நியோகா : சில பகிர்தல்கள்

niyoga001ஏப்ரல் இரண்டாம் திகதி கனடாவுக்கான நியோகா திரைப்படத்தின் முதலாவது திரையிடலில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது.  இத்திரைப்படம் கனடாவில் வாழும் எழுத்தாளரும் நாடகரும் குறும்பட இயக்குனருமான சுமதி பலராமின் முதலாவது முழுநீளத் திரைப்படமாகும்.  பெரும்பாலும் கனடாவிலேயே படப்பிடிப்பு நடந்த இத்திரைப்படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்களும்  தொழினுட்பக் கலைஞர்களும் கனடாவைச் சேர்ந்தவர்கள்.  ஆயினும் இத்திரைப்படம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  சர்வதேசதிரைப்பட விழாவிலும், இத்தாலி லுமினியர் திரைப்பட விழாவிலும், லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற திரைப்படவிழாவிலும், யகார்த்தாவில் இடம்பெற்ற பெண்கள் திரைப்பட விழாவிலும் ஆக வெவ்வேறு திரைப்பட விழாக்களில் வெவ்வேறு பிரிவுகளில் திரையிடப்பட்டிருந்த பின்னரே கனடாவில் திரையிடலுக்காக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.  கனடாவில் கலை இலக்கியத் துறைகளில் பல்வேறுதுறைகளிலும் பங்களித்துவரும் நண்பர்கள் பலரது பங்களிப்பு இத்திரைப்படத்தில் இருக்கின்றது என்பது திரைப்படத்தினைப் பார்ப்பதற்கான ஆர்வத்தைக் கூட்டியிருந்தது.  அத்துடன் தனிப்பட்ட முறையில் எமக்கான கலை இலக்கிய வெளிப்பாடுகள் குறித்து அக்கறை அண்மைக்காலமாக அதிகரித்து இருப்பதாலும், திரைப்படங்கள், குறும்படங்களில் நாம் தமிழகத்தை விட்டு தனியான துறையாக வளரவேண்டும் என்ற நோக்கு அதிகரித்து இருப்பதாலும் இத்திரைப்படத்தைக் காணவேண்டும் என்பதில் ஆர்வமேற்பட்டிருந்தது.  தவிர்க்கவே முடியாத காரணங்களால் படம் ஆரம்பமாகி 10 நிமிடங்களின் பின்னரே திரைப்படத்தினைப் பார்க்கும்படியானது.  அந்தக் குறைபாட்டுடனேயே இப்பதிவு தொடர்கின்றது.

இத்திரைப்படம் போருக்குப் பின்னரான விளைவுகளின் பாதிப்பைப் பற்றிப் பேசுகின்றது.  கதையின் ஆரம்பப்பகுதி ஈழத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.  பிரதான கதாபாத்திரமான மலர் என்கிற பெண் திருமணமாகி சிலநாட்களிலேயே அவளது கணவன் கடத்தப்பட்டு காணாமற்போகின்றான்.  அதன் பின்னர் அவளது குடும்பம் அவளுடன் கனடாவிற்குப் புலம்பெயர்கின்றது.  அவளது இளைய சகோதரன் கனடாவில் படித்து, “கனடியத் தன்மை கொண்டவனாக” (புறவயமாகவேனும்) கனடிய நீரோட்டத்தில் கலந்துவிடுகின்றான்.  அவனுக்குத் திருமணமாகி அவனும் அவன் மனைவியும், பெற்றோரும் மலரும் ஒரே வீட்டிலேயே வசிக்கின்றனர்.  மலரின் உடைகளின் ஊடாகவும் உடல்மொழி மூலமாகவும் அவள் தயக்கங்கள் நிறைந்த, கிட்டத்தட்ட ஈழத்திலேயே தேங்கிவிட்டவளாகவே காண்பிக்கப்படுகின்றாள்.  அவளது ஒரே பொழுதுபோக்காக வீட்டில் பூமரத் தோட்டம் அமைப்பதும் அவற்றைப் பராமரிப்பதும் இருக்கின்றது.  தவிர, காணாமற்போன அவளது கணவனைக் கண்டுபிடிக்கக் கோரியும், காணாமற்போனவர்கள் பற்றி பொதுவாகவும் மனித உரிமை அமைப்புகள் நடத்தும் கூட்டங்களுக்கு அவளது பெற்றோருடன் அவள் சென்று வருகின்றாள்.  இன்னொரு பக்கமாக கோயில்கள், வேண்டுதல்கள் மற்றும் சோதிடர்களிடம் சென்று ஆலோசனை கேட்பது என்பதாக காலம்போகின்றது.

இதற்கிடையில் கையில் பூச்செண்டுடன் திரியும் ஒருவரும், தொலைபேசியில் அடிக்கடி மலரை அழைத்து அவளுடன் தனது அடையாளங்களை மறைத்தபடி உரையாடும் ஒருவரும் காட்டப்படுகின்றனர்.  அவள் கைரேகை பார்க்கச் செல்லும் சோதிடக்காரர் இரட்டை அர்த்தம் தொனிக்கும்படி பேசுகின்றார்.  மலரின் வீட்டில் சிலநாட்கள் வந்து தங்கிச்செல்லும் ஓர் இளைஞனுக்கும் அவளுக்கும் இடையில் இயல்பான ஒரு நட்பும் மலர்கின்றது.  முழுத் திரைப்படத்திலும் அந்த இளைஞனுடனும் தம்பியின் மனைவியுடனும் மாத்திரமே மலரால் இயல்பான உரையாடலொன்றை மேற்கொள்வது சாத்தியமாகின்றது.  ஒரு விதத்தில் இந்த இரண்டு கதாபாத்திரங்களும் மாத்திரமே மலரை ஆசாபாசங்களுடன் கூடிய ஒரு சக மனுஷியாகப் பார்ப்பவர்களாக இருக்கின்றனர்.  மலருக்கு மறுமணம் செய்துவைக்கலாம் என்ற வேண்டுதலை தம்பியின் மனைவியாக வரும் பெண்ணே முன்வைக்கின்றார்.  கனடாவில் தனது கல்வியைக் கற்ற. “கனடியத் தன்மைகொண்டவனாக” மாறிவிட்டவனாகக் காண்பிக்கப்படுகின்ற மலரின் தம்பிக்கு அந்த வேண்டுதலின் நியாயத்தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.  இப்படிக் கதைக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டாலே மலரால் தாங்கிக்கொள்ளமுடியாது என்பதே அவன் உள்ளிட்ட மலரின் குடும்பத்தினரின் அபிப்பிராயமாகக் காண்பிக்கப்படுகின்றது.  உண்மையில் அவளின் குடும்பத்தினர் அதற்குத் தயாராகவில்லை, பெண் என்பவள் தியாகம் செய்வதற்கு எப்போதும் தயாராக இருக்கவேண்டியவள் என்பதாக கருதக்கூடிய பொதுப்புத்தியே அவர்களது கதாபாத்திரங்களூடாக வெளிப்படுத்தப்படுகின்றது.

“காணாமற்போனவர்கள்” என்பவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதற்கு சரியான பதிலேதும் கிடைக்காத சூழலில், அவர்கள் காணாமற்போனவர்களாகவே இருக்கின்றார்கள்.  அவ்விதம் இருக்கின்றபோது அவர்களது துணைவர்கள் புதியவாழ்வொன்றை அமைத்துக்கொள்வது பற்றியோ அல்லது தொடர்ந்து நகர்வது பற்றியோ எதுவிதமான முன்னெடுப்புளையும் மேற்கொள்ளுவது கூட சாத்தியமில்லாமலே போய்விடுகின்றது.  காணாமற்போனவர்கள் அனேகம் பேர் ஆண்களாக இருக்கின்றபோது அவர்களது துணைகள் பொருளாதார நெருக்கடிகளையும், சமூகச் சுரண்டல்களையும், பாலியல் ரீதியான அத்துமீறல்களையும் எதிர்கொள்ளவேண்டி இருக்கின்றது.  இத்திரைப்படத்தில் சோதிடக்காரர் மலரிடம் பேசுகின்ற விதமும் நடத்தையும் இதற்கு நல்லதோர் உதாரணம்.  ஆயினும் நடைமுறையில் இடம்பெறும் சுரண்டல்கள் இன்னமும் மோசமானவை என்பதாகவே அறியமுடிகின்றது.

மலரின் தம்பிக்கும் அவனது மனைவிக்கும் இடையிலான நெருக்கமும் காமமும் மலரின் பெற்றோருக்கிடையிலான காமமும் படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றது.  அதேநேரம் அவர்கள் எவருமே மலருக்கு இயல்பாக எழக்கூடிய உணர்வுகள் பற்றிய எதுவித அக்கறையும் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.  ஆயினும் படத்தில் அவ்வப்போது துண்டுக்காட்சிகளாக மலரின் காம இச்சை காட்டப்படுகின்றது.  திரைப்படத்தின் உச்சக்காட்சியில் மலர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கின்றாள்.  நியோகா என்கிற இத்திரைப்படத்தின் பெயரை இயக்குனர் தேர்ந்ததற்குக் காரணமும் கணவனில்லாமல் மலர் குழந்தை பெறுவதை நோக்கிச் செல்லும் இத்திரைக்கதையே என்று கருதமுடிகின்றது.  நியோகம் என்பது கணவருடன் இணைந்து குழந்தை பெறமுடியாத பெண், குழந்தை பெறுவதற்காக  பிறிதொரு ஆணுடன் கூடி குழந்தை பெறுகின்ற, மகாபாரத காலம் முதல் வழக்கிலிருந்ததாகச் சொல்லப்படும் முறையாகும்.  நியோகத்திற்காக கொள்கின்ற உடலுறவு காமத்தாலோ அல்லது உடலின்பம் வேண்டியதாகவோ அல்லாமல் குழந்தை அல்லது வம்சவிருத்தியை வேண்டியதாக இருக்கவேண்டும் என்பதே அதன் அடிப்படை அம்சமாகும்.  திரைப்படத்தில் மலரின் காமம் பற்றிய காட்சிப்படுத்தல் இருந்ததே அன்றி, அவளுக்கு குழந்தை ஒன்றின் மீது இருந்த ஏக்கம் காண்பிக்கப்படவில்லை.  அந்த வகையில் இத்திரைப்படத்திற்கு நியோகா என்கிற பெயர் அதன் நேரடி அர்த்தத்தில் பொருந்தவில்லை.  தனது தோட்டத்தில் வளருகின்ற பூமரங்கள் எப்போ பூக்கும் என்கிற அவளது ஏக்கத்தினூடாக இயக்குனர் இயக்குனர் இதனைக் குறியீடாகக் காட்டியிருக்கலாம்.  அப்படி இருக்குமானால், பெண் மலர்வது என்பது அவள் வாழ்வு மலர்வதா அல்லது அவள் தாயாவதா என்றகேள்வியும் எழுகின்றது.  ஆனால் இவையெல்லாம் ஒருவிதத்தில் திரைப்படப் பிரதிக்கு அப்பாலான கேள்விகளே.

திரைப்படம் ஒன்றின் உருவாக்கத்தில் அதன் நடிகர்தேர்வும் பெருமளவு பங்களிப்பதாகும்.  இத்திரைப்படத்தில் சுமதியின் பெரியவெற்றிகளில் பாத்திரத்தேர்வு முக்கியமானது.   மலராக நடித்த தர்ஷியும், மலரின் தந்தையாக நடித்த இராசரத்தினமும், மலரது குடும்ப நண்பராக நடிக்கின்ற ஜீவா என்கிற பாத்திரத்தில் நடித்த பார்த்தியும் சரி மிகச் சிறப்பாக தமது பாத்திரத்தைக் கையாண்டிருந்தார்கள்.  அதுபோல சிறிய வேடங்களில் நடித்த முரளிதரனும், மெலிஞ்சி முத்தனும் கூட தமது பாத்திரங்களை அப்படியே வெளிப்படுத்தியிருந்தனர்.  சக்கரவர்த்தி சோதிடர் வேடத்தில் கலக்கியிருந்தார்.  அந்தக் காட்சியின் பிற்பகுதி சற்று எடிட் பண்ணப்பட்டிருந்தால் மிக அருமையான குணச்சித்திகரிப்பாக அது இருந்திருக்கும்.  தவிர திரைப்படத்தின் உச்சக்காட்சியை நோக்கிய காட்சிகளில் சற்று கவனப்படுத்தி பார்வையாளர்களை அந்தக் காட்சி நோக்கிய தயார்ப்படுத்தலைச் செய்வதன் மூலமோ அல்லது அந்த உச்சகாட்சியில் கதாபாத்திரஙளின் வெளிப்படுத்துகையால் அந்தக் காட்சியை பலமாக்கியிருக்கலாம்.  இத்திரைப்படத்தின் சற்றே பலவீனமான புள்ளிகளில் ஒன்றாக இதையே காணமுடிகின்றது.

புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை அதிகத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டது கனடாவிலாகத்தான் இருக்கவேண்டும்.  ஆயினும் பெரும்பாலான திரைப்படங்கள் மிகப் பலவீனமான திரைமொழியுடனும் கதை/திரைக்கதையுடனுமே வெளியாகியிருப்பது கரிசனத்துக்குரியது.  கனடாவில் முழு நீளத்திரைபப்டம் ஒன்றினை எடுத்த முதலாவது பெண் இயக்குனர் சுமதி, புலம்பெயர் நாடுகளில் முதலாவது முழுநீளத் திரைப்படம் ஒன்றினை எடுத்த பெண் இயக்குனராகவும் அனேகம் அவரே இருக்கக்கூடும்.  தனது முதலாவது திரைப்படத்திலேயே ஏற்கனவே கனடிய தமிழ் திரைப்படங்களுக்கெனவே இருந்த அம்சங்களில் இருந்தும், ஈழத்துத் திரைப்படங்களுக்குரியதாக இருந்த அம்சங்களில் இருந்தும் – பெரிதும் கதை / உள்ளடக்கம் சார்ந்து – தன்னை முழுமையாக விலக்கி, புதிதாய்த் தனித்துவமாய் நிற்கின்றார் சுமதி.  இந்தத் திரைப்படம் போரின் பின்னான விளைவுகள் எப்படி தனிமனித வாழ்வினை அடிப்படையில் இருந்து பாதிக்கின்றது என்பதையும், புலம்பெயர் வாழ்வில் இருக்கின்ற கனடிய மைய  பல்கலாச்சார நீரோட்டத்தில் இணைந்த அல்லது இணைய முற்படுகின்ற வாழ்வு எதிர் கனடிய பல்கலாச்சார சூழலில் வாழ்கின்ற ஈழத்திலேயே தேங்கிப்போன வாழ்வு என்கிற இரண்டுவிதமான வாழ்வினையும் மனிதர்களையும் கூட எதுவித பிரசாரத்தொனியும் இல்லாமல் கலைத்தன்மையுடன் காட்சிப்படுத்துகின்றது.  அந்த வகையில் இது அசலான கனடியத் தமிழ்த் திரைப்படமும் கூட.  நியோகா குழுவினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: