மாற்றம்எழுபதுகளின் தொடக்கங்களில் எழுதத் தொடங்கிய படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்புகளை அண்மைக்காலமாக வாசித்துவருகின்றபோது இந்தக் காலகட்டத்தில் உள்ளடக்கம் சார்ந்தும், சொல்லப்படும் விதம் சார்ந்தும் முக்கியமானதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது என்று உறுதியாகக் கூறமுடிகின்றது.  அறுபதுகளில் ஈழத்தில் இடம்பெற்ற இலக்கியம் பற்றிய விவாதங்களையும் அந்நேரத்தில் முன்வைக்கப்பட்ட முற்போக்கு இலக்கியம் பற்றிய வரையறைகளையும் தொடர்ந்து கலையமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளடக்கத்திலும் பல்வேறு புதிய கருக்களைப் படைப்புகளூடாகப் பேசிய காலப்பகுதியாக இது அமைகின்றது.  குறிப்பாக தனிமனிதர்களுக்கிடையிலான உறவுகள், அதனால் எழுகின்ற சிக்கல்கள், சமத்துவத்தையும், விடுதலையையும் அவாவி நிற்கின்ற இளைய சமூகத்தினரின் ஊடான சமூகப் பார்வை என்பன இந்தக் காலகட்டங்களில் வெளியான சிறுகதைகளில் காணக்கிடைக்கின்றன.  இந்த வகையான எழுத்துக்களை எழுதியவர்களுள் தனித்துவமான ஒருவர் க. சட்டநாதன்.

க. சட்டநாதன் குறுநாவல், சிறுகதைகள், கவிதைகள் என்று பல்வேறு படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தாலும் அவரது அடையாளமாக சிறுகதைகளே அமைகின்றன.  அவரது முதல் சிறுகதை 1970ல் வெளியானது என அறியமுடிகின்றது.  நாற்பத்தைந்து ஆண்டுகளாகத் எழுதிவந்தாலும் மிகக் குறைவாகவே எழுதியிருக்கின்றார் என்றே சொல்லவேண்டும்.  அவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பான மாற்றம் 1980ல் வெளியானது.  அதனைத் தொடர்ந்து உலா, சட்டநாதன் கதைகள், புதியவர்கள், முக்கூடல் என்று மொத்தம் ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன.

மாற்றம் என்கிற அவரது முதலாவது தொகுப்பில் மாற்றம், அந்தக் கிராமத்தியச் சிறுமி, தாம்பத்தியம், பிச்சைப் பெட்டிகள், இப்படியும் காதல் வரும், உறவுகள் என்கிற ஆறு சிறுதைகள் இடம்பெற்றிருக்கின்றன.  பிச்சைப் பெட்டிகள் இதில் இருக்கின்ற முக்கியமான கதைகளுள் ஒன்று.  சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான மதுபானக் கடை என்கிற திரைப்படம், மதுபானக் கடை ஒன்றை களமாக வைத்து சமூகம் பற்றியும் சமகால நிகழ்வுகள் பற்றியும் காத்திரமான விமர்சனம் ஒன்றைப் பதிவுசெய்திருந்தது.  கடந்த சில ஆண்டுகளில் வெளியான முக்கியமான திரைப்படங்களில் அது ஒன்று.  கிட்டத்தட்ட அதை ஒத்த ஒரு படைப்பினையே பிச்சைப் பெட்டிகள் ஊடாக சட்டநாதனும் செய்திருக்கின்றார்.

இந்தக் கதையில் வருகின்ற ஈசன் ஒரு வேடிக்கையான மனிதர்.  பழம்பெருமையையும், தற்புகழ்ச்சியையும் வைத்து வாய் வார்த்தைகளால் தன்னை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்.  நாள்தோறும் எம்மைச் சுற்றி இவர் போல பல ஈசன்களை நாமும் கண்டே தான் இருப்போம்.  இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் அனேகம் பேருக்கு இவர்களது பொய்மை நன்கு தெரிந்தே தான் இருக்கும்.  ஆனாலும் அவர்கள் ஒரு சுவாரசியத்துக்காக இவர்களை ஏற்றுக்கொண்டவர்களாக இருப்பர்.  அவர்கள் அணிந்துகொண்டிருக்கு அந்த கம்பீரமான முகமூடியைக் களைந்துவிட்டுப் பார்த்தால் அவர்கள் மிகுந்த கழிவிரக்கத்திற்கு உரியவர்களாக இருப்பர்.  தனது செல்வாக்குப் பற்றியும், இதோ மிகப் பிரகாசமான எதிர்காலம் ஒன்று தனக்கு அமையப்போகின்றது என்றும் தொடர்ந்து பேசும் ஈசன் கேட்காமலேயே அவருக்கு பஸ் ரிக்கெட் முதல், கோப்பி வரை தனது செலவிலேயே வாங்கிக் கொடுத்து உபசரிக்கின்றார் கதை சொல்லி.  ஈசனது பெரிய மனிதத் தோரணையும் வைத்தியர் தாமோதரத்தாற்ர பேரன், சேர் துரை குமாரசாமியின் தம்பி பிள்ளை என்கிற அவரது சமூகப் பின்னணியும் கதைசொல்லி மீது செலுத்தும் மறைமுகமான அதிகாரமும் இதற்குக் காரணமாகக்கூடும் என்றும் புரிந்துகொள்ளலாம்.

இதே கதையில் பஸ்ஸில் ரிக்கெட் எடுக்காமல் பயணித்து டிக்கெட் பரிசோதகர்களால் குற்றப்பணம் செலுத்தும்படி கூறப்படும் கிழவர் ஒருவர் வருகின்றார்.  அனேகமாக ஏழ்மை காரணமாக ரிக்கெட் எடுக்காமல் தவிர்த்திருக்கக் கூடியவராகவே இந்த கிழவர் சித்திகரிக்கப்படுகின்றார்.  ஆயினும் அவர் குற்றப்பணம் செலுத்துவதற்காகக் பிச்சை எடுப்பதுவரை கொண்டு செல்லப்படுகின்றார்.  இறுதியில் “அந்தப் பொடிச்சீற்ற தட்டிப் பறிச்சதுக்கு செம்மையாப் பட்டிட்டன் … இது நல்லதுக்குத்தான்” என்ற குற்ற உணர்வுடன் செல்கின்றார் கிழவர்.  ஆனால் அந்தக் குற்ற உணர்வு ஏதும் ஈசனுக்கு இல்லை.  சர்வ சாதாரணமாக அவரால் “தம்பி ஒரு பத்து ரூபாய் தாரும். பிறகு தாறன்” என்று கதைசொல்லியிடம் கேட்க முடிகின்றது.  கிழவரால் அப்படியெல்லாம் கேட்க முடியாது.  அவருக்கு இருப்பது பிச்சை எடுப்பது அல்லது தட்டிப் பறிப்பது என்கிற தெரிவுகள் மாத்திரமே.

கதையில் வருகின்ற இளம்பெண் பாத்திரமும் முக்கியமானது.  அந்த ஒரு பஸ் சந்திப்பிலேயே ஈசன் அவளுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்குகின்றார்.  அவளும் அதற்கு இடம்கொடுப்பவளாகவே காட்டப்படுகின்றாள்.  குற்றப்பணத்துக்காக பஸ்ஸில் இருந்த மற்றவர்களிடம் பணம் இரக்கும் கிழவர் ஈசனும் அந்தப் பெண்ணும் இருந்த இடத்தை அணுகியதும் அவள் தன்னிடமிருந்த சில்லறைகளை அவரிடம் கொடுத்து விட்டு அவசர அவசரமாக பஸ்ஸைவிட்டு இறங்கிவிடுகின்றாள்.  அதன் பின்னர் தனது “பொக்கற்றறைப்” பார்க்கின்ற ஈசன் “நாற்பது ரூபாயும் சில்லறையும் இருந்த தனது பேர்சை அவள் அடிச்சிட்டாள்” என்கிறார்.  ஈசன் பொய்மை நிறைந்தவர் என்றும் அவர் சொல்பவற்றை நம்பமுடியாது என்று கதையூடாகத் திரும்பத் திரும்பச் சொல்லும் கதைசொல்லியே, தனது பர்ஸை அந்தப் பெண் திருடிவிட்டாள் என்று சொல்வதை அப்படியே நம்பி ஈசனுக்காக இரக்கப்பட்டுக்கொள்ளுகின்றார்.  எத்துவாளித்தனம் நிரம்பிய ஈசனைவிட அறிமுகம் இல்லாத ஆணுடன் நெருக்கமாகி, இழைந்து இழைந்து பேசுகின்ற பெண் மோசமானவளாக இருக்கக்கூடும் என்பதாகத்தானே பொதுப்புத்தி இருக்கின்றது.

சமூகத்தில் பெரிதாக எந்த விதமான அதிகாரமும் இருக்கமுடியாத சாதாரணமான நடத்துனரும் ஓட்டுனரும் அந்த பஸ்ஸில் தமது உச்சபட்ச அதிகாரத்தையும் பிரயோகிக்கின்றார்கள்.  மிச்சக்காசினை கேட்ட பயணியிடம் தான் ஏற்கனவே மிச்சக்காசினைக் கொடுத்துவிட்டேன் என்று பொய்யுரைப்பதுடன், அவர் இரண்டாம் தடவை மிச்சக்காசினைக் கேட்டார் என்றும் கூறி அவமானப்படுத்துகின்றான் கொண்டக்டர்.  அதுபோலவே பத்து றாத்தல் செத்தலும், ஐஞ்சாறு பிஞ்சுக் கத்தரிக்காயையும் ஒரு சிறு பையில் எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறும் ஒரு சிறுவியாபாரியிடமும் அந்தப் பையுக்கும் ரிக்கெற் போட்டுப் பணம் அறவிடுகின்றான்.  சாரதியும் டிக்கெட் எடுக்காமல் பயணித்த கிழவர் இதர பயணிகளிடம் பணம் சேகரித்த பின்னரும் ஒரு ரூபாய் நாற்பது சதம் குறைவாக இருந்தபோது அவனது வேட்டி மடியைப் பிடித்து பரிசோதகர்கள் இழுக்க அதிலிருந்த வெற்றிலைப்பொட்டலமும் சில்லறைக்காசுகளும் சிதறி விழுகின்றன.  இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்ற பஸ் சாரதி கிழவரைப் பார்த்து அடக்கமுடியாமல் குபீரிட்டு விழுந்து விழுந்து சிரிக்கின்றான்.  தன் சக மனிதன் தாழ்வுற்று இருப்பது கண்டு அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை.  ஆனால் இதே சாரதியும், நடத்துனரும் பேருந்தை விட்டு இறங்கிய பின்னர் மானுடநேயம் மிக்கவர்களாக மாறிவிடுகின்றனர்.  பேருந்தில் இருக்கின்றபோது நகைப்பிற்கிடமாகத் தோன்றிய அதே கிழவர் மீது இரக்கம் கொண்டு அவருக்கு கைச்செலவுக்கு என்று ஐந்து ரூபாய் பணத்தைக் கொடுத்து உதவுகின்றான் சாரதி.  கதைசொல்லியின் மிச்சக்காசைக் கொடுக்காமல் அவரை ஏய்க்க நினைத்த ஓட்டுனரும் மனம் மாறுகின்றான்.  அவரது மிச்சக்காசினைக் கொடுப்பதோடு தம்பிக்கு ஏதேனும் நெருக்கடியோ என்று கேட்கும் கதைசொல்லியிடம், “நெருக்கடி என்டாலும் இப்படி வேண்டாம் மாஸ்ரர்” என்கிறான்.  எனது வாசிப்பில் மிக முக்கியமானதாக நான் அவதானித்த விடயம் இது.  பேருந்தினை விட்டு இறங்கியபின்னர் அந்தச் சாரதியும், ஓட்டுனரும் கூட சாதாரண மனிதர்கள்.  அப்போது அவர்களால் அந்தக் கிழவரையும், பயணியையும் சகமனிதராக நேசிக்க முடிகின்றது.  ஆனால் அதிகாரம் கையில் இருக்கின்றபோது அது எல்லார்மீதும் அதிகாரத்தைப் பிரயோகிக்க வைக்கின்றது.  இந்த வாழ்வனுபவத்தை மிகுந்த கலையமைதியுடன் இந்தச் சிறுகதையில் பதிவுசெய்துள்ளார் சட்டநாதன்.

மாற்றம் சிறுகதையில் கதைசொல்லியின் மாமாவான காசிப்பிள்ளைக்குத் திருமணமாகி பதினைந்து வருடங்களாகியும் பிள்ளைகள் பிறக்கவில்லை.  ஊர் வைத்தியன் ஒருவனிடம் சொன்னதன்படி தனது கணவனில் தான் குறைபாடு இருப்பதாகக் கூறி தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றாள் அவன் மனைவி.  இந்த நிலையில் வள்ளிப்பிள்ளை என்கிற தாழ்த்தப்பட்ட பெண்ணுடன் காசிப்பிள்ளைக்கு உறவு ஏற்பட்டு, அவள் கர்ப்பமாகின்றாள்.  தனது கணவனுக்கு இன்னோர் பெண்ணுடன் உறவு இருப்பதையும் அவள் தன் கணவனால் கர்ப்பமடைந்துவிட்டாள் என்பதையும் அறிந்த காசிப்பிள்ளையின் மனைவி சண்டையிட, வள்ளிப்பிள்ளை வன்னிக்குப் போய்விடுகின்றாள்.  அதன்பிறகு காசிப்பிள்ளையும் இறந்த பிறகு தனது தாய் மாமன் வீட்டில் வந்து தங்குகின்றான் வள்ளிப்பிள்ளைக்கும் காசிப்பிள்ளைக்கும் பிறந்த மகன்.  அவனை ஏற்பதற்கு அவர்கள் தயாராக இல்லாத நிலையில் கதை சொல்லியின் இறந்து போய்விட்ட தங்கையின் புகைப்படத்தைப் பார்த்து, தனது தங்கையைப் போல அவள் இருப்பதாகாக் கூறுகின்றான் வள்ளிப்பிள்ளையின் மகன்.  தொடர்ந்து அவன் தனக்கு மருத்துவம் கற்க அனுமதி கிடைத்திருப்பதாயும் கூறுகின்றான்.  இவையெல்லாம் சேர்த்து அவர்கள் மனதை நெகிழ்த்த “அடுத்த முறை வரேக்க உன்ர தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு வா” என்று கூறுகின்றனர்.  தமது சாதிய அபிமானம் அல்லது சாதிய வெறியை விட உறவுப்பிணைப்புகள் (sentiments) வலிமையானது என்று ஒரு கோணத்தில் காட்டப்படுவது முக்கியமானது.

தாம்பத்தியம் என்கிற கதையில் வேலாயுதம் என்பவரின் மனைவி பர்வதம் நோயுற்றபின்னர் உதவிக்கு வருகின்ற பர்வதத்தின் தங்கை லட்சுமியுடன் வேலாயுதத்துக்கு உறவு ஏற்படுகின்றது.  லட்சுமி குழந்தையையும் பெற்றுக்கொள்ளுகின்றாள்.  பர்வதமும் இதனை ஓரளவு ஏற்றுக்கொள்கின்றாள்.  இந்தக் கதையுடன் சேர்த்துப் பார்க்கின்றபோது இந்தக் கதையும் சரி இதற்கு முன்னர் குறிப்பிட்ட மாற்றம் கதையும் சரி, சாதிய, பொருளாதார ரீதியில் தமக்கிருந்த ஆதிக்கங்களின் / அதிகாரங்களின் மறைமுகமான துணையுடன் ஆண்கள் பெண்களுடன் திருமணத்துக்கு அப்பாலான உறவுகளாகப் பேணியமையை ஆண்கள் மீதான மென்மையான போக்குடன் பார்க்கின்றமை ஒரு உறுத்தவே செய்கின்றது.

இப்படியும் காதல் வரும் என்கிற கதையில் கல்விகற்று நகர்ப்புறங்களில் வேலைக்குச் சென்ற இளம் பெண்ணொருத்தியின் பார்வையில் சாதித் தடிப்பு, பழம் பெருமிதம் பேசும் பொறுப்பற்ற பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் சமூக வழமைகள் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கின்றது.  ஆயினும் அந்த coverவிமர்சனங்களிலும், விமலாவிற்கும் சிவாவிற்கும் இடையிலான உறவிலும் ஒரு விதமான செயற்கைத் தன்மையும் திரைப்படங்களின் தன்மையும் இருப்பதாகவும் உணர முடிகின்றது.  இத்தொகுப்பில் இருக்கின்ற மாற்றம், இப்படியும் காதல் வரும் ஆகிய இரண்டு கதைகளிலும் கதை நகரும் களங்களில் இருந்து காணாமற்போவதாகக் காட்டப்படுபவர்கள் வன்னிக்குச் சென்று விட்டார்கள் என்றே குறிப்பிடப்படுகின்றது.  கதை எழுதப்பட்ட காலங்களில் வன்னி யாழ்ப்பாணத்து மக்களுக்கு அந்நியமான ஒரு பிரதேசமாகவா அல்லது சற்றே மதிப்புக் குறைந்த பிரதேசமாகவோ கருதப்பட்டமையும் இதனூடு புலப்படுகின்றது.  இப்படியும் காதல் வரும் கதையில் வருகின்ற அதே சமூக நிலைமைகளுடன் கூடிய கதாபாத்திரங்களே உறவுகள் என்கிற கதையில் வந்தாலும் அந்த உறவில் இருக்கின்ற சாதிய வேறுபாடும், ஆணாதிக்கத்தனமும் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகின்றன.  கிராமங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களில் பணியாற்றும் படித்த இளைஞர்கள் என்றவுடன் அவர்களது இலக்கியப் பரிச்சயம், ஆங்கில வாசிப்பும், பல்வேறு கலைகளிலான நாட்டம் என்பவற்றை விதந்து கூறும் தன்மையை அனேகமான எழுபதுகளில் வெளியான படைப்பிலக்கியங்களில் காணலாம்.  இந்தக் கதைகளும் அதற்கு விதிவிலக்கல்ல.

இந்தச் சிறுகதைத் தொகுதி ஈழத்து இலக்கிய செல்நெறியில் புதியமாற்றம் ஒன்று ஏற்பட்ட காலங்களில் வெளியானது.  இந்தக் காலப்பகுதிகளில் கலைவடிவங்களிலும், அரசியல் ரீதியாகவும், பாலியல் உறவுகளிலும், ஆண்-பெண் உறவுகள் பற்றியும் உலகெங்கும் ஏற்பட்ட மாற்றங்களையும் இந்தக் கதைகளில் காணலாம்.  இதேகாலப்பகுதிகளில் ஈழத்தில் சாதிய ஒழிப்புப் பற்றியும் பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்திருந்தன.  சட்டநாதனின் கதைகளில் வெவ்வேறு சாதிப் பின்புலம் கொண்டோர் இடையே ஏற்படும் பாலியல் மற்றும் காதல் உறவுகள் பேசப்பட்டாலும் அவை தாழ்த்தப்பட்ட மக்களின் குரலைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை என்பது ஒரு குறையே.  சட்டநாதன் தான் வாழ்ந்த சூழலை உன்னிப்பாக அவதானித்தார்.  அந்தப் பாதிப்புகளையெல்லாம் தனது பார்வையில் தன் எழுத்துக்களில் பதிவுசெய்தார்.  மனித உணர்வுகளதும், உறவுப்பிணைப்புகளதும் மென்மையான பக்கங்களை கலைத்துவமாக வெளிப்படுத்தியவை என்ற வகையில் சட்டநாதனின் “மாற்றம்” முக்கியமானதே!


குறிப்பு:

இக்கட்டுரை ஒக்ரோபர் 2015ல் வெளியான “சட்டநாதன் பவள விழாச் சிறப்பிதழ்” ஜீவநதியில் வெளியானது.

சட்டநாதனின் மாற்றம் சிறுகதைத் தொகுப்பினை நூலகம் திட்டத்தின் கீழ் http://goo.gl/aQPHxY என்ற இணைப்பில் பார்க்கலாம்.