முள்ளிவாய்க்கால்: நினைவுகூர்தலில் இருந்து அரசியல் செயற்பாடு நோக்கி…

ninaivuஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பல்வேறு கட்டங்களாக அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை உச்சத்தை அடைந்த காலப்பகுதியாக 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போர் காலப்பகுதியை குறிப்பிடமுடியும்.  இந்தப் போர் முடிவடைந்த நாளாகக் கருதப்படுகின்ற மே 18 இனை இனப்படுகொலை நாளாக நினைவுகூரும் பொருட்டு ஈழத்திலும், உலகின் பல்வேறு பாகங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிகழ்வுகளின் உள்ளடக்கம், அவற்றின் பிரதிநிதித்துவம், அவை ஒருங்கிணைக்கப்படும் விதம் என்பன பற்றிய பல்வேறு விதமான உரையாடல்களும் விவாதங்களும் கடந்த 8 ஆண்டுகளாக எதுவிதக் குறையும் இல்லாமல் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.  அத்தகைய உரையாடல்களுக்கான எல்லாத் தேவைகளும் இருக்கும்படியாக ஈழத்தமிழர்களைப் பிரதிநித்துவப்படுத்துவதாக சொல்கின்ற அனேகக் கட்சிகளும் அமைப்புகளும் ஒற்றைத்தன்மையானவையாகவும் பல்வகைத்தன்மை பற்றி அக்கறைப்படாதவையுமாக இருக்கின்றன.  எனவே,  இந்த நிகழ்வுகள் அமைப்புகளையும் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சுருங்கிவிடாது ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையினை அழுத்தமாகப் பதிவுசெய்வதாகவும், அவர்களின் விடுதலைக்கான தேவையையும் உரிமைகளையும் எடுத்துரைப்பதுடன் அவற்றை வெகுசன மயப்படுத்துவதற்கான முயற்சிகளையும் கொண்டிருப்பதாகவும் அமைவது முக்கியமானது.

நினைவேந்தல்கள் ஏன் அவசியமானவை என்பது பற்றி உரையாட வேண்டியது எமது சமகாலத்தின் தேவைகளில் ஒன்றாக இருக்கின்றது.  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது இனப்படுகொலை என்கிற தீர்மாணம் எடுப்பதுடனோ, உறுதிமொழிகள் எடுப்பதுடனோ கடந்துபோய்விடக் கூடிய ஒன்றல்ல.  அப்படித்தான் அது இருக்குமானால் அது எதுவித அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போவதும் இல்லை.  இன்னும் நேரடியாகச் சொல்லப்போனால் எமது சூழலில் நாம் இனப்படுகொலை, தேசியம், தேசம், அரசு, போர்க்குற்றம், பாசிசம் உள்ளிட்ட பல அரசியல் சொல்லாடல்களை அவற்றுக்கான அர்த்தம் தெரியாமல் வெற்றுச் சொற்களாக, ”லேபிள்களாக” பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றோம் என்பதே கசப்பான உண்மை.  மிக நீண்டகாலமாக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இனத்தைச் சேர்ந்தவர்களான எமது மக்கள் சரியான விதத்தில் அரசியல் மயப்படுத்தப்படவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகின்றது.  ஓர் எளிய உதாரணமாக தேசம் என்பதும் நாடு என்பதும் ஒத்த கருத்துடைய சொற்கள் என்றுதானே சிறுவயதிலேயே படித்தோம்.  அப்படியானால் இரு தேசம், ஒரு நாடு என்பது ஏமாற்றுவேலை தானே என்கிற வாதத்தை அரசியல் அக்கறை கொண்டவர்கள் கூட பேசுவதையும் எழுதுவதையும் அண்மைக்காலத்தில் அவதானித்திருக்கின்றோம்.  இது ஒரு சமூகத்தின் அரசியல் வறுமையையே புலப்படுத்துகின்றது.  அரசியல் சொல்லாடல்கள் பற்றிய சரியான தெளிவின்மையே எதிர்த்தரப்பினரால் கருத்துகளை நீர்த்துப்போகச் செய்வதற்கான காரணியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.  ஓர் உதாரணத்துக்கு இனப்படுகொலை என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்,  இதனை நீர்த்துப்போகவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் எதிர்த்தரப்பு கையாளும் உபாயங்களில் ஒன்று, ஓர் இனத்தையே கொன்றால் தானே இனப்படுகொலை, இலங்கையில் நடந்தது எப்படி இனப்படுகொலையாகும் என்று வாதிடுவது.  இது போன்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வாதங்கள் செல்லுபடியாகவும் அரசியல் சொல்லாடல்களை அவற்றின் நேரடி அர்த்தத்தில் புரிந்துகொண்டு பலவீனப்படுத்தவும் முக்கிய காரணம் எமது சூழலில் இதுபோன்ற கருத்தியல் சார்ந்த விவாதங்களுக்கும் உரையாடல்களுக்கும் எழுத்துகளுக்குமான வெளியை ஊடகங்களும் அறிவுசீவிகளும் தலைமைகளும் முன்னெடுக்காமையே ஆகும்.  இனப்படுகொலை என்பதை எடுத்துக்கொண்டால் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்றும், வெவ்வேறு நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள் பற்றியும் அல்லது இவற்றைக் கேள்வி எழுப்பியவையுமாக கட்டுரைகள் வந்திருக்கின்றனவே அன்றி இனப்படுகொலை என்கிற கருத்தாக்கம் பற்றிய கோட்பாட்டு விளக்கம் தருவதாகவோ, வரலாற்றுப் பின்புலத்தின் இனப்படுகொலை என்கிற கருத்தாக்கத்தை வைத்து விளங்கக் கூடியதாகவோ எந்த நூல்களும் தமிழில் வரவும் இல்லை, முக்கிய நூல்கள் மொழிமாற்றம் செய்யப்படவும் இல்லை.

22468588சில ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலை பற்றி தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருந்தபோது சிறுநூல்களாகவும், பிரசுரங்களாகவும் வழிகாட்டிகளாகவும் ஆங்கிலத்தில் பல்வேறு நூல்களை வாசிக்கக் கூடியதாக இருந்தது.  தமிழில் அப்படி எதுவும் இல்லாதது மக்களை அரசியல் வறுமை கொண்டவர்களாக தொடர்ந்து வைத்திருப்பதுடன் செயற்பாட்டாளர்களையும் செயல்வாதங்களையும் பலவீனமானவையாக மாற்றுகின்றது.  ஓர் உதாரணமாக Jane Springer என்பவர் எழுதிய Genocide : A Groundwork Guide என்கிற சிறுநூலை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.  இந்நூலில் இனப்படுகொலை என்கிற கருத்துருவாக்கத்தின் வரலாற்றையும் அதனை Raphael Lemkin வரைவிலக்கணம் செய்தது முதல் அது தனது முதல் வடிவில் இருந்து எப்படி வெவ்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டும் நீக்கப்பட்டும் எவ்விதம் மாற்றப்பட்டது என்பது பற்றிய விளக்கத்தைத் தருவதோடு இனப்படுகொலை பற்றிய வெவ்வேறு கோட்பாடுகள், இனப்படுகொலையை எதிர்கொள்ளுவதும் தடுப்பதும் பற்றிய முறைகள், வெவ்வேறு நாடுகளில் நடந்த இனப்படுகொலை பற்றிய கால ஒழுங்குப் பட்டியல் என்பன மிக நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  இனப்படுகொலைக்கு எதிரான செயற்பாட்டாளர்களுக்கு என்று வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தினை எவ்வாறு கற்பிப்பது என்கிற கைநூலாகக் கொள்ளத்தக்க சிறு வெளியீடு ஒன்றினையும் இப்புத்தகத்தை வெளியிட்ட Groundwood Books பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தனர்.  இந்த நூலை மொழியாக்கம் செய்வதோ அல்லது இது போன்ற முயற்சிகளோ எமது சூழலில் மிக முக்கியமானவை.  இனப்படுகொலை என்பதை ஒரு முன்னுதாரணமாகக் குறிப்பிட்டாலும் பாசிசம், குழந்தைப் போராளிகள், தேசியம் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இவ்வாறான கோட்பாட்டு நூல்கள் தமிழ் மொழியாக்கம் செய்யப்படுவதும் அவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதும் மிக முக்கியமானது,  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போன்றவற்றோடு நின்றுவிடாது இது போன்ற செயற்திட்டங்களையும் முறைமையாகச் செய்வதற்கும் சங்கற்பம் பூணவேண்டியது முக்கியமானது.

மக்களை அரசியல் மயப்படுத்துவது என்பதுவும் எமது சூழலில் தேய்வழக்காகிவிட்டது என்றே சொல்லவேண்டும்.  எமது சூழலில் தகவல்களையும் சம்பவங்களையும் நபர்களையும் குறித்துப் பேசுவது என்பதே அரசியல் பேசுவது என்பதாகக் கருதப்பட்டு வருகின்ற ஒரு அவலநிலையே நிலவுகின்றது.  இதற்கு மாற்றாக, இவற்றுக்குப் பின்னால் இருக்கக் கூடிய கருத்துநிலைகளைப் பற்றிப் பேசுவது நோக்கி நாம் நகரவேண்டும்.  ஊடகங்களும் கலை இலக்கியச் செயற்பாட்டாளர்களும் விசேட கவனத்துடன் இவற்றில் ஈடுபடவேண்டும்.  ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இருந்து வெளிவரக்கூடிய பல்வேறு பத்திரிகைகளும் வார இதழ்களும் செய்திகளை வெளியிடுவது (News Reporting என்ற அர்த்தத்தில்), அபிப்பிராயங்களை வெளியிடுவது, பேச்சுக்களை எழுத்து வடிவில் பிரசுரிப்பது, வெற்று அனுமானங்களை ஆய்வுகளாக வெளியிடுவது என்பதாக இருக்கின்றனரே தவிர இவற்றை கருத்தியல் பின்புலத்துடன் அணுகி ஆய்வு நோக்குடன் அணுகுகின்ற ஒரு மரபினை மறந்துவிட்டதாகவே தெரிகின்றது.  அறிவுசீவிகளும் ஊடகங்களும் அரசியல் தலைமைகளும் இழைக்கின்ற இந்தத் தவறானது ஒட்டுமொத்த சமூகத்தையே அரசியல் ரீதியில் வலுவிலர் ஆக்குகின்றது.  அதுபோலவே கலை இலக்கியச் செயற்பாட்டாளர்களும் சமூகப் பிரச்சனைகளையும் சம காலத்தில் மக்கள் எதிர்கொள்ளுகின்ற ஒடுக்குமுறைகளையும் நெருக்கடிகளையும் கலை இலக்கியங்களூடாக வெளிப்படுத்தவேண்டியது அவசியமாகும்.  கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் சமூகம் பற்றிய புரிதலும் அக்கறையும் கொண்டவர்களாக இருக்கவேண்டியதுடன் தமது படைப்புக்களிலும் அவற்றை வெளிப்படுத்தவேண்டியது அவசியமாகின்றது.  அதேநேரத்தில் அப்படி வெளிப்படுத்துவது என்பது அழகியல் தன்மை கொண்டதாயும் உயிர்த்துடிப்புள்ளதாயும் இருக்கும்போதே அவை கலையாக மாறுகின்றன என்கிற புரிதலும் அவர்களுக்கு இருக்கவேண்டும்.  குறிப்பாக ஓவியங்கள், புகைப்படங்கள், வில்லுப்பாட்டு, கூத்து போன்ற கலைவடிவங்களூடாக நாம் அரசியலையும் இனப்படுகொலை பற்றிய பதிவுகளையும் மேற்கொள்ளுவதே முக்கியமான செயற்பாடாகும்.  இன்றைய சூழலில் தமது வரலாற்றையும் வரலாற்றில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஒடுக்குமுறை, இனப்படுகொலை போன்றவற்றையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்வதும் மிக கடினமானதாக இருக்கின்றது.  எம்மைவிட மிகப் பெரும் ஊடக, பொருளாதார பின்னணிகள் இருந்தபோதும் கூட யூதர்களால் இளைய தலைமுறையினரிடம் யூத இனப்படுகொலை பற்றிக் கூட இளந்தலைமுறை யூதர்களிடம் சரியாகக் கொண்டுபோய்ச் சேர்க்கமுடியவில்லை என்றே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.  எனவே நினைவேந்தல்கள் செய்யப்படுகின்ற அதே சமநேரத்தில் நாம் நினைவழிப்புகளுக்கு எதிராகவும் நினைவழிவுகளுக்கு எதிராகவுமாகச் சேர்ந்தே செயற்படவேண்டி இருக்கின்றது.  திரைப்படங்கள், ஓவியம், கூத்து உள்ளிட்ட ஆற்றுகைகள், இலக்கியம் போன்றவற்றினூடாக நாம் இந்த நினைவுகளைப் பதிவுசெய்வதானது ஒரு விதத்தில் நினைவழிவுகளுக்கு எதிரான செயற்பாடாகவும் ஆவணப்படுத்தலாகவும் அமையும்.  எமது சூழலில் கூட ஈழப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் சேரன், ஜெயபாலன் எழுதிய கவிதைகளும் மரணத்தில் வாழ்வோம் போன்ற தொகுப்புகளும் பின்னர் யாழ்ப்பாண வெளியேற்றம் குறித்து நிலாந்தன் எழுதிய யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே, பா. அகிலனின் இரண்டு கவிதைத் தொகுதிகள், முள்ளிவாய்க்கால் போரின் ஆரம்ப நாட்களில் வெளியான தீபச்செல்வனின் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை, போரை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருந்த எஸ்போஸின் எழுத்துக்கள் த. அகிலனின் மரணத்தின் வாசனை, வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் நினைவுக் குறிப்புகள், போரையும், இயக்கங்களின் செயற்பாடுகளையும் விமர்சித்து எழுதப்பட்ட இலக்கியங்ககள்,  இயக்கங்கள் வெளியிட்ட இலக்கியங்கள், திரைப்படங்கள் என்று எண்ணிறைந்த முன்னுதாரணங்களைச் சொல்லமுடியும்.

இங்கே ஒரு விடயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.  இனப்படுகொலை என்பது ஒரே தடவையில் ஒரு குறிக்கப்பட்ட பிரதேசத்தில் நடப்பதல்ல.  இனப்படுகொலை கண்காணிப்பு நிறுவனம் இனப்படுகொலை என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட, ஒன்று மற்றதைப் பலப்படுத்துகின்ற எட்டுக் கட்டங்களில் நடைபெறுகின்றதாகக் குறிப்பிடுவதுடன் இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பதற்கும் தடுப்பதற்குமான செயற்பாடுகளும் இந்த எட்டுக் கட்டங்களையும் எதிர்கொள்வதாக அமைகின்றது.  ஈழத்துச் சூழலில் இத்தகைய வெவ்வேறு படிகளும் சம்பவங்களும் ஒன்று திரண்ட உச்சகட்ட நிகழ்வாக நாம் முள்ளிவாய்க்காலைக் கருதலாம்; அதேநேரம் இந்த வெவ்வேறு படிநிலைகளும் எப்படி ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்பட்டன, முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும் எப்படி நேரடியாகவும் நுட்பமாகவும் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன என்பதையும் நாம் பதிவுசெய்யவும் கலை இலக்கியச் செயற்பாடுகளூடாக வெளிப்படுத்த வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.  அதேநேரத்தில் கடந்த காலங்களில் தமிழர் தரப்பினால் இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு, வன்முறைகள் பற்றிய புரிதலும் குற்ற உணர்வும் பொறுப்புக்கூறலும் எமக்கு இருக்கவேண்டியதும் அவசியமானது.  ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற இனமொன்று இன்னொரு ஒடுக்குமுறையை தானே செய்கின்றபோது அது தனது போராட்டத்துக்கான எல்லா தார்மீக நியாயங்களையும் இழந்துவிடுகின்றது!

இனப்படுகொலைக்கான நியாயத்தைக் கோரும்போது போரினால் காணாமற்போன, காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் பற்றியும், அரசியல் கைதிகள் பற்றியும் விபரங்கள் திரட்டுவதுடன் அவர்கள் பற்றிய இற்றைப்படுத்திய பதிவுகளை மேற்கொள்வது அவசியமானது.  அதுபோலவே போரில் கொல்லப்பட்ட மக்கள், உடல் ரீதியான வன்முறைகள், பாலியல் வன்புணர்வுகள்,  அழிக்கப்பட்ட சொத்துக்கள், கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குடியேற்றங்கள் என்பன பற்றிய விபரங்களைத் திரட்டுவதும் ஆவணங்களைப் பதிவுசெய்வதும் முக்கியமானது.  முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்ட மக்கள் தொகை உட்பட எம்மிடம் நிறைய விபரங்கள் சரியான முறையில் பதிவுசெய்யப்படாமல் இருப்பது முக்கியமான பலவீனம் என்றே சொல்லவேண்டும்.

எம்மவர்கள் மத்தியில் நீண்டகாலமாக எமது வடுக்களைப் பேசுவது முரண்களையும் பிளவுகளையும் அதிகரிக்கும்; எனவே பழையதை மறந்துவிட்டு பகைமறப்பினை நோக்கிச் செல்வோம் என்கிற குரல்கள் நல்லிணக்கத்தின் குரல்களாக ஒலிக்கின்றன.  இந்த விடயத்தில் நாம், ஒடுக்கும் தரப்பினர் / ஒடுக்கிய தரப்பினரே நல்லிணக்கத்துக்கான முதல் சமிக்ஞைகளையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தவேண்டும் என்பதுவும், மாறாக தோற்ற / ஒடுக்கப்படும் தரப்பு பகை மறப்பு என்ற பெயரில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பேசுவதையும் தனது உரிமைகளுக்கும் நியாயத்துக்குமாகவும் குரலெழுப்புவதைத் தவிர்ப்பதும் முழுமையான சரணாகதியாகவுமே முடியும் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.  பேரினவாதத்தின் தரப்பில் இருந்து மிகக் குறைவானோர் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கின்றனர் என்பதை முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டி அதனை பேரினவாதத்தின் புதிய குரலாக போலி நம்பிக்கைகளை விதைப்பது மிகப் பெரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாகவே அமையும்.  எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தைப் புனரமைத்தையும் கிளிநொச்சி மத்திய கல்லூரி, மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ளிட்ட பல்வேறு நினைவுச்சின்னங்களை தேச ஒற்றுமை, நல்லிணக்கம் என்று கூறிக்கொண்டு அகற்றி வருவதையும் செய்யும் அதே அரச தரப்புத்தன் தமிழீழ விடுதலைப் புலிகள் தலதா மாளிகையில் நடத்திய குண்டுத் தாக்குதல் பற்றி கிட்டத்தட்ட ஒரு முழுமண்டபம் அளவுக்கு பல கோணங்களிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விவரணங்கள் ஊடாகவும் புதிதாக அமைக்கப்பட்ட போர் வெற்றியை கூறுகின்ற, தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை பதிவுசெய்கின்ற நினைவுச்சின்னங்களை அமைத்து வருகின்றது என்பதையும் நாம் கருத்திற்கொள்வது அவசியமானதாகின்றது. எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒருங்கிணைப்பதுடன் அதனை ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்கிற தீர்மாணங்கள் நிறைவேற்றுவதுடன் மாத்திரம் நின்றுவிடாது இனப்படுகொலை நினைவுநாள் என்பதனை ஒரு அரசியற்செயற்பாடாகவும் மாற்றவேண்டும்.  அதுவே ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஈழத்தமிழர் எதிர்கொள்ளக்கூடிய போராட்டத்தின் முக்கிய படியாக அமையும்.


இக்கட்டுரை மே 2017 தாய்வீடு பத்திரிகையில் இடம்பெற்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s