coronavirus, Humanity Lacks Leadership என்கிற முதலாவது கட்டுரை Time இதழில் வெளியானது.  இந்தக் கட்டுரையை சித்தார்த் வெங்கடேசன் ”கொரோனா வைரஸுடனான போரில் மனிதம் தலைமையின்றி நிற்கிறது” என்று மொழியாக்கம் செய்திருக்கின்றார்.  கொள்ளை நோய், பெரியம்மை போன்ற, இதற்கு முன்னர் மனித குலத்திற்குப் பெரும் உயிரழிவுகளை ஏற்படுத்திய தோற்றும் நோய்கள் பரவிய காலத்தினைப் பற்றிய வரலாற்று ரீதியான தரவுகள், அந்த அழிவுகளை மனித குலம் எப்படி எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டது என்பவற்றைப் பற்றி சுவாரசியமாகவும் செறிவாகவும் கூறும் இந்தக் கட்டுரை, தரவுகளையும் தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதே இதுபோன்ற கொள்ளைநோய்த் தொற்றுகளில் இருந்து வெற்றிகொள்வதற்கான வழி என்பதை முன்வைக்கின்றது.  தலைமையற்ற உலகம் என்பது பற்றி

“இன்று மனித இனம், பெரும் சிக்கலை சந்திப்பதற்கு கொரோனா வைரஸ் மட்டும் காரணம் அல்ல; மனிதர்களுக்கு இடையே உள்ள நம்பிக்கையின்மையும் ஒரு காரணம். ஒரு கொள்ளை நோயினை ஒழிக்க, அனைவரும் அறிவியல் வல்லுனர்களை நம்ப வேண்டும், குடிமக்கள் தங்களது அரசை நம்ப வேண்டும், நாடுகள் ஒன்றையொன்று நம்ப வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், பொறுப்பற்ற அரசியல்வாதிகள் அறிவியலின், அரசின், பன்னாட்டு ஒத்துழைப்பின் மீதான நம்பிக்கைகளை திட்டமிட்டுக் குலைத்திருக்கின்றனர். விளைவாக, நம்மை ஊக்குவித்து, ஒன்றுதிரட்டி, ஒரு ஒருங்கிணைந்த பன்னாட்டு எதிர்வினைக்கு நிதி திரட்டக்கூடிய, நல்ல தலைவர்கள் இல்லாமல் நாம் இன்று இந்த பெரும் சிக்கலை சந்திக்கிறோம்”

என்று யுவால் கூறுவது ஆழ்ந்து நோக்கத்தக்கது.

The world after coronavirus என்கிற இரண்டாவது கட்டுரை Financial Times இதழில் வெளியானது. இந்தக் கட்டுரையை சித்தார்த் வெங்கடேசன் ”கொரோனா வைரஸுக்கு பின்னான வாழ்வு”  என்று மொழியாக்கம் செய்திருக்கின்றார்.  கொரொனா பாதிப்பிலிருந்து மக்களை விடுவிக்கவென்று எடுக்கப்படுகின்ற முயற்சிகளும் நடைமுறைகளும் எப்படி எதிர்காலத்தில் மக்களை நெருக்கமாகக் கண்காணிக்கக் கூடிய அதிகாரத்தை அரசுகளுக்கு வழங்கக் கூடும் என்பதைக் கூறித்தொடங்கும் இந்தக் கட்டுரை, இன்னொரு புறத்தில் இப்படியான கண்காணிப்புகளூடாத் திரட்டப்படும் தரவுகளை அரசுகள் அதிகாரத்துக்குப் பயன்படுத்தாமல் உலகளாவிய ரீதியில் பரஸ்பரம் நல்லெண்ணத்துடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் உயிர்காக்கும் முறைமைகளைக் கண்டறியலாம் என்பதையும் கூறுகின்றது.

”அடுத்த சில வாரங்களில் அரசுகளும் மக்களும் எடுக்கும் முடிவுகள் இனி வரப்போகும் பல ஆண்டுகளுக்கு நமது எதிர்காலத்தை வடிவமைக்கலாம். நமது சுகாதார அமைப்புகளை மட்டுமல்ல, நம் பொருளாதாரத்தை, அரசியலை, பண்பாட்டையுமே கூட மாற்றலாம். நாம் துரிதமாகவும் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டும். ஆனால் நமது செயல்பாடுகளின் நீண்டகால விளைவுகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். பல மாற்றுகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் பொழுது, தற்போதைய இடரை எவ்வாறு கடப்பது என்பதை சிந்திப்பதோடு நில்லாமல், இந்த புயல் கடந்த பின் எப்படியான ஒரு உலகத்தில் நாம் வாழப்போகிறோம் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆம். இதுவும் கடந்து போகும், மனித இனம் பிழைத்து வரும், நம்மில் பலரும் உயிரோடே இருப்போம் – ஆனால் நாம் வாழப்போகும் உலகம் வேறொன்றாக இருக்கும்”

என்று கூறுவதை சிறிதேனும் கடந்துபோகமுடியவில்லை.

‘Will coronavirus change our attitudes to death? Quite the opposite’ என்கிற மூன்றாவது கட்டுரை The Guardian இதழில் வெளிவந்திருக்கின்றது.  மரணம் குறித்து மதநூல்களில் சொல்லப்பட்ட நம்பிக்கைகள் குறித்தும் பின்னர் அறிவியல் வளர்ச்சியில் மரணம் குறித்து உருவான அறிவியல் ரீதியிலான விளக்கம் எப்படி ஏற்கனவே இருந்த மரணம் குறித்த நம்பிக்கைகளுடன் முரண்பட்டது என்பவற்றை வரலாற்றினடிப்படையில் கூறுகின்றது இந்தக் கட்டுரை.  பெருந்தொகையிலான மரணங்கள் இயற்கை அழிவினாலோ, விபத்துக்களாலோ அல்லது கொள்ளை நோய்களாலோ ஏற்படும்போது அது இறைவனின் சீற்றம் என்று நம்பிய காலப்பகுதியிலிருந்து மனிதர்கள் அவற்றை எப்படித் தவிர்த்திருக்கலாம், இந்த அழிவுகளுக்கு மனிதத் தலையீடுகளும் அக்கறையீனங்களும் எவ்விதம் காரணம் என்று ஆராய முற்படுகின்ற போக்கு வெகுசனத்தின் மத்தியிலேயே உருவாகிவிட்டதை யுவல் நோவா ஹராரி முன்வைப்பது ஒரு முக்கியமான அவதானம். பெரும்பாலான தேவாலயங்களும், பள்ளிவாசல்களும், கோவில்களும் கூட தமது வழமையான மதச் சடங்குகளிற்கான ஒன்றுகூடல்களைத் தவிர்க்குமாறு தம்மைத் தொடரும் மக்களுக்கு வேண்டுதலை முன்வைத்துவிட்டு மருத்துவ / அறிவியல் கண்டுபிடிப்புகளால் கொரொனா வென்றெடுக்கப்படவேண்டும் என்று காத்திருப்பது ஒருவிதத்தில் ஒரு ஆரோக்கியமான நிலைமை என்றே சொல்லவேண்டும்.


  • யுவால் நோவா ஹராரியின் கட்டுரைகளுக்கான சித்தார்த் வெங்கடேசனின் தமிழாக்கங்களுக்கான இணைய இணைப்பு

கொரோனா வைரஸுடனான போரில் மனிதம் தலைமையின்றி நிற்கிறது – யுவால் நோவா ஹராரி

கொரோனாவைரஸுக்கு பின்னான வாழ்வு – யுவால் நோவா ஹராரி

  • யுவால் நோவா ஹராரியின் முதலாவது இரண்டாவது கட்டுரைகள் குறித்து மேற்கோள் காட்டப்பட்டவை சித்தார்த் வெங்கடேசனின் மொழியாக்கத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: