புழுங்கலரிச் சோற்றுடன் குஞ்சுக்கணவாயின் புளி அவியல் | ”ஏழு கடல் கன்னிகள்”

book_cover7kadalதமயந்தி என்கிற பெயரினை, ஒரு ஆளுமையாக நிறையக் கேட்டிருக்கின்றேன்.  அவரது புகைப்படக் கண்காட்சி – அனேகம் அவரது முதலாவது கண்காட்சியாக இருக்கவேண்டும் – யாழ்ப்பாணத்தில் எண்பதுகளில் இடம்பெற்றதனை யேசுராசா ”பதிவுகள்” என்கிற தனது நூலில் பதிவுசெய்திருக்கின்றார்.  அவர் எடுத்த நிறையப் புகைப்படங்களை அவரது முகநூல் பதிவுகளூடாகப் பார்த்திருக்கின்றேன்.  சாதியம், அரசியல் உள்ளிட்ட கருத்துகளை குறிப்புகளாகவும், கட்டுரைகளாகவும் வாசித்திருக்கின்றேன்.  தவிர, எனக்கும் கூத்துக்கலை மீது ஆர்வம் இருப்பதால் அவர் பகிரும் கூத்துகள் தொடர்பான விடயங்களையும் காணொலிகளையும் பார்த்திருக்கின்றேன்.  ஈழத்துக் கலை வடிவங்களைப் பற்றிய அவரது ஆர்வமும் அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்கிற அவாவும், இந்தியாவில் இருந்து நிகழ்கின்ற பண்பாட்டுப் படையெடுப்பில் இருந்து நமது கலைவடிவங்களையும் பண்பாட்டையும் பாதுகாக்கவேண்டும் என்கிற அவரது கரிசனமும் எனக்கு அவர் மீது மரியாதையை கூட்டுவதாகவே அமைந்தன.  இதுவரை தமயந்தி எழுதிய ஓரிரு கதைகளயே படித்திருக்கின்றேன்.  அந்தவகையில் ஏழு கடல்கன்னிகள் வாசித்தபோது அது நல்லதோர் வாசிப்பு அனுபவமாக, ஒரு ட்ரீட் ஆக, அவரது பாணியில் சொல்வதானால் புழுங்கலரிச்சோற்றுடன் குஞ்சுக்கணவாயின் புளி அவியல் சாப்பிட்டதுபோல அமைந்திருந்தது.

ஏழு கடல்கன்னிகள், ஏழு கதைகளைக் கொண்ட கதைத் தொகுதி.  இந்தக் கதைகள் அனைத்தும் கதைசொல்லியின் அல்லது அவருக்குத் தெரிந்த மனிதர்களின் அனுபவங்களாக, அவர்கள் சார்ந்த நினைவுகளாக, அவர்கள் வாழ்ந்த நிலங்களின் கதைகளாக அமைகின்றன.  அப்பு, முபாரக் அலி நானா ஆகியோரோடு தமயந்தியாக இருக்கக்கூடிய கதைசொல்லியும் குடும்பமும் இந்தக் கதைகளூடாக எமக்கு அறிமுகமாகின்றார்கள்; எம்முடன் உரையாடுகின்றார்கள்.  அதுபோல அனேகமாக இந்த ஏழு கதைகளுக்கு இடையிலும் சம்பவங்களின் தொடர்ச்சியும் கூட இருக்கவே செய்கின்றது.  அண்மைக்காலமாக இந்த வடிவிலான தொகுப்புகள் நிறைய வந்திருப்பதைக் காணலாம்.  அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த குறிப்புகள், சண்முகம் சிவலிங்கத்தின் காண்டாவனம் போன்றனவும் கூட இதே தன்மையானவை.  அதன் காரணமாக உண்மை கலந்த குறிப்புகளையும், காண்டாவனத்தையும் நாவல்கள் என்பதாக முன்வைப்பவர்களும் உள்ளனர்.  ஆயினும் எனது வாசிப்பில் நான் ஏழு கடல்கன்னிகளை நினைவுக் குறிப்புகளாக, கதைகளின் தொகுதியாகவே அதிகம் காண்கின்றேன்.

photoதொகுதியின் முதலாவது கதையான கிற்றார் பாடகன் இத்தொகுதியில் உள்ள கதைகளில் முதலில் எழுதப்பட்டதும் என்று நினைக்கின்றேன்.  கசப்பும், அடுத்த மனிதர் மீது நம்பிக்கையில்லாத வெறுமையுமாக இருக்கின்ற நடைமுறை உலகைவிட்டு வேறொரு தளத்திலான, அன்பும் கனிவும் நிறைந்த உலகொன்றில் வாழும் மனிதர்களது உலகு பற்றியதாக இக்கதை அமைகின்றது.  நீடூழி வாழ்க என்பதனை எப்படித் தமிழில் சொல்வது என்று கேட்கின்ற நோர்வீஜிய கிழவனுக்கு “நீ குன்ஷாமணி” என்று சொல்லித் தருகின்றான் ஒருவன்.  தான் காணும் தமிழர்களிடன் கபடமில்லாமல் அதைச் சொல்லுகின்ற அந்தக் கிழவனிடம் அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை கதைசொல்லி கூறுகின்றபோது அவன் சிரிக்கின்றான்.  ஏன் சிரிக்கின்றாய், உனக்குக் கோபம் வரவில்லையா என்று கேட்க அவன் கூறுகின்றான் “இல்லை நண்பா சந்தோஷப்படுகின்றேன்.  பயணக் களைப்புத் தெரியாமல் அந்த நண்பனுக்கு நானொரு இலவச பொழுதுபோக்குச் சாதனமாக பயணப்பட்டிருக்கின்றேன்.  அந்த வகையிலாவது நான் பயன்பட்டேன் என்பது என்னைப் பைத்தியம் என்று சொல்லும் நபர்களுக்குச் சாட்டை அடியாக இருக்கட்டும்” என்கிறான்.  கெட்டிக்காரர், சுழியன், நல்லவர், வல்லவர், தந்திரசாலி, நேர்மையானவர் என்கிற அடையாளங்களோடு மனிதர்கள் அறிமுகப்படுத்தப்படுகின்ற இன்றைய நாட்களில் அன்பான மனிதர் என்று எத்தனை பேரை எம்மால் அடையாளம் காணக் கூடியதாக  இருக்கின்றது என்கிற கேள்வியே இப்போதெல்லாம் என்னிடம் அதிகம் இருக்கின்றது.  அப்படியான ஒரு உலகு இந்தக் கதையூடாக அறிமுகமாகின்றது.

இந்தக் கதையில் வருகின்ற அப்பு, தொடர்ந்து ஏனைய கதைகளிலும் வருகின்றார்.  இந்தப் புத்தகத்தை வாசித்தவர்களுக்கும், வாசிக்காதவர்களுக்கு வாசிக்கும்போதும் தெரியும்; அப்பு ஒரு அருமையான நிதானமான மனிதர்.  வாழ்வை எந்த அவசரமுமில்லாமல், நிதானமாகவும் பரிவோடும், குழந்தைத்தனமான அன்போடும் கடந்துசெல்பவர்.  அவரது வாழ்வு ரசனைகளாலும் சுவைகளாலும் நிறைந்தது. கள்ளுக்குடிப்பதென்றால் அப்பு சும்மா குடிக்க மாட்டார்.  நண்டுச் சம்பல் வேண்டும்.  அதற்காக அவர் கடற்கரைக்குத் தானேபோய் சினை நண்டுகளாய் வாங்கிவருவார்.  துவரஞ் சுள்ளிகளை வீட்டின் கோடிப்புறத்தில் அடுக்கி நண்டுகளைச் சுடுவார்.  நண்டுச் சதையை ஆய்ந்தெடுத்து ஒரு கிண்ணத்திலிட்டு வெங்காயம், பிஞ்சு மிளகாயுடன் உப்பு, தேசிக்காய் ஆகியவற்றைக் கலந்து குழைத்து ஒரு அருமையான சம்பல் செய்வார்.  இந்த இடத்தில், அப்புவைப் பார்த்துப் பொறாமையாக இருக்கின்றது.  இன்றைய நாட்களில் இத்தனை நிதானத்துடன் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழ்வது என்பது எத்தனைபேருக்குச் சாத்தியமாகின்றது?  இந்தத் தொகுதியில் பல்வேறு கதைகளில் அப்பு வந்தபோகின்றார்.  அவற்றிலெல்லாம் அவரது நினைவுகளும், கரிசனைகளும் மனிதர்கள் பற்றியதாகவும், ரசனை பற்றியதாகவும் இருக்கின்றது.  கொழும்புத் துறைமுகத்தில் பணியாளர்களாகப் பணிபுரிகின்றபோது அங்கு அதிகாரியாக இருந்தவரின் மோசமான அதிகார துஷ்பிரயோகம் காரணமாக வேலையை விட்டு விலகிவிடுகின்றார் அப்பு.  ஆயினும், அப்போதும் கூட அவரது சக ஊழியரான முபாரக் அலி நானாவை தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்பதுதான் அவரது கவலையாக இருக்கின்றது.  சிறிது காலத்தில் “நீ இல்லாத இடத்தில் எனக்கென்ன வேலை?” என்று சொல்லி முபாரக் அலி நானாவும் வேலையை விட்டு விலகிவிடுகின்றார்.  அதன் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து “அந்தோணி குரூசை தனியாக விட்டு விட்டுவந்துவிட்டோமே” என்று கவலைப்படுகின்றார்கள்.  பின்னர், சோமபால இருக்கின்றார் என்று தம்மை ஆறுதல்படுத்திக்கொள்ளுகின்றார்கள்.  அப்பு நவதாராளவாதமும் பூகோளவாதமும் கடைசி மனிதன் வரை பாய்ந்து அவர்களது வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நிர்ணயிப்பதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த  மனிதர்.  முதலீட்டியத்திடம் நவீன அடிமைகளாக பெரும்பான்மை மனிதர்கள் ஆக்கப்படாத ஒரு காலத்தின் கனவு அப்பு.  துரதிஸ்டவசமாக அந்தக் கனவு கூட சாத்தியமில்லாத காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பது என்பது தான் நிஜம்.  ஒன்றரை முழம் நீளமும் மூன்று கிலோ எடையும் கொண்ட மீனொன்றினைப் பிடித்த லூர்த்துராசன் அதனைக் கொல்வதற்காக இரும்புத்தடியால் அதன் தலையில் அடித்ததைப் பார்க்கின்றபோது அப்பு கோபம் கொள்ளுகின்றார்.  “சே என்ன அன்னியப்பட்ட வேலை செய்யிறாயடா மோனே, இப்படியா அடிச்சுக்கொல்லுறது ? எங்கட பரம்பரையில கண்டு கேட்டறியம் இப்படியொரு காரியத்த… என்று அப்பு சலிப்படைகின்றார்.  மீன் பிடித்தலை தொழிலாகக் கொண்டவர்களுக்கு மீனுடனான ஆத்மார்த்தமான பிணைப்பு இங்கே சொல்லப்படுகின்றது.  ஏழாற்றுக் கன்னிகள் என்கிற கதையில் எந்த மீனுமே அகப்பட்டிருக்காத வேளையில் கடைசி வலையில் ஒரு சுறா அகப்பட்டிருப்பதைக்கண்ட கதைசொல்லி அதை மகிழ்ச்சியுடன் தோணிக்குள் போட்டிவிடுகின்றான்.  அது குட்டித்தாச்சியாக இருக்கின்றது என்பதை இனங்கண்ட அப்பு அதனை உடனடியாக திரும்பவும் கடலுக்குள் போடும்படி கேட்டுக்கொள்ளுகின்றார்.

தொள்ளாயிரம் சரிகளும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான காயங்களும் என்கிற கதை முள்ளிவாய்க்கால் போர் உச்சத்தில் இடம்பெற்றிருந்த காலத்தில் எழுதப்பட்டிருக்கின்றது.  இழப்புக்களும் மரணங்களும் அவலமும் ஓலமும் நிறைந்து கிடந்த ஒரு காலப்பகுதியில் இவற்றையெல்லாம் கிரிக்கெட் ஸ்கோர் சொல்வதுபோல பரபரப்புச் செய்தியாக்கிய பத்திரிகைகள், ஊடகங்கள் ஆகியவற்றின் அறப்பிறழ்வினை இக்கதையூடாக பதிவாக்குகின்றார்.  போரின் அவலங்களும், இழப்புகளும் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பதுவும், அவை அந்த மானுட அவலத்துக்கான சாட்சிகளாக்கப்படல் வேண்டும் என்பதுவும் உண்மை.  அந்த விதத்தில் ஒரு போர்க்களத்தில் நியமிக்கப்பட்ட புகைப்படம் எடுப்பவரது வேலை புகைப்படம் எடுப்பது மாத்திரமே.  அதேநேரம் துரதிர்ஸ்டமாக அவற்றை நாம் உணர்வு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்து பரிதாபம் தேடும் கருவியாக மாத்திரம் பயன்படுத்துகின்றோமோ என்ற கேள்வி எனக்கு இருக்கின்றது.

ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை நடந்த மிக மோசமான மானுட அவலங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை எட்டாம் பிரசங்கம் என்ற கதையூடாக ஆத்மார்த்தமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது.  முபாரக் அலி நானா யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டது அப்புவுக்கு மாத்திரமல்ல, அனைவருக்குமான ஒரு அவலம்தான்.  ”நாச்சிக்குடா முபாரக் அலி நானாவின் நிறுத்த வகையற்றுச் சொரிந்த கண்ணீரில் கரைந்து கடலில் கலந்தது.  குடாக்கடலின் அலைகள் கொந்தளித்தன.  கொண்டல் காற்றெழுந்து உலுப்பியதில் கடலடி நிலம் அலையுண்டு கலங்கிச் சேறானது.  முபாரக் அலி நானா வேரோடு அகற்றப்பட்ட நாச்சிக்குடாவின் மேற்றிசைச் சூரியன் வெட்கத்தோடும் துக்கத்தோடும் இரணைதீவுக்குப் பின்னால் முகம் முறைத்துக்கொண்டான்”.  அப்படி வெளியேற்றப்பட்ட முபாரக் அலி நானா போரின் பின்னர் 2010 ஆடி 15 மீண்டும் உயிரைமட்டும் சுமந்தபடி நாச்சிக்குடா வந்தபோது மண்ணில் ஒரு பிடி நிலம் கூட அவருக்கானதாக இருக்கவில்லை.  இன்று போரில் கையகப்படுத்தப்பட்ட மக்களின் நிலம்பற்றிக் கதைக்கின்றபோது இந்த மக்களின் நிலங்கள் பற்றி பேசவும், அவை பறிக்கப்பட்ட விதம் பற்றி வெட்கவும் வேண்டியது எமது கடமையாகும்.

இத்தொகுதியில் முக்கியமானதாக நான் கருதுகின்ற இன்னொரு அம்சம், நூலெங்கும் நிலவியலும், வாழ்வியலும் பதிவுசெய்யப்பட்டுள்ள விதமாகும்.  நானறிந்தவரை ஈழத்தின் கரையோர, மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் வாழ்வியலை பதிவாக்கியுள்ள நூல்களில் இது முக்கியமானது.  குறிப்பாக மீன்பிடித்தொழில் சார்ந்த எத்தனையோ சொற்கள் சரளமாக ஒவ்வொரு பக்கத்திலும் நிரவியிருக்கின்றன.  உதாரணமாக, தானையடி, அடியனடித்தல், கும்பா, மண்டா… என்று – இவற்றை எல்லாம் தனியாகப் பட்டியலிட்டு, இன்னமும் சேகரித்து முழுமையாக்கும் வேலைகளில் அகராதித்துறை சார்ந்து இயங்குபவர்கள் முன்வரவேண்டும்.  அதுபோல உணவு தயாரிக்கும் முறைகள், உதாரணமாக நண்டுச் சம்பல், இறால்-முட்டைப் பொரியல், மீன் ஆணம் என்று, இந்த உணவுத் தயாரிப்புகளை அறிந்தவர்கள் மிக சிலராகவே இருப்பர்.   சில காலங்களுக்கு முன்னர் ஈழத்தவர்களது உணவுத்தயாரிப்பு முறைகள் பற்றிய ஆவணப்படுத்தல் ஒன்றினைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன்.  பின்னர் சில நடைமுறைக் காரணங்களால் அது சாத்தியமாகவில்லை.  அதன் தேவையை இந்நூல் மீள வலியுறுத்துகின்றது. அது போல திருமண நிகழ்வுகளில் மாட்டுக்கறி சமைப்பது என்பது ஒரு சடங்காகவே இருந்தது என்பது தற்போது பலருக்கும் ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.  அதுபோல கடலிலிருந்து வலையைத் தோணிக்கு இழுக்கும்போதும், தோணியில் பிடித்துப் போட்ட மீன்களுடனும் மீன்பிடிக்கும்போது பிடித்த மீன்களுடன் பேசும்விதம் இன்னொரு கவனிக்கவேண்டிய பதிவு.  மீன் மற்றும் கடலுணவுகளைக் கொண்டுசெல்லப் பயன்படுத்தப்படுகின்ற பறிகளை எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை.  நோர்வேயில் கதைசொல்லி மீன் பிடிக்கின்றபோது தோட்டுப்பறி இல்லையா என்று கேட்கின்றார் அப்பு.  பறி இழைப்பதில் விண்ணனான அப்பு பற்றித் தொடர்ந்துவரும்போது இறால் பறி, களங்கண்டிப் பறி, வழிவலைப் பறி, திருக்கைவலைப் பறி என்கிறதாக பறிகளின் வகைகள் பட்டியலிடப்படுகின்றன.  கிட்டத்தட்ட இந்தத் தொழிற்கலைகள் எல்லாம் அழிந்துபோய்விட்டன என்றே சொல்லக்கூடிய ஒரு காலப்பகுதியில் அவற்றை கலைகளினூடாகப் பதிவுசெய்கின்ற இந்தப் போக்கு எனக்கு முக்கியமானதாகப்படுகின்றது.

எட்டாம் பிரசங்கம் என்கிற கதையில் விநாயகமூர்த்தி என்பவர் ஊடாக போருக்குப்பிற்பட்ட காலங்களில் நிலத்தடி நீர் எப்படி பண்டமாக விற்பனையாகி எதிர்காலத்தில் சூழலியல் சார்ந்த பிரச்சனைகளை தீவிரப்படுத்த இருக்கின்றது என்பது கவனப்படுத்தப்படுகின்றது.  எமது சமகால நெருக்கடிகள் பற்றிப் பேசுகின்றபோது சூழலியல் சார்ந்த கரிசனைகளுடனான பார்வைகளை மிகக் குறைவாகவே அவதானிக்கமுடிகின்றது.  அந்த வகையில் மக்களுக்கு நீர்விநியோகம் செய்வதாகக் கூறிக்கொண்டு வயல்வெளிகளில் உள்ள கிணறுகளில் இயந்திரங்களை வைத்து நீரை ஒட்ட உறிஞ்சி எடுப்பதனால் அவற்றின் நன்னீர் வளம் வற்றி உவர் நீராக மாறுகின்ற அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படுகின்றது.  அதுபோல பெரும்படகுகளில் வந்து நவீன முறைகளில் மீன்கள் பிடிக்கப்படுகின்றபோது சமநிலை குலைந்து எப்படி கடல்வளம் குன்றுகின்றது என்பதுவும் கவனப்படுத்தப்படுகின்றது.  இவையெல்லாம் பண்பாட்டு ஆய்வுகளிலும் ஆவணப்படுத்தலிலும் அக்கறைகொண்டவன் என்றவகையில் எனது கவனத்தையீர்த்த அம்சங்கள்.  அந்த வகையில் தமயந்தி இன்னும் நிறைய எழுதவேண்டும்; அது அவரது திருப்திக்காக மாத்திரமல்ல, ஏழு கடல்கன்னிகள் போன்ற பதிவுகள் சம காலத்தில் அதிகம் தேவைப்படுகின்ற ஒரு செயற்பாடுமாகும்.


ரொரன்றோவில் ஒக்ரோபர் 9 அன்று இடம்பெற்ற தமயந்தியின் “ஏழு கடல்கன்னிகள்” என்கிற நூல் பற்றிய உரையாடல் நிகழ்வில் வாசிக்கப்பட்ட அறிமுக விமர்சனக் கட்டுரை.  இக்கட்டுரை பின்னர் நவம்பர் 2016 தாய்வீடு இதழிலும் இடம்பெற்றது.
நவம்பர் 2022 அன்று திருத்தம் செய்யப்பட்டது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: