பொதுவெளியில் இயங்கிவருகின்ற பெண்களுக்கு எதிரான வன்மமும் அவதூறுகளும் தாக்குதல்களும் அதிகரித்துச் செல்வதையும் அவை தொழினுட்பத்தின் சகல சாத்தியங்களையும் மிகத் தவறான நோக்குடன் பயன்படுத்துவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதேநேரம் இது நாளாந்த வாழ்விலும், வேலைத்தளம் மற்றும் அனைத்துப் பொதுவெளிகளிலும் பெண்கள் ஒட்டுமொத்தமாக எதிர்நோக்குகின்ற பிரச்சனையாகவும் இருக்கின்றது. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற இதுபோன்ற வன்முறைகளைப் போலவே, இந்த வன்முறைகளுக்கான காரணங்களை ஆராய்கின்றோம் என்பதன் பெயரில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றத்துக்காக சூழலை உருவாக்கினார்கள் என்பதும் குற்ற உணர்ச்சியை நோக்கி நகர்த்துவதும் அந்த குற்றங்களை இழைப்பவர்களின் பார்வையை ஆராய்கின்றோம் என்பதன் பெயரில் குற்றங்களை “சாதாரணமாக்கும்” நடவடிக்கைகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டியிருக்கின்றது. இந்தத் தாக்குதல்களுக்கும் அவற்றை நியாயப்படுத்தும் அல்லது சாதாரணமாக்கும் மனநிலைக்கும் பின்னணியில் பால்வாதமே தொழிற்படுகின்றது என்பதை புரிந்துகொள்வதும் அந்தப் பால்வாதத்தை எதிர்கொள்வது பற்றி உரையாடல்களை ஆரம்பிப்பதுமே இதனை எதிர்கொள்வதற்கான உடனடித்தேவை என்கிற கரிசனையின் அடிப்படையில் சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் பகுபதம் சார்பில் ரொரன்றோவில் ஒருங்கமைக்கப்பட்டிருந்த நிகழ்வில் ரகுமான் ஜான் அவர்கள் அன்றாட பால்வாதம் என்கிற உரையினை நிகழ்த்தியிருந்தார். பால்வாதமானது எப்படி எமது சிந்தனைமுறைகளில் புரையோடிப் போயிருக்கின்றது என்பது பற்றியும் அது நடைமுறை வாழ்வில் எப்படி வெளிப்படுகின்றது என்பது பற்றியதுமாக அவரது உரை அமைந்திருந்தது. அன்றாட பால்வாதம் என்கிற அவரது அன்றைய உரையின் பொருளினை இன்னும் புரிந்துகொள்ளவும் அதன் தீவிரத்தன்மை பற்றி வலியுறுத்தவும் Everyday Sexism என்கிற புத்தகம் மற்றும் திட்டம் பற்றிய அறிமுகம் ஒன்றினைச் செய்வது முக்கியமானது என்று கருதுகின்றேன்.
இங்கிலாந்தைச் சேர்ந்த லோரா பேட்ஸ் (Laura Bates) என்பவரே Everyday Sexism (அன்றாட பால்வாதம்) என்கிற திட்டத்தைத் தொடக்கிவைத்தவர். அன்றாட பால்வாதம் என்கிற இவரது நூலைப் படிக்கக் கிடைத்தது; அதில் இவர் சில சம்பவங்களை நினைவுகூர்கின்றார். பல்கலைக்கழகத்தில் பெண்களும் கல்விகற்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்ட நாளை நினைவுகூர்ந்து ஒவ்வொரு வருடமும் அதே தினமும் கையில் கறுப்புப்பட்டி அணிந்துவரும் பல்கலைக்கழக மேற்பார்வையாளர், பகுதி நேர வேலைக்குச் சென்றபோது அங்கு ஏற்கனவே வேலை பார்த்த ஒருவரால் முதல் நாளே உடலுறவுக்கு அழைக்கப்பட்டமை, பேருந்திலும், தெருக்களிலும் வார்த்தைகளாலும் உடல் ரீதியாகவும் இடம்பெற்ற தாக்குதல்கள் உள்ளிட்ட சில சம்பவங்களை நினைவுகூரும் இவர், ஏன் இந்தச் சம்பவங்கள் தனக்குப் பிரச்சனைக்குரியனவாகத் தெரியவில்லை என்று யோசித்துப்பார்க்கின்றார். இதுபோன்ற சம்பவங்கள் புதிதாக இல்லாததாலேயே அவை பற்றித் தன்னால் மேற்கொண்டு சிந்திக்க முடியவில்லை என்று புரிந்துகொள்கின்றார். இத்தகைய சம்பவங்கள் அன்றாட வாழ்க்கையிலும் பெண்ணாக இருப்பதிலும் ஒரு பகுதியானவை என்ற சிந்தனைமுறைக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருப்பதாலேயே தனக்கும் இவை வழமையானவை என்று தோன்றியிருக்கலாம் என்று யோசிக்கின்றார்.
அதற்குப் பிறகு உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் தனக்குத் தெரிந்த பெண்களைச் சந்திக்கும்போதெல்லாம் இப்படியான சம்பவங்களை அவர்களும் எதிர்கொண்டுள்ளனரா என்று கேட்கத் தொடங்குகின்றார். அப்படி 20-30 வரையான எண்ணிக்கையிலான பெண்களைக் கேட்கின்றபோது அவர்களில் ஓரிருவராவது அவர்களது வாழ்வில் எப்போதாவது இடம்பெற்ற இத்தகைய ஒரு சம்பவத்தினை நினைவுகூரக்கூடும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
ஆனால் அவர் இதுகுறித்து உரையாடிய அனைத்துப் பெண்களுமே இத்தகைய ஒரு கசப்பான அனுபவத்தினை லோராவுடன் பகிர்ந்துகொள்ளுகின்றனர். அதிலும் எப்போதாவது ஒரு முறை நிகழ்ந்ததை நினைவுக்கூர்வார்கள் என்று எதிர்பார்த்த லோராவுக்கு அவர்கள் அனைவருமே முந்தைய வாரமோ, முதல்நாளோ, அல்லது அன்றோ இவ்வாறான ஒரு சம்பவம் நிகழ்ந்ததைப் பற்றிப் பகிர்ந்தது இன்னும் ஆச்சரியமளிக்கின்றது. இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணமே பால்வாதம் என்று உறுதியாகக் கருதிய லோரா தொடர்ந்து உரையாடும்போது இன்னும் இன்னும் பரவலாகவும் நுட்பமாகவும் எவ்வாறு பால்வாதம் தொழிற்படுகின்றது என்றும் உணரத் தொடங்குகின்றார். அதேநேரம் இதனைப் பற்றிப் பிறரிடம் பேசும்போது பால்வாதம் இப்போது நடைமுறையில் இல்லை, பெண்களுக்கு இப்போது சம உரிமை கிடைத்துவிட்டது போன்ற பதில்களே அவருக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக இங்கிலாந்தில் வாழ்கின்ற அவருக்கு மேற்கத்தையை நாட்டில் வாழும் பெண்கள் கொடுத்துவைத்தவர்கள், மற்றைய நாடுகளில் பெண்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சனைகளைப் பற்றி சிந்தியுங்கள் என்கிற அறிவுரைகளும் கிடைக்கின்றன. பால்வாதம் பற்றியும் அது நடைமுறையில் தொழிற்படும் விதம் பற்றியும் ஏற்றுக்கொள்ளாமல், அப்படி ஒன்று இல்லை என்று கூறியே அதைக் கடந்துபோகின்ற போக்கே ஆண்களிடம் மட்டுமல்லாமல் பெண்களிடமும் இருக்கின்றது என்பதை அவர் புரிந்துகொள்கின்றார். எனினும் தனது நிலைப்பாட்டை இன்னும் உறுதிப்படுத்துகின்ற நோக்கத்துடன் பொதுத்துறையில் இருக்கின்ற பெண்கள் பற்றிய புள்ளிவிபரங்களையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய புள்ளிவிபரங்களையும் அவர் பார்வையிடுகின்றார். அது அவரை அவரது நிலைப்பாட்டில் இன்னும் உறுதியானவராக்குகின்றது.
பால்வாதம் என்பது ஒரேயடியாகத் தீர்க்கக்கூடிய பிரச்சனை என்று தான் ஒருபோதும் சிந்திக்கவில்லை என்றும், அதேநேரம், பால்வாதம் இருப்பதையே பெரும்பான்மையானவர்கள் மறுக்கின்ற சூழலில் பால்வாதத்தினை எதிர்கொள்வதற்கான முயற்சிகளைக் கூட சரியாக ஆரம்பிக்கமுடியாது என்றும் லோரா குறிப்பிடுகின்றார். எனவே இயன்றவரை இவ்வாறு பாதிக்கப்படுகின்ற அனைத்துப் பெண்களின் கதைகளையும் ஒரே தளத்தில் கொண்டுவருவதன் மூலம் அதன் தீவிரத்தன்மையை உணர்த்த முடியும் என்றும் அதன்மூலம் பால்வாதம் தீர்க்கவேண்டிய ஒரு பிரச்சனை என்று மக்களை விழிப்படையைச் செய்யலாம் என்றும் அவர் திட்டமிடுகின்றார். அந்த நோக்குடன் ஏப்ரல் 2012 இல் அவர் ஒரு வலைத்தளத்தை ஆரம்பிக்கின்றார். அதில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ”கதைகளை” அங்கே பகிரலாம் என்றும் அதனை நேரடியாகப் பாதிக்கப்படாதவர்கள் வாசிப்பதன் மூலம் நடைமுறையில் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதும் அவரது நோக்கம். அவ்வாறு அவர் உருவாக்கிய இணையத்தளமே https://everydaysexism.com/ என்பதாகும்.
“உங்கள் கதைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பால்வாதம் இன்றும் நிலவுகின்றது என்றும் பெண்கள் நாளாந்தம் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும் இது உரையாடப்படவேண்டிய மிகமுக்கியமான பிரச்சனை என்றும் உலகிற்கு உறுதிப்படுத்தலாம்”
என்பதை நோக்காகக் கொண்டு இந்த இணையத்தளம் இயங்குகின்றது. அவ்வாறு பகிரப்பட்ட கதைகளைத் தொகுத்து புள்ளிவிபரங்கள், விளக்கங்கள், சமகால நடப்புச் செய்திகள், கருத்துநிலை உரையாடல்கள் என்பவற்றுடன் இணைத்து எவ்ரிடே செக்சிசம் என்கிற நூலாகவும் 2014 இல் வெளியாகியிருக்கின்றது. இந்த நூலினைப் படித்ததன் வாயிலாகவே இந்தத் திட்டம் பற்றிய அறிமுகமும் எனக்குக் கிட்டியது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பால்வாதம் சார்ந்த சில கருத்துகளையும் அவை தொழிற்படும் தன்மைகளையும் பார்ப்போம்
- பால்வாதம் தொடர்பாகவும் பெண்ணுரிமை பற்றியும் பேசுகின்ற பெண்களை குடும்பத்துக்குப் பொருத்தமற்றவர்கள் என்பது
- பால்வாதம் தொடர்பாகவும் பெண்ணுரிமை பற்றியும் பேசுகின்ற பெண்களை நகைச்சுவை உணர்வில்லாதவர்கள் என்கிற முன்னனுமாணம்
- பால்வாதம் தொடர்பாகவும் பெண்ணுரிமை பற்றியும் பேசுகின்றவர்களை எதிர்மறைச் சிந்தனையாளர்கள் என்பது
- எமது நாளாந்தப் பேச்சில் இருக்கின்ற பால்வாதம் சார்ந்த சொற்கள்
- நகைச்சுவை என்ற பெயரில் பாலியல் ரீதியான வர்ணனைகளும் கேலிப்பேச்சுகளும்
- திரைப்படம் உள்ளிட்ட கலை இலக்கிய வடிவங்களிலும் ஊடகங்களிபும் பிரக்ஞையில்லாமல் பெண்கள் குறித்த சித்திகரிப்பும் பாத்திர உருவாக்கமும்
- பாதிக்கப்படுகின்றவர்களையே குற்றம் சாட்டுவதும் குற்ற உணர்வுக்குள்ளாக்குவதுமான அணுகுமுறை (ஆடைகள் குறித்த பேச்சு, இரவில் பெண்கள் வெளியில் செல்வதை விமர்சிப்பது)
- டேட்டிங் வன்முறை என்று சொல்லப்படுகின்ற வன்முறைகள்
- பெண்களால் இவற்றைத் தான் செய்யமுடியும் என்கிற முற்கற்பிதமும் பொதுவெளியில் பெண்களின் சாதனைகளையும் செயற்பாடுகளையும் பால்வாதத்தின் அடிப்படையில் விமர்சித்தல்
- குறிப்பாக அரசியலில் ஈடுபடுகின்ற பெண்கள் மீதான பால்வாதத் தாக்குதல்களும் கேலிப்பேச்சுக்களும். இது தொடர்பாக இந்த நூலின் இரண்டாம் அத்தியாயம் மிக விளக்கமாக முன்வைக்கின்றது.
- பெண்கள் பற்றியும் பெண்ணுடல் பற்றியதுமான கட்டமைப்புகளும் அவற்றின் அடிப்படையிலான தாக்குதல்களும்
- தனிப்பட்ட படங்கள், உரையாடல்கள், கடிதங்கள் என்பவற்றை வெளியிடுவதும் அவற்றின் மூலமாக நிகழ்த்தப்படும் தாக்குதல்களும்
- கல்வித்துறையில் இருக்கின்ற பால்வாதம் சார்ந்த பிரச்சனைகள் – பாடங்களின் தேர்விலும், வழங்கப்படும் ஆலோசனைகளிலும் உள்ளடங்கலாக
உண்மையில் இந்த நூலைப் படித்தபோது எத்தனையோ விதமான பால்வாதத் தாக்குதல்களை சர்வ சாதாரணமாக இதுவரை சிந்திக்கும்படி எமது சிந்தனை பயிற்றப்பட்டுள்ளது என்கிற உணர்வே மேலோங்கி நின்றது. ஓர் ஆணாக எனக்கிருக்கின்ற சலுகைகளும் சமூகப் பாதுகாப்பும் நிச்சயம் இந்த சிந்தனை முறையில் தாக்கம் செலுத்தியிருக்கலாம். ஆயினும் பால்வாதம் என்பது தொழினுட்பத்தின் துணையையும் எடுத்துக்கொண்டு மிக நுட்பமாகவும் அபாயகரமாகவும் தொழிற்படுகின்ற இன்றைய சமூகச் சூழலில் இந்த உரையாடல்கள் மூலமே பால்வாதத்திற்கு எதிரான சிந்தனையையும் வேலைத்திட்டங்களையும் கட்டியெழுப்ப முடியும் என்று நான் நம்புகின்றேன். Everyday Sexism என்கிற நூலையும் செயற்திட்டத்தையும் அறிமுகப்படுத்தியதும் கூட அதனூடாக எமது சமூகத்திலும் இடம்பெறுகின்ற பெண்களுக்கெதிரான தாக்குதல்கள், பால்வாதத்தின் தொழிற்பாடு என்பன பற்றிய உரையாடல்களை நாமும் கட்டுரைகளாகவும், கலை இலக்கிய வெளிப்பாடுகள் ஊடாகவும் ஏற்படுத்துவதன் மூலம் எமது சமூகத்திலும் பால்வாதம் வலுவாக இருக்கின்றது என்பதையும் அது பெண்களைக்கு எதிரானதாக இருப்பதோடு மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமான சமூகம் ஒன்றினைக் கட்டியெழுப்புவதற்கும் தடையாக இருக்கின்றது அது கூடுதல் கவனமெடுத்து உரையாடவேண்டிய மிகத் தீவிரமான பிரச்சனை என்பதையும் மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லவேண்டும் என்ற அக்கறையின் பொருட்டே.
- The Guardian இல் வெளியான லோரா பேட்சின் நேர்காணல் https://www.theguardian.com/lifeandstyle/2017/apr/17/what-i-have-learned-from-five-years-of-everyday-sexism
- இணையத்தள முகவரி: https://everydaysexism.com/
- ட்வீற்றர் பக்கம்: https://twitter.com/EverydaySexism
- முகநூல் பக்கம்: https://www.facebook.com/EverydaySexismProject/
- புத்தகம் பற்றிய விபரம் Everyday sexism. London: Simon & Schuster.ISBN 9781471131578
- இக்கட்டுரை ஜூன் மாத தாய்வீடு பத்திரிகையில் வெளியானது.
Leave a Reply