முப்பால் காணொலி

Captureஅண்மையில் அதிகம் பாதித்த புத்தகம் என்று அடிக்கடி எழுதுவது சலிப்பைத் தந்தாலும், அண்மைக்காலமாக வாசித்த அனேகம் புத்தகங்கள் மனதளவில் பாதிப்பைத் தந்தனவாகவே இருக்கின்றன. “லிவிங் ஸ்மைல்” வித்யாவின் “நான் வித்யா”வை வாசித்தது அரவாணிகள் பற்றி இன்னும் அதிகம் வாசிக்கவேண்டும், அவர்கள் வாழ்க்கையைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.

அந்த வகையில் ரேவதி தொகுத்த “உணர்வும் உருவமும்”, மற்றும் மகாராசன் தொகுத்த “அரவாணிகள்; உடலியல் – உளவியல் -வாழ்வியல்” என்ற இரண்டு புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்தேன். ப்ரியா பாபு எழுதிய “மூன்றாம் பாலின் முகம்” நாவலை இப்போது வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.  இதில் “அரவாணிகள்; உடலியல் – உளவியல் -வாழ்வியல்” தொகுப்பில் கிட்டத்தட்ட அரவாணிகள் பற்றித் தமிழில் வந்த அனேகமான எல்லாக் கட்டுரைகள் பற்றியும், நாவல்கள் பற்றியும், சிறு கதைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளதோடு, அரவாணிகள் பற்றிய சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், இலக்கியவாதிகள் என்று பலதரப்பட்டவர்களின் கருத்துக்களையும் பதிந்து உள்ளார்கள். அலிகள், அரவாணிகள், திருநங்கைகள் என்று பல்வேறு பெயராலும் இவர்கள் குறிபிடப்பட்டு வருகிறார்கள்.
முதலில் இந்தப் பெயர் குழப்பமே எம்மில் நிறையப் பேருக்குத் இன்றுவரை குழப்பமாகவுள்ளது. அலிகள் என்றே இவர்கள் அழைக்கப்பட்டு வந்துள்ளார்கள். சமூகத்தின் எல்லா மட்டத்தாலும் ஒதுக்கப்பட்டு, அலி என்பதே ஒரு வசைச் சொல் போலாகிவிட்ட நிலையில், 1998ல் விழுப்புரத்தில் மருத்துவர் மனோரமா ஒழுங்கு செய்திருந்த எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவி என்பவரே, மகாபாரதத்தில் வருகின்ற அரவான் கதையைச் சுட்டிக்காட்டி, இனிமேல் அரவாணி என்றே இவர்கள் அழைக்கப்படவேண்டும் என்று அறிவித்தார்.
அதன் பின்னர், எந்த விதமான ஜாதி மத வேறுபாடுகளும் காட்டாமல் ஒன்று பட்ட ஒரே சமூகமாக அரவாணிகள் வாழ்கின்ற போது இந்து மதம் சார்ந்த அரவாணி என்கிற பெயர் பாவிக்கப்படுவது முறையாக இருக்காது என்ற விவாதம் வந்த போது அதற்கு மாற்றாக மூன்றாம் பாலினர் என்ற சொல் முன்மொழியப்படுகிறது. அதே நேரம் நர்த்தகி நடராஜ் போன்றவர்கள் திருநங்கை என்ற பெயரையும், அரவாணிகளுக்கான இந்திய அளவினாலான முதலாவது அமைப்பான “தா (THAA)”வினைத் தோற்றுவித்த ஆஷா பாரதி போன்றவர்கள் பாலியல் திரிந்தவர்கள் என்ற பெயரையும் முன்வைக்கின்றனர்.
சமூகத்தின் முன் மாதிரிகளாக இருக்கவேண்டிய திரைப்படத் துறையினர் மூன்றாம் பாலினரைச் சித்திரிக்கும் விதம் பற்றிய இவர்களின் நியாயமான கோபம் இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. முன்பு வேட்டையாடு விளையாடு திரைப்படம் வெளியான போது லிவிங் ஸ்மைல் வித்யா ஜூனியர் விகடனில் அத் திரைப்படத்தில் மூன்றாம் பாலினர் காட்டப்பட்ட விதம் பற்றி காட்டமான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.

உண்மையில் பெரும்பாலான திரைப்படங்களில் மூன்றாம் பாலினர் வரும் காட்சிகள் எல்லாம் அவர்களைக் கேவலமாக சித்திரிப்பதாகவே இருக்கின்றன. அதிலும் இதில் ஒரு கட்டுரையில் “திரைப்படங்களில் பத்து கேவலமான காவல் துறையினரைக் காட்டினால் ஒரு நல்ல காவல் துறையினரையாவது காட்டுவார்கள், பத்து கேவலமான அரசியல்வாதிகளைக் காட்டினால் ஒரு நல்ல அரசியல்வாதியையாவது காட்டுவார்கள். இது பொதுவாக இருக்கின்ற ஒரு வழமை. அப்படி இருக்கின்ற போது ஏன் மூன்றாம் பாலினரை மாத்திரம் ஏன் ஏன் முழுக்க முழுக்க கேவலமாகவே சித்திகரிக்கின்றனர்” என்ற நியாயமான கேள்வி ஒன்றை முன்வைக்கின்றார். இது பற்றி பெரும்பாலானவர்கள் – இதை எழுதி கொண்டிருக்கும் நான் உட்பட – சிந்திப்பதேயில்லைத் தானே. பம்பாய் திரைப்படத்தில் தப்பி ஓடும் சிறுவனை ஒரு அரவாணி காப்பாற்றுவது போல காட்சி அமைத்தார் என்பதற்காகவே மணிரத்னத்துக்கு நன்றி சொல்லும் அளவுக்கு தமிழ்த் திரைப்படங்களில் அரவாணிகள் பற்றிய சித்திகரிப்புகள் இருக்கின்றன.
அது போல மூன்றாம் பாலினரை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து க. சமுத்திரம் எழுதிய “வாடாமல்லி” நாவல் பற்றியும் நிறையப் பேர் சொல்லி இருக்கின்றனர். நான் இது வரை அந்தப் புத்தகத்தை வாசிக்கவில்லை. அதே நேரம் “மதி எனும் மனிதனின் மரணம் குறித்து” என்ற இரா. நடராசன் எழுதிய சிறுகதை எல்லாரும் வாசிக்க வேண்டிய ஒன்று. இந்த தொகுப்பில் கி.ரா எழுதிய இரண்டு சிறுகதைகள் இருக்கின்றன. அந்தக் கதைகளை கி.ரா என்ன காலப்பகுதியில் எழுதினார், அவர் எழுதியபோது அரவாணிகள் பற்றிய விழிப்புணர்வு எந்தளவு இருந்தது என்று தெரியாது. ஆனால் இரண்டு கதைகளிலும், கிரா அரவாணிக் கதாபாத்திரங்களை கடைசிவரை அவன் என்றும் அது என்றுமே குறிப்பிடுகிறார். கதையின் இறுதி பகுதியிலாவது அவள் என்ற பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாம்; ஆனபோதும் கிரா போன்ற முக்கியமான எழுத்தாளர்களின் அரவாணிகளின் பிரச்சனைகளை, வாழ்க்கையை சரியான புரிதலுடன் எழுதுவது முக்கியமானதென்றே நினைக்கிறேன்.

பிற்குறிப்பு:

2010 இல் நான் எழுதிய மூன்றாம் பாலினர் பாலினர் பற்றிய சில வாசிப்புகள் உயிர்மை மற்றும் கருத்து கந்தசாமிகள் என்கிற பத்தியின் ஒருபாகத்தினை இப்பதிவில் பயன்படுத்தியுள்ளேன்; இன்று இது தவறல்ல இயல்பென்று… என்ற நான் பார்த்த காணொலியும் அதனை மீண்டும் பரவலாக்கவேண்டும் என்ற தேவையும் இதற்குக் காரணமாகும்
இந்தக் காணொலியை தயாரித்தவர்களுக்கும் அதற்கான ஆதரவைத் தந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: