imagesஅண்மையில் காலமான செங்கை ஆழியான் எனது பதின்மங்களின் ஆரம்பங்களில் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவராக இருந்தவர்.  செங்கை ஆழியானின் மரணத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட சில அஞ்சலிக் கட்டுரைகளும், அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற ஜேகே யின் வானொலிப் பகிர்வொன்றும் அவர் பற்றிய நினைவுகளை மீட்டிக்கொண்டேயிருந்தன.  அவர் பற்றி எழுத நினைத்த சிறு நினைவுக்குறிப்பொன்றும் கூட நேரநெருக்கடி காரணமாக தவறவிடப்பட்டிருந்தது.  தொன்னூறுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டை போர் முழுமையாகச் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் தென்னிந்திய சஞ்சிகைகளும், நூல்களும் கூட பெரும்பாலும் மாறிமாறி தடை செய்யப்பட்டும், அவ்வாறு தடைசெய்யப்படாதபோதும் நெருக்கடிகளினால் மிகக் குறைவாகவே யாழ்ப்பாணத்துக்கு வருவதாகவும் இருந்தன.  இதற்கு மத்தியிலும் செங்கை ஆழியான் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டேயிருந்தார்.  அவரது பல நூல்கள் அப்போது கொப்பி பேப்பர் என்று சொல்லப்படுகின்ற கோடிட்ட பேப்பர்களில் கூட அச்சடிக்கப்பட்டு வெளியாகிக்கொண்டிருந்தன.  இதனால் கிட்டத்தட்ட 90 ஆம் ஆண்டு முதல் 92 ஆம் ஆண்டுவரை நான் வாசித்தவற்றில் மிகப்பெரும்பாலானவை செங்கை ஆழியான் எழுதியதாகவே இருந்தன. இவற்றுள் செங்கை ஆழியான் என்ற பெயரில் அவர் எழுதிய புனைவுகளும், க. குணராசா என்கிறா பெயரில் அவர் எழுதிய பொது அறிவு, புவியியல், வரலாற்று நூல்களும் அடக்கம்.

1980 களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அர்ச்சுனா என்றொரு சிறுவர் இதழ் வெளிவரத் தொடங்கியிருந்தது.  அதில் ஹம்சாக்குட்டிக்கு அப்பா சொன்னகதைகள் என்று தொடராக சிறுவர் கதைகளை செங்கை ஆழியான் எழுதிவந்தார்.  அந்தத் தலையங்கமும், கதைகளும் மனதில் இலகுவாகப் படிந்திருந்தன.  அதற்குமுன்னரே செங்கை ஆழியானின் யானை நாவலை வாசித்திருந்தேன்.  பின்னர் 90ஆம் ஆண்டு போர் தொடங்க வீட்டில் ஏற்கனவே இருந்த காட்டாறு, ஆச்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை என்று செங்கை ஆழியான் அடுத்தடுத்து அறிமுகமானார்.  இதே காலப்பகுதியில் நவாலி YMCA இலும், வள்ளுவன் கோட்டம் என்ற பெயரில் நண்பர் ஒருவர் நடத்திவந்த வீட்டு நூலகத்திலும் நிறைய ஈழத்து நூல்கள் இருந்தன.  வாடைக்காற்றும், கொத்தியின் காதல் என்று நிறைய நூல்கள் அங்கே எடுத்து வாசித்தவைதான்.  இவைதவிர வீட்டில் பிறந்தநாள் பரிசாக விருப்பமான நூல்கள் வாங்கித்தரப்படும் என்று அப்பா அறிவித்தபின்னர் அவர்கள் வாங்கித்தந்த கிடுகுவேலி, பிரளயம் மற்றும் அவரது நிறைய அபுனைவு நூல்கள்.  இப்போது யோசித்துப்பார்க்கின்றபோது கடந்த 20 ஆண்டுகளாக செங்கை ஆழியான் எழுதிய எதையும் – மகாவம்சம், எல்லாளன், குவேனி தவிர- நான் வாசிக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.  ஆயினும் பதின்மங்களைக் கவர்ந்த, என் வாசிப்பினை ஒருகாலத்தில் திசைதிருப்பியவர் என்ற வகையில் செங்கை ஆழியான் மிக முக்கியமானவரே.

17011செங்கை ஆழியான் போன்றவர்கள் சிறுவர் இலக்கியங்களில் இருந்து அடுத்தகட்ட வாசிப்பு நோக்கிச் செல்கின்றபோது ஒரு இணைப்பாகச் செயற்படுபவர்கள்.  உண்மையில் சமகாலத்தில் தமிழிலக்கியத்தில் (அது ஈழத்தில் என்றாலும், தமிழ்நாட்டில் என்றாலும்) இருக்கின்ற பெரிய பின்னடைவே இவ்வாறான “இணைப்பாளர்கள்” இல்லாமையே.  இந்த வகிபாகத்தைச் சிறப்பாகச் செய்தவர்களுள் ஒருவர் செங்கை ஆழியான்.  அதே நேரம், செங்கை ஆழியானின் எழுத்துகள் வாசகர்களுக்கு நிலவியல் சார்ந்தும் பண்பாட்டு அம்சங்களை வெளிப்படுத்தும் முறையினாலும் ஈழத்து இலக்கியம் என்கிற பிரக்ஞையை வலிதாக்கியபடியே இருந்தன.  ஒரு புவியியலாளர் என்கிற அவரது பின்னணி அவரது எழுத்துகளில் அவர் எழுதுகின்ற பிரதேசங்களின் நிலவியலினை மிக நுணுக்கமாகப் பதிவுசெய்தன.  அவரது யானை, காட்டாறு, வாடைக்காற்று, நடந்தாய் வாழி வழுக்கியாறு என்பன இவற்றின் உச்சங்களாக இப்போதும் நினைவில் இருக்கின்றன.  மேலும், இதே படைப்புகளில் வருகின்ற கதாபாத்திரங்களின் சமூக நிலை, உணவுமுறைகள், உற்பத்தி உறவுகள் என்பவற்றையும் அவர் நுணுக்கமாகப் பதிவுசெய்ததாகவே தற்போதும் ஞாபகத்தில் இருக்கின்றது.

வரலாற்று நாவல்களை எழுதுவது என்பது ஈழத்தில் மிக அரிதாகவே இருக்கின்றபோது அதன் முன்னோடிகளில் ஒருவராக செங்கை ஆழியானைக் குறிப்பிடலாம்.  கடற்கோட்டை, குவேனி, எல்லாள காவியம், கந்தவேள் கோட்டம் போன்றன நான் வாசித்து தற்போதும் நினைவில் நிற்கின்ற அவரது வரலாற்று நாவல்கள்.  ஆயினும், இவ்வாறாக எழுதப்படும் நாவல்களில் குறிப்பிடப்படும் வரலாறுகள் ஆதாரபூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் முழுமையாக அமைந்திருக்கும் என்ற சொல்லமுடியாதபோது; வரலாற்று நூல்களைத் தனியே எழுதிய செங்கை ஆழியான் எழுதும் வரலாற்று நாவல்களையும் உண்மை என்று எண்ணி வாசகர்கள் அணுகிவிடக்கூடிய ஆபத்து இருக்கின்றது என்பதை இங்கே சுட்டிக்காட்டவேண்டி இருக்கின்றது.  அவரது வரலாற்று நூல்களில் ஈழத்தவர் வரலாறு, மகாவம்சம், யாழ்ப்பாண அரசர் வரலாறு, ஈழத்துச் சிறுகதை வரலாறு என்பன முக்கியமானவை.

செங்கை ஆழியானின் இலக்கியச் செயற்பாடுகளில் அவரது ஆவணப்படுத்தல் முயற்சிகள் மிக முக்கியமானவை.  குறிப்பாக மட்டக்களப்பில் ஏற்பட்ட சூறாவளியைப் பற்றி அவர் எழுதிய 12 மணி நேரம் என்கிற நூலும், 1977 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதக் கலவரத்தின் முதல்நாள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச வன்முறைகள் பற்றி அவர் எழுதிய 24 மணி நேரம் என்கிற நூலும் முக்கியமான ஆவணங்கள்.  இவ்வகையான ஆவணப்படுத்தல்கள், வரலாற்று ஆய்வுகளின் முக்கியம் அதிகமானதாக இன்று உணரப்படுகையில் இந்த இரண்டு நூல்களையும் செங்கை ஆழியான், நீல வண்ணன் என்ற இன்னொரு புனைபெயரில் 40 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியிருக்கின்றார் என்பது இன்னமும் ஆச்சரியமளிக்கின்றது.  அவரது இலக்கியச் செயற்பாடுகளில் ஈழத்துச் சிறுகதை வரலாறு மிகமுக்கியமாது.  மறுமலர்ச்சி சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள் என்கிற பத்துக்கு மேற்பட்ட தொகுப்புநூல்களை அவர் உருவாக்கியிருக்கின்றார்.

பெருமளவு உழைப்பையும் நேரத்தையும் கோரி நிற்கின்ற இதுபோன்ற இலக்கியச் செயற்பாடுகளிலும், படைப்பிலக்கியத்திலும், பாடநூல்கள், அபுனைவுகள் என்பவற்றை எழுதுவதிலும் ஈடுபட்ட செங்கை ஆழியானின் அனைத்து எழுத்துக்களையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் நூலகம் நிறுவனம் (Noolaham.org) ஈடுபட்டிருப்பதுடன் அது ஆவணப்படுத்திய முதற்தொகுதி நூல்களை அவர் உயிருடன் இருக்கின்றபோதே அவரிடம் கையளித்திருக்கின்றது சிறிது நிறைவளிக்கின்றது.


 

  • இக்கட்டுரை தாய்வீடு பத்திரிகையில் நான் தொடராக எழுதும் சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பத்தியில் ஏப்ரல் 2016 இல் இடம்பெற்றது
  • நூலகம் திட்டத்தின் கீழ்  http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE,_%E0%AE%95. செங்கை ஆழியானின் எழுத்துகள் அனைத்தும் ஆவணப்படுத்தும் முயற்சி நடைபெற்றுவருகின்றது.
  • படங்கள் இணைய தேடலில் பெறப்பட்டவை.
  • செங்கை ஆழியானின் நேர்காணல் ஒன்று நானிலம் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.  http://www.nanilam.com/?p=8414