1ஜயகரனின் அறிமுகம் எனக்குப் பத்தாண்டுகளுக்கு முன்னர் கிடைத்தது என்றாலும் அப்போது ஒரு அரசியற் செயற்பாட்டாளராகவே அவர் எனக்கு அறிமுகமானார்.  அதற்கு நெடுங்காலத்துக்கு முன்னதாகவே எனக்கு அறிமுகமாகி, கனடியச் சூழலில் எனக்கு இருந்த ஒரே கலை இலக்கியத் தொடர்பாக காலம் செல்வம் அவர்களைக் குறிப்பிடலாம்.  காலம் செல்வம் அவர்களை நான் முதலில் சந்ததித்தது 2000 ஆம் ஆண்டளவில், அப்போது அவரிடமிருந்து சங்கத்தமிழ், விஷ்ணுபுரம், ஜெயகாந்தன் கதைகள் (2 பாகம்) என்கிற நான்கு நூல்களையும் பெற்றுக்கொண்டேன்.  முதல்முதலாக வாசகராக அறிமுகமாகும் ஒருவர் பற்றி எந்தவிதத் தீர்மானத்துக்கும் இடந்தராத வகையிலான புத்தகத் தேர்வுகளாக அவை இருந்தன, அதை அப்போது நான் உணரவும் இல்லை, தெரியவும் இல்லை.  அவருக்கு நான் யார் என்கிற குழப்பமும் சிறு சந்தேகமும் இருந்திருக்கலாம்.  சனதருமபோதினி, இருள்வெளி, கொரில்லா போன்ற நூல்களைத் தரும்போதெல்லாம், தம்பி இதில புலிகளைப் பத்திய விமர்சனம் இருக்கு என்று சொல்லியே தருவார்.  ஒருவிதத்தில் அதில் ஒருவிதமான பொறுப்புத் துறப்பு வெளியேதெரியும்.  அப்படித்தான் ஒருமுறை யாழ்ப்பாண நூலக எரிப்புப் பற்றிய பேச்சு வந்தபோது காலம் செல்வம் தேடகத்தின் நூலகம் எரிக்கப்பட்டது பற்றியும் உணர்ச்சிவசபட்டுக் கூறினார்.  உணர்ச்சிப் பிராவகத்துடன் தம்பி, நானும் தேடகத்தில் இருக்கிறன் என்று சொல்லி அவர் தன்னை அஞ்ஞாதவாசத்தில் இருந்து வெளிப்படுத்தும் தோரணையில் வெளிப்படுத்தியதுடன் அதன்பின்னர் தேடகம் ஒருங்கிணைக்கின்ற நிகழ்வுகளுக்கு என்னை அழைப்பதும் வழக்கமானது.  அப்படியாகத்தான் ஒருமுறை ஜயகரனையும் ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடந்த ஏதோ ஒரு நிகழ்வில் சற்றுத் தொலைவில் வைத்து தம்பி இவர் தான் ஜயகரன், தேடகக்காரன்.  முக்கியமான ஆள் தம்பி, என்று அறிமுகம் செய்துவைத்தார்.  இந்த அறிமுகம் இங்கே நான் செய்யவிருக்கின்ற புத்தக விமர்சனத்துக்குத் தேவையில்லாதது என்றாலும் ஜயகரன், காலம் செல்வம் போன்றவர்கள் எப்படி தமக்குள் அறிமுகமாகி வெவ்வேறு கலை இலக்கிய அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாலும் தமக்குள் கண்ணிகளைத் தொடுத்துக்கொண்டு –  செல்வம் அவர்களே அடிக்கடி சொல்வது போல ஈழத்து இலக்கியம் என்கிற சுடரேந்திய தொடர் ஓட்டத்தை ஓடிவந்திருக்கின்றார்கள் என்பதையும், அவர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தலும் ஒடுக்குமுறையும் நிறைந்த எதிர்ப்புகளையெல்லாம் துணிவுடன் எதிர்கொண்டு இன்று தமக்கு அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்க வருகின்றபோது நான் உள்ளிட்ட அவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் சோர்வும், குழப்பமும், நிறைந்தவர்களாக நிற்கின்ற கையறுநிலையையும் இங்கே நினைத்துப் பார்க்கவேண்டியே இருக்கின்றது.

பா. அ. ஜயகரன் கதைகள் என்கிற இந்தத் தொகுப்பானது  ஜயகரனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பாகும்.  இதற்கு முன்னராக இவரது எல்லாப் பக்கமும் வாசல், என்னை விசாரணைக்கு உட்படுத்துங்கள் என்கிற இரண்டு நாடகப் பிரதிகளின் நூல்வடிவங்கள் வெளிவந்திருக்கின்றது.  பா. அ. ஜயகரன் கதைகள் என்கிற இந்தத் தொகுப்பில் 2006 முதல் 2018 வரையான காலப்பகுதியில் ஜயகரன் எழுதிய ஆயர்பாடி மாளிகை, ஆலோ ஆலோ, அடேலின் கைக்குட்டை, இருளில் மீள்பவர்கள், செல்வி மிசால் யூலியே அம்றோஸ், லா காசா, வந்திறங்கிய கதை, அகதி றங்குப் பெட்டி, சவம் எழுந்த கதை, ஜெனி: போரின் சாட்சியம் என்கிற பத்துக் கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தக் கதைகளில் சிலவற்றை நான் முன்னமே வாசித்திருந்தாலும் தற்போது ஒரு நூல்வடிவில் வாசிக்கின்றபோது முழுமையான வாசிப்பனுபவம் ஒன்றினைத் தருவதாக  இந்தக் கதைகளின் தொகுப்பு அமைந்திருக்கின்றது.  ஜயகரன் தனது மாணவப் பருவம் முதலே கவிதை, பேச்சு முதலிய துறைகளில் ஆர்வம் காட்டியவராக இருந்திருக்கின்றார் என்று அவரது பாடசாலைக்கால நண்பர்கள் மூலமாக அறிந்திருக்கின்றேன்.  ஆனாலும் ஜயகரன் அடிப்படையில் சமூக, அரசியற் செயற்பாட்டாளர்.  ஒடுக்குமுறைகளுக்கு எதிரானதும் மாற்றுக்கருத்துகளுக்கான களத்தை உருவாக்குவதையும் நோக்காகக் கொண்ட தேடகம் அமைப்பில் நீண்டகாலமாக இயங்கிவருபவர்.  தான் எதை நோக்கி, எதற்காக இயங்குகின்றாரோ அதை முழுமையாக நம்புவதும் அர்ப்பணிப்புடன் அது சார்ந்து செயலாற்றுவதும் தன்னால் இயன்றவரையில் அனைத்துத் தளங்களையும் வாய்ப்புக்களையும் ஊடகங்களையும் தனது நோக்கினைப் பரப்பவும் அடையவுமான கருவிகளாகப் பயன்படுத்துவதும் செயற்பாட்டாளர்களின் அடிப்படை இயல்பு.  கட்சிகள் சார்ந்தும் கோட்பாடு சார்ந்தும் அரசியல் நிலைப்பாடு சார்ந்தும் செயற்பட்டவர்கள் பலர் கலை இலக்கியத் தளங்களை ஊடகங்களாகப் பயன்படுத்தியதை நாம் நிறையப் பார்த்திருக்கின்றோம்.  நேரடியான விவரணமும், பதிவாக்கத்தை நோக்காகக் கொண்டதுமான பிரதிகளில் இருந்து கூட – எம்மை இடைஞ்சல் செய்வதாக / மனதை அறஞ்சார்ந்து கோபமுறச்செய்வதாக  இருக்கின்றபோது – முழுமையான வாசிப்பனுவத்தை, வாழ்வு பற்றிய தரிசனத்தை, கேள்விகளை, மாற்றத்தை நாம் அனுபவித்திருக்கின்றோம். உதாரணமாக சோளகர் தொட்டியையும் என்.கே. ரகுநாதனின் பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சியையும் சொல்லலாம்.  மொழியும், வெளிப்படுத்தும் முறையும் இலக்கிய நுட்பங்களின் பிரயோகமும் இத்தகைய புதினங்களில் இல்லாதபோதும் இவை தம்மளவில், தாம் வெளிப்படுத்தும் வாழ்வியலையும் அதன் அனுபவங்களையும் வெளிப்படுத்தும் விதத்திலும் அவை வாசகர் மனதில் ஏற்படுத்தும் அகத் தூண்டலின் வாயிலாகவும் அழகியல் தன்மை பெற்று இலக்கியமாக முழுமையடைந்துவிடுகின்றன.  இன்று அழகியல் என்ற பெயரில் ஈழத்து இலக்கியத்தின் மீதும் அவற்றின் உள்ளடக்கம் குறித்தும் அவை பேசும் அரசியல் குறித்தும் வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் கவனிக்க மறுக்கின்ற முக்கியமான அம்சங்களில் இதுவும் ஒன்று.

இன்னொரு பக்கம், அரசியல் பிரக்ஞையையும் கலை, இலக்கியத் துறைகளில் ஆளுமையையும் கொண்டவர்கள் எழுதும் பிரதிகள் வேறொருவிதத்தில் கலையமைதியும் நேர்த்தியும் கொண்டவையாகவும் அவற்றின் உள்ளடக்கம் பேசுகின்ற அரசியல் குறித்த தெளிவுடனும் அமைந்துவிடுகின்றன.  இத்தகைய எழுத்துகளுக்கும் ஈழத்தில் மிக நீண்டதும் தொடர்ச்சியானதுமான வரலாறு உண்டு, அந்தத் தொடர்ச்சியில் முக்கியமான ஒருவராக ஜயகரன் இந்தத் தொகுப்பின் மூலமாக வெளிப்படுகின்றார்.

இந்தத் தொகுப்பில் இருக்கின்ற எல்லாக் கதைகளின் பின்னணியிலும் அரசியல் நிகழ்வுகள் இருக்கின்றன.  ஊடுநூலும் பாவுநூலும் போல கதை நிகழும் களமும், அரசியல் பின்னணியும் சம்பவங்களும் தனியர்களின் வாழ்வும் இயைந்து கதைகளாக மாறுகின்றன.  ஆயர்பாடி மாளிகை கதையில் 83 இனக்கலவரம், ஆலோ ஆலோ கதையில் 1950 களில் ஸ்பெயினில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், அடேலின் கைக்குட்டையில் இரண்டாம் உலகப்போர், அதன் பின்னர் நடந்த போர்க்குற்றங்கள், இருளில் மீள்பவர்கள் கதையில் ஈழத்தில் விடுதலை இயக்கங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுகளும் அவற்றுக்கு இடையிலான கொலைகளும், செல்லி மிசால் யூலியே அம்றோஸ் என்ற கதையில் 2006 ஸ்டீபன் ஹார்பர் இன் ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த மக்ஸிம் பேணியர் முக்கியமான ஆவணங்களைத் தன் காதலி (Girl friend) வீட்டில் விட்டுச்சென்றதன் பின்னணியும் ஜெனி: போரின் சாட்சியம் என்ற கதையில் சொந்த நாட்டில் விடுதலைப் போராட்டங்களின் மூலமாக அகதியாக்கப்பட்டவர்கள் வாழ்வும் கதைப் பின்னணியாக அமைகின்றன.  இந்தக் கதைகளில் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கே அரசியலும், சம்பவங்களும் கதையில் தகவல்களாகவோ இட்டு நிரப்பல்களாகவோ இல்லாமல் கதாபாத்திரங்களின் வாழ்வுடன் தொடர்புபட்டு அவர்கள் வாழ்வையும் வாழ்வியலையும் மாற்றியவையாகவும் தாக்கம் செலுத்தியனவாகவும் அமைந்துவிடுகின்றன.

2விடுதலைக்கான குரல்களும் போராட்டங்களும் உலகெங்கும் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கின்றன.  இவற்றுக்கெதிராகப் போராடுபவர்கள் எப்போதும் சிறுபான்மையினராகவும் சிதறுண்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.  இந்தக் குரல்களை ஒன்றிணைத்துப் பலமானதாக்கவேண்டும் என்பதும் விடுதலைக்கான உந்துதல்களின் மாபெரும் கனவுகளில் ஒன்று.  ஜயகரன் தனது கதைகளில், வெவ்வேறு நாடுகளில் நிகழும் ஒடுக்குமுறையாலும் இனவெறியாலும் பாகுபாட்டினாலும் (Discrimination) பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களின் பொதுத்தன்மையை கலையாக்கி அதனூடாக ஏற்படக் கூடிய அகத்தூண்டல்களின் ஊடாக கூட்டுக் குரல்களையும் கூட்டு அனுபவங்களையும் உருவாக்குகின்றார். இந்த விதத்தில், இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அடேலின் கைக்குட்டை என்கிற கதையை மிகமுக்கியமானதாகச் சொல்லலாம்.  எட்வர்ட் மங்கின் புகழ்பெற்ற ஸ்க்றீம் (The Scream) என்கிற ஓவியத்தை அட்டையாகக் கொண்டு, “காட்டின் எல்லை வரை கடலின் நுனிவரை” என்கிற முகப்பு வாசகத்தைத் தாங்கி வெளிவந்த காலம் யூன் – ஓகஸ்ட் 2009 இதழில் இடம்பெற்றிருந்த இந்தக் கதை ஈழப்போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அதன் இறுதிநாட்களில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் குறித்தும், சரணடைந்தோர், காணாமலாக்கப்பட்டோர், கொல்லப்பட்டோர் குறித்த விபரங்கள் எதுவும் தெரியாமல் மக்கள் கடுமையான கூட்டு மனவழுத்தத்திற்கு உள்ளாகி இருந்த காலப்பகுதியில் வெளிவந்த கதையாகும்.  இப்படியான சூழலில் ”அடேலின் கைக்குட்டை” இரண்டாம் உலகப்போரின் பின்னர் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், சரணடைந்தவர்களைக் கையாளவேண்டிய முறைகள், அவர்களுக்கான உரிமைகள் குறித்த ஜெனிவா ஒப்பந்தம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் அதை உதாசீனம் செய்துவிட்டு நிகழ்த்தப்பட்ட மானுடத்துக்கு எதிரான அவலங்களை ஈழத்தவரின் அஞர்களுக்கான உலகார்ந்த அனுபவமாக கலாபூர்வமாக நிகழ்த்திக்காட்டியிருக்கின்றது.

இருளில் மீள்பவர்கள் என்கிற இன்னொரு கதையில் மிலன் குந்தரோவின் இக்னோரன்ஸில் வருகின்ற – தமிழில் அதை மாயமீட்சி என்ற பெயரில் மணி வேலுப்பிள்ளை மொழிபெயர்த்துள்ளார்; அவரும் இந்தக் கதையில் ஒரு பாத்திரமாக வருகின்றார் – இரியானாவைப் பாத்திரமாக்கி, பிரான்சிலிருந்து செக்கிற்கு 20 வருடங்களுக்குப் பின்னர் செல்லுகின்ற பாத்திரமான இரியானாவிற்கு நாட்டைவிட்டு இயக்கங்களிடையே நடந்த கொலைகள் மற்றும் வன்முறைகளினால் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்ட கதைசொல்லியின் அனுபவங்களை ஒன்றிணைக்கின்றார்.  ஒடுக்கப்படுபவர்களின் பொது அனுபவங்களை ஒன்றாக்கி உலகளாவிய தளத்தில் ஒன்றிணைக்கும் படைப்பாக்கம் இங்கே முக்கியமாகச் சொல்லப்படவேண்டியது.

இங்கே ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது, பொதுவாக இலக்கியங்களில் வன்முறைகள் நிகழும்போதும் ஒடுக்குமுறைகள் நிகழும்போதும் பெண்ணுடல்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்தும் பாலியல் ரீதியான வன்முறைகள் குறித்தும் விபரமாக, எழுதப்படுவது வழக்கம், ஆனால் ராணுவத்தினரோ அல்லது ஒடுக்கும் தரப்பினரோ ஆண்கள் மீது, ஆணுடல்கள் மீதும் பாலியல் ரீதியான தாக்குதல் செய்வது வழக்கம் என்றபோதும் அவை ஏன் அடித்தல், துன்புறுத்தல் என்பதோடு கடந்துசெல்லப்படுகின்றன என்பதைப் பற்றி நாம் நிச்சயம் உரையாடவேண்டி இருக்கின்றது.  ஜயகரனின் அடேலின் கைக்குட்டை என்ற கதையை பொறுத்தவரை அங்கே பாத்திரங்கள் பெண்களாகவே இருக்கின்றார்கள்.  அடுத்து, ஜயகரன் கதைகள் குறித்த அவதானம் இது இல்லை என்ற போதும் பெண்ணுடல்கள் மீதான சித்திரவதை, வன்முறைகளும் ஆணுடல்களின் மீதான சித்திரவதை,  வன்முறைகளும் விபரிக்கப்படும் விதத்தில் இருக்கின்ற பால்வாத அணுகுமுறை குறித்த அவதானமே இது.

P. A. Jayakaranஇந்தத் தொகுப்பில் எனக்குமிகவும் பிடித்த கதை லா காசா.  இதில் மூன்று வெவ்வேறு இனத்துவ, அடையாளங்களையும் குணவியல்புகளையும் கொண்ட ஆண்கள் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இருக்கின்றார்கள்.  அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நிகழுகின்ற, ஒரு மாலைப்பொழுதில் அவர்களதும், அங்கே பாலியல் கேளிக்கைகளுக்கான மதுபான விடுதியொன்றில் பணிபுரிகின்ற சிறுவயதிலேயே பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட ரோசி என்ற பெண்ணினதும் கதைகளூடாக நாம் கவனிக்கத் தவறுகின்ற விளிம்புநிலை சார்ந்த ஒரு வாழ்வின் தோற்றம் இந்த கதையில் வெளிப்படுகின்றது.  ஜயகரனின் கதாபாத்திரங்கள் கறுப்பு – வெள்ளை என்கிற ஒற்றைத் தன்மைகொண்டவர்கள் அல்லர், அவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறுவிதமாக பன்மைத்தனம் கொண்டவர்கள்.  நல்லதும் கெட்டதும் அல்லாததுமாய் இருப்பவர்கள்.   இந்தத் தொகுப்பில் இருக்கின்ற கதைகளில் காலத்தால் முதலில் எழுதப்பட்டதாக இந்தக் கதை இருந்தபோதும் பன்முக வாசிப்பிற்கும் மனிதர்களை வெவ்வேறு தளங்களில் வைத்துப் புரிந்துகொள்வதற்குமான சாத்தியங்களையும் இந்தக் கதை வெகுவாகக் கொண்டிருக்கின்றது.  கதையின் இறுதியில் “வாசு, நீயும் என்னையொரு வேசியாக நடத்திவிட்டாய் என்ன?” என்று கேட்கிற ரோசியின் குரல் அன்பிற்காக அலையும் ஒரு ஆன்மாவின் குரலாகி மானுடத்தை நிறுத்தி வைத்து முகத்தில் உமிழ்கின்றது!

அகதியாதல், போரின் அவலம், பின் போர் விளைவுகள் ஏற்படுத்தும் அஞர் என்பன எப்படி எல்லைகளும் கண்டங்களும் கடந்து மானுடத்தைப் பாதித்தன என்பதையும், இவற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தும் கூட தம் நினைவுகளையும் வடுக்களையும் எப்படி பொருட்களூடாகவும் ஞாபகச் சின்னங்களூடாகவும் பேணி அதை அஞரிலிருந்து கடப்பதற்கான ஒருவிதமான கருவிகளாகவும் கையாளுகின்றனர் என்பதை ஜயகரனின் கதைகளில் காணலாம்.  அடேலின் கைக்குட்டையில் அல்பமும், ஆறு பெண்களின் பெயர்கள் பின்னப்பட்ட கைக்குட்டையும், லா காசாவில் அம்மாவின் நினைவாக ரோப் என்கிற ஆடையும், ஆலோ ஆலோவில் கத்தரிக்கோல், என்ற வரிசையில் அகதி றங்குப்பெட்டியில் றங்குப்பெட்டியே கதையை மையமாகத் தாங்குகின்றது.  1950 களில் ஓஸ்ரியாவில் இருந்து கனடாவுக்கு அகதிகளாக வந்த அன்ரன் மேரி தம்பதிகள் பேணும் றங்குப்பெட்டி 1990 களில் கனடாவுக்கு அகதியாக வந்த கதைசொல்லிக்கு தனது தாயினதும் போரின் அவலத்தினதும் நினைவுகளைத் தூண்டுவதாக இருக்கின்றது.  ஆயினும் அகதியாக வந்த முதல் தலைமுறையினரின் மதிப்பீடுகளும் வரலாற்றுணர்வும் மூன்றாம் தலைமுறைக்குக் கையளிக்கப்படாமல் தொடர்பறுதலை ஒஸ்ரியாவிலிருந்து வந்தவர்களினூடாக ஓர் அபாய அறிவிப்பாக ஈழத்தவர்களுக்கு அறிவிப்பதாயும் இந்தக் கதை அமைகின்றது.

சிறந்ததோர் நாடகராக இருப்பதாலோ என்னவோ ஜயகரனின் கதைகளின் வரும் சம்பவங்கள் விபரிப்பினூடாக காட்சிகளாக இயல்பாகவே பரிணமிக்கின்றன.  அடேலின் கைக்குட்டை, ஆயர்பாடி மாளிகை, லா காசா, ஆலோ ஆலோ, செல்வி மிசால் யூலியே அம்றோஸ் என்கிற கதைகளைக் குறிப்பாகச் சொல்லமுடியும்.  ஆயர்பாடி மாளிகை கதையை எடுத்துக்கொண்டால் கதையின் ஆரம்பத்தில் ஊருக்கு முதன்முதலாக பேருந்து வருவதில் இருந்து இறுதியில் அந்த பேருந்து எரிக்கப்படுவது வரை காட்சிகளாகவே கதை நகர்கின்றது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.  இயல்பான கிராமிய உறவுகள் நிலவிய அந்தக் கிராமத்திற்கு பேருந்தும் அதைத் தொடர்ந்து ஓவசியரும் வருகின்றனர், அதைத்தொடர்ந்து நிகழும் சம்பவங்களும் இவற்றின் வருகை அந்தக் கிராமிய உறவுகளுக்குள் ஏற்படுத்துகின்ற மாற்றமும் இந்தக் கதையில் அருமையாகக் கோர்க்கப்பட்டுள்ளன.

கே. கிருஷ்ணராஜா அவர்கள் வடிவமைத்திருக்கின்ற இந்த நூலின் அட்டைப்படம் அதன் உள்ளடக்கத்தை உள்வாங்கியதாக அமைந்திருக்கின்றது.  ஆயினும் உள்ளே லே அவுட், ப்ரூஃப் ரீடிங், செம்மையாக்கம் என்பன மிகச் சாதாரணமாகவும் பிழைகள் நிறைந்ததாகவும் அமைந்திருக்கின்றன.  குறிப்பாக மோசமான இந்த லே அவுட் பல இடங்களில் வாசிப்பினைக் குழப்புவதாகவும் இருக்கின்றது.  உண்மையில் நாம் பதிப்பகங்கள் குறித்தும் பதிப்புச் செயற்பாடுகள் குறித்தும் முக்கியத்துவம் கொடுத்து உரையாடவேண்டியது  அவசியமாகும்.  இந்த நூல் பரிசல் – காலம் இணைந்து பதிப்பித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்தியாவிற்கு வெளியில் இருந்து இந்திய மொழிகளில் வெளியாகின்ற புத்தகங்களை இந்தியாவில் விற்பனை செய்யமுடியாது என்பதால் விற்பனையுரிமையை தமிழ்நாட்டுப் பதிப்பகங்களுக்கு வழங்கி அல்லது தமிழ்நாட்டிலும் ஈழத்துப் பதிப்பங்களைப் பதிவுசெய்து புத்தகங்களைப் பதிப்பிகின்ற ஓர் உத்தி கையாளப்பட்டது.  காலம் / வாழும் தமிழ் வெளியீடுகள் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டதாய் இருக்கின்றபோது ஏன் இரண்டு பதிப்பகங்கள் இணைந்து வெளியிடுகின்ற தேவை எழுந்தது என்பது தெரியவில்லை.

இந்தத் தொகுப்பிலும் போரின் கதைகளே நிறைந்திருக்கின்றன.  முப்பதாண்டுகாலமாக போர்ச் சூழல் நிலவிய ஈழத்தவர்கள் நேரடியாகவோ அல்லது பின்னணியிலோ போரின் தாக்கம் இல்லாமல் கதை சொல்வது என்பது இயல்புக்கு மாறானது, வலிந்து திணிப்பது.  ஒரு காலப்பகுதியில் போரைக் கொண்டாடியும் போரை எதிர்த்தும் எழுதப்பட்ட ஈழத்தவர் இலக்கியங்கள் இப்போது போர் தின்ற மனிதர்களின் கதையைப் பேசத் தொடங்குகின்றன.  போரைக் கொண்டாடத, போரை வெறுத்த மனிதர்களின் வாழ்வையும் கூட துரத்தித் துரத்தித் தீண்டியது போர். தமிழகத்தில் இருக்கின்ற பெரும்பாலானவர்களுக்கு போர் என்பது கிளர்ச்சியூட்டுவதும் தேச பக்தி சார்ந்த வெற்றுப் பெருமிதமுமே, ஆனால் ஈழத்தவர்களது அனுபவம் அப்படியானது அல்ல. ஈழத்தவர்களது எழுத்துகளில் இருக்கக் கூடிய தமிழகத்தவர்களிடமிருந்து வேறுபட்ட வாழ்வியல், அரசியல் உள்ளடக்கம், சொல் வழக்காறு, பண்பாட்டம்சங்கள் போன்றவற்றை இல்லாதொழித்து எமக்கான கதைகளை, எமக்குப் பரிச்சயமான கதைகளை, எம்மைக் குற்றவுணர்வுக்குள்ளாக்காத கதைகளை நீங்கள் எழுதுங்கள் என்று அதிகாரத் தொனியில் கட்டளையிடும் பெரியண்ணன் மனோபாவம் பண்பாட்டுப் படையெடுப்பின் இன்னோரு வடிவம், அது அரசியல் உள்நோக்கையும் அகண்ட பாரத நிகழ்ச்சி நிரலையும் கொண்டது. அண்மைக்காலமாக படைப்புகளை அவை சிறுகதையாக முழுமை அடையவில்லை, நாவலாக முழுமையடையவில்லை என்று சொல்லி அதற்காகவே நிராகரிக்கின்ற போக்கையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.  உண்மையில் வடிவங்களை அடிப்படை அலகாக வைத்து பிரதிகளை நிராகரிப்பது சரியான வாசிப்புத்தானா என்ற கேள்வியே எழுகின்றது.  சமகாலத்தில் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்கள் தம் நினைவுகளை நினைவுக்குறிப்புகளாகவும் நெடுங்கதைகளாக எழுதுவதனூடாக வரலாற்றை எழுதுகின்ற போக்கு அதிகரித்தே வருகின்றது.  அவற்றில் பல கலா நேர்த்தியும் உண்மையின் குரலாயும் தம்மை வெளிப்படுத்தி வாசிப்பனுபவத்தைக் கொடுக்கின்றன.  ஈழத்தவர்களால் எழுதப்படுபவை அனேக நினைவுக்குறிப்புகளாக (Memoir) இருக்கின்றன.  அவை மிக முக்கியமான வடிவமும் கூட.    அதேநேரம் ஈழத்தவர் வாழ்வியலையும் அரசியலையும் காத்திரமாகவும் கலாபூர்வமாகவும் வெளிப்படுத்தும் தனித்துவமான பிரதிகளும் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டே இருக்கின்றன.  அத்தகையதோர் தொகுப்பாக பா. அ. ஜயகரன் கதைகள் தன்னை வலுவாக நிலைநிறுத்திக்கொள்கின்றது.


மார்ச் 16, 2019 அன்று ரொரன்றோவில் ஸ்கார்பரோ வில்லேஜ் சமூக நடுவத்தில் இடம்பெற்ற பா. அ, ஜயகரன் கதைகள் தொகுப்பு வெளியீடும் உரைகளும் நிகழ்வில் வாசிக்கப்பட்ட இக்கட்டுரை பின்னர் ஏப்ரல் 2019 ஜீவநதி இதழிலும் பிரசுரமானது.

 

54233806_2075598782554638_4466807722037215232_n