ஆரஞ்சு மிட்டாய் படம் பார்த்தேன். இன்றைய அவசர உலகில் உறவுகளின் அபத்தம், தனிமனிதத் தேர்வுகளின் மீது லௌதீக காரணிகள் திணிக்கும் தாக்கம் அல்லது நெருக்கடிகள் பற்றி இத்திரைப்ப்டம் விவரிக்க முயலுகின்றது. நன்றாக எடுத்திருக்கக் கூடிய கதை. ஆனால் திரைக்கதையின் பலவீனத்தாலும், கதையை நகர்த்திச் செல்வதில் ஓரளவு வெளிப்படையாகவே தெரிந்த குழப்பத்தாலும், பொறுத்தமற்ற பாத்திரத் தேர்வுகளாலும் சற்றே தள்ளாடித் தள்ளாடி…. ஆயினும் நல்ல திரைப்படம் ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் விஜய் சேதுபதியிடமும், பிஜூ விஸ்வநாத்திடமும் இருப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இத்திரைப்படத்தில் பெற்றுக்கொண்ட அனுபவத்துடன் சரியான கதை, திரைக்கதைகள் நோக்கி அவர் நகரும்போது அதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கலாம்.
தனிமையுடன் போரிடும்போது அதனை வெல்ல எடுக்கும் முயற்சிகள் பற்றி ஆராய்வது ஒரு விதத்தில் சுவாரசியமளிக்கக் கூடியது. தனிமை என்பதைத் தமக்கான தேர்வாக எடுப்பது வேறு. அது அவர்களுக்கு உவப்பளிப்பதுவும் கூட. ஆனால், தற்கால வாழ்வின் நெருக்கடிகள் திணிக்கும் தனிமைகள் கொடுமையானவை. தனிமை என்பது தனியாக இருப்பது மாத்திரமல்ல; தன்னைத் தனித்து விடப்பட்டவனாக உணர்வது; தன்னைச் சுற்றி இருப்பவர்களிடையே தன்னை அந்நியமாக உணர்வது! மன அழுத்தம், மன உளைச்சல், தனிமை ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்க்கபப்டவேண்டியன.
குறிப்பாக கனடா போன்ற ஒரு நாட்டில் முதியவர்கள், அதிலும் குடிவரவாளர்களாக கனடாவிற்கு தமது முதுமைப் பருவத்தில் வந்தவர்கள் தம்மைக் கனடிய வாழ்வுச் சூழலுக்குள் பொருத்திக்கொள்வதற்கு எதிர்கொள்ளும்தடைகள் பற்றி நிச்சயம் பேசவேண்டியே இருக்கின்றது. புதிய நாடு, புதிய கலாசாரம், பழக்கமில்லாத காலநிலை, பரிச்சயம் இல்லாத மொழி என்கிற சூழலில் தெரிந்தவர்கள் அதிகம் இல்லாமல் தமது பிள்ளைகளை நம்பியே இங்குவரும் பெற்றோர், தமது பிள்ளைகளால் தனித்துவிடப்படும்போது மிகப்பெரும் மனநெருக்கடிக்கு உள்ளாகின்றார்கள்.
புறநகரில் பணிபுரியும் நான் வேலை முடிந்து நிலத்தடி ரெயினால் வந்து எனது வாகனத்தரிப்பிடம் நோக்கிச்செல்லும்போது அங்கிருக்கின்ற கோப்பிக் கடைக்குச் செல்வது எனது நாளாந்த வழக்கம். அந்தக் கடையின் மூலையில் இருக்கின்ற மேசை ஒன்றில் அறுபத்தைந்து வயதளவில் இருக்கக்கூடிய ஒரு தம்பதியை அவதானிக்கத்தொடங்கினேன். சிலநாட்கள் புன்னகைகளைப் பரிமாறியபின்னர் ஒருநாள் அவர் என்னை அணுகி, தம்பி ஒரு கோப்பி வாங்கித் தாறீரோ என்று கேட்டார். வாங்கிக் கொடுத்தேன். பின்னர் அதுவே வழமையாகத் தொடர்ந்தது. சிலநாட்கள் வேலைப் பளு அதிகம் இல்லாத நாட்களில் நான் வேளைக்கே வீடு திரும்பினாலும், வேலை சற்றி அதிகமாக இருந்து நாம் தாமதமாக வீடுதிரும்பும்போதும் கூட அவர்கள் அங்கே இருப்பார்கள். ஏதேனும் காரணங்களால் நான் வேலைக்குப் போகமுடியாத நாட்களிலும், அவர்கள் அங்கே என்னை எதிர்பார்ப்பர்களோ என்கிற மெல்லிய குற்றவுணர்வும் என்னில் வந்துபோகத் தொடங்கியது. ஒரு நாள் அவர்களிடம் நீங்கள் ஏன் நெடுக இங்கே இருக்கின்றீர்கள் என்று கேட்டேன். “தம்பி, நாங்கள் இலங்கையில் ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தர்கள். மகன் ஸ்பொன்சர் பண்ணி இங்கே கூப்பிட்டவன், எங்களுக்கும் மருமகளுக்கும் பெரிசா ஒத்து வரேல்ல. அதான் அவன் வேலைக்குப் போகேக்கில எங்களை இங்கே விட்டிட்டுப் போறவன். திரும்ப வீட்ட போகும்போது கூட்டிக்கொண்டு போவான்“ என்றார். எவர் மீதும் குறைகூறும் தொனி அவரிடம் இருக்கவில்லை. அந்த நிலைக்கு அவர் தன்னைத் தயார்ப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. தவறு அவர்களுடையதாகக் கூட இருக்கலாம். ஆனால் இந்த அவலமும், அபத்தமான வாழ்வும் தெரிவிப்பது என்ன? நிச்சயமாக இங்கே முதியவர்கள் தனியே வாழவும், ஓய்வுநேரங்களைக் கழிக்கவும் பல்வேறு வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அந்த வாய்ப்புகள் தெரிவதில்லை. இன்னமும் அனேகமானவர்களுக்கு அவர்களது வறட்டுக் கௌரவம் இதற்குத் தடையாக இருக்கின்றது. எம்மைச் சுற்றி இருப்பவர்களை நோக்கி நாம் சிந்தும் ஒரு சிறுபுன்னைகையும், சில துளி நிமிடங்களும், சில வார்த்தைப் பேச்சுகளும் எவரேனும் ஒருவருக்கு இன்னும் கொஞ்சம் வாழ உந்துதலாக அமையலாம்!
Leave a Reply