ஏற்றங்களும் இறக்கங்களும் சேர்க்கைகளும் பிரிவுகளும் இழப்புக்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பது மீள மீள நினைவூட்டப்பட்டாலும் இந்த இரவில் இருந்து திரும்பிப்பார்க்கின்றபோது இறந்துபோன நண்பர்களின் பிரிவுகளும் அவர்களுடன் சேர்ந்த களித்த, கழித்த தருணங்களின் தடங்களுமே நினைவெல்லாம் தளும்பிக்கிடக்கின்றன. வாழ்வில் தவிர்க்கவே முடியாத யதார்த்தம் மரணம் என்றபோதும் நெஞ்சார்ந்து கூடிப் பழகினவர்களின் மரணந்தரும் வலிகூட மரணத்திற்கொப்பானது என்பதே அனுபவமாகின்றது. கருணா அண்ணையுடன் நான் நெருக்கமாகப் பழகியது மிகக் குறுகிய காலமே என்றாலும் அந்தத்தாக்கங்கள் இருந்தே தீரும்.
கருணா அண்ணையை நான் நெருக்கமாகச் சந்தித்த முதற்சந்தர்ப்பம் சுமதிரூபன் வீட்டில் நிகழ்ந்த சந்திப்பொன்றில்தான். நிறைய நண்பர்கள் சந்தித்துக்கொண்ட அன்றைய பொழுதில் வரவேற்பறையில் இருந்த எல்லாக் கதிரைகளும் நிரம்பிவிட நிலத்தில் விரிக்கப்பட்ட கம்பளம் ஒன்றிலும் சில நண்பர்கள் இருந்தனர். கருணா அண்ணை அந்தக் கம்பளத்தில் மஃப்ளர் ஒன்றினைத் தலையைச் சுற்றி உறுமால் போலக் கட்டிக்கொண்டு தொடர்ச்சியாக வெவ்வேறு விடயங்களைப் பற்றி சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதுவரை ஓவியரென்று மட்டுமே அறிந்துகொண்ட கருணா அண்ணையை, வாசிப்பு, அரசியல், இலக்கியம், வரலாறு என்று பல்வேறு துறைசார்ந்த விரிவும் ஆழமும் நிறைந்த அறிவார்ந்த ஆளுமையாக அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் அன்றமைந்தது. கிட்டத்தட்ட அன்றைய சந்திப்பின் மையப் புள்ளிபோன்றே அவரை நண்பர்கள் நடத்தினர் அவர்கள் அனைவருக்கும் கருணா அண்ணையுடன் நீண்டகால நெருக்கமான பரிச்சயமும் நட்பும் இருந்தது. அந்த நட்புவழியே அத்தகைய ஓர் உரிமையையும் ஆளுமையையும் அவர் அவர்களிடத்தில் பதியவைத்திருந்தார். பின்னாட்களில் அவருடன் நெருக்கமாகப் பழகிய பலசந்தர்ப்பங்களிலும் தான் இருக்கின்ற எல்லா அவைகளிலும் தானே மையமாக விளங்குகின்ற, அங்கே நிகழுகின்ற அனைத்தையும் ஆளுமைமிக்க இசைநடத்துனர் ஒருவர் இசை நிகழ்வொன்றில் கலைஞர்களைக் கையாள்வதைப்போல தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்ற ஒருவராகவே கருணா அண்ணை விளங்குவதை நான் அவதானித்திருக்கின்றேன்.
அவருடன் நெருக்கமாகப் பழகுவதற்கான வாய்ப்பு 2014 இல் இடம்பெற்ற முதலாவது அரங்கியல் நிகழ்வின் மூலமாகக் கிடைத்தது. ஓர் இக்கட்டான நிலைமையில் நிகழ்வு நடப்பதற்கு இரண்டுநாட்கள் மட்டும் இருக்கக்கூடிய நிலையில் அந்த அரங்கியல் நிகழ்வில் நாடகம் ஒன்றை நெறியாள்கை செய்து நடித்த ராஜா அண்ணை (ஓவியர் கிருஷ்ணராஜா) கேட்டுக்கொண்டதன்படி ஒளிநிர்வாகம் செய்வதற்கு உடன்பட்டிருந்தேன். கருணா அண்ணை வீட்டிற்கு நான் சென்ற முதற்தடவையும் அதே, நவீன நாடகச் செயற்பாடுகளிலோ அல்லது ஒளிநிர்வாகத்திலோ எந்த முன்னனுபவமும் எனக்கு இல்லை என்று நான் சொன்னபோது, “நீங்கள் என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்லித்தருவேன், நீங்கள் அதைச் செய்தால் சரி. ஏதாவது பிரச்சனை என்றால் மைக்கில் கதைக்கலாம். இது உங்களுக்குச் சின்னப் பிரச்சனை, யோசிக்காதையுங்கோ” என்று மிகுந்த நம்பிக்கையுடன் கருணா அண்ணை சொல்லியிருந்தார். கருணா அண்ணையுடன் தொடர்ந்தும் நெருக்கமாகவும் பழகுவதற்கான தொடக்கமாக அந்த நிகழ்வு அமைந்தது.
தான் எடுத்துக்கொண்ட எந்த விடயத்தையும் நுன்னுணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செய்வது கருணா அண்ணையின் இயல்பு. அத்துடன் புதிய தொழினுட்பங்களையும் புதிய சாத்தியங்களையும் அயர்விலா ஆர்வத்துடன் தேடித்தேடி அறிந்துகொள்வதுடன் அரங்க அமைப்பு, ஒளி, ஒலி நிர்வாகம் போன்றவற்றில் தொழினுட்பத்தின் எல்லாச் சாத்தியங்களையும் பயன்படுத்தவேண்டும் என்பதே அவரது உறுதியான நிலைப்பாடாக இருந்தது. கூத்து போன்ற கலைவடிவங்களை நவீனமயாக்குவது என்பதன் அங்கமாகவே அவர் கூத்து நிகழ்வுகளின் அரங்கநிர்மாணத்திற்கு மரபான அரங்க அமைப்பு அம்சங்களை விட்டு விலகி ஒளிச் சேர்க்கைகள் (Graphic Effects) மூலமாக பின்னணி சேர்ப்பதைச் செய்தார். தொழினுட்பங்களில் தங்கியிருக்கின்றபோது தொழினுட்பச் சிக்கலால் ஏற்படக்கூடிய பாதகங்களையும் அவர் அறிந்திருந்தார். தாய்வீட்டின் அரங்கியல் நிகழ்வின் முதல் இரண்டு சந்தர்ப்பங்களிலும் தொழினுட்பக் கோளாறுகளால் சில தடங்கல்கள் ஏற்பட்டபோது வந்த சில விமர்சனங்கள் – அவை தொழினுட்பக் கோளாறுகளின் சாத்தியங்கள் பற்றிய புரிதலே இல்லாமல் வந்தன என்பதால் அவருக்குச் சினமூட்டியதும் அவரைப் பாதித்ததும் உண்மை, ஆயினும் அவர் தொழினுட்பத்தினைத் தொடர்ந்து பிரயோகிப்பது என்பதில் இருந்து சிறிதும் பின்வாங்கவில்லை. அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது நான் கூட பலதடவைகளில் இந்தப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி ஏன் நாம் நவீன தொழினுட்பங்களை அதிகம் கையாளாமால் மரபான வடிவங்களை நோக்கிப் போகக்கூடாது என்று கேட்டிருந்தேன். சர்வதேச ரீதியில் நடந்த நிகழ்வுகளில் கூட தொழினுட்பம் எப்படிக் காலைவாரிவிட்டது என்று பல்வேறு சந்தர்ப்பங்களையும் கூறி, அதற்காகவெல்லாம் எல்லாம் நாம் பின்வாங்கி விடக்கூடாது என்பார். ஆனால் தொழினுட்பங்களைக் கையாள்வதில் மிக நவீனமான மனிதராகவும் மரபின் ஆழங்கள் தெரிந்தவராகவும் ஒருங்கே இருந்தார். தொன்மங்களையும் புராணங்களையும் மரபுகளையும் தேடிக் காதலுடன் பயணித்தவர் கருணா அண்ணை.
வாழ்வைக் கொண்டாடுதல் என்பது வாழ்வின் ஒவ்வோர் கணத்தையும் ஒவ்வோர் அம்சத்தையும் அழகுணர்வோடு உள்ளுணர்ந்து ரசித்து அதை அழகூட்டி வாழ்வும் தவவாழ்வு; அந்தப் பண்பு கருணா அண்ணையிடம் இருந்தது. அவரது ஆழ்ந்தகன்று தேடும் குணம் அவரது வாழ்வையும் ரசனை பூர்வமானதாக்கியதுடன் அவரைச் சுற்றி இருப்போருக்கும் அவரிடமிருந்தும் மெல்லத் தொற்றிக்கொண்டது. மதுக்கிண்ணத்தில் எந்த மட்டம் வரை வைனை வார்க்கவேண்டும் என்பதிலிருந்து எந்த மதுவை எந்தவிதமான குவளையில் எந்தவிதத்தில் வார்க்கவேண்டும் என்பதில் இருந்து உணவகங்களில் உணவுண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகளைச் கடைப்பிடிப்பதில் இருந்து என்று பல்வேறு விடயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது அவரது வழக்கம். வாழ்வை உன்னதமான தருணங்களின் தொகுப்பாக்கவேண்டும் என்பதற்கான அவரது முயற்சிகளாகவே இப்போது அவற்றையெல்லாம் புரிந்துகொள்ள முடிகின்றது.
கருணா அண்ணையுடன் உணவங்களுக்குச் செல்வது என்பது மிகவும் அருமையான அனுபவம். ஒவ்வொரு நாட்டு உணவுகள் குறித்தும் அவற்றின் வரலாறு குறித்தும் விளக்கமாக அறிந்துவைத்திருப்பார். அவருடன் பழகத் தொடங்கிய ஆரம்பநாட்களில் இந்த இந்த இடங்களுக்குப் போகபோகின்றோம் என்று தெரிந்துகொண்ட அவை பற்றித் தேடி இவர் திட்டமிட்டே செயற்படுகின்றாரோ என்று கூட நான் நினைத்தது உண்டும். ஆனால் பழகப் பழக அவரது ஞானமும் அறிவும் வெறும் தகவல்திரட்டுகளால் நிறைந்தது அல்ல, அவர் முழுக்க முழுக்க வரலாற்றுப் பிரக்ஞையான மனிதர் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. ஒருமுறை அவருடன் போய்க்கொண்டிருக்கின்றபோது அப்போதுதான் டிம் ஹோர்ட்டன்ஸ் அறிமுகம் செய்திருந்த Dark Roast என்ற வகைக் கோப்பிபற்றிய பேச்சுத் தொடங்கி இயல்பாக அது வெவ்வேறு விதமாக கோப்பிகளின் பெயர்க் காரணம், டிம் ஹோர்ட்டன்ஸின் கதை என்று தொடங்கி கனடாவில் இருந்த தற்போதும் இருக்கின்ற பல்வேறு கோப்பிக்கடைகளின் வரலாறு என்று மிக நீண்டதோர் பேச்சாக மாறியது. கருணா அண்ணையுடனான பேச்சுகள் ஒருபோதும் கொசுறுச் செய்திகளால் நிறைந்ததாக இராது, ஓர் ஆய்வாளருக்கு இருக்கக் கூடிய வரலாற்றுப் பார்வையுடனான பேச்சாகவே அவை அமையும். மேலே சொன்ன கோப்பிக் கடைகள் பற்றிய உரையாடலின் பின்னர், இவ்வளவு விடயங்களைத் தெரிந்து வைத்திருக்கின்றீர்களே என்று ஆச்சரியமாக இருக்கின்றது என்று சொன்னபோது ஒவ்வொருநாளும் நாங்கள் பாவிக்கின்ற சின்னச் சின்னப் பொருட்கள் குறித்தும் நாங்கள் போய்வருகின்ற தெருக்கள், இடங்கள் குறித்தும் தேடத் தொடங்கினாலே நிறைய விடயங்கள் தெரியவந்துவிடும் என்று கூறிச் சில கணம் மௌனமாக இருந்துவிட்டு, உங்கள மாதிரியாட்கள் அதைக் கட்டாயம் செய்யவேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னார். கலை, இலக்கிய, சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடும்போது வரலாற்று நோக்கும் மரபுரிமை பற்றிய புரிதலும் இருக்கவேண்டியதன் அவசியத்தினைப் பற்றி பகுபதம் அமைப்பில் நாம் உரையாடி பொது நிகழ்வுகளை மரபுரிமை இடங்களில் ஒருங்கிணைத்து அந்தச் சந்திப்புகளின்போது அந்த இடங்களின் வரலாற்றினைப் பற்றியும் உரையாடுவது என்ற முடிவுக்கு வந்திருந்தோம். எமது உள்ளக உரையாடல் ஒன்றினை Bellamy and Lawrence சந்திப்புக்கு அருகாமையில் உள்ள இரொக்குவா இனத்தவர்களின் நினைவுக்கல் உள்ள இடத்தில் ஒருங்கிணைத்திருந்தோம். இதுபற்றிக் கருணா அண்ணையிடம் கூறியபோது உற்சாகமடைந்து அது நல்லதோர் முயற்சி என்று பாராட்டியதுடன் ரொரன்றோவில் உள்ள அத்தகைய மரபுரிமை இடங்கள் குறித்தும் மிக நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார். மரபுரிமை, ஆவணப்படுத்தல் என்று அடிக்கடி நான் பேசியும் செயற்பட்டும் வருவதை அவர் பிரக்ஞைபூர்வமாகச் செய்பவராக இருந்திருக்கிறார்.
கருணா அண்ணையின் மரணத்துக்குப் பிறகு அவர் பற்றிய நினைவுகள் அந்தாதி போல ஒன்றன் தொடர்ச்சி மற்றொன்றாகத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சில நேரங்களில் கருணா அண்ணை போன் பண்ணும்போது தூங்கப் போய் இருப்பேன், கருணா அண்ணை நான் தூங்கப்போய்விட்டேன் என்று சொன்னாலும் ஒருக்கா கம்பியூட்டரை ஓன் பண்ணுங்கோ என்று சொல்வார், அதற்குப் பிறகு எனக்குச் சொல்வதற்காக எனக்குத் தேவையான பலவற்றை அவர் வைத்திருப்பார். பல சந்தர்ப்பங்களில் அது குறித்து எரிச்சலடைந்திருக்கின்றேன், இப்போது யோசித்துப் பார்க்கின்றபோது கருணா அண்ணையைப் புரிந்துகொள்ள நான் ஏன் ஒருபோதும் முயலவில்லை என்றே தோன்றுகின்றது.
இந்தக் கட்டுரை கருணா அண்ணையின் நினைவுமலராக வெளியான மார்ச் 2019 தாய்வீடு பத்திரிகையில் வெளியானது. இந்த இதழில் வெளியான கருணா அண்ணையின் சிறப்புப் பகுதிக்கான பிடிஎஃப் இணைப்பினையும் இத்துடன் இணைத்துள்ளேன்