புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் பற்றிய கட்டுரைக்கான எதிர்வினை

imagesபுத்தாண்டு தினக் கொண்டாட்டங்களின்போது பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் ரீதியான வன்முறைகளை முன்வைத்து அகில்குமார் என்பவர் எழுதிய காமத்தைக் கொண்டாடுதல் என்கிற பதிவினைப் படிக்கநேர்ந்தது.  இந்தப் பதிவு பலராலும் தொடர்ச்சியாக பகிரப்பட்டும் வந்ததை அவதானித்ததன் அடிப்படையில் அதுபற்றிய சிலவிடயங்களைப் பகிர்வது முக்கியமானது எனக் கருதுகின்றேன்.  பொதுவாகவே எமது சமூகத்தில் பெண்கள் பற்றியதாக இருக்கின்ற பொதுப்புத்தியின் அடிப்படையிலான எதிர்பார்ப்புகளும், ஆணாதிக்கப் போக்கும் பெண்ணை ஒரு பண்டமாக நினைக்கின்ற போக்கும் இது போன்ற நிகழ்வுகளின் ஊடாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது.  இதுபோன்ற நிகழ்வுகளும் இவற்றை ஆதரிக்க மனப்பாங்கும் நிச்சயமாகக் கண்டிக்கப்படவேண்டியன.  அதேநேரம் இந்தக் கட்டுரை தன்னளவில் பேசுகின்ற பல விடயங்கள் தொடர்பாக எனது பார்வை மாறுபட்டதாக அமைகின்றது. 

முதலில் காமத்தைக் கொண்டாடுதல் என்பதன் மூலம் கட்டுரை எதனைக் குறிப்பிடுகின்றது என்பது புரியவில்லை.  காமம் கொண்டாட்டத்துக்குரியதாக இருக்கலாம், ஆனால் அதனை எவ்விதம் கொண்டாடுவது என்று தெரியவில்லை.  உதாரணமாக

நமது தாத்தாகளுக்கு இரண்டு மனைவிகள் என்பதெல்லாம் நாம் சர்வசாதாரணமாக கடந்துசெல்லும் விஷயங்கள். ஆனால் இன்றைக்கு காமத்தை உச்சரிப்பதே மிக மோசமான காரியமாக சித்தரிக்கப்படுகிறது

என்று குறிப்பிடுகின்றபோது இருதார மணம் என்பது எவ்விதம் நோக்கப்படுகின்றது என்பதைக் கவனிக்கவேண்டியிருக்கின்றது.   காமம் என்பது கலைவடிவங்களில் சாதாரணமாகப் புழங்கிய காலப்பகுதியை வைத்து அங்கே காமம் கொண்டாடப்பட்டது என்ற வாதத்தை முன்வைத்தால், அந்தக் கொண்டாட்டம் பெண்களை எப்படிப் பார்த்தது, அன்றைய காலப்பகுதியில் பெண்களின் வாழ்நிலை எப்படி இருந்தது என்ற கேள்வி எழுகின்றது அல்லவா?  எமது கலை இலக்கிய வடிவங்களில் காமம் வெளிப்படையாகப் பேசப்பட்டதே மரபு என்பதும், அது பின்னர் taboo ஆக மாறியது என்பதும் உண்மைகள்தான்.  ஆனால் தாத்தாக்கள் இரண்டு மனைவியர் வைத்திருந்தது சாதாரணமாகப் பார்க்கப்பட்டது என்பதை காமத்தைக் கொண்டாடிய சமூகமாக எவ்விதம் பார்க்கலாம் என்று புரியவில்லை.

அதுபோலவே,

//இப்போதைய சூழலில் இந்திய சமூகத்தை மேற்கத்திய வாழ்வியல் முறைகளை தனது உடையிலும், பாவனையிலும் கொண்டு , சிந்தனையில் பழமையான ஒழுக்கவியல் நெறிகளை கொண்டிருக்கும் ஒரு சமூகமென்று சொல்லலாம். மேற்கத்திய உடையை அணிகிற, Fuck, bitch என்று கத்திக்கொண்டிருக்கிற என் தோழியிடம் சென்று ” Will you sleep with me tonight?” என்று கேட்கிறபொழுது ” செருப்பு பிஞ்சிரும்டா நாயே” என்று சொல்வாளேயானால் அது எப்படி மேற்கத்திய சிந்தனையாக இருக்க முடியும்? ஒன்று சரி என்று சொல்லவேண்டும் இல்லையேல் விருப்பமில்லை என்று சொல்லவேண்டும். அதுதானே மேற்கத்திய வாழ்வியல் முறையாக இருக்கமுடியும்//

என்பது ”மேற்கத்திய சமூகம்” என்பது குறித்த மிக மேலோட்டமான புரிதல். மேற்கத்திய சிந்தனை என்பதை நினைத்தவுடனே எவரையும் உடலுறவுக்கு அழைக்க முடியும் என்று கருதுகின்ற பொதுப்புத்தி மனப்பாங்கே இங்கே தெரிகின்றது.  ஒருவிதத்தில் பொது வெளியில் செயற்படவும், இயங்கவும் ஆரம்பிக்கின்ற பெண்கள் குறித்து இருந்த மோசமான புரிதலுடன் தொடர்புபடுத்தி இதனைப் பார்க்கமுடியும்.  மேற்கத்திய பாணியில் உடையணிகின்றார், Fuck, bitch என்று கத்திக்கொண்டிருக்கிறார், புகைக்கின்றார், மது அருந்துகின்றார், டிஸ்கோதேகளுக்கு போகின்றார் என்பதால் எல்லாம் ஒருவரிடம் “Will you sleep with me tonight?”  என்று கேட்கின்றபோது அவர் நிதானமாக பதிலளிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஆணாதிக்க பொதுப்புத்தியின் மிக மோசமான வெளிப்பாடு.

அடுத்து,

ஆனால் ஒரு ஆணிற்கு பெண்ணோ அல்லது பெண்ணிற்கு ஆணோ துணையாகக் கிடைக்கவில்லை என்பது எவ்வளவு பரிதாபகரமான விஷயம். ஏறக்குறைய பதிமூன்று வயதிலிருந்து ஏற்படும் உடல் மாறுபாடுகளினால் உருவாகும் உணர்ச்சிகளைத் தீர்த்துக்கொள்ள முப்பதை நெருங்கிவிட்ட பின்பும் எதிர்பாலினத்தின் உடல் கிடைக்கவில்லை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம்/

என்று கூறும்போது, தற்பாலினர் குறித்தும் நாம் பதிவுசெய்யவேண்டும்.  அதேநேரம் ஆணுக்கும், பெண்ணுக்கும் துணை தேவைப்படுவதை நாம் பாலியல் தேவைகளுடன் மாத்திரம் தொடர்புபடுத்தத் தேவையில்லை.  அடுத்து இதுபோன்ற பாலியல் தாக்குதல்களை நாம் முழுக்க முழுக்க ஆண்பார்வையில் பார்ப்பதையும் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கின்றது.

 மன ரீதியாக, உடல் ரீதியாக ஒருவனை பாதித்து அவனை பாலியல் வெறி கொண்டவனாக மாற்றும் சூழல் அப்பொழுதுதானே உருவாகிறது. பெண் உடல் கண்டறியமுடியாத புதையலாக அவன் முன்னால் இருக்கிறபொழுது அதை எவ்வகையிலேனும் அடைந்துவிடவேண்டும் என்பதுதானே புத்தாண்டுக் கொண்டாடக் கூட்டத்தில் தெரியாத பெண்களின் மார்பகங்களை கசக்குவதாக மாறுவது? தன் குடும்ப உறுப்பினர்களையே பாலியல்கண் கொண்டு காணும் நிலைக்கு தள்ளுவது

என்கிற புரிதலில் எனக்கு உடன்பாடில்லை.  அண்மைக்காலங்களில் எமது சமூகத்தில் நிலவுகின்ற பாலியல் வறட்சியே பெண்கள் மீதான் பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்பதாக முன்வைக்கப்படுகின்ற வாதங்கள் – சாரு நிவேதிதா இதைத் திரும்ப திரும்பக் கூறிக்கொண்டிருந்தார் – ஒரு விதத்தில் பெண்ணுடலைப் பண்டமாகப் பார்க்கின்ற மனநிலையையும் ஆணாதிக்க மனநிலையையும் நியாயப்படுத்துவதாகவே அமைவதை அவதானிக்கவேண்டும்.

பாலியல் பற்றிய புரிதலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் எதிர்ப்பாலினர் பற்றிய புரிதல்களும், மாற்றுப் பாலினர், தற்பாலினர் பற்றிய உரையாடல்களினூடான ஆரோக்கியமான பார்வையும் இத்தகைய பாலியல் தாக்குதல்களைக் குறைக்கவோ அல்லது அதற்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்கவோ உதவலாம்.  காமத்தைக் கொண்டாடுதல் என்பது வேறு, பாலியல் தாக்குதல்களுக்கான தீர்வாக மறைமுகமாக free sex இனை முன்வைப்பது வேறு.  இது இரண்டையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.


அகில் குமார் முகநூலில் எழுதிய கட்டுரையை இத்துடன் பகிர்கின்றேன்.

https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FKsrakhil%2Fposts%2F1179230342162985&width=500

காமத்தைக் கொண்டாடுதல்:

பெங்களூரில் மிகப்பெரிய பாலியல் வன்முறை ஒன்று அரங்கேறியிருக்கிறது. பெண்கள் மிக மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். காவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். ” நாங்களும் ஆண்களைப் போலத்தானே, எங்களுக்கும் புதுவருடத்தை மகிழ்வோடு கொண்டாட ஆசையிருக்காதா? ” என அழுதுகொண்டே ஒரு பெண் கேட்கிறபொழுது அதற்கான பதிலேதுமின்றி தலைகுனிவதைத் தவிர ஒன்றையும் செய்ய முடியவில்லை. வழக்கம்போல பெற்றோரின் வளர்ப்பு சரியில்லை என்ற குரல்கள் எழத் துவங்கிவிட்டன( அவர்கள்தான் வளர்க்கவே இல்லையே. ஆறு வயதில் ரெசிடென்ஷியல் ஸ்கூலில் சேர்த்ததோடு அவர்கள் கடமை முடிந்துவிட்டது) . படித்த, நாகரிகமான மனிதர்கள் வாழ்வதாக சொல்லப்படும் மென்பொருள் தலைநகரிலேயே இவ்வளவு பாலியல் வறட்சி நிலவுகிறபொழுது நாட்டின் பிற பகுதிகள் எவ்வாறிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

இப்போதைய நிலைக்கு மாறாக ,நமது கலைவடிவங்கள் எப்போதும் காமத்தை பேசி இருக்கின்றது. கவிதையில், கடவுள் சிற்பங்களில் காமம் இருந்திருக்கிறது. நிர்வாண சிலைகளற்ற கோவில் கோபுரங்கள் இங்குண்டா? அறநெறி நூலான திருக்குறள்கூட காமம் பேசியிருக்கிறது. நமது தாத்தாகளுக்கு இரண்டு மனைவிகள் என்பதெல்லாம் நாம் சர்வசாதாரணமாக கடந்துசெல்லும் விஷயங்கள். ஆனால் இன்றைக்கு காமத்தை உச்சரிப்பதே மிக மோசமான காரியமாக சித்தரிக்கப்படுகிறது.

மிகவும் அடித்தட்டு மக்கள் காமத்தையும், கெட்ட வார்த்தைகள் என்று வரையறுக்கப்பட்டவற்றையும் மிகச் சுலபமாக கையாள்பவர்களாக இருக்கிறார்கள். காமம் சார்ந்த பேச்சுகள் இயல்பாக பேச்சில் கரைபுரண்டோடுகிறது. மேல்தட்டு மக்கள் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகள் என்று வரையறுக்கப்பட்டவற்றை பேசுபவர்களாகவும், உடல் அரசியலில் இருந்து விடுபட்டு காமத்தை எளிதாக அணுகுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் கல்வியின் மூலமும், உலகமயமாதல் வாய்ப்புகள் மூலமும் இன்றைக்கு வேலைவாய்ப்புகள் பெற்றிருக்கிற இடைநிலை ஆட்கள்தான் காமத்தை பெரிய விஷயமாகப் பேசி இங்கே ஒழுக்கவியல் விதிகளை நீட்டி முழங்கிக்கொண்டிருக்கிறார்கள். மானம், மரியாதை என்று உயிரை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஊருக்கு தெரியாமல் செய்வதென்றால் எதையும் ஏற்பவர்களாகவும், ஊருக்குத் தெரிந்தால் அலறுபவர்களாகவும் ஒட்டுமொத்தத்தில் தனக்காக எப்போதும் வாழாதவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள்தான் இன்றைக்கு சூழலை அதிகமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள்( இது ஒரு பொதுமைப்படுத்தல் என்றாலும் பெரும்பான்மை அடிப்படையில் உண்மையென்று கொள்ளத்தக்கதே)

இப்போதைய சூழலில் இந்திய சமூகத்தை மேற்கத்திய வாழ்வியல் முறைகளை தனது உடையிலும், பாவனையிலும் கொண்டு , சிந்தனையில் பழமையான ஒழுக்கவியல் நெறிகளை கொண்டிருக்கும் ஒரு சமூகமென்று சொல்லலாம். மேற்கத்திய உடையை அணிகிற, Fuck, bitch என்று கத்திக்கொண்டிருக்கிற என் தோழியிடம் சென்று ” Will you sleep with me tonight?” என்று கேட்கிறபொழுது ” செருப்பு பிஞ்சிரும்டா நாயே” என்று சொல்வாளேயானால் அது எப்படி மேற்கத்திய சிந்தனையாக இருக்க முடியும்? ஒன்று சரி என்று சொல்லவேண்டும் இல்லையேல் விருப்பமில்லை என்று சொல்லவேண்டும். அதுதானே மேற்கத்திய வாழ்வியல் முறையாக இருக்கமுடியும். காமத்தை விடுங்கள். ஒரு காதலை மிகச்சரியாக நிராகரிக்க அல்லது குழப்பமின்றி ஏற்றுக்கொள்ள எத்தனை பெண்களுக்குத் தெரியும்?

ஒருவருக்கு காதலி (அல்லது காதலன்) இல்லையென்றால் ” உனக்கு ஆள் இல்லையா? வேஸ்ட் ” என்று சொல்லி கெக்கபிக்கே என சிரித்துவிட்டு நகர்ந்துவிடுகிறோம். ஆனால் ஒரு ஆணிற்கு பெண்ணோ அல்லது பெண்ணிற்கு ஆணோ துணையாகக் கிடைக்கவில்லை என்பது எவ்வளவு பரிதாபகரமான விஷயம். ஏறக்குறைய பதிமூன்று வயதிலிருந்து ஏற்படும் உடல் மாறுபாடுகளினால் உருவாகும் உணர்ச்சிகளைத் தீர்த்துக்கொள்ள முப்பதை நெருங்கிவிட்ட பின்பும் எதிர்பாலினத்தின் உடல் கிடைக்கவில்லை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம். மன ரீதியாக, உடல் ரீதியாக ஒருவனை பாதித்து அவனை பாலியல் வெறி கொண்டவனாக மாற்றும் சூழல் அப்பொழுதுதானே உருவாகிறது. பெண் உடல் கண்டறியமுடியாத புதையலாக அவன் முன்னால் இருக்கிறபொழுது அதை எவ்வகையிலேனும் அடைந்துவிடவேண்டும் என்பதுதானே புத்தாண்டுக் கொண்டாடக் கூட்டத்தில் தெரியாத பெண்களின் மார்பகங்களை கசக்குவதாக மாறுவது? தன் குடும்ப உறுப்பினர்களையே பாலியல்கண் கொண்டு காணும் நிலைக்கு தள்ளுவது.

உடலை மிக இயல்பாக எடுத்துக்கொண்டு ஆணின் தேவைகளைப் பெண்ணும், பெண்ணின் தேவைகளை ஆணும் பரஸ்பர உதவிபோல் நிறைவேற்றுவது மேற்கத்திய வாழ்வியல் முறைகளைத் தரவிறக்கும் ஒரு சமூகத்திற்கு மிகவும் இன்றியமையாதது. Public nudity, beach nudity, nude cycle race என்று படுபயங்கரமாக வாழும் European வாழ்வியல் முறைகள் இருக்கும்பொழுது இங்கு பெண்ணுடன் ஆண் பேசுவதே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும்சூழலை மேற்கத்திய கலாச்சாரம் என்று சொல்வதே கேலிக்கூத்து. Sexuality பற்றியும், ஆண்- பெண் உடல் மாறுபாடுகள், உணர்வுகள் பற்றியும், உடல் தேவைகள் பற்றியும் ஆணும் பெண்ணும் தொடர்ந்து உரையாடுவதன் மூலமாக மட்டுமே இங்கு இயல்பாக எதிர்பாலின உடலைக் கருதும் போக்கு ஏற்படும். அதன்பிறகு பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதென்பது எளிதாகும்பொழுது பாலியல் வன்முறைகளும், வன்புணர்வுகளும் குறையும். இந்த மனமாற்றம் என்பது நம்மிடையே எழுந்துவர வேண்டியது. இதற்கு அரசாங்கம் எதுவும் செய்யவேண்டியதில்லை.

அதேநேரத்தில் காதல் கைகூடியவர்களாவது காமத்தைக் கொண்டாட முடிகிறதா என்றால் பார்க்கிலும், பீச்சிலும், தியேட்டரிலும் பயந்துகொண்டுதான் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. அதற்குக்கூட நல்ல சூழல் இங்கில்லை என்பதைத்தவிர வேறு வெட்கக்கேடு ஒன்றுமில்லை. இதற்குத்தான் அரசாங்கம் ஏதாவது செய்யவேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: