download-1ஒரு போராளியின் காதலி என்கிற இந்த நாவலானது ஈழப்போரின் இறுதிக்கட்டங்களின் நடந்த சம்பவங்களை வைத்து எழுதப்பட்டிருக்கின்றது.  இதனை எழுதிய வெற்றிச்செல்வி மன்னாரில் 1974 இல் பிறந்து 1991 இலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தன்னை இணைத்து ஈழப்போராட்டத்தில் ஈடுபட்டவர்.  வெடிவிபத்தொன்றில் தனது வலது கண்ணையும் வலது கையையும் இழந்த வெற்றிச்செல்வி தொடர்ந்தும் ஊடகத்துறையில் நிதர்சனம், புலிகளின் குரல், சுதந்திரப் பறவைகள் ஆகியவற்றில் தனது பங்களிப்புகளைத் தொடர்ந்து செய்துள்ளார்.  ஆரம்பத்தில் வலது கைப் பழக்கமுள்ளவராக இருந்தபோதும் பின்னர் இடது கையால் எழுதுவதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்ட வெற்றிச்செல்வி, அண்மையில் வெளியான ஆறிப்போன காயங்களின் வலியுடன் சேர்த்து கவிதை, புனைவு, கட்டுரைகள் என்று இதுவரை ஏழு நூல்கள் எழுதியிருக்கின்றார். அவற்றுள் அவரது முதலாவது நாவலான “ஒரு போராளியின் காதலி” பற்றியதாகவே எனது கட்டுரை அமைகின்றது.

ஒரு போராளியின் காதலி, ஒரு விதத்தில் ஒரு காதல் கதையென்று சொல்லலாம்; ஒரு போராளியை, அவன் போராளி என்று அறியாமல் காதலிப்பவளின் கதை.  செவ்வாய்க்குற்றம் கொண்ட ஒரு தமக்கை, திருமணம் செய்ய மாட்டேன் என்று இருக்கின்ற இரண்டாவது தமக்கை, மூளை வளர்ச்சி குன்றியவள் என்பதால் திருமணத்துக்கு தகுதியில்லாதவள் என்று முடிவுசெய்யப்பட்ட மூன்றாவது தமக்கை என்று நான்கு பெண்பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்றில் நான்காவது பெண்ணாகப் பிறந்தவர் சுமதி.  அவளது குடும்பம் சாதியம் போன்றவற்றில் ஊறிப்போன குடும்பம்.  வீட்டிற்கு நண்பர்கள் வந்துபோனால் கண்டது கடியதுகளும் வீட்டுக்குள் வந்துவிடும் என்று சொல்லி பிள்ளைகளை வளர்க்கும் குடும்பம்.  சுமதிக்கும் கூட இவற்றில் பெரிதாக பிரச்சனைகள் ஏதுமில்லை.  தாதியாக வேலை செய்யும் இடத்திலேயும் கூட மற்றவர்களை ஏவி தனது வேலைகளை செய்தல், பிடிவாதம், திமிர், தலைக்கனம் என்று இருந்த சுமதி அங்கே வாமன் என்கிற வன்னியில் இருந்து வந்த இளைஞனுடன் காதல் கொள்கிறாள்.  அவனைத்தவிர கடமையையில் மிகவும் ஈடுபாட்டுடன் இருக்கின்ற அமுதா என்கிற தோழிமட்டுமே சுமதிக்கு அங்கே பழக்கமானவர்கள் எனலாம்.  முதல் மூன்று தமக்கைகளுக்கும் திருமணம் நடக்காவிட்டாலும் பரவாயில்லை பரம்பரைச் சொத்துகள் வெளியில் போய்விடக்கூடாது என்றுசொல்லி சுமதியை அவளது உறவில் இருந்து பெண்கேட்டு வருகின்றார்கள்.  சுமதி வீட்டினரும் அந்த திருமணத்துக்கு ஒத்துக்கொண்டு அவளைத் திருமணத்துக்கு வற்புறுத்துகின்றனர்.  சுமதி திருமணத்துக்கு மறுத்து, வீட்டைவிட்டு வெளியேறி வாமனைத்தேடி வன்னிக்குச் செல்கின்றாள்.  அங்கே அவளுக்கு அவன் ஒரு போராளி என்று தெரியவருகின்றது.  போராட்டத்தையும், போராளிகளையும் அடியுடன் வெறுக்கும் சுமதிக்கு வன்னிக்கு வந்தபின்னரே வாமனும் ஒரு போராளி என்று தெரியவருகின்றது.  ஆரம்பத்தில் வாமன் மீது கோபம் கொண்டு அவனை இயக்கத்தைவிட்டு வெளியேறும்படி கேட்கிறாள்.  அந்தக் காலப்பகுதியில் கிளிநொச்சியிலேயே மருத்துவமனையில் தாதியாகக் கடமையாற்றும் சுமதி பின்னர் போராட்டத்தையும், போராளிகளையும் பற்றிய தனது மனநிலை மாறுவதையும் அவற்றின் தொடர்ச்சியுமே ஒரு போராளியின் காதலி நாவலாக உள்ளது.

இந்த நாவல் ஈழப்போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கை அரசின் “புனர்வாழ்வு முகாமில்” இருந்தபோது வெற்றிச்செல்வியால் எழுதப்பட்டது.  முள்ளிவாய்க்காலில் முடிந்த போரின் இறுதி நிகழ்வுகளை, பேரழிவுகளை இறுதிப்பகுதியூடாகப் பதிவுசெய்கின்றது இந்த நாவல்.  நூலின் பின்னட்டையில் முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் வன்னியிலிருந்தும் ஈழத்திலிருந்தும் எழுந்த முதல் நாவலாக இந்த நூல் முதன்மைபெறுகின்றது என்கிற குறிப்பும் காணப்படுகின்றது.  புனர்வாழ்வு முகாமிலிருந்தபோதே இதனை வெற்றிச்செல்வி எழுதியிருந்தாலும் 2012 டிசம்பரிலேயே இலேயே தோழமை வெளியீடாக இதன் முதலாவது பதிப்பு வெளியாகின்றது.  அதேநேரம் மட்டக்களப்பைச் சேர்ந்த எஸ். அரசரத்தினம் என்பவர் எழுதிய சாம்பல் பறவைகள் என்கிற குறுநாவல் ஒன்றும் ஈழப்போரின் இறுதி நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்டு ஈழத்திலேயே இருக்கின்ற சத்யா பப்ளிகேஷன்ஸ் ஊடாக 2010 இலேயே வெளியாகியிருக்கின்றது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.  2009 இற்குப் பின்னர் வெளியான குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய புனைவுகளில் ஒன்றான சாம்பல் பறவைகள் இதுவரை மிகக் குறைவாகவே அறியப்பட்டிருக்கின்றது.

2009 இற்குப்பின்னர் போர் குறித்தும் போர்க்காலம் குறித்தும் கருவாகவும், தளமாகவும் கொண்டு எழுதப்பட்டிருக்கின்ற புனைவுகளில் சில பொதுத்தன்மைகளை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

  1. இவை போரினை, போர்க்கால வாழ்வை, வாழ்வியலை, போரினால் நடந்த பேரழிவைப் பற்றிய பதிவுகளை மேற்கொள்ள முனைகின்றன.
  2. இந்தப் புனைவுகளை எழுதிய பெரும்பாலானவர்கள் சில நோக்குகளுக்காக ஒரு விதமான செயற்பாடுகளுக்கான (Activism) கருவியாகக் கருதியே இந்தப் புனைவுகளை எழுதியுள்ளனர். அதேநேரம் – அதன் காரணத்தினாலும் கூட இருக்கலாம் – அவற்றின் மொழிகள் செழுமையாக இல்லாமல் நேரடியான மொழியாக இருக்கின்றன.
  3. பெரும்பாலானவற்றை எழுதியவர்கள் அவரவரது அரசியல் நிலைப்பாடுகளை மேலும் உறுதியாக்கும் நோக்குடனே அந்தப் புனைவுகளை கையாண்டுள்ளனர்.
  4. போராளிகளை, குறிப்பாக விடுதலைப் புலிகளை புனித உருக்களாகப் போற்றுகின்ற அல்லது அவர்களை முற்று முழுதாக விமர்சித்து நிராகரிக்கின்ற போக்கு இவற்றில் காணப்படுகின்றது
  5. விடுதலைப் புலிகளுக்கும் மக்களுக்குமான உறவு, பாதுகாப்புப் பிரதேசங்கள் மீதான இராணுவத்தின் குண்டுவீச்சு / செல் வீச்சு தாக்குதல், புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு, மக்களும் போராளிகளும் இராணுவத்திடம் சரணடைகின்ற இறுதி நாட்கள், அப்படி சரணடைபவர்கள் மீது விடுதலைப்புலிகளால் நிகழ்த்தப்படும் துப்பாக்கித் தாக்குதல்கள், ஐநா, அல்லது பிற நாடுகள் போரின் இறுதிப்பகுதியில் நேரடியாக தலையிடுவர் என்ற நம்பிக்கை மக்களிடமும் போராளிகளிடமும் இருந்தமை என்பன இந்த எல்லாப் புனைவுகளிலும் வந்தாலும் அவை பற்றிய படைப்பாளியின் பார்வைக்கொணம் வேறுபட்டதாகவும் உள்ளது.
  6. இவற்றுள் பெரும்பாலானவை முன்னாள் போராளிகளால் எழுதப்பட்டவை, அவற்றின் முக்கிய பாத்திரங்களாக வருவோரும் போராளிகளே

2இந்தப் பொதுத்தன்மைகளை ஒரு போராளியின் காதலியிலும் காணலாம்.  அதேநேரம் இதுவரை பெரியளவில் பேசப்படாத ஈழத்து மருத்துவ போராளிகள் பற்றியும் போர்க்காலங்களில் மருத்துவத் தேவைகள் அதிகரித்திருந்த சூழலில் பயிற்சிகளின் மூலமாக போராளிகளே மருத்துவர்களாகவும், தாதியர்களாகவும், இதர உதவிகள் புரிவோராகவும் பணியாற்றியதன் பதிவாக இது முதன்மை பெறுகின்றது.  போர்க்காலத்தில் பேரழிவுகளுக்கு மத்தியிலும் மனிதம் தொடர்ந்தும் உயிர்ப்போடும் இருந்தது என்பதன் சான்றாக இந்த மருத்துவத் துறையின் பணிகள் இருந்திருக்கின்றன.  போராளிகளது உயிர்களாக இருந்தாலும் சரி, சிங்களப்படையினரது உயிராக இருந்தாலும் சரி, அவர்களுக்கான உதவிகள் இந்த மருத்துவத் துறையினரால் வழங்கப்பட்டிருக்கின்றன.  பியதாச என்கிற இலங்கை இராணுவப் படையினர் ஒருவன் காயமுற்று இருக்கின்றபோது அவனுக்கு சுமதி பணிவிடை செய்கின்றாள்.  அதேநேரம் அங்கே மருத்துவ உதவியாளனாக இருக்கின்ற, இராணுவம் சுட்டு காலினை இழந்த போராளியான மதிவாணனுக்கு அது எரிச்சலை ஊட்டுகின்றது.  அவனுக்கும் சுமதிக்கும் இடையிலான சிறு உரையாடல் ஒன்று முக்கியமானது.  அது போல போர் உச்சத்தில் இருக்கின்றபோது போதிய மருந்துகளும் மருத்துவ வசதிகளும் முறையான வைத்தியர்களும் தாதியரும் இல்லாமல் எவ்விதம் மருத்துவமனைகள் இயங்கின என்பதன் பதிவாகவும் ஒரு போராளியின் காதலி அமைகின்றது.  குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருக்கும் வெட்டி அகற்றப்பட்ட குழந்தையின் கை, சரியான வசதிகள் இல்லாத நிலையில் காயமுற்ற இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுமாறு  படுகாயமுற்றிருக்கின்ற தந்தை கேட்கின்றபோது ஒரு பிள்ளையை மாத்திரம் காப்பாற்ற அவகாசம் உள்ளதை அறிந்து அதிக பாதிப்பில்லாத காயங்கள் அடைந்த பிள்ளைக்கு சிகிச்சை அளித்து மற்றப் பிள்ளையை அப்படியே சாகவிடும் அவலம், காயமுற்ற போராளிகளின் குப்பியை அகற்றுவது என்கிற மரபானது – அவர்கள் வலிகளுடனும் மருத்துவ வசதியில்லாமலும் கொடுமைப்படக்கூடாது என்ற எண்ணத்துடன் – கைவிடப்பட்டு அவர்கள் விரும்பினால் குப்பி கடித்து சாகட்டும் என்று விடப்பட்ட நிலை என்று மானுட அவலங்களின் பதிவாக இது அமைகின்றது.  விடுதலைப் புலிகள் வன்னியில் நிர்வகித்த நிகர் அரசாங்கம் பற்றிய குறிப்புகள் இணையம் முழுக்க பட்டியலிடப்பட்டு பரவியிருக்கின்றபோதும் அவை எவ்விதம் இயங்கின, அவற்றின் உட்கட்டுமாணங்கள் எப்படி இருந்தன என்பதெல்லாம் பற்றிய பதிவுகளே இல்லை என்பதே இன்றைய யதார்த்தம்.  அக்காலப்பகுதியில் வெளியிடப்பட்ட ஆவணங்களும் பிரசுரங்களும் கூட அனேகம் அழிந்துவிட்ட என்றே அறியமுடிகின்றது.  இப்படியான ஒரு சூழலில் மக்கள் “தமது நினைவுகளை எழுதுதல் அல்லது பதிதல் என்பதை பிரக்ஞையுடன் செய்ய முன்வரவேண்டும்.  அதற்கு புனைவுகளும் அனுபவக் கட்டுரைகளும் பொருத்தமான தளங்களாகும்.  அதனைச் செய்வதற்கான முனைப்பாக ஒரு போராளியின் காதலி முக்கியமானதெனச் சொல்லலாம்.

நாவலின் ஆரம்பப் பகுதி போராளிகளையும் போராட்டத்தையும் வெறுத்த சுமதியின் மனநிலையில் ஏற்படும் மாற்றத்தைக் காட்டுவதற்கான உத்தியாகவே பாவிக்கப்படுகின்றது.  உண்மையில் இந்தப் பகுதி எனது வாசிப்பில் சற்றே விமர்சனத்துக்கானதாக இருந்தது.  இந்தப் பகுதி ஒருவிதத்தில் வன்னிப் பிரதேசத்தின் அன்றைய வாழ்வையும் மக்கள் புலிகள் மீது கொண்டிருந்த ஆதரவையும் ஒரு விதமான பொற்காலமாக விதந்துரைக்கின்றதாக உள்ளது.  அந்த மக்கள் புலிகளை அவ்வாறு நேசித்தார்கள் என்பது உண்மையானால் அவர்கள் ஏன் அவ்விதம் நேசித்தார்கள் என்கிற கேள்வி எழுகின்றது.  மக்கள் தம்மை எப்போதும் போரினையும் போராட்டத்தையும் ஆதரிப்பவர்களாகவே உள்ளனரே அன்றி போரில் பங்கேற்பவர்களாக முன்வருவது குறைவாகவே உள்ளனர்.  போர் நெருங்கி, போரிட ஆட்கள் தேவை என்றபோது கட்டாயமாகத்தான் ஆட்களை சேகரிக்கவேண்டி இருந்துள்ளது.  அப்படிச் சேர்ப்பவர்களும் கூட விட்டுவிட்டு ஓடுவதே வழமையாக இருந்திருக்கின்றது.  1000 பேரை ஒவ்வொரு நாளும் கட்டாயமாக சேர்க்கவேண்டும்.  அதில் 500 பேர் ஓடினாலும் மிச்ச 500 பேர் இருப்பார்கள் என்பதாகக் கட்டளையிடப்பட்டதாக ஒரு போராளியின் காதலியே குறிப்பிடுகின்றது.

“அநியாயமாகச் சாகிறவர்கள் தானே நாங்கள்.  அந்தச் சாவை களாத்திலேயே சந்திப்போம் வாருங்கள் என்றார்கள் ஆட்சேர்ப்பாளர்கள்.  நீங்கதானே சாகிறீங்களெண்டு எங்களையும் சாக்கொல்றீங்களேடா நாசமாகப் போக நீங்களென்று ஏராளமான சனங்கள் மண்ணள்ளிக் கொட்டினார்கள்.  உணவு கொடுத்துப் போராட்டத்தை வளர்த்தவர்களே அவர்களின் பிள்ளையைக் கேட்டபோது துள்ளியெழுந்தார்கள்.  உணவு கொடுத்தோம்.  உயிரைப்பறிக்க நிற்கிறீர்களே நன்றி கெட்டவர்களே என்று நியாயம் கேட்டார்கள்”

தன் பிள்ளையை ஒளித்துவைத்திருந்து வைத்திருந்து ஒருநாளில் பிள்ளையை போராளிகள் பிடுங்கிக்கொண்டு போனால் போதும் அதே குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆள்மாறி ஆள்வந்து தங்கள் தறப்பால் கொட்டிலுக்கருகில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் ஐந்தாறு இளையவர்களின் பதுங்கிடங்களைக் காட்டிகொடுத்தார்கள்”

என்று இந்த நாவலில் வருகின்ற பகுதிகள் ஒருவிதத்தில் முக்கியமானவை. இந்தப் போர் போராளிகளுக்குக் கற்றுக்கொடுத்த கசப்பான பாடம் மக்களின் இந்த மனநிலையைப் புரியவைத்ததுதான். போராளிகளைப் பற்றியும் போர் பற்றியுமான புகழ்பாடும் விதந்துரைப்புகள் கூட மக்கள் தமது தேவைகளுக்காக, தமது விடுதலைக்காக போராடுபவர்களை தம்மை விட்டு வேறாக்கி, புகழ்பாடி, திருவுருக்கள் ஆக்கி, நீங்கள் போராடுங்கள், சண்டைபிடியுங்கள், காயப்படுங்கள், கைதாகுங்கள், குப்பி அடியுங்கள், செத்துக்கூடப் போங்கள், நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகின்றோம், உணவு தருகின்றோம் என்பதாக இருந்த ஒரு மனநிலையின் வெளிப்பாடு என்றே தோன்றுகின்றது.  இந்த நாவலைப்பற்றியும், இதில் வருகின்ற மானுட அவலம் பற்றியும் பேசுகின்றபோது இந்த மனநிலை பற்றியும் சேர்த்தே பேசுவோம்.


குறிப்பு

  1. இக்கட்டுரை ஒக்ரோபர் 22ஆம் திகதி ரொரன்றோவில் உள்ள கனடா கந்தசாமி கோயில் பொது அறையில் இடம்பெற்ற போராளியின் காதலி, உயிரணை ஆகிய நூல்களின் அறிமுகவிழாவில் வாசிக்கப்பட்டது.
  2. ஜீவநதியின் நவம்பர் 2016 இதழிலும் இக்கட்டுரை பிரசுரமானது.