மகாபாரதக் கதையின் அரசியல் என்ன என்கிற கேள்வியொன்றினை அண்மையில் முகநூலில் மீராபாரதி அவர்கள் எழுப்பி இருந்தார். மகாபாரதம் சிறுவயது முதலே எனக்கு மிகவும் பிடித்த காவியம். இராமாயணத்தைவிடவும் கூட. அதிலும் குறிப்பாக நான் யாழ்ப்பாணத்தில் இருந்த 1990 – 96 வரையான காலப்பகுதியில் அனேகமான ஆலயங்களில் திருவிழாக்காலங்களில் கம்பராமாயண சொற்பொழிவு தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தது. பெரும்பாலும் கம்பன் கழகத்தைச் சேர்ந்தவர்களாலும், சில தனிப்பட்டவர்களாலும் இச்சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. ஆயினும், மகாபாரதம் போல இராமாயணம் ஒருபோதும் நெருக்கமானதாக இருந்ததில்லை.
மகாபாரதம் சொல்லும் அரசியல் அல்லது நீதி என்ன என்று நானும் பலதடவைகள் யோசித்து இருக்கின்றேன். எனது வாசிப்பில், மகாபாரதம் பொது அறத்தை முன்னிறுத்தும் நூல் அல்ல. அது ஆள்வோருக்கான அறத்தை / “உயர் குலத்துக்கான” (Aristocrat) அறத்தையும், அந்த அறம் நிலைநாட்டப்படுவதையுமே தன் பிரதான கருத்தாகக் கொண்டிருப்பது. பொதுதர்மம் ஒன்றினை நிலைநாட்டுவதே ஆள்வோரின் கடமை என்றும் அப்படிக் காப்பதற்காக ஆள்வோருக்கு பொது தர்மத்திலிருந்து மகாபாரதத்தில் “சில விலக்குகளும்” வழங்கப்படுகின்றன. ஆள்வோரின் அறமும் மக்களின் அறமும் வெவ்வேறு என்பது திருத்தமாகக் காட்டப்படுகின்றது. ஆள்வோரைக் காப்பதற்காக சாதாரண மக்கள் பலியிடப்படுவதைக் கூட நியாயம் என்று வலியுறுத்துகின்றது. இதை ஒத்த போக்கினை கிட்டத்தட்ட மகாபாரதம் “வியாசரால் எழுதப்பட்டதாகக்” கூறப்படும் கி.மு நான்காம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த கிரேக்க சிந்தனையாளர்கள் / தத்துவஆசிரியர்களிடமும் காணலாம். குறிப்பாக அரிஸ்ரோட்டில் “அறம்” குறித்து எழுதும்போது ஆள்வோருக்கான அறமாகக் கூறும் கருத்துக்களில் இதே சாரத்தை அவதானிக்கலாம்.
இன்றைய காலப்பகுதியில் வைத்து மகாபாரதத்தினை மதிப்பிடுவதும், “மனித உரிமைகள்” என்கிற பரந்த அடிப்படையில் மகாபாரதத்தை மதிப்பிடுவதும் முறையாக மாட்டா. ஒரு இலக்கியமாக, காவியமாக மகாபாரதத்தை அது நிகழ்ந்ததாகக் கூறப்படும் காலப்பகுதியுடன் இணைத்துப் பார்ப்பதே பொருத்தமானதாகும். குறிப்பாக காந்தாரி தன் கண்களைத் திருமணம் ஆனதிலிருந்து கட்டிக்கொண்டாள் என்பதை ஆணாதிக்க, பெண்ணிய பிரச்சனையாக அணுகுவது முறையானதல்ல. அவள் கொண்ட காதலின் வெளிப்பாடாக அவளே அம்முடிவை எடுத்திருக்கவும் கூடும் அல்லவா? (அதே நேரம் காந்தாரி தான் கண்தெரியாத திருதராஷ்டிரனைத்தான் கல்யாணம் செய்யப்போகின்றேன் என்பது தெரியாமல் பீஷ்மக் கனவுகளுடன் இருந்தவள் என்றும், அதற்கான எதிர்ப்பாகத்தான் தன் கண்களை மறைத்து துணிகட்டி மணமேடை வந்தாள் என்றும் தன் கதாகாலம் நூலில் எழுதியிருக்கின்றார் தேவகாந்தன். “இது பற்றிக் கேட்டபோது திருதராஷ்டிரன் சாம்பிப்போனான். அவள் தன்னையோர் அபாக்கியவதியாய்ச் சபையில் அடையாளப்படுத்தியதாய் அவன் எண்ணிப் புழுங்கினான். ஆனால் சபையோ அவளின் பதிபக்தியாய் அதைக் கண்டு மெய் மறந்திருந்தது – பக்கம் 21).
அதே நேரம், மகாபாரதத்தை புனித நூலாக, போதனையாக முன்னிறுத்தி, இந்துத்துவப் பிரசாரம் செய்யப்படும்போக்கு சற்று மேலோங்கிவருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக அண்மைக்காலத்தில் இரண்டு முக்கிய தொலைக்காட்சிகளில் தொடராகவும், ஜெயமோகன் அவர்களின் இணையத்தளத்தில் நாளொன்றுக்கு ஒரு அத்தியாயமாகவும் எழுதப்படுவதையும், இந்திய மைய அரசு மத அடிப்படைவாத பாஜகவின் வசம் வந்திருப்பதையும் எந்தச் சந்தேகமும் இல்லாமல் பார்க்கமுடியாமல் இருக்கின்றது. ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கூட மக்களால் இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் அதிகம் பார்க்கப்படுவதும் ஒரு விதமான கலாசாரப் படையெடுப்பே.
கதாகாலம் என்கிற மகாபாரதத்தின் நல்லதோர் மறுவாசிப்பினை எழுதிய எழுத்தாளர் தேவகாந்தனுடன் இந்த கருத்துக்களைக் குறித்துப் பேசியபோது அவர், வியாச பாரதத்திலேயே அறம் என்பது ஒழுங்குபடுத்தப்பட்டு கூறப்படுகின்றது. ஆனால் கதைசொல்லிகளால் சொல்லப்பட்டுவரும் பாரதக்கதைகளில் இந்த “ஒழுங்குபடுத்தப்பட்ட அறம்” என்பது இல்லை என்று கூறினார். மகாபாரதத்தில் மிகவும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட கீதையில் தான் இந்த அறம் நேரடியாக போதிக்கப்படுகின்றது. ஒரு விதத்தில், பாரதம் என்கிற வழங்கப்பட்ட கதையினை “இந்துத்துவத்திற்கு” ஆதரவு தரும் பிரதான நூல்களின் ஒன்றான மாற்றியது அதில் செருகப்பட்ட கீதையே. இன்று வரை கூத்து போன்ற மக்கள் கலைவடிவின் பாடு பொருளாகவும், அண்மைக்காலம் வரை சுருட்டுச் சுற்றுதல் முதலிய சிறு தொழில்கள் நடைபெறும் இடங்களில் வாசிக்கப்பட்டு வந்ததுமாக இருப்பது பாரதமே. இராமாயணம் போல பாரதம் மக்களை விட்டு விலகி நின்றதல்ல. அது போலவே மகாபாரதத்தின் கதை மாந்தரும். கீதையைத் தவிர, கிருஷ்ணன் பாரதக்கதையில் வேறெங்கும் அவதாரமாவதில்லை.
# Aristocrat என்பது அனேகம் உயர்குலம் என்றே பொருள்படும் என்றாலும், இங்கே அதை ஆள்வோர் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளேன்.
# தேவகாந்தனின் கதாகாலம் நூல்பற்றி முன்னர் நான் எழுதிய பதிவு
அதே கட்டுரையின் இரண்டாம் பகுதி
# மீராபாரதியின் முகநூலில் நடைபெற்றா உரையாடல்

Post by மீராபாரதி பிரக்ஞை.