ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற கரவெட்டிக் கிராமத்தில் பிறந்த கருணா தனது ஆரம்பக் கல்வியை ஹாட்லிக் கல்லூரியில் கற்றுக்கொண்டவர். ஓவியம் பற்றிய ஆர்வம் அவருக்கு சிறுவயது முதலே இருந்ததாகக் கருணா பலதடவைகள் குறிப்பிட்டுள்ளார். இவரது தாயாருக்கும் ஓவியத்தின் ஆர்வம் இருந்தமையும் அவரது மாமனாரான மரியநாயகம் என்பவர் அறியப்பட்ட ஓவியராக இருந்தமையும் ஓவியத்துறையில் தனது ஆர்வம் சிறுவயதிலேயே ஏற்படக் காரணமாக அவர் பலதடவைகள் பதிவுசெய்துள்ளார். பாடசாலைக் காலத்திலேயே சித்திரப் புத்தகங்களை அவர் வரைந்ததாக அவரது பாடசாலைக் கால நண்பர்களூடாக அறியக்கூடியதாக உள்ளது.
ஈழத்தின் தனித்துவமான ஓவியர்களில் ஒருவரும் வளமான ஓவியர்கள் பலருக்கு ஓவியக்கலையைப் பயிற்றுவித்தவருமான மாற்கு அவர்களின் மாணவர்களில் கருணாவும் ஒருவராவார். மாற்கு அவர்கள் குறித்து மிக உயர்வான அபிப்பிராயமும் நேசமும் நிறைந்தவர் கருணா. ஓவியம் மட்டும் என்றில்லாமல் கருணா சிறப்புற்று விளங்கிய கலைத்துறையில் அவரது ஆளுமை மற்றும் வல்லமை சார்ந்து எப்போது நாம் அவரிடம் பேசினாலும் தனக்கு வித்தை கற்றுத்தந்த குருநாதன் என்கிற நெஞ்சார்ந்த நன்றியுடனேயே கருணா குறிப்பிடுவது வழக்கம். கருணாவைப் பொறுத்தவரை மாற்கு அவர்களே அனைத்துக்குமான தொடக்கம்; இதனை அவர் வெகுவாக நம்பினார். மாற்கு அவர்களுக்கான வகிபாகம் சரியான முறையில் பதிவுசெய்யப்படவில்லை என்று அவர் கருதுகின்ற எல்லா நபர்கள் குறித்தும் சந்தர்ப்பங்களின் போதும் அவர் இலகுவாக நிதானமிழந்து சீற்றாமடைபவராக இருந்திருக்கின்றார். இதனை அவரது தனிப்பட்ட பலவீனமாகக் கருதாமல் அவர் மாற்கு அவர்கள் மீதுகொண்டிருந்த அளவிலா நேசத்தின்பாற்பட்டதாகவே இப்போது புரிந்துகொள்ளமுடிகின்றது.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கனடாவுக்கு வந்த கருணா, கனடாவிலும் வரைகலை தொடர்பான தொழினுட்பங்கள் சிலவற்றை முறையாகக் கற்றுக்கொண்டார். 1992/93 காலப்பகுதிகளில் இருந்து டிஜிற்றல் முறையில் ஓவியங்களை வரைந்துவருகின்ற கருணாவே, ஈழத்தமிழர்களில் டிஜிற்றல் முறைகளில் ஓவியங்களை முதன்முதலில் வரைய ஆரம்பித்தவருமாவார். இந்தக் காலப்பகுதியில் தான் கருணா பல்வேறு இதழ்கள், மலர்கள், நூல்கள் போன்றவற்றின் வடிவமைப்பையும் அட்டை வடிவமைப்பையும் செய்யத் தொடங்கினார். கருணா தேடல்கள் நிறைந்த நுன்னுணர்வு நிரம்பிய தீவிரமான ஒரு வாசகரும் ஆவார். கலை, இலக்கியம், வரலாறு, தொழினுட்பம் என்பன குறித்து தொடர்ச்சியாக வாசித்தும் தன்னை எப்போதும் இற்றைப்படுத்திக்கொண்டிருப்பவராகவும் கருணா இருந்தார். அவரது வடிவமைப்புகள் தனித்துவமானவையாகவும் படைப்பாழம் மிக்கவையாகவும் இருக்க அவரது வாசிப்பும் தேடலும் முக்கிய காரணமாகும். பல்வேறு சிற்றிதழ்களை அவர் வடிவமைத்திருக்கின்றார், அத்துடன் அவற்றை முழுமையாக வாசித்து உள்வாங்கியும் இருக்கின்றார். சமகாலத்தில் புலம்பெயர் சூழலில் இருந்து வெளிவந்த காலம், எக்ஸில், மற்றது, ழகரம், தேடல். உலகத் தமிழோசை, உரையாடல், நுட்பம், முழக்கம், தாய்வீடு, விளம்பரம், தேசியம், வைகறை, சுதந்திரன் போன்ற பல்வேறு இதழ்கள் / பத்திரிகைகளினது வடிவமைப்பு, இலச்சினை உருவாக்கம் போன்றன கருணாவின் கைவண்ணமே. இது தவிர எண்ணிறைந்த மலர்களினதும் நூல்களினதும் வடிவமைப்பையும் அட்டை உருவாக்கத்தையும் கருணா செய்திருக்கின்றார். கருணா 500க்கும் மேற்பட்ட நூல்களின் அட்டைப்படத்தினை வடிவமைத்திருப்பதாக ஓவியர் கிருஷ்ணராஜா பதிவுசெய்திருக்கின்றார்.
ஒருவருக்கு ஓவியத்திலிருக்கின்ற பரிச்சயமும் புலமையும் அவர்களுக்கு வெவ்வேறு தொழில்முறைகளில் (வரைகலை நிபுணர், திரைப்படத் துறை, அரங்க நிர்மாணம், இல்ல அழகாக்கம், விளம்பரத்துறை) சிறந்துவிளங்கவும் அவற்றினைத் தனித்துவமாக இருக்கக் கூடியவகையில் பேணவும் உதவும் என்பதை கருணா நேர்காணலிலும் தனிப்பட்ட உரையாடல்களிலும் வலியுறுத்துவது வழக்கம். அதற்கான வாழும் சான்றாகவும் அவர் வடிவமைத்த விளம்பரங்கள், சுவரொட்டிகள், இலச்சினைகள் அமைகின்றன. ரொரன்றோவில் இருக்கின்ற பல்வேறு தொழில் முனைவர்களும் வர்த்தகர்களும் கருணா வடிவமைத்த விளம்பரங்கள் தமது வளர்ச்சிக்கு எவ்வளவு ஆதாரமாக அமைந்திருந்தன என்பதை அவரது மறைவிற்குப்பின்னர் பதிவுசெய்திருக்கின்றார்கள்.
அடிப்படையில் ஓர் ஓவியராக இருந்தபோதும் கருணாவுக்கு வரைகலை நிபுணர், புகைப்படக் கலைஞர், அரங்க நிர்மாணம், நாடகச் செயற்பாடுகள், எழுத்தாளர் என்கிற பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. ரொரன்றோவில் நாடகச் செயற்பாடுகளின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழுகின்ற மனவெளி நாடகக் குழுவினை ஆரம்பித்தவர்களில் கருணாவும் ஒருவர். அதற்குப்பிறகு 2014 முதலாக ஒவ்வோரண்டும் தாய்வீடு பத்திரிகை நடத்துகின்ற அரங்கியல் விழாவில் கருணாவின் பங்களிப்பு அபரிதமானது. 2014 முதல் நடந்த ஐந்து அரங்கியல் விழாக்களிலும் கருணாவுடன் மிக நெருக்கமான வாய்ப்பு எனக்குக் காலத்தாற் கனிந்தது. அதுபற்றியெல்லாம் மிக விரிவாக எழுதவேண்டும். அந்த 5 நிகழ்வுகளிலும் கருணா ஒருங்கிணைத்து பயிற்றுவித்தபடி ஒளிநிர்வாகம் செய்பவனாக நான் இருந்தேன். அவ்விதம் ஒளிநிர்வாகம் செய்யும்போது முதல் நாளில் இருந்தே என்ன உணவுகள் உண்ணவேண்டும், எவற்றைத் தவிர்க்கவேண்டும், எவ்விதம் உடையணியவேண்டும் என்பது முதற்கொண்டு அவர் கவனம் எடுப்பதுடன் அதை அறிவுறுத்தவும் செய்வார். தனது துறைசார்ந்து மிகவும் விட்டுக்கொடுப்பில்லாத அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் கருணா. அவரது நண்பர்கள் பலராலும் அவர் பிழையாக விளங்கப்பட அவரது இந்த தொழில்பக்தியும் விட்டுக்கொடுப்பின்மையுமே காரணமாக அமைந்தது எனலாம்.
புதிய தொழினுட்பங்கள் பற்றித் தேடிதேடித் வாசித்து தன்னை இற்றைபப்டுத்து வைப்பவராக இருந்த கருணா தொழினுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்களையெல்லாம் நாம் பயன்படுத்தவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துபவராக இருந்தார். தாய்வீடு நடத்திய அரங்கியல் விழாக்களில் அவர் தொடர்ந்து இதனைக் கையாண்டதுடன், தொழினுட்பக் கோளாறுகள் ஏற்படுத்தக் கூடிய நெருக்கடிகள் சில கசப்பான நினைவுகளைத் தந்தபோதும் தொழினுட்பக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளாமல் அவற்றுக்கு அவர் மீது குற்றப்பத்திரிகைகளைச் சிலர் பரப்புரைச் செய்தபோதும் கூட தொடர்ச்சியாக தொழினுட்பத்தை நம்புபவராகவே இருந்தார்.
ஓவியம், ஓவிய வரலாறு குறித்து தமிழ்ச் சமூகத்துக்கு இருந்த போதாமை குறித்து அவருக்கு தார்மீகக் கோபம் இருந்த அதேநேரம், அவை குறித்த பிரக்ஞைகளை உருவாக்கவேண்டும் என்பதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தார். 1989 இல் யாழ்ப்பாணத்தில் ஓவியர் வாசுகியினதும் மாற்கு மாஸ்ரரின் ஏனைய மாணவர்களதும் ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டபோது கருணாவின் ஓவியங்களும் அவற்றில் இடம்பெற்றிருந்தன. அதுவே கருணாவின் ஓவியங்கள் இடம்பெற்ற முதலாவது ஓவியக் கண்காட்சியாகும். அதன் பிறகு 1993 இல் கனடாவில் இருக்கின்ற தேடகம் அமைப்பினர் ஆடிக்கலவரத்தின் பத்தாண்டு நிறைவினை நினைவுகூரும் விதமாக கருணாவினதும் ஜீவனதும் ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சியை ஒருங்கமைத்திருந்தனர். அதன் பின்னர் காலம் இதழ் வாழும் தமிழ் என்கிற பெயரில் தொடர்ந்து ஒழுங்கு செய்த நிகழ்வுகளில் ஒன்றாக கருணாவின் ஓவியக் கண்காட்சியும் 1996 இல் இடம்பெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளும் கனடாவிலேயே இடம்பெற்றன. அதன் பிறகு 2004 இல் யாழ்ப்பாணத்தில் முதுசம் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த பதின்மூன்று யாழ்ப்பாணத்து ஓவியர்கள் என்கிற கண்காட்சியில் கருணாவின் ஓவியமும் இடம்பெற்றிருந்தது. இதற்குப்பின்னர் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கனடாவில் மார்க்கம் மாநகர சபையால் ஒருங்கமைக்கப்பட்ட பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக கருணாவின் ஓவியக் கண்காட்சி பலத்த வரவேற்புடன் நடந்தது. அந்தக் கண்காட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் மற்றும் கவனிப்பினூடாக அவரது ஓவியக் கண்காட்சிகள் வினிபெக்கில் உள்ள கனடிய மனைத உரிமைகள் அருங்காட்சியகத்திலும் ஒன்ராரியோ பாராளுமன்றத்திலும் நடைபெற்றன. இதற்கு முன்னர் கற்சுறா ஒழுங்கு செய்திருந்த ஐரோப்பிய ஓவியங்கள் பற்றிய கலந்துரையாடல் என்கிற நிகழ்வானது அண்மைக்காலத்தில் ஓவியக்கலை தொடர்பாக தமிழ்ச் சூழலில் இடம்பெற்ற ஆகச்சிறந்த நிகழ்வென்று சொல்லமுடியும். இந்நிகழ்வு சமூக வலைத்தள தொழினுட்பங்களின் சாத்தியத்தால் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதுடன் சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவலாகச் சென்றடைந்து ஓவியக்கலை பற்றிய ஆர்வத்தைப் புதியவர்களுக்கும் எடுத்துச் சென்றிருந்தது. அதன் அடுத்த கட்டமாக கனடாவில் இருந்து தாய்வீடு பத்திரிகையில் ஓவியங்கள் தொடர்பான தொடர்கட்டுரைகளையும் கருணா எழுதத் தொடங்கியிருந்தார். தாய்வீட்டில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் ஓவியம் பற்றி கருணாவின் ஞானத்தின் தெறிப்புகளாக வந்து ஆர்வலர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தன. ஆயினும் இவை பரவலான கவனத்துக்குப் போய் ஓவியம் பற்றிய உரையாடலை உருவாக்கவில்லை என்கிற ஏமாற்றம் கருணாவிடம் இருந்தது. ஓவியம் பற்றிய பிரக்ஞையை உருவாக்குவதற்கான போதுமான செயற்பாடுகள் இல்லாத ஒரு சூழலில் முனைப்புடன் செயற்பட்ட கருணாவுக்கு அந்த வருத்தமும் ஏமாற்றமும் வருவது நியாயமானதே.
திரைப்படம், வரலாறு, பூர்வீக மக்கள், மரபுரிமை சார்ந்து கருணாவின் தேடலும் ஞானமும் விசாலமானது. அப்போது நான் McCowan என்கிற தெருவில் குடியிருந்தேன், ஒருநாள் கருணாவை காரில் ஏற்றிக்கொண்ட எனது வீடு சென்று பின்னர் வேறெங்கோ சென்றுகொண்டிருந்தபோது “உங்களுக்கு இந்த McCowan இன் கதை தெரியுமா என்று கேட்டார். இல்லை என்றபோது, ஏமாற்றத்துடன், நீங்கள் இதைக் கட்டாயம் தெரிந்துவைத்திருந்திருக்க வேண்டும், இதெல்லாம் மரபுரிமை சார்ந்த விடயம் தானே என்று வலிறுத்திச் சொல்லிவிட்டு தானே McCowan யாரென்று சொல்லத்தொடங்கினார். எம்மைச் சுற்றி இருக்கின்ற ஒவ்வொரு பொருட்களது வரலாற்றையும் தெரிந்திருக்கவேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. தனிப்பட, அப்படித் தேடித் தேடித் தெரிபவராகவும் தெளிபவராகவும் அவர் இருந்தார். தவிர சமூக நீதி குறித்தும் சாதி ஒழிப்பும் குறித்து அவருக்கு வலுவான நிலைப்பாடு இருந்தது. ஒருமுறை தென்புலோலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்று நான் ஒருவரைக் குறிப்பிட்டு நான் எழுதியபோது இப்படியா ஊர்ப்பெயரின் பிரயோகங்களின் பின்னால் இருக்கக் கூடிய சாதிய அடையாளங்களைத் தவிர்க்கவேண்டும் என்று எனக்குத் தொலைபேசியில் அழைத்து அறிவுறுத்தியது இப்போதும் நினைவில் இருக்கின்றது. அவ்விதமான கூர்மையான அவதானத்துடனும் அர்ப்பணிப்புடனும் பிணைப்புடனுமே அவர் தாய்வீடு பத்திரிகையுடனும் இருந்தார். அவருடனான தொலைபேசி உரையாடல்கள் வழமையானவை என்றாலும் ஒவ்வொரு மாதமும் தாய்வீடு பத்திரிகை வந்த ஓரிரு நாட்களின் பின்னர் வரும் அவரது அழைப்புகள் விசேடமானவை. நேரடியாக பேப்பர் பார்த்துவிட்டீங்களா என்றே அவரது அந்த உரையாடல் தொடங்கும், இல்லை என்றால் வேறுவிடயங்களைப் பேசிவிட்டு பின்னர் இரண்டு நாட்களில் அழைப்பார். அப்போதும் வாசித்துமுடிக்கவில்லை என்றால், ஒரு சில ஆக்கங்களைச் சொல்லி அவற்றை வாசியுங்கோ ஒரு அரை மணித்தியாலத்திலோ அல்லது ஒரு மணித்தியாலத்திலோ அழைக்கின்றேன் என்பார். அவருக்கு அந்த ஆக்கங்களோ அல்லது அவை பற்றிய எனது கருத்துகளோ முக்கியமானவை, ஓரிரு சமயங்கள் அவர் அழைக்கின்றபோது நான் கணனியை அணைத்துவிட்டு தூங்கத்தயாராகி இருப்பேன். அப்போது அவர் அழைப்பார், கருணா அண்ணை, படுக்கப்போறேன் என்றோ கணனிய அணைத்துவிட்டேன் என்று சொன்னாலோ அவருக்கு அவை எல்லாம் பொருட்டாக இருக்காது, ஒருக்கா கொம்பியூட்டரை ஓன் பண்ணி உங்களுக்கு நான் கடைசியா அனுப்பி இருக்கின்ற இமெயில இருக்கிறதை பாருங்கோ என்றோ அதில இருக்கிற லிங்கிற்குப் போங்கோ என்றோ சொல்லுவார். சில சமயங்களில் அவர் என்னை அதிகாரம் செய்கின்றாரோ என்றுகூட நான் நினைத்திருக்கின்றேன், ஆனால் அவரது தொலைபேசி அழைப்பு இனி ஒருபோதும் வராது என்பதை எதைச் சொல்லித் தேற்றுவது!
நண்பர் கருணா (அண்ணா) அவர்கள் இழப்பினைத் தொடர்ந்து இனிய நண்பர் எமிலின் வேண்டுகோளுக்காக கலைமுகத்துக்காக எழுதிய கட்டுரை இது. கருணா அவர்கள் பற்றி நான் தாய்வீட்டிலும் இதே காலப்பகுதியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன், அது இந்தக் கட்டுரைக்குப் பின்னர் எழுதப்பட்ட கட்டுரை. அந்தக் கட்டுரைக்கான இணைப்பு இங்கே.
கருணா அவர்கள் பற்றி எழுத இன்னமும் சில மிச்சமுள்ளது என்பதை இவ்வாண்டு தாய்வீடு அரங்கியல் விழாவிலும் கலையரசி நிகழ்விலும் மேடை நிர்வாகத்தைக் கையாண்டபோது உணர்ந்தேன். அது பற்றி இன்னோர் பொழுதுவில் எழுதுவேன்.
Leave a Reply