பெரியாரை வெறுமனே ஒரு நாத்திகவாதியாய் மட்டுமே குறுக்கி அடையாளப்படுத்திக் கடந்துபோவர்களிடம் ஓர் அரசியலும், அறியாமையும் இருக்கின்றது என்றே கருதவேண்டியிருக்கின்றது. பெரியார் தன்னளவில் நாத்திகராய் இருந்தாலும், கடவுள் மறுப்பை வலியுறுத்தினாலும் அதற்குக் காரணம் அவர் கல்வி, சமூகம், அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் போன்ற அனைத்துப் பரப்புகளிலும் மதம் பிற்போக்குத்தனம் நிறைந்ததாகவும் ஒடுக்குமுறைகளையும் மூடநம்பிக்கைகளையும் நியாயப்படுத்துவதுமாக இருந்தது என்பதே. சிதம்பரம் அண்ணாமலை நகரில் 19-2-1956 இல் பெரியார் ஆற்றிய உரையின் கீழ்க்காணும் பகுதியைப் பாருங்கள், இதே பிரச்சனை இன்றும் கூட இருக்கின்றதுதானே… (20/7/1930 இல் காஸ்மோபொலிட்டன் வாசகசாலைத் திறப்புவிழாவில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவிலும் இதே விடயங்களைச் சுட்டிக்காட்டி இருப்பார்)
//ஆகவே, மத சம்பந்தமான கொள்கைகள், அபிப்பிராயங்கள், முதலியவைகள் எல்லாம் அந்தக் காலத்திய உலக நிலை, அறிவு நிலை, ஆராய்ச்சி சவுகரிய நிலை, கல்வி நிலை ஆகியவைகளுக்கு ஏற்றவைகளாகவே இருக்கும். ஆதலால் அவை இந்தக்கால அறிவு, ஆராய்ச்சி சவுகரியம் முதலியவைகளுக்கு ஏற்றதாக இருக்க முடியாது. இந்த குறைபாடானது உலக தோற்றத்தின்-மனித வாழ்க்கையின் ஒவ்வொரு தன்மையிலும் இருக்க வேண்டியதாகிவிட்டது. ஆதலால் கல்வியும் மதமும் கலந்தால் அறிவு சூன்யமாக வேண்டியதைத் தவிர வேறில்லை.
உதாரணமாக தற்கால நிலைமையின் பயனாய் ஏற்பட்ட ஆராய்ச்சி சவுகரியத்தை கைகொண்ட ஒரு வான சாஸ்திரி கிரகணத்திற்கு காரணம் சொல்லுவதாய் இருந்தால், அவன் பூமியுடையவும், சூரியனுடையவும் நடப்பைக் கொண்டு கணக்குபோட்டு பார்த்து ஒன்றின் நிழலால் மற்றொன்றின் ஒளி இன்ன காலத்தில் இன்ன அளவுக்கு மறைக்கப்படுகின்றது என்று சொல்லுவான். இதே விஷயத்தைப் பற்றி மத சாஸ்திரியை கேட்டால் அவன் சூரிய, சந்திரன்களுக்கு ஏற்பட்ட சாபத்தின் பயனாய் ராகு,கேது என்னும் இரண்டு கெட்ட கிரகங்களால் ஏற்படும் பீடைகள் என்று சொல்லுவான்.
இதில் இருக்கும் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், ஒரே ஆசாமி வானசாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது பூமியின் நிழலால் மறைக்கப்படுகின்றதென்றும் மதசாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது சூரியன், சந்திரன் என்னும் தேவர்களை ராகு,கேது என்னும் பாம்புகள் விழுங்குகின்றன என்றும் சொல்லுவான்.
இதுமாத்திரமல்லாமல் வானசாஸ்திரியாய் இருந்து சூரியக்கிரகணத் தன்மையைப் பிரதியட்சப் பாடமாக சில சாதனங்களைக் கொண்டு பிள்ளைகளுக்குப் பாடம் கற்பித்துவிட்டு வீட்டுக்குப் போனவுடன் ராகு, கேது பாம்புகள் விழுங்குகின்றன என்பதற்குத் தகுந்தபடி தோஷ பரிகாரத்திற்கு ஸ்நானம் செய்யவும் தர்ப்பணம் செய்யவும் சங்கல்பம் செய்து கொள்ளவும் சாந்தி செய்யவுமான காரியத்தில் ஈடுபடுகின்றான். ஆகவே கல்வியுடன் மதத்தையும் கலக்குவதால் மனிதனுடைய பகுத்தறிவும் அறிவு சுதந்திரமும் எவ்வளவு கேவலமான நிலைமைக்கு வந்து விட்டது என்பதை நினைத்துப் பாருங்கள்.
அதிலும் நமது மதசம்பந்தமான அபிப்பிராயங்களும், குறிப்புகளும் மிகமிகப் பழமையானதினால் காட்டுமிராண்டித்தனமான காலத்து எண்ணங்களையும் அதன் முடிவுகளையும் இன்று எவ்வளவோ தெளிவான காலத்தில் கட்டிக்கொண்டு அழுவதுடன் அதைக் கல்வியுடன் கலக்கி கல்வியையே பாழ்படுத்திவிட்டோம்.
Leave a Reply