கலைச்செல்வி: ஈழத்து இதழ்கள்

839ஈழத்தில் இருந்து வெளிவந்த இலக்கிய இதழ்களின் முன்னோடிகளில் ஒன்றான கலைச்செல்வி 1958 ஓகஸ்ற் மாதம் முதல் 1966 வரை அண்மையில் காலமான சிற்பி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியானது.  மாத இதழ் என்றே அறிவிக்கப்பட்டாலும் பல்வேறு சவால்களின் காரணமாக அதனால் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் வெளிவரமுடியவில்லை.  சிலதடவைகள் மாதாந்தமும், சிலதடவைகள் இரு மாதங்களுக்கு ஒன்றாகவும் இதழ் வெளியாக இருப்பதை அறியமுடிகின்றது.

கலைச்செல்வி இதழ் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் பற்றியும் சூழல் பற்றியும் தெளிவத்தை ஜோசப் அவர்கள் பின்வருமாறு பதிவுசெய்கின்றார்:

“ஈழத்தமிழர்கள் இந்தியத்தமிழ் இலக்கியங்களுடன் லயித்திருந்த அந்த இலக்கியப் பாரம்பரியத்தின் ஒரு நீட்சியே நமது இலக்கியம் என்று எண்ணிக் கிடந்த காலம் ஒன்றிருந்தது.

1956 இல் பண்டாரநாயக்காவின் ஆட்சிமாற்றம் இந்த இந்திய மயக்கங்களை உடைத்தது.  1958 இன் இனக்கலவர அடி, நமக்காக நாம், நமக்கென பாரம்பரியமிக்க பண்புகள், நமக்கான இலக்கியம் என்னும் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்தது.  நமது எழுத்தாளர்கள், நமது இலக்கியம், நமது பத்திரிகைகள் என்று ஏங்கிக்கிடந்த சிற்பியும் இந்த உணர்வின் உருவங்களுடன் தன்னை இணைத்துக்கொண்டவர்.  நமக்கான பத்திரிகைகள் தோன்றவேண்டும் என்று தான் கட்டுரை வரைந்த ஈழகேசரியும் ஓய்ந்துவிட்ட சோகத்துடனும் சோர்வின்றி கலைச்செல்வியை நடத்த முன்வந்தவர்.”

1957-58 காலப்பகுதிகளில் களுத்துறையில் இருந்து ஈழதேவி எனும் இதழ் வெளிவந்துகொண்டிருந்தது.  இதன் நிதி, நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்துவந்தவர் நா. பாலசுப்பிரமணியம் என்பவர்.  1958ம் ஆண்டு மேமாதம் ஏற்பட்ட இனக்கலவரங்களின்போது களுத்துறையில் வாழ்ந்துவந்த தமிழரும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.  இப்படியான நிலையில் தமக்கு ஆபத்து வரலாம் என்று அஞ்சி ஈழதேவி இதழை நிறுத்திவிடும் முடிவெடுக்கப்படுகின்றது.  இப்படியான சூழலில் நா. பாலசுப்பிரமணியன் தனது நண்பரும், தற்போது கனடாவில் வாழ்ந்துவரும் எழுத்தாளருமான உதயணனைச் சந்திக்கின்றார்.  அது குறித்துப் பின்வருமாறு உதயணன் பதிவுசெய்கின்றார்:

“பாலா என்னிடம் வந்து ஈழதேவியை நிறுத்தமுடியாது என்று துன்பப்பட்டார்.  வெகுநாட்கள் யோசித்தபின்னர் பாலாவும் நானும் யாழ்ப்பாணம் போய் சிற்பியைச் சந்தித்து விபரத்தைச் சொன்னோம்.

களுத்துறையில் வெளிவந்த ஈழதேவி இதழை ஒரு குழு அமைத்து நடத்துவது பற்றி பல தடவைகள் கூடி ஆலோசித்தோம்.  அந்தக் குழுவில் சிற்பியின் ஆசிரியரான பொன்னம்பலமும் இருந்தார்.  முடிவில் ஈழதேவி என்ற பத்திரிகைப் பெயரைக் கலைச்செல்வி என்று மாற்றுவது என்றும் ஈழதேவியில் வெளிவந்த தொடர் அம்சங்களைத் தொடர்ந்து கலைச்செல்வியில் வெளியிடுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.  உதாரணமாக ஈழதேவியின் கடைசி இதழில் இதய வானிலே எனும் எனது தொடர்கதையின் முதலாம் அத்தியாயம் வெளியாதுன்.  அதன் இரண்௶ஆம் அத்தியாயம் கலைச்செல்வி முதலாம் இதழில் வெளியானது.  இதுவே கலைச்செல்வியின் ஆரம்பகால வரலாறு!”

கலைச்செல்வியில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்கிற பல்வேறு அம்சங்களுடம் இடம்பெற்றாலும் அதில் கட்டுரைகளுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர்.  அதில் பல முக்கியமான தொடர்கட்டுரைகள் நிறைவடையாமல் இடையில் நின்றிருப்பதையும் காண முடிகின்றது,  பொருளாதார நெருக்கடிகளால் இதழ் ஒழுங்காக வெளிவராததன் காரணமாக எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய சோர்வு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று இதழாசிரியர் சிற்பி ஞானம் இதழில் எழுதிய கலைச்செல்விக்காலம் என்கிற தொடரில் குறிப்பிட்டிருக்கின்றார்.

எழுத்துலகில் நான் என்ற பெயரில் எழுத்தாளர்கள் தம் சுய அனுபவனங்களை எழுதும் தொடர் ஒன்றும் அதன் ஆரம்ப இதழ்களில் இருந்து வெளியாகியிருக்கின்றது.  அதுபோல எஃப்.எக்ஸ்.சி. நடராசா எழுதி பின்னாளில் புத்தக வடிவில் வெளியான ஈழத்துப் பத்திரிகை வளர்ச்சி என்ற கட்டுரைத்தொடரும் மன்றுகிழார் என்ற புனைபெயரில் கலைச்செல்வி இதழிலேயே வெளியாகியிருக்கின்றது.  கனகி புராணம் அனேகமானவர்கள் அறிந்திருக்கக்கூடிய நூல்.  யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் வாழ்ந்த நட்டுவச்சுப்பையனார் என்பவர் வண்ணை வைத்தீஸ்வரன் கோயில் “தேவதாசியாக” இருந்த கனகி என்பவர் குறித்துப் பாடியதாக இந்நூல் குறிப்பிடப்படுகின்றது.  கனகி புராணத்தின் பாடல்கள் முதன்முதல் அச்சேறியதும் கலைச்செல்வி இதழின் ஊடாகவே என்பது கலைச்செல்வி இதழுக்கு பண்பாட்டு வரலாறு குறித்து இருக்ககூடிய முக்கியத்துவத்தை குறிக்கின்றது.

கலைச்செல்வி வெளியிட்ட சிறப்பிதழ்களும் முக்கியமானவை.  1959 சித்திரை மாத இதழினை  “வளரும் எழுத்தாளர் மலர்” என்று வெளியிட்டிருக்கின்றது கலைச்செல்வி.  அதைத்தொடர்ந்து 1959 ஓகஸ்ற் மாத இதழை முதலாம் ஆண்டு மலராக வெளியிட்டிருக்கின்றது.  இந்த ஆண்டு மலருக்கான விளம்பரம் அதற்கு முந்திய இதழில் வெளியாகி இருந்தது.  அதனை படமாகக் காணலாம்.

கலைச்செல்வி ஆண்டுமலர் விளம்பரம்

அதைத்தொடர்ந்து 1960 ஓகஸ்ற் மாத இதழை “மகளிர்மலராக” வெளியிட்டிருக்கின்றது. இந்த மலரில் பவானி ஆழ்வாப்பிள்ளை, உமா, யாழ் நங்கை, புதுமைப் பிரியை, பத்மா சோமகாந்தன், எம் ஏ மக்கான் உள்ளிட்ட பலர் எழுதியிருக்கின்றனர்.  இவர்களில் அனேகமானவர்கள் கலைச்செல்வியில் இம்மலருக்கு முன்னும் பின்னுமாக தொடர்ச்சியான பங்களிப்புகளை நல்கியோர் ஆவர்.

மக்கள் வைத்தியசாலைபழைய இதழ்கள் ஆவணப்படுத்தப்படும்போது அவை வரலாற்று எழுதியலுக்கான உறுதியான பதிவுகளாக மாறுகின்றன.  கலைச்செல்வியின் ஆரம்ப இதழ்களைப் பார்க்கின்றபோது அவற்றி விளம்பரங்களினூடாக அக்காலகட்ட வாழ்வியலின் பல்வேறு அம்சங்களையும் அறிந்துகொள்ளலாம்.  உதாரணமாக 1958ம் 1959ம் ஆண்டுகளில் வெளியான கலைச்செல்வி இதழ்களில் சுன்னாகத்தில் இயங்கிய மக்கள் வைத்தியசாலையின் விளம்பரத்தைக் குறிப்பிடலாம்.  மின்சாரம் பரவலாக வழங்கப்படாத அன்றைய காலத்தில் கூட இரவு 8மணி வரை ஒரு சிறு வைத்தியசாலை இயங்கியிருக்கின்றது என்பது அதிசயம் தான்.  இதன் விளம்பரம் ஒரு விதமான பதிவென்றால் பிறின்ஸ் படப்பிடிப்பாளர்கள் என்கிற வியாபார நிலையத்தின் விளம்பரம் இன்னொருவகையான சான்று.  அதன் அழகியல் தன்மையை நேரடியாகப் பகிர்ந்துகொள்ள விளம்பரத்தையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

கலைச்செல்வி விளம்பரம்

நமது நாடு, நமது இலக்கியம் என்கிற நிலைப்பாட்டுடன் இயங்கிய கலைச்செல்வி செய்த இன்னொரு முக்கிய முயற்சி எழுத்தாளர் விபரங்களைத் திரட்டும் முயற்சியாகும்.  இன்றுவரை இவ்வாறான முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றிகளை எட்டாமல் இருக்கின்ற சூழலில் கலைச்செல்வியின் முன்னோடியான முயற்சி அதிசயிக்க வைக்கின்றது. எழுத்தாளர் பட்டியல்

ஈழத்தின் மிகமுக்கியமான இதழ்களில் ஒன்றாக கலைச்செல்வி 1958 முதல் 1966 வரையாக 8 ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 70 இதழ்கள் வரை வெளியானது.  இதழ்களில் தொடர்ச்சியாக செலவுகளைச் சமாளிக்க எதிர்நோக்கும் சிரமம் குறித்தும், கட்டணங்களின் விலை ஏற்றம் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.     1965 நவம்பர் இதழில் “சந்தாப்பாக்கியைப் பற்றித்தான் மீண்டும் மீண்டும் நாம் நினைவூட்டவேண்டியுள்ளது.  பத்திரிகைத்தாளின் விலை மலைபோல ஏறியுள்ள இக்காலத்தில் “கலைச்செல்வியை: இத்தனை குறைந்த விலையில் வாசகர்களுக்குக் கொடுப்பது நஷ்டத்தைத் கொடுக்கும் என்பதைப் பலர் அறிவர்.  இந்த நிலையில், கொடுக்க வேண்டிய பாக்கியையே அனுப்பாது விட்டால், நாம் தொடர்ந்து இலக்கிய சேவை செய்யமுடியுமா என்பதை அன்பர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.” என்பதாக ஆசிரியர் தலையங்கம் உள்ளது.  இந்த இதழ் வெளியாகி சிலமாதங்களில் கலைச்செல்வி நின்றும் போனது!


உசாத்துணை

  1. கலைச்செல்வி காலங்கள் என்கிற சிற்பி எழுதி ஞானம் இதழில் 2008 ஜூன் (சிற்பி சிறப்பிதழ்) முதல் 2011 இறுதிவரை வெளியான கட்டுரைத்தொடர்
  2. தாய்வீடு டிசம்பர் 2015 இதழில் உதயணன், தெளிவத்தை ஜோசப் ஆகியோர் எழுதிய கட்டுரைகள்
  3. கலைச்செல்வி இதழ்கள்.

குறிப்பு
கலைச்செல்வி இதழ்களின் சில பிரதிகள் நூலகம் (Noolaham.org) திட்டத்தின் கீழ் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  ஆர்வமுள்ளவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.

நன்றி
இக்கட்டுரை ஈழத்தில் இருந்து வெளிவரும் “புதிய சொல்” இதழின் முதலாவது இதழில் (ஜனவரி – மார்ச் 2016) வெளியானது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: