ஆவணப்படுத்தல்: அறிமுகமும் அரசியலும்

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர், 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஶ்ரீஸ்கந்தன் அவர்கள் எழுதிய “மனசுலாவிய வானம்”, அரியாலையூர் நாடக ஆளுமைகள் ஆகிய இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா கனடாவில் இடம்பெற்றிருந்தது.  அதில் வெளியிடப்பட்ட “மனசுலாவிய வானம்” இன்றும் எனக்கு மிகப்பிடித்த புத்தகங்களில் ஒன்றாக இருக்கின்றது.  அதற்கான முக்கிய காரணமாக, அந்த நூலில் தனது நினைவுகளைப் பதிவுசெய்வதன் மூலம், அன்றைய வாழ்க்கையை, நிலவிய பண்பாட்டை, வரலாற்றை ஸ்ரீஸ்கந்தன் பதிவுசெய்திருப்பார்.  அதுபோலவே ”அரியாலையூர் நாடக ஆளுமைகள்” நூலும் கூட, நாடகக் கலைஞர்களைப் பற்றிய நினைவுகளைப் பதிவுசெய்ததாக இருக்கும்.  ஶ்ரீஸ்கந்தன் இயல்பாகவே இவ்விதமாக ஆவணப்படுத்தலில் மிகுந்த அக்கறை கொண்டவர்.  அவரது முன்னைய நூல்கள் வெளிவந்த காலத்திலிருந்து எனக்கு நல்ல அறிமுகம் இருக்கின்றது.  இக்காலப்பகுதியில் அவரது பெரும்பாலான செயற்பாடுகள் பின்னே வெவ்வேறான ஆவணப்படுத்தல் நோக்கும் அறிவைப்பகிர்ந்து கொள்ளல் என்கிற ஆர்வமும் இருப்பதை அவதானித்திருக்கின்றேன்.  இவற்றின் விளைபொருட்களில் ஒன்றாக “ஈழத்து அரங்க ஆளுமைகள் 100” என்கிற நூலும் அமைகின்றது.  இந்நூலின் வெளியீட்டு விழா கனடாவில் நடைபெற்றபோது அதில் வாசித்த கட்டுரை இது.

அறிமுகம்

இந்நிகழ்வுக்காக ஆவணப்படுத்தல்” அறிமுகமும் அரசியலும் என்ற பெயரில் எனது கட்டுரை வாசிப்பினைச் செய்திருந்தேன்.  ஆவணப்படுத்தல் என்ற சொல்லை இங்கே கலைச் சொல்லாக  (Technical Term) எடுத்து  நோக்குவோம்.  ஆவணப்படுத்தல் என்பது Documentation என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லாக இங்கே பயன்படுத்தப்படுகின்றது.  ஆவணம் என்கிற சொல்லானது கடைவீதி, உரிமை, அடிமைத்தனம், உரிமைப்பத்திரம், அடையாளம் ஆகிய அர்த்தங்களைக் கொண்டது என்று தமிழ் லெக்சிகனும் கழகத் தமிழ் அகராதியும் குறிப்பிடுகின்றன. 

Documentaion என்கிற ஆங்கிலச் சொல்லைச் எடுத்துக்கொண்டால் இது documentum என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானது. அதன் அர்த்தம் “எடுத்துக்காட்டு, சான்று அல்லது பாடமாக்கம்” என்பதாகும்.

ஆங்கிலத்தில் 18 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் எச்சரிக்கை அல்லது அறிவுறுத்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.  பின்னர் இது சட்டத்தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பத்திரங்களை (ஆவணங்களைத்) தயாரிக்கும் செயற்பாட்டிற்குப் பிரயோகிக்கப்பட்டது.  பின்னர் அது மெல்ல மெல்ல மாறுதலடைந்து சமகாலத்தில் Documention என்பது மனிதர்களையோ, செயல்முறையையோ, அமைப்பையோ, பொருளையோ, கருத்தையோ பற்றிய தகவல்களையும், உத்தரவுகளையும், ஆதாரங்களையும் எழுதுவது உள்ளிட்ட செயற்பாடுகளாகப் பதிவுசெய்வதைக் குறிக்கின்றது.  ஆவணப்படுத்தல் என்கிற சொல்லும் இதே அர்த்தத்திலேயே ஒரு கலைச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகின்றது.  நான் மீண்டும் மீண்டும், கலைச் சொற்களை அவை என்ன அர்த்ததில் கலைச் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்கிற பிரக்ஞையுடன் பார்க்கவேண்டும் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கின்றது.  சொல்லாடல்களில் ஒரு சொல்லினை நாம்  கலைச் சொல்லாகப் பயன்படுத்தும் போது, அது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனை உள்வாங்காது அதற்குரிய நேரடியான, அகராதி அர்த்தங்களை எடுத்துப் புரிந்துகொள்ளுவதில் ஒரு பொறுப்பின்மை இருக்கின்றது.  இந்தப் பொறுப்பின்மை நிகழும்போது அது உரையாடலை மடைமாற்றியும் திரித்தும் விடுகின்றது.

ஆவணப்படுத்தல் என்பதனை, நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதத்தில் செய்துகொண்டுதான் இருக்கின்றோம்.  நாட்குறிப்புகள் எழுதுகிறோம், புகைப்படங்கள் எடுக்கின்றோம், நண்பர் ஒருவரைச் சந்திக்கும்போது அவரது புதிய தொலைபேசி இலக்கத்தைப் பதிவுச் செய்கின்றோம், வீட்டுக்கு வரும் மாதாந்தக் கட்டணங்களுக்காக தபால்களைச் சேர்த்து வைக்கின்றோம், தொலைக்காட்சியிலோ அல்லது தெரிந்தவர்கள் சொல்லும்போதோ சமையல் குறிப்புகளை எழுதி வைக்கின்றோம்; இப்படியான தரவுகளைப் பதிவு செய்து அதனை ஒழுங்குபடுத்தும்போது அது ஆவணப்படுத்தலாகின்றது. 

ஆவணப்படுத்தலும் ஆவணக் காப்பும் – விளக்கமும் வேறுபாடுகளும்

சமகாலத்தில் ஆவணப்படுத்தல் என்பதுடன் தொடர்பாக Documentation (ஆவணப்படுத்தல்), Archiving (ஆவணக் காப்பு) என்கிற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்றாலும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. 

ஆவணப்படுத்தல் (Documentation) என்பது “மனிதர்களையோ, செயல்முறையையோ, அமைப்பையோ, பொருளையோ, கருத்தையோ பற்றிய தகவல்களையும், உத்தரவுகளையும், ஆதாரங்களையும் எழுதுவது உள்ளிட்ட செயற்பாடுகளாகப் பதிவுசெய்வதைக் குறிக்கின்றது” என்று முன்னர் பார்த்தோம். 

இவ்வாறாகப் பதிவுசெய்யப்பட்ட தரவுகளையும், நினைவுகளையும் நீண்டகாலத்திற்குப் பாதுகாத்து வைப்பதற்காக செயற்பாடே ஆவணக் காப்பு (Archiving) ஆகும். 

பொதுவாக ஆவணப்படுத்தல்கள் சமகாலத்தேவையைக் கருத்திற்கொண்டு செய்யப்படுகின்றன; அதே நேரம் ஆவணக் காப்புகள் அவற்றின் எதிர்காலப் பயன்பெறுமதியையும் எதிர்காலத்திலும் ஆவணங்களுக்கான அணுக்கத்தைக் (Access) கொடுப்பதையும் நோக்கினை முக்கியமாகக் கொண்டிருக்கின்றன.

ஓர் உதாரணத்துக்காகவும் புரிதலுக்காகவும் ஶ்ரீஸ்கந்தனின் ஈழத்து அரங்க ஆளுமைகள் 100 என்கிற நூலினை எடுத்துக்கொள்வோம்.  இங்கே இந்த ஆளுமைகள் குறித்த விபரங்கள் தேடி எடுக்கப்பட்டும், அவர்களுடன் உரையாடியும் தொகுக்கப்பட்டு கட்டுரைகளாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.  இது ஒரு ஆவணப்படுத்தல் செயற்பாடு என்று வைத்துக்கொள்வோம்.  அதேநேரம் அவற்றைத் தொகுத்து, அவை வரலாற்றுப் பதிவுகளாக எதிர்காலத்திலும் நிலைக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் நூலுருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்ற என்பதால் அது ஓர் ஆவணக்காப்பாகவும் (Archiving) அமைந்துவிடுகின்றது.

ஆவணப்படுத்தலில் அரசியல்

சமூக விடுதலைக்காகக் கொண்டுவரப்படுகின்ற புதிய திட்டங்கள், நடைமுறைகள் போன்றவற்றை அல்லது அதில் இருக்கின்ற சிறிய ஓட்டைகளை அதிகாரத் தரப்பினர் கையிலெடுத்துக்கொண்டு நுட்பமாக ஒடுக்குமுறைகளை இன்னும் இறுக்குவதை நாம் உணரவேண்டும்.  There is no political power without control of the archive என்கிற தெரிதாவின் கூற்று இங்கே முக்கியமான ஒன்று.  இதனூடாக ஆவணக் காப்புச் செய்வதில் இருக்கக் கூடிய அரசியைலையும் அதிகாரத்தையும் தெரிதா சுட்டிக்காட்டுகின்றார்.  பொதுவாக நாம் ஒரு விடயம் ஆவணக் காப்பகங்களில் இருக்கின்றதென்றால் அதுவே உண்மையானதென்றும் அதுவே வரலாறு என்றும் புரிந்துகொள்வதே பொது மனநிலையாக இருக்கின்றது.  ஆனால் ஆவணப்படுத்தலிலும் ஆவணக் காப்புச் செய்வதிலும் இருக்கக் கூடிய அரசியலைலும் அதிகாரம் தொழிற்படும் விதத்தையும் நாம் புரிந்துகொள்வதே எமக்கு ஆவணப்படுத்தல் பற்றிய பிரக்ஞையைத் தூண்டும்.

ஆவணக் காப்பு என்பது நடுநிலையானதல்ல என்று குறிப்பிடும் தெரிதா, ஆவணக் காப்பகங்களை யார் கட்டுப்படுத்துகின்றார்களோ அவர்களே எவை நினைவில் இருக்கவேண்டும், எவை மறக்கடிக்கப்படவேண்டும் என்பதைத் தீர்மாணிக்கவேண்டும் என்பதையும் அவற்றினூடாகத் தமக்குச் சாதகமானதை வரலாறாகச் சொல்கின்றார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.

எனவே யார் ஆவணப்படுத்துகின்றார்கள் என்பதுவும் என்ன நோக்கத்துக்காக ஆவணப்படுத்துகின்றார்கள் என்பதுவும் அவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டவற்றிற்கான அணுக்கம் யாருக்குக் கொடுக்கப்படுகின்றது, அது என்ன நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதுவும் முக்கியமானது.  ஒடுக்கப்படும் மக்கள் தமக்கான விடுதலைக்கான கருவிகளில் ஒன்றாக ஆவணப்படுத்தலைக் கையில் எடுத்திருப்பது முக்கியமானது என்றாலும் பெரும்பாலும் ஆவணப்படுத்தல்களைச் செய்பவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் என்பதை நன் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.  குறிப்பாக அரச நிறுவனங்கள், அரசு சாரா பெரு நிறுவனங்கள் போன்றன செய்கின்ற ஆவணப்படுத்தல்களும் தரவுளும் மக்களைக் கண்காணிக்கவும், இன்னும் ஒடுக்கவும், ஆவணப்படுத்தல்களில் திட்டமிட்டே சில விலக்கல்களைச் செய்வதன் மூலம் தமக்குச் சாதகமான வரலாற்றை உருவாக்குதலைச் செய்வதற்கும் உதவுகின்றன. 

ஓர் உதாரணத்துக்கு, ஒரு சமூகம் தன்னை ஆவணப்படுத்துகின்றது என்று ஆவணங்களையும் தரவுகளையும் திரட்டத் தொடங்கினால் சாதியம், பாலினம், மதம், மொழி போன்றவற்றில் யார் அதிகாரத்தில் இருக்கின்றார்களோ அவர்கள் குறித்த தரவுகளே அதிகம் கிடைக்கும்.  இந்த இடத்தில், யாரெல்லாம் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகின்றார்களோ அவர்கள் குறித்த விசேட அக்கறைகளுடன் கூடிய, அவர்களைப் பற்றிய ஆவணப்படுத்தல்களை குவிமையமாகக் கொண்ட சிறப்பு ஆவணப்படுத்தல்கள் அவசியம்.  பொதுவாக சமூகங்களில் பெரும்பான்மையினராகவும் அதிகாரமுள்ளவர்களாகவும் இருப்போர் தமது பெருமிதங்களை நினைப்பவற்றை ஆவணப்படுத்துவதில் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.  உதாரணமாக, ஈழத்தமிழர்களை எடுத்துக் கொண்டோர் கோயில்கள், பிரபல பாடசாலைகள், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பிரபலங்கள், தேசிய இனப்பிரச்சனை தொடர்பான விடயங்களை ஆவணப்படுத்துவதற்கான தரவுகளைத் திரட்டுதல் போன்றவற்றுக்கான நிதி உள்ளிட்ட வளங்களைத் திரட்டுவது இலகுவானதாக இருக்கு.  அதேநேரம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம், சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகள், தேசிய இனப்பிரச்சனையில் போராடிய இயக்கங்களுக்குள் நடந்த முரண்கள், படுகொலைகள், ஒடுக்கப்பட்ட சாதியினைச் சேர்ந்த ஆளுமைகள் பற்றிய விபரங்களைத் திரட்டுவதற்கும் பதிவுசெய்வதற்கும் முயற்சி எடுக்கும்போது அவற்றுக்கான தரவுகளைத் திரட்டுவது, பொதுச் சமூகத்திடம் இருந்து நிதி திரட்டுவது போன்றவையும் கடினமானதாகவே இருக்கும். 

இந்தச் சவாலை எதிர்கொள்ள,

  • பெண்ணிய ஆவணப்படுத்தல்கள்
  • தலித் ஆவணப்படுத்தல்கள்
  • பால்புதுமையினர் பற்றிய ஆவணப்படுத்தல்கள்
  • ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பற்றிய ஆவணப்படுத்தல்கள்

போன்றவற்றில் கவனம் செலுத்தும் சிறப்பு ஆவணப்படுத்தல்கள் செய்யப்படும்போது அவற்றுக்கு மேலதிக நிதி, ஆளணி வளங்களை ஒதுக்குவது அவசியமானது. 

அதுமட்டும் அல்லாமல், கையாளக்கூடிய வேறு சில உத்திகளையும் இங்கே பட்டியலிடுவது முக்கியம் என்று கருதுகின்றது.

  1. இதுவரை காலமும் அதிகாரத்தரப்பினர் ஆவணப்படுத்தும் போது முக்கியத்துவம் கொடுக்கப்படாத / விலக்கப்பட்டிருந்தவர்களின் குரல்களை ஒலிக்கச் செய்தலும், மாற்றுக் குரல்களைப் பதிவு செய்வதன் மூலம் அதிகாரத் தரப்பினர் பதிவு செய்திருந்த வரலாற்றைக் கேள்விக்குள்ளாக்கலும்.
  2. ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை நேரடியாகப் பதிவுசெய்தலும், அவர்களின் தன்னனுபவங்களைப் பதிவு செய்தலும், ஆவணப்படுத்தலில் அவர்கள் ஈடுபடுவதற்கு இருக்கக்கூடிய நிறுவன ரீதியான தடைகளை (Structural barriers) ஒழித்தலும்.
  3. ஒடுக்கப்பட்ட மக்கள் தாமே தம்மை ஆவணப்படுத்தல்
  4. ஆவணப்படுத்தும்போது மரபுக் கலை, வாய்மொழி வரலாறு, சொலவடை, தொன்மங்கள், வழக்காறுகள், நாட்டார் இலக்கியம், சுவரோவியம், சுவரொட்டிகள் போன்ற பல்வேறு வடிவங்களையும் ஆவணப்படுத்தல்
  5. இதுவரை தொகுக்கப்படாத ஒடுக்குமுறைகளின் வரலாற்றைத் தொகுக்கும் நோக்குடனான புதிய ஆவணபடுத்தல் திட்டங்களைச் செய்தல்
  6. காணாமல் போனோர் குறித்த ஆவணங்கள்
  7. சாதி அடிப்படையிலான வன்முறைகள், தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள்
  8. பாலினப் பாகுபாடுகள் ஆவணங்கள்
  9. அபகரிக்கப்பட்ட நிலங்கள் பற்றிய தரவுகள் (அபகரிக்கப்பட்ட நிலங்கள் பற்றி உரையாடும்போது காணி உரிமையே இல்லாமல் இருந்த மக்கள் பற்றிய கேள்வி எழுவதும் முக்கியமானது.  ஆனால் காணி உரிமையே இல்லாமல் மக்கள் இருந்தனர் என்பது நில அபகரிப்பினை நியாயப்படுத்திவிட முடியாது.  சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்களூடான காணி உச்ச வரம்பு, காணிகளைப் பகிர்ந்தளித்தல் என்பன முக்கியம்.)

ஆவணப்படுத்தலில் வரக்க்கூடிய இன்னொரு விடயத்தையும் நான் கவனத்தில் கொள்வது அவசியம்.  ஆவணப்படுத்தல்களைச் செய்கின்ற நிறுவனங்களும் அரசுகளும், அவற்றைத் தாம் தமது அணுக்கத்துக்கு மாத்திரம் என்று சேமித்து வைக்கின்றபோது அது இன்னும் பெரிய அதிகாரமாக மாறிவிடுகின்றது.  எனவே ஆவணப்படுத்தலை ஜனநாயகப்படுத்துவதற்கு அதில் மக்களின் பங்கேற்பினை பரவலாக்குவதும், ஒடுக்கப்பட்ட தரப்பினரை மேலதிகமாக உள்ளீர்ப்பதும் அவசியம் என்பது போல ஆவணக் காப்புகங்கள் பொது அணுக்கத்துக்கு தமது ஆவணச் சேமிப்புகளைத் திறந்து விடுவதும் அவசியமானது. 

ஈழத்தமிழர்களாகிய நாங்கள் ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களாக, தேசிய இன விடுதலைக்காகப் போராடுபவர்களாக இருக்கின்றோம்.  அதேநேரம், சாதிய, பாலின, மத, பிரதேச ரீதியான ஒடுக்குமுறைகளாகச் செய்பவர்களாகவும் இருக்கின்றோம்.  ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் என்பது அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான குரலாக இருக்கின்றபோதே அது சமூக நீதிக்கான குரலாக மாறும்.  அதைவிடுத்து, நாம் எந்த விதமான ஒடுக்குமுறையால் நேரடியாக பாதிக்கப்படுகின்றோமோ அதில் மட்டும் அக்கறை காட்டுக்கொண்டு, நாம் ஒடுக்கும் தரப்பினராய் இருக்கின்ற போது வருகின்ற சலுகைகளை அனுபவித்திக்கொண்டு இருப்பது அறமல்ல.  இந்தப் புரிதல் ஆவணப்படுத்தல் குறித்து வரும்போதும் நம் மனதில் வரவேண்டும். 

பிற்குறிப்பு:

இக்கட்டுரை ஜூன் 22, 2025 அன்று மார்க்கம் நகரில் நடந்த நூல்வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்டது.

கலைமுகம் 80 வது இதழில் இக்கட்டுரை பிரசுரமாகியிருந்தது.

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑