ஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து…

Kalaikkalanjiaymஎன்னுடைய சிறுவயதில் நவாலியில் நாம் குடியிருந்தபோது அங்கிருந்த YMCA நூலகத்தில் அங்கத்தவனாக இருந்தேன்.  சிறுவர்களுக்கென்று இரண்டு இறாக்கைகளும் பெரியவர்களுக்கென்று சில இறாக்கைகளுமாக மொத்தம் பத்துக்கு உட்பட்ட புத்தக இறாக்கைகளை மட்டும் கொண்டிருந்த சிறியதோர் நூலகமாக அது இருந்தது.  கிட்டத்தட்ட பதினொரு வயது இருக்கும்போது பொது அறிவுப் புத்தகங்கள் என்கிற பெயரில் அந்நாட்களில் வந்துகொண்டிருந்த புத்தகங்களை வாசிப்பதில் பெருவிருப்பிருந்தது.  அப்படித் தேடுகின்றபோதுதான் அந்த நூலகத்தில் குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் தொகுதியொன்றும் இருந்ததைக் கண்டுகொண்டேன்.  நூலகத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லவிடமாட்டார்கள்.  ஆனாலும் அதனை வாசித்து முடிப்பது என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.  அதுமட்டும் போதாதென்று அந்தக் கலைக்களஞ்சியத்தைப் பார்த்து அதன் முக்கியமான பகுதிகளை அப்படியே பிரதியெடுப்பது என்றும் தீர்மானித்து நான்கு கட்டுக் கொப்பி என்று சொல்லப்படுகின்ற 160 பக்கக் கொப்பியொன்றினை வாங்கி அதில் கலைக்களஞ்சியத்தில் இருக்கின்ற முக்கியமான பகுதிகள் என்று நான் நினைத்த பகுதிகளையெல்லாம் அப்படியே பார்த்து எழுதியும் வந்தேன்.

இந்த முயற்சி வெற்றிகரமாகச் சென்றுகொண்டிருந்தபோது ஒருமுறை கொக்குவில் நாச்சிமார் கோயிலுக்கு அருகாமையில் அமைந்திருந்த பொது நூலகத்துக்கு அப்பா அழைத்துச் சென்றிருந்தார்.  அங்கே தான் முதன் முறையாக கலைக்களஞ்சியத்தின் முழுமையான தொகுதிகளைப் பார்க்கக் கிடைத்தது.  விளையாட்டுப் பொருட்கடையில் தனித்து விடப்பட்ட சிறுவன் போல எதைவாசிப்பது எந்தத் தொகுதியை வாசிப்பது என்று சிலநிமிடங்கள் தொலைத்த பின்னர் கலைக்களஞ்சியத்தப் பார்த்துப் பிரதிபண்ணுவது என்பது சாத்தியமற்றது என்பதை முடிவாகவும் வளர்ந்து பெரியவனாகும்போது வீட்டு நூலகத்தில் கலைக்களஞ்சியத்தின் முழுப் பிரதிகளையும் வாங்கி வைக்கவேண்டும் என்பதைக் கனவாகவும் கொண்டிருந்தேன்.  தமிழில் இருக்கின்ற கலைக்களஞ்சியங்கள் போல ஆங்கிலத்தில் இருக்கின்ற என்சைக்ளோபீடியா ஒஃப் பிரிட்டானிகா (Encyclopedia of Brittanica) பற்றியும் அதன் பிரமாண்டம் பற்றியும் அப்போது நண்பர்களுடனான உரையாடல்கள் அமையும்.  வீட்டுநூலகம் பற்றிய கனவுகள் நிறைந்திருந்த எனக்கு வீட்டுநூலகத்தில் சேர்த்து வைத்திருக்கவேண்டிய புத்தகங்கள் என்ற எனது சிறுவயதுக் கனவாக என்சைக்ளோபீடியா ஒஃப் பிரிட்டானிகா, குழந்தைகள் கலைக்களஞ்சியம், கலைக்களஞ்சியம் என்பவற்றுடன் Wisden Cricketer’s Almanack  என்பனவே அமைந்திருந்தன.

000

பொருள்சார்ந்த, விடயம் சார்ந்த அறிவுச்சேகரங்களைத் தொகுக்கின்ற முயற்சிகள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்தே நடந்திருப்பதாக பிரித்தானியக் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகின்றது.  ஆயினும் என்சைக்ளோபீடியா என்பதற்கு வழங்கப்படுகின்ற இன்றைய அர்த்தத்துக்கு நெருக்கமானதாக, தொகுப்பு நூல் என்ற அர்த்தத்தில் என்சைக்ளோபீடியா என்ற சொல்லைப் பாவித்தவர் Paul Scalich என்கிற ஜெர்மனியராவார்.  இவர் எழுதி 1559 இல் வெளியான Encyclopaedia, or Knowledge of the World of Disciplines என்ற நூலே என்சைக்ளோபீடியாவுக்கான சமகால விளக்கத்துக்கு ஏற்ற அர்த்தத்திலும் உள்ளடக்கத்திலும் வெளியான முதல் நூலாகும்.   ஆயினும் என்சைக்ளோபீடியாவுக்கான உள்ளடக்கத்துடன் இதற்கு முன்னர் வெளியாகிய நூல்கள் அகராதி (Dictionary) என்ற பெயருடனேயே வெளியாகியிருக்கின்றன.

இந்தக் கலைக்களஞ்சியங்களில் 1751 முதல் 1777 வரையான காலப்பகுதியில் 33 பாகங்களாக வெளிவந்த – பொதுவாக பிரெஞ்சு என்சைக்ளோபீடியா என்றழக்கப்படுகின்ற Encyclopaedia, or Classified Dictionary of Sciences, Arts, and Trades  (பிரெஞ்சில் Encyclopédie) வின் வருகை மனித வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒன்றாகும்.  அன்றைய காலப்பகுதியில் எழுந்து வந்த பல்வேறு சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்த பார்வைகளையும் வரலாற்றையும் வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல் உள்ளிட்ட அனைத்து அறிவுத்துறை சார்ந்த விடயங்களையும் தொகுத்து மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் சென்றதன் மூலம் முற்போக்காகவும் அறிவுபூர்வமாகவும் மக்களை வழிநடத்தியது என்ற வகையில் பிரெஞ்சு புரட்சி தோன்றுவதற்கான அடித்தளமிட்டதிலும் இந்த பிரெஞ்சு என்சைக்ளோபீடியாவிற்குப் பெரும்பங்கிருக்கின்றது.

கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்குவது என்பது மிகப்பெரிய அறிவுச்செயற்பாடுகளில் ஒன்று.  சொற்கள், பொருள்கள் மற்றும் விடயங்கள் குறித்துத் தகவல்களைத் திரட்டி ஓர் ஒழுங்குமுறையில் தொகுத்தளிப்பனவாக இந்தக் கலைக்களஞ்சியங்கள் இருக்கின்றன.  தமிழிலும் இவ்வாறான ஒரு கலைக்களஞ்சியம் வெளிவரவேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டு பிரித்தானியக் கலைக்களஞ்சியம் (Encyclopedia of Brittanica) வின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்த சீரிய முயற்சியினைப் பற்றிய சிறிய, ஆனல் செறிவான தகவல்களை நிறைந்த ஒரு நூலாக ஆ. இரா, வேங்கடாசலபதி எழுதிய “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” என்கிற நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது*** (ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை தமிழாக்கம் செய்வதே திட்டமாக இருந்தாலும் பின்னர் நேரடியாகவே தமிழில் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன).

000

200தமிழில் கலைக்களஞ்சிய முன்னோடிகள் என்று சொல்லத்தக்க முயற்சிகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே நடைபெறத்தொடங்கிவிட்டதகாகக் குறிப்பிடுகின்ற வேங்கடாசலபதி அத்தகைய முன்னொடி முயற்சிகளாக 1902 யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையால் வெளியிடப்பட்ட அபிதான கோசம் என்ற நூலையும் 1908 இல் ஈக்காடு இரத்தினவேலு முதலியார் தமிழ் வடமொழி நூல்களிலுள்ள சிறப்புப் பெயர்களுக்கு விளக்கமாக வெளியிடப்பட்ட “சிறப்புப் பெயர் அகராதி” என்ற நூலையும் 1910 இல் ஆ. சிங்காரவேலு முதலியார் வெளியிட்ட அபிதான சிந்தாமணியையும் குறிப்பிடுகின்றார்.

அபிதான கோசத்தில் அகராதிக்குரிய தன்மைகளையும் தொன்மங்கள், புராணங்களை அடியொற்றியவற்றுக்கும் வேத, புராண, இதிகாச கதாபாத்திரங்களுக்கும் அவற்றின் அடிப்படையிலேயே விளக்கம் கொடுத்திருப்பதைக் காணலாம்.  இதேவிடயங்களுடன் இலக்கியம் மற்றும் வாழ்வியல் சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கி விரிவான நூலாக அபிதான சிந்தாமணி வெளிவந்திருக்கின்றது.  1910 இல் இதன் முதலாவது பதிப்பு  அச்சுச் செலவைக் குறைக்கும் நோக்குடன் மிகச் சிறிய எழுத்துகளுடன் வெளியானபோது அது 1050 பக்கங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது என்பதை வைத்துப் பார்க்கின்றபோது அதற்கான உழைப்பு மலைக்கவைக்கின்றது.

தமிழில் கலைக்களஞ்சியம் ஒன்றைக் கொண்டுவரவேண்டும் என்கிற எண்ணம் உதித்து அதற்காக உழைத்த முன்னோடிகளாக அவினாசிலிங்கம் அவர்களையும் பெ. தூரன் அவர்களையும் வேங்கடாசலபதி குறிப்பிடுகின்றார்.   வெவ்வேறு காலப்பகுதிகளில் இவர்கள் இருவரும் இந்தக் கனவுடன் இருந்தபோதிலும் 1944இல் கோவையில் நடந்த முதலாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் தூரன் தனது அவாவினை அவினாசிலிங்கத்திடம் கூறியிருக்கின்றார்.  இதற்குப்பிறகு 1947இல் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்றபோது அவினாசிலிங்கம் அப்போதைய சென்னை மாகாணத்தின் கல்வி அமைச்சராக அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றார்.  அப்போது தலைமையுரை வழங்கிய தூரன் தமிழிலும் கலைக்களஞ்சியம் வரவேண்டும் என்ற தனது கனவினைக் குறிப்பிட்டு இப்பொறுப்பை அரசாங்கமே எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றார்.  பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுத்த பத்தாயிரம் பக்கங்களை தமிழும் ஆங்கிலமும் தெரிந்த ஐம்பது எழுத்தாளர்களைக் கொண்டு  தமிழாக்கி வெளியிடுவதே அவர்களின் திட்டமாக இருந்தது என்றும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை நூலின் மூலமாக அறியக்கூடியதாக இருக்கின்றது,

இந்த நூலில் “அபிதான சிந்தாமணியும் பிற முயற்சிகளும்”, “ கலைக்களஞ்சியம்”, ”பணி தொடங்கியது”, ”நெருக்கடிகளும் பணி நிறைவும்”, ”எதிர்வினைகள்” ஆகிய அத்தியாயங்களுடன் முன்னுரை, முடிவுரை, தமிழ் வளர்ச்சிக் கழகத்திலிருந்து ஓய்வுபெறும்போது பெ. தூரன் எழுதிய விடைபெறுகின்றேன் என்கிற பிற்சேர்க்கை ஆகியவற்றுடன் நன்கொடை வரவு, கலைக்களஞ்சிய ஊழியரும் மாத சம்பளமும், கட்டுரையாளருக்கு ஊதிய விகிதம், கலைக்களஞ்சிய தொகுதிகள், கலைக்களஞ்சிய இருப்பும் விற்பனையும் (1963) வரவு செலவு 1956 வரை ஆகிய ஆவணங்களும் அட்டவணைகள் என்ற தலையங்கத்தின் கீழ் இணைக்கப்பட்டிருக்கின்றன.  நூலின் அத்தியாயங்களில் இருக்கின்ற தகவல்களுக்கு அப்பால் இந்த அட்டவணைகள் ஊடாக அன்றைய பொருளாதார நிலை, பண மதிப்பு, தமிழ் வளர்ச்சிக்கழகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நிறுவன ரீதியான ஒழுங்குமுறை என்பவற்றை அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

கலைக்களஞ்சியத்தை வெளியிடுவதற்கென்றே தமிழ் வளர்ச்சிக் கழகம் என்றொரு அமைப்பினை 1946 இல் அவினாசிலிங்கம் உருவாக்கியிருக்கின்றார்.  கலைக்களஞ்சியத்தை வெளியிடுதல் என்பதையே பிரதான நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட  தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் வெளியீடுகளாகவே கலைக் களஞ்சியத்தின் பத்துத் தொகுதிகளும், இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் பத்துத் தொகுதிகளும் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் ஆசிரியர் குழு முதலில் பொ. திரிகூடசுந்தரம்பிள்ளையினை துணையாசிரியராகக் கொண்டே இயங்கத் தொடங்கியது.  குழு இயங்கத் தொடங்கிய பத்து மாதங்களுக்குப் பின்னர் பெ. தூரன் அதன் பிரதம ஆசிரியர் என்ற பதவிக்கு நியமிக்கப்பட்டார்.   திறமையும் தகுதியும் இருவருக்கும் இருந்தபோதும் வயதாலும் அனுபவத்தாலும் கூடியவரான தன்னைத் துணையாசிரியராக்கி வெறும் நாற்பது வயதே நிரம்பிய தூரனை நியமித்தது குறித்து திரிகூடசுந்தரம்பிள்ளைக்கு இருந்த மனவிலகல் குறித்தும் அதன் நிமித்தம் ஏற்பட்ட சுமுகமின்மைகள் குறித்தும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

தமிழில் கலைச்சொல்லாக்கம் என்பது இன்றளவும் போதாமைகள் நிறைந்ததாக இருக்கின்ற சூழலில் கலைக்களஞ்சியத்தின் உருவாக்கத்துக்காக அதன் கலைச்சொல்லாகக்குழு உருவாக்கிய கலைச்சொல்லாக்கங்கள் முக்கியமானவை.  கலைக்களஞ்சியம் என்ற சொல்கூட இந்தக் குழு உருவாக்கியதே என்றும் ஏறத்தாழ 25,000 சொற்கள் உருவாக்கப்பட்டதாகவும் தூரன் பதிவுசெய்திருப்பதாக வேங்கடாசலபதி குறிப்பிடுகின்றார்.

Thooranநிதி திரட்டுதல் என்பதுவும் மிகவும் சிரமம் வாய்ந்ததாகவே இருந்திருக்கின்றது.  அதன் பாதீடான பத்துலட்சத்தில் ஐந்து இலட்சத்தினை ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சம் வீதம் தருவதாக சென்னை அரசாங்கமும், மூன்று இலட்சத்தினை ஆண்டொன்றுக்கு எழுபத்தைந்தாயிரம் வீதம் நான்காண்டுகளில் தருவதாக மத்திய அரசாங்கமும் திருப்பதி தேவஸ்தானம் ஐம்பதினாயிரமும் வழங்க ஒத்துக்கொண்டதாகத் தெரிகின்றது.  இதுதவிர அன்றிருந்த புரவலர்களிடமும் நிதி திரட்டப்பட்டது.  ஆயினும் நாட்டின் நிதி நிலைகாரணமாக மத்திய அரசாங்கம் ஒத்துக்கொண்ட தொகையினை உடனடியாகப் பெறமுடியவில்லை.  இதுதொடர்பாக அவனாசிலிங்கம் மத்திய கல்வி அமைச்சருடன் மேற்கொண்ட கடிதங்களும் இந்த நூலில் சுட்டிக்காட்டப்படுகின்றன.  1947 இல் தொடங்கப்பட்ட கலைக்களஞ்சியத்துக்கான பணிகளில் முதல் ஒன்பது தொகுதிகள் 1963 இலேயே வெளிவந்திருக்கின்றன.  ஆயினும் இணைப்புத் தொகுதியான பத்தாவது தொகுதி 1968 இலேயே வெளிவந்திருக்கின்றது.  இந்த இருபதாண்டு காலப்பகுதியும் தலைமையாசிரியராகப் பதவியாற்றி பின்னர் குழந்தைகள் கலைக்களஞ்சியமும் வெளியிடப்பட்ட பின்னரே 1978 இல்  தூரன் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் இருந்து  ஓய்வுபெற்றார்.

இந்நூலில் உள்ள எதிர்வினைகள் என்ற பகுதியில் அன்றைய அரசியல் தலைவர்கள் எவ்வாறு பண்பாட்டம்சங்கள் குறித்த தெளிவுடனும் பிரக்ஞையுடனும் அணுகினார்கள் என்பதைத் துலக்கமாக்குகின்றது.  குறிப்பாக பேராசிரியர் க. அன்பழகம், மபொசி போன்றவர்கள் கலைக்களஞ்சிய உருவாக்கம் குறித்தும் அதன் உள்ளடக்கம் குறித்துத் தெரிவித்த கருத்துகளில் அவர்கள் சார்ந்திருந்த கட்சிகளின் பண்பாட்டு ரீதியான  வெளிப்பாடுகளைக் கவனிக்கலாம்.  குறிப்பாக அன்பழகனுக்கு கலைக்களஞ்சியமானது பிரெஞ்சுக் கலைக்களஞ்சியம் போல புரட்சிகரமானதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.  அதுபோலவே திராவிட / தமிழியக்கச் சார்பானவர்கள் தமிழ் வளர்ச்சிக் குழுவில் போதியளவு அங்கத்தவர்களாக இல்லை என்பதும் அன்பழகனின் குற்றச்சாற்றாக இருந்திருக்கின்றது.  இந்த விவாதங்கள் இடம்பெற்ற இதழ்களையெல்லாம் வேங்கடாசலபதி குறிப்பிட்டிருக்கின்றார்.  அவற்றை முழுமையாக வாசிக்கின்றபோதே தமிழ்க் கலைக்களஞ்சிய உருவாக்கத்தின் பின்னணியிலும் அதன் செயற்குழுவின் அங்கத்தவர்களின் அரசியல் சார்புகள் காரணமாக ஏற்பட்ட தாக்கங்களைப் பற்றியும் விடுபடல்களைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.

Kalaikkalanjiyam Backஇன்றைய சூழலில் மொழிபெயர்ப்பு, பதிப்பகங்களின் தேவை என்பன பற்றிய உரையாடல்களும் முயற்சிகளும் பல்வேறு தரப்புகளில் இருந்தும் முன்னகர்த்தப்படுகின்றன. கலைக்களஞ்சியத்தின் கதை என்கிற இந்தச் சிறுநூலும் தமிழ் நூல் வரலாற்றின் முக்கியமான ஒரு காலகட்டம் குறித்தும் செயற்திட்டம் குறித்தும் அறிவதற்கான ஆவணமாக அமைவதோடு பதிப்பித்தலிலும் மொழிபெயர்ப்பிலும் இருக்கக் கூடிய சவால்கள் குறித்தும் அறியத் தேவையான நல்லதோரு தொடக்கப்புள்ளியாகவும் அமைகின்றது.


  1. இக்கட்டுரை ஏப்ரல் 2019 தாய்வீடு இதழில் வெளியானது.
  2. அபிதான கோசத்தினை நூலக நிறுவனம் ஆவணப்படுத்தியிருக்கின்றது.  அதனைத் தரவிறக்க http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D என்ற இணைப்பிற்குச் செல்லவும்.  இதே இணைப்பிலிருந்தே இந்தக் கட்டுரையில் பாவிக்கப்பட்டுள்ள அபிதான கோசத்தின் அட்டைப்படமும் பெறப்பட்டது
  3. இந்தக் கட்டுரையில் உபயோகிக்கப்பட்டுள்ள பெ. தூரனின் புகைப்படம் விக்கி மீடியாவில் இருந்து பெறப்பட்டது
  4. இந்த நூல் பற்றிய அறிமுகத்தை எனக்கு முதன் முதல் செய்தவர் வரலாற்றாய்வாளரும் நண்பருமான சத்தியதேவன்,
  5. ரொரன்றோவில் காலம் செல்வம் நடத்துகின்ற வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியில் இந்நூலினைப் பெற்றுக்கொண்டேன்

 

One thought on “ஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து…

Add yours

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: