யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியரும் பல்வேறு பாடநூல்களை எழுதியவருமான பிரான்சிஸ் மாஸ்ரர் என்றழைக்கப்படுகின்ற மனுவேல்பிள்ளை பிரான்சிஸ் அவர்கள் நவம்பர் 18 அன்று தனது 91வது வயதில் இயற்கையெய்தியிருக்கின்றார். அவரது இழப்பு, பலவாண்டுகளுக்கு முன்னர் அவரிடம் கற்ற பல்வேறு மாணவர்களுக்கும் கூட ஏற்படுத்தியிருக்க்கின்ற தாக்கத்தை அறியக்கூடியதாக இருக்கின்றது.
பிரான்சிஸ் மாஸ்ரரிடம் நான் கல்விகற்கவில்லை; ஆனாலும் அவரிடமிருந்தும் கற்றுக்கொண்டேன்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் 2017 ஆம் ஆண்டிற்கான கலையரசி நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியரான பிரான்சிஸ் அவர்களை ஒரு சிறு காணொலி ஒன்று எடுக்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். அதற்காக நானும் சுரேஷ் அண்ணா அவர்களும் பிரான்சிஸ் அவர்கள் இருக்கின்ற வாட்டர்லூ என்கிற நகருக்கு அவரைச் சந்திக்கச் சென்றோம். சில பூர்வாங்க ஆயத்தங்களைச் செய்தபோதும் உண்மையில் ஆசிரியர் அவர்களைப் பற்றித் தெரியாத அளவில் பெரிதாக ஆர்வம் இல்லாமலே அவரை நேர்காணல் செய்யச் சென்றேன்.
கிட்டத்தட்ட 2 மணிநேரம் நீண்ட பயணத்தில் சுரேஷ் அண்ணா அவர் பற்றிச் செய்த அறிமுகங்கள் அவர் கல்விமூலமாக சமூகமாற்றத்தையும் சமத்துவத்தையும் உருவாக்க நினைப்பவர் என்ற எண்ணத்தைத் தர அவரைச் சந்திக்க ஆர்வமுற்றிருந்தேன். அவர் வீட்டில் நுழைந்ததும் அங்கே வாசலுக்கு அருகே மாட்டப்பட்டிருந்த பெரியார் படத்தைக் கண்டதும் உண்மையில் எதிர்பாராத மகிழ்ச்சியுற்றேன் என்றே சொல்லவேண்டும். பெரியார் பற்றிக் கேட்டபோது அவர் உடனே உற்சாகமடைந்து பேச ஆரம்பித்ததும் அவரது முகபாவனையும் இப்போதும் மனதிலிருக்கின்றது.
அதன் பிறகு நடைபெற்ற அந்த உரையாடலில், அவருக்கு இருந்த எதிர்காலக் கனவுகளுக்கு மேலாக, ஈழத்துக் பாடசாலைகள் குறித்த வரலாற்றுப் பிரக்ஞை, சமூகப் பிரக்ஞை, பழைய மாணவர் சங்கங்களின் பொறுப்பு, பெரிய பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் சிறு பாடசாலைகளை தத்தெடுத்தல் போன்ற பல்வேறு நிலைப்பாடுகள் அவர் மீது பெருமதிப்படையச் செய்தன. இவையொத்த பல கருத்துகளை நானும் பழைய மாணவர் சங்கத்தின் முன்வைத்துக் கொண்டிருந்ததால் எனக்கு அவர்மீது உடனடிநெருக்கம் ஏற்பட்டது.
நாம் அவரிடம் நேர்காணல் செய்யச் சென்றிருந்தோம், அவர் 89 வயதிலும் எமக்கென்று புட்டும் கத்தரிக்காய் குழம்பும், பருப்பும், கீரை வறையும் செய்து வைத்திருந்து உபசரித்தும் அனுப்பியிருந்தார். நான் அவரிடம் பாடசாலையில் கற்கவில்லை; அன்று அவருடன் கழித்த சிலமணிநேரங்களின் நிறையக் கற்றுக்கொண்டேன்.
இந்தக் காணொலி தயாரிப்பினைச் செய்தவர் சுரேஷ் அண்ணா என்கிற சுரேஷ்வரன் சின்னத்துரை. அன்று அந்தக் காணொலி பதிவிற்காக அவர் அனுபவித்த சிரமம் நான் நன்கறிவேன். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.
Leave a Reply