காலம் : 30 ஆண்டு | 54 இதழ்

unnamedகாலம் இதழ் தொடங்கி 30 ஆவது ஆண்டு நிறைவையும் சொற்களில் சுழலும் உலகு நூல் வெளியீட்டு விழாவையுமொட்டி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு காலம் இதழ் பற்றிப் பேசியிருந்தேன்.  காலம் இதழிற்கும் அல்லது காலம் செல்வத்திற்கும் எனக்கும் இருக்கின்ற தொடர்பு நான் கனடாவுக்கு வந்து புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய காலந்தொட்டு இருக்கின்றது எனலாம்.   அவரது வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சிகளும் அவர் ஒருங்கிணைத்த பல்வேறு கூட்டங்களும் என்னளவில் முக்கியமானவை.  அந்த வகையில் செல்வம் அவர்கள் நன்றிக்குரியவர்.  நான், வாழும் தமிழ் ஒருங்கிணைத்திருக்கின்ற பல்வேறு நிகழ்வுகளில் கட்டுரைகள் வாசித்திருக்கின்றேன் ஆனாலும், இதுவரை காலம் இதழ் பற்றிய அறிமுக நிகழ்வுகளில் கட்டுரை வாசிப்பவனாகப் பங்கேற்றதில்லை.  காலத்தின் ஐம்பதாவது இதழ் வெளியானபோது அதுவரை வெளியான ஐம்பது காலம் இதழ்களையும் செல்வம் அவர்களிடமிருந்து பெற்று வாசித்திருந்தேன்.  காலம், அதன் பயணம் பற்றிய விபரமானதும் விரிவானதுமான ஓர் ஆய்வாக அந்தக்கட்டுரை அமையவேண்டும் என்ற நோக்கத்துடன் ஒவ்வொரு இதழ் குறித்தும் குறிப்புகள் எடுத்தும் வைத்திருந்தேன்.  ஆயினும் நேரநெருக்கடிகள் மற்றும் வேறு குறுக்கீடுகள் காரணமாக அதனை நினைத்தவிதத்தில் செய்ய முடியவில்லை.  இந்தக் குறிப்பானது காலம் பற்றியதும் இதழ்கள் பற்றியதுமான சில கருத்துகளைப் பகிர்வதாக அமையும்.

1990 ஜூலை மாதத்தில் முதலாவது காலம் வெளிவந்திருக்கின்றது.  2020 ஜனவரி வரை, 30 ஆண்டுகளில் 54 இதழ்கள்!  முதலாவது இதழில் வருடத்துக்கு 4 இதழ்கள் என்கிற நோக்குடன் தொடங்கிய காலம் பின்னர் 6வது இதழில் வருடத்துக்கு 6 இதழ்களும் 3 புத்தகங்களும் என்றும் தனது நோக்கினை தெரிவித்திருந்தது.  ஆயின்னும் அந்தக் குறிக்கோள்களை எந்த ஒருவிதத்திலும் காலம் இதழால் அடையமுடியவில்லை.  வேறொரு இதழிற்கு ஆசிரியராக இருப்பதாலும், பதிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவன் என்ற வகையிலும் கனவுகளுக்கும் அடைவுகளுக்கும் இடையிலான இடைவெளியையும் காலம் எதிர்கொண்டிருக்கக் கூடிய சவால்களையும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.

காலத்தின் முதலாவது இதழில் ஆசிரியராக செல்வமும் வெளியிடுபவராக கே.வி. மூர்த்தியின் (குமார் மூர்த்தி) பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.  காலத்திற்கு காலம் ஆசிரியர் குழுவினரும் ஆலோசகர்களும்  மாறி வந்திருக்கின்றனர்.  குமார் மூர்த்தி, செழியன், ஆனந்தப் பிரசாத், என். கே. மகாலிங்கம், சரவணன், அ. கந்தசாமி, உஷா மதிவாணன் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் அதன் இணை ஆசிரியர்களாகவும் ஆலோசகர்களாகவும் இடம்பெற்றிருக்கின்றனர்.

அதுபோல காலத்தின் முதலாவது இதழில் அதன் முகவரியாக வயல் என்கிற அமைப்பின் இந்திய முகவரியும், கனடா மற்றும் இலங்கை முகவரிகளுடனும் வெளிவந்திருக்கின்றது.  இதன்பிறகு இரண்டாவது இதழில் பிரான்ஸ் முகவரி ஒன்றும் காலத்தின் முகவரியாக சேர்க்கப்பட்டிருந்தது.  பின்னர் ஏழாவது இதழ் முதல் கனடிய முகவரியுடன் மட்டுமே காலம் வெளிவந்தது.  செல்வம் அவர்களுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கையில் இது பற்றிக் கேட்டபோது அந்தக் காலப் பகுதிகளில் நடந்த ராஜீவ் காந்தி கொலைக்குப்பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட சூழல் காரணமாக ஈழத்தவர் பத்திரிகை ஒன்றைக் கொண்டு நடத்துவதை (அல்லது முகவரியுடன் கொண்டு நடத்துவதில்) தமிழகத்தவருக்கு பாதுகாப்புக் காரணமாக ஏற்பட்ட தயக்கம், பிரான்சில் காலம் இதழுக்கான தொடர்பாளராக இருந்த சபாலிங்கம் கொலை செய்யப்பட்டது போன்ற பல்வேறு காரணிகளைச் சொன்னார்.  அன்றைய போர்க்காலச் சூழலின் பின்னணியுடன் இதழ்களின் இந்த அசைவியக்கங்களை இணைத்து நோக்குவது நல்லதோர் வாசிப்பாக அமையும்.

காலத்தின் சிறப்பம்சமாகக் குறிப்பிடப்படவேண்டியவை அதன் சிறப்பிதழ்களாகும்.  மஹாகவி, சுந்தர ராமசாமி, குமார் மூர்த்தி, ஏஜே கனகரத்னா, கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், சிரித்திரன் சுந்தர், பத்மநாப ஐயர், ஏ.சி. தாசீசியஸ், கா. சிவத்தம்பி, அசோகமித்திரன், மல்லிகை ஜீவா, செல்வா கனகநாயகம், நாச்சிமார் கோவில் கண்ணன், தெளிவத்தை ஜோசப், குழந்தை சண்முகலிங்கம் போன்ற ஆளுமைகளுக்குச் சிறப்பிதழ்களை வெளியிட்டிருப்பதுடன் நாடகச் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், அறிவியல் சிறப்பிதழ் மற்றும் இயல்விருதுச் சிறப்பிதழ்களையும் காலம் வெளியிட்டிருக்கின்றது.  இந்தச் சிறப்பிதழ்களில் இடம்பெற்ற குறித்த ஆளுமைகளின் பேட்டிகளும், ஆளுமைகள் குறித்த அறிமுகக் கட்டுரைகளும் முக்கியமானவை என்றே கருதுகின்றேன்.

காலத்தின் தேர்வுகள், அதன் விடுபடல்கள், விலக்குதல்கள், மற்றும் பார்வைக் குவிப்புகள் குறித்தும் எனக்கு வேறுபட்ட பார்வைகளும் அவை குறித்த புரிதல்களும் விமர்சனங்களும் இருக்கின்றன.  குறிப்பாக காலத்தின் உள்ளடக்கம் குறித்தும் அதில் வெளிப்படும் ஆதிக்க அரசியல் மற்றும் அரசியல் நீக்கம் ஆகியவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எனக்குண்டு, அவை பற்றி செல்வம் அவர்களிடமும் நண்பர்களுடனான உரையாடல்களிலும் குறிப்பிட்டே இருக்கின்றேன்.  ஆயினும் அந்த நிலைப்பாட்டினை காலம் பற்றிய பரந்ததோர் பார்வையினூடாக முன்வைப்பதையே ஆரோக்கியபூர்வமானது என்று சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.  1990 இல் காலம் வெளியாகத் தொடங்கியது முதல் 2000 வரையான காலப்பகுதியில் ஈழத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் வெளியான ஈழத்தவர்களின் இதழ்கள் என்று பார்த்தால் மல்லிகை, ஓசை, தூண்டில், நான்காவது பரிமாணம், தாயகம் (கனடா), தாயகம் (ஈழம்), மூன்றாவது மனிதன், ழகரம், தூண்டி, எக்ஸில், உயிர் நிழல், கலைமுகம், போன்ற இதழ்களைக் குறிப்பிடலாம். ஞானம் 2000 ஆம் ஆண்டில் தனது முதலாவது இதழுடன் பயணத்தைத் தொடங்குகின்றது.  இந்த இதழ்களில் கலைமுகம், ஞானம், தாயகம் (ஈழம்) ஆகிய இதழ்களைத் தவிர ஏனைய இதழ்கள் அனைத்தும் தற்போது நின்றுவிட்டன.  குறிப்பாகச் சொன்னால், காலம் இதழ் வெளிவரத் தொடங்கியதிலிருந்து பத்தாவது ஆண்டுக்காலமான 2000 வரை புலம்பெயர் நாடுகளில் வெளியான ஏனைய அனைத்து இதழ்களுமே தற்போது நின்றுவிட்டன.  இப்படியான ஒரு சூழலில் காலம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் அதன் தொடர்ச்சித் தன்மையை முக்கியமான ஓர் அம்சமாகவே பார்க்கின்றேன்.

இன்னொரு விதத்தில் நோக்கினால், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வெளியான இதழ்கள் என்று எடுத்துக்கொண்டால், மல்லிகை 400 இற்கு மேற்பட்ட இதழ்களும் ஞானம் 239 இதழ்களும் ஜீவநதி 136 இதழ்களும் தாயகம் (ஈழம்) 100 இதழ்களும்  இதுவரை வெளிவந்திருக்கின்றன; சிரித்திரனின் 92 இதழ்களை நூலக நிறுவனம் ஆவணப்படுத்தியிருக்கின்றது, சில இதழ்கள் விடுபட்டிருக்கலாம் என்று கருதினால் சிரித்திரனும் 100 இதழ்கள் வெளியாகி இருக்கக் கூடிய சாத்தியம் இருக்கின்றது.  ஈழத்தவராகிய எங்களது 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழிதழ் வரலாற்றில் 100இற்கும் மேற்பட்ட இதழ்களை வெளியிட்ட கலை இலக்கிய இதழ்களாக 5 இதழ்களையே கண்டறியக்கூடியதாக இருக்கின்றது என்ற யதார்த்தத்துடன் சேர்த்தே காலம் 54 இனையும் பார்க்கவேண்டி இருக்கின்றது.  தமிழின் சிறப்பு அதன் தொன்மையும் தொடர்ச்சியும் என்று கா. சிவத்தம்பி அவர்கள் சொன்னது போல, இதழொன்றின் சிறப்பானது அதன் உள்ளடக்கத்திலும் அதன் தொடர்ச்சியிலும் இருக்கின்றது என்றே கருதுகின்றேன்.

இங்கே 100 இதழ்களுக்கு மேலாக வெளிவந்த இதழ்கள் என்று குறிப்பிட்ட இதழ்கள் என்று எடுத்து நோக்கினால் ஒரு பொதுத்தன்மையினையும் பார்க்கலாம்.  இவற்றில் மல்லிகையும் தாயகமும் கட்சி சார்ந்த கட்சிப் பின்புலத்தினை ஆதரவாகக் கொண்ட இதழ்கள்.  ஞானமும், ஜீவநதி போன்றன காலத்தைப் போன்றே அந்தந்த இதழ்களின் பிரதம ஆசிரியர்களாக இருக்கின்ற தனிநபர்களின் பெருமுயற்சிகளாலும், அவர்களின் தொடர்புகள், அவர்களது தீர்மானங்கள் ஆகியவற்றையே முன்வைத்து வெளிவருகின்ற இதழ்கள்.  இதழ்களை நாம் சமூக நிறுவனங்கள் என்கிற பிரக்ஞையுடன் அணுகுவதன் முக்கியத்துவம் குறித்து இங்கே நாம் மீளவும் உரையாடவும் வலியுறுத்தவும் வேண்டியிருக்கின்றது.  அதற்கு அவை நிறுவனமயமாகவும் அமைப்பாகச் செயற்படவும் வேண்டியது அவசியமானதாகும்.  குறைந்தபட்சம் நோக்குகள், வேலைத்திட்டங்கள், அவற்றை அடைவதற்காக செயற்படும் ஒரு உள்ளகக் குழுவினர், அவர்களுடான ஒரு திறந்த உரையாடல் என்கிற நடைமுறைகளை நோக்கிப் பயணிக்கவேண்டியது அவசியமானதாகும்.  அப்படியான ஒரு பொறிமுறையில் இயங்குகின்றபோது தாம் செய்கின்ற விடுபடல்கள், விலக்குதல்கள், மற்றும் பார்வைக் குவிப்புகள் பற்றிய கருத்தியல் ரீதியான அல்லது அணுகுமுறை மற்றும் செயற்படும் முறை சார்ந்த ஒரு விளக்கத்தினை வழங்கக்கூடிய ஒரு நிலையை அடைய முடியும்.  அதைவிட முக்கியமாக இந்த இதழ்கள் தொடங்கப்பட்ட நோக்கங்களுக்காக இவற்றைத் தொடங்கியவர்கள் இயங்குகின்ற காலத்தைத் தாண்டியும் இந்த இதழ்கள் அந்த நோக்கங்களுக்காக இயங்கவேண்டுமானால், அவை நிறுவனமயமாக்கப்படுதல் முக்கியமானதாகும். .

காலத்தின் உள்ளடக்கத்தை எடுத்துக்கொண்டோமானால், செல்வம் அவர்களைத் தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும், அவருக்குப் பிடித்த விடயங்கள்; கவிதை, சிறுகதை, நாடகம் என்பன.  இவற்றின் தொடர்ச்சியான தொகுப்புகளாகத்தான் காலம் வெளிவந்துகொண்டிருக்கும்.  அரசியல் பற்றி வரும், சமூக ஒடுக்குமுறைகள் பற்றி வரும்; ஆனால் அவை காலம் இதழின் நோக்கங்களுக்கானது என்றமையாது செல்வம் அவர்களுக்குப் பிடித்ததாகவோ அல்லது அவருக்கு பரிந்துரை செய்யப்பட்டனவாகவோ தான் அமையும்.  காலம் இதழ் எந்தெந்த சவால்களையெல்லாம் எதிர்கொண்டு தொடர்ந்து வெளிவருகின்றது என்று சொன்னது போலவே அது எந்தெந்த விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று சொல்வதும் என் கடமையாக அமைகின்றது.

காலத்திற்கான ஆசிரியர் – இணை ஆசிரியர்கள் – ஆலோகர்கள் – வெளியீட்டாளர்கள் என்கிறதான ஒரு குழுமம் இருக்கின்றது.  இந்தக் குழுமம் ஒன்றினைந்து உரையாடி காலத்திற்காக நோக்குகள், கொள்கைகள், அவற்றை அடைவதற்கான வேலைத்திட்டங்கள், கலை அரசியல் நிலைப்பாடுகள் என்பனபற்றி தெளிவானதோர் முடிவுக்கு வரவேண்டும்.  அதனூடாகவும் அவற்றின் வழிநடத்தலின் ஊடாகவும் இதழின் உள்ளடக்கத்தையும் அதன் நிலைப்பாட்டையும் தீர்மானிக்கவேண்டும்.  இங்கே ஒரு வரலாற்றுச் சம்பவத்தையும் சேர்ந்து பார்ப்பது முக்கியம்.  இந்தியாவில் 1878 இல் ஹிந்துப் பத்திரிகை தொடங்கப்படுகின்றது.  அதன் ஆசிரியர் குழுவில் இருந்த ஒருவர் 1990 இல் சுதேசமித்திரன் என்கிற தமிழ்ப் பத்திரிகையையும் தொடங்குகின்றார்.  இங்கே முக்கியமான விடயம் என்னவென்றால் அதே 1878 ஆம் ஆண்டே Hindu Free Thought Association என்கிற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு ஆங்கிலத்தில் The Thinker என்றும் தமிழில் தத்துவ விவேசினி என்றும் இரண்டு பத்திரிகைகள் தொடங்ககின்றன.  அதாவது. இன்று இந்தியச் சூழலில் மிக முக்கியமான main stream பத்திரிகையான ஹிந்துப் பத்திரிகை தொடங்குகின்ற அதே ஆண்டு அதற்கு எதிரான மாற்றுப் பண்பாடு, மாற்றுப் பார்வைகளுடனான இதழ்களும் அதே நிலப்பரப்பிலிருந்தே வெளிவந்திருக்கின்றன.  கிறிஸ்து ஆண்டு என்று சொல்லப்படுகின்ற மரபிற்கு மாற்றாக அல்லது எதிர்க் குரலாக Hindu Free Thought Association வெளியிட்ட இதழ்களை இத்தாலிய பகுத்தறிவாளரான ஜோர்டானோ புரூனோ எரியூட்டிக் கொல்லப்பட்ட ஆண்டை மையமாக வைத்தே  ஆண்டுக்கணக்குகளை வெளியிட்டார்கள் என்று தெரியவருகிறது.  அதுமட்டுமல்லாமல் இவர்கள் “சிறு பத்திரிகைச் சங்கடனா” என்ற பெயரில் சிறுபத்திரிகைச் சங்கம் ஒன்றையும் உருவாக்குகின்றார்கள்.  இவை சமய மறுப்பு, கடவுள் மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூக பொருளாதா முரண்பாடு, சாதிய முரண்பாடு, தொண்டை மண்டலப் பகுதிகளில் நிலங்களை மீட்கின்ற போராட்டம் போன்ற விடயங்களைத் தமது பேச்சுப்பொருட்களாக எடுத்துக்கொண்டு இயங்கின.  இந்த விடயத்தினை இன்று நோக்கும்போது பிரதானமாக இரண்டு விடயங்களுக்காக ஆச்சரியமாக இருக்கின்றது;

  1. தமிழில் கிட்டத்தட்ட main stream பத்திரிகைகள் தொடங்குகின்ற காலப்பகுதியிலே அவற்றுக்கு மாற்றாக சிறு பத்திரிகைகள் என்கிற பிரக்ஞையுடன் சிறுபத்திரிகைகள் அமைப்புகளும்தொடங்கியிருக்கின்றன.
  2. அவ்வாறு சிறுபத்திரிகைகள் ஏற்றுக்கொண்ட பேசுபொருட்கள் இன்றும் சிறுபத்திரிகைகளின் பேசுபொருட்களாகவே தொடர்கின்றன.

இந்த அடிப்படைகளை வைத்துப் பார்க்கின்றபோது காலம் இதழானது தன்னைத் தொடர்ந்து தக்க வைத்தும் தனக்கான வாசகப் பரப்பை உருவாக்கியுமே இருந்திருக்கின்றது என்கிற பட்சத்தில் அது தனக்காக கருத்தியல் தளம் குறித்தும் அக்கறைப்படவேண்டும் என்பதை வேண்டுதலாக வைக்கின்றேன்.  காலத்தின் உள்ளடக்கம் பற்றி உரையாடுகின்றபோதெல்லாம் செல்வம் அவர்கள் சொல்வார், நான் இலக்கியக்காரன் என்று, ஆனால் அந்த அணுகுமுறை அதிகமும் அரசியல் நீக்கத்தினைச் செய்துவிடுவதாகவே அமைந்துவிடுகின்றது.  எனக்குத் தெரிந்தளவில் செல்வம் அவர்கள் தன்னளவிலான கலை, அரசியல் நிலைப்பாடுகள் உள்ளவர்.  அவரது அரசியல் நிலைப்பாடே காலத்தின் கலை, அரசியல் நிலைப்பாடாக இருக்கவேண்டும் என்பதில்லை.  ஆனால், ஓர் இதழாக அதன் நிலைப்பாடுகளுக்கும் தேர்வுகளுக்கும் விடுபடுதல்களுக்கும் விலக்குதல்களுக்கும் அடிப்படையான சில நியமங்கள் தேவை.  அப்படி இல்லாமல் போகின்றபோது அது ஒடுக்குமுறையாளருக்கான கூடாரமாகிவிடவே வாய்ப்புகள் அதிகம்.  காலம் பற்றிய எனது விமர்சனங்களுக்கான பிரதான காரணமாக இந்தப் போதாமையையே நான் குறிப்பிடுவேன்.   தனது நீண்ட பயணத்தினைக் காத்திரமாகத் தொடரும் காலம் இந்த விடயங்களிலும் கவனம் செலுத்துவது தமிழ் இலக்கியச்சூழலுக்கும் வளம்சேர்ப்பதாக அமையும்.


1. 2020 மார்ச் 1 அன்று Scarborough Village Community Centre இல் இடம்பெற்ற நிகழ்வில் நிகழ்த்திய உரையின் கட்டுரை வடிவம், இது ஏப்ரல் 2020 தாய்வீடு இதழில் வெளியானது.

2. Hindu Free Thought Association பற்றிய தகவல்களை ரவிக்குமாரின் கட்டுரைத் தொகுப்பான கொதிப்பு உயர்ந்து வரும் இல் இடம்பெற்ற இந்து பத்திரிகை பற்றிய கட்டுரை, இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும் நூலில் இடம்பெற்ற வீ. அரசு எழுதிய “பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சூழலில் நாத்திக இயக்கம்: என்கிற வீ. அரசு எழுதிய கட்டுரை ஆகியவற்றில் இருந்து பெற்றுக்கொண்டேன்.

3. காலம் இதழ்களை நூலகம் நிறுவனம் ஆவணப்படுத்தியிருக்கின்றது.  https://tinyurl.com/ybzesbvf என்கிற இணைப்பில் இதழ்களைப் பார்க்கமுடியும்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: