ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ஒவ்வொரு மாதமும் கடைசிக் சனிக்கிழமைகளில் ஒழுங்குசெய்கின்ற கூட்டங்களிற்கு இயன்றவரை போய்விடுவதை வழமையாகக் கொண்டிருக்கின்றேன். இந்த முயற்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை கிட்டத்தட்ட 3 வருடங்களாக எந்த ஒரு மாதமும் தடைப்படாமல் ஒவ்வொரு மாதமும் கடைசிச் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 7 மணிவரை இடம்பெறும் இந்தக் கூட்டங்கள் முக்கியமானவையாகவே தோன்றுகின்றன. சில கூட்டங்களில் மிகவும் மேலோட்டமான தன்மைகளிலான அலசல்கள் இருந்தாலும் கூட சரியான திட்டமிடலுடனும் ஒழுங்குடனும் பொறுப்புணர்வுடன் கட்டுரைகள் தயாரிக்கப்பட்டு வாசிக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இடம்பெறும் இந்தக் கூட்டங்கள் ஆக்கபூர்வமானவை என்றே கருதுகின்றேன். இதனை ஒருங்கமைப்பவர்கள் என்ற வகையில் பேராசிரியர் நா. சுப்ரமணியன், மருத்துவர் லம்போதரன், எழுத்தாளர் அகில் சம்பா ஆகியோர் நல்லதோர் பணியாற்றிவருகின்றார்கள்.
ஜூலை மாதக் கூட்டம் மகாவம்சம் – பல்கோணப் பார்வை என்கிற தலைப்பின் கீழ் இடம்பெற்றது. அதில் பின்வருமாறு உரைகள் இடம்பெற்றிருந்தன.
- “மகாவம்சத்தில் புனைவும் உண்மையும்” – கலாநிதி இ.பாலசுந்தரம்
- “மகாவம்ச நோக்கில் இலங்கை வரலாறு” – கலாநிதி பால.சிவகடாட்சம்
- “மகாவம்சத்தின் பிறமொழிப் பரம்பல்” – திரு.என்.கே.மகாலிங்கம்
- “சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கை வரலாற்றில் மகாவம்சத்தின்
- வகிபாகம்”- திரு.வே.தங்கவேலு (நக்கீரன்)
நிகழ்விற்குச் சற்றுத் தாமதமாகவே சென்றிருந்தேன். நிகழ்வில் இறுதியில் இடம்பெற்ற ஐயம் தெளிதல் அரங்கில் க, சண்முகலிங்கன் மிக முக்கியமான சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார். ரொரன்றோவில் இடம்பெறுகின்ற நிறையக் கூட்டங்களில் ஆக்கபூர்வமான விமர்சனம் என்று கருதக்கூடிய வகையிலான கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்படுவது மிகக் குறைவு என்பதை நம்மில் பலரும் உணர்ந்தே இருக்கின்றோம். அப்படியான ஒரு சூழலில் ஆணித்தரமாகவும் அதே நேரம் ஆய்வொழுக்கத்துடனும் தனது கருத்துகளை க. சண்முகலிங்கம் தெரிவித்த விதம் மிக முக்கியமானது. குறிப்பாக துறை சார் வல்லுநர்களை நாம் சரியாக இதுபோன்ற கருத்தரங்குகளின் ஒருங்கிணைக்கவேண்டும் என்பதை அவர் வலியுறுத்திப் பேசினார். மகாவம்சம் பற்றிய இந்தக் கருத்தரங்களில் வரலாற்றுத் துறையச் சேர்ந்த ஒருவர் உள்வாங்கப்படாதது ஒரு குறையே என்பது அவரது வாதம். துறை சார் வல்லுநர்களின் ஆய்வொழுக்கம் அல்லது அந்த ஆய்வொழுக்கத்தையும் துறைசார் அறிவையும் பெற்ற ஒருவரின் உள்ளீடுகள் இதுபோன்ற கருத்தரங்களுக்கும் கருத்துருவாக்கங்களுக்கும் மிக அவசியமானவை என்பதை நாம் எமது கடந்த கால செயற்பாடுகளை மதிப்பீடு செய்கின்றபோது உணர்ந்தே இருப்போம். ஆயினும் இங்கே உடனடியாக எழுகின்ற பிரச்சனை எமக்கு இருக்கின்ற சில துறைகளைச் சார்ந்த வல்லுநர்களின் பற்றாக்குறை.
அன்றைய நிகழ்வில் சண்முகலிங்கன் அவர்களும் சுட்டிக்காட்டியபடி வரலாற்றுத் துறை சார்ந்த எமது வல்லுநர்களும் செயற்பாட்டாளர்களும் மிகக் குறைவே. குறிப்பாக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற ஓரினத்தைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கவேண்டிய வரலாற்றுப் பிரக்ஞை எமக்கு இல்லாமல் இருப்பதற்கு எம்மிடையே வரலாற்றுத்துறை சார்ந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் மிகக் குறைவாக இருப்பது முக்கிய காரணாம் என்றே கருதவேண்டி இருக்கின்றது.
எமது சமூகத்தில் என்ன குறைகள் என்பதைத் தொடர்ந்து பட்டியலிடுவதையே நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கமுடியாது. இந்தக் குறைகள நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என்று ஆராயவேண்டும். எமது சமூக நிறுவனங்கள், குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள சங்கங்கள், அமைப்புகள் என்பன ஆய்வுகளுக்குத் தேவையான நிதிகளை வழங்குவதை தமது கொள்கைகளில் ஒன்றாகத் தீர்மாணித்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக வரலாறு, கலை வரலாறு, சமூகவியல் துறைகளிலான ஆய்வுகளுக்கும் வெளியீடுகளுக்கும் தேவையான நிதிகளை வழங்கக் கூடிய பொறிமுறைய இந்த அமைப்புகளும் சங்கங்களும் உருவாக்கலாம். பெரிய பாடசாலைகளுக்கு மதில் கட்டி கொடுப்பதும், மண்டபம் கட்டிக் கொடுப்பதும் கோயில்களுக்கு தேரும் கோபுரமும் கட்டிக் கொடுப்பதும் தொலைநோக்குப் பார்வையுடன் பார்க்கின்றபோது எதிர்விளைவுகளையே ஏற்படுத்துவன என்பதையாவது நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
வரலாற்றுணர்வு, வரலாறு பற்றிய பிரக்ஞை என்பன பற்றிப் பேசுகின்றபோது எனக்கு சம காலத்தில் அதிகம் உறுத்துவது கனடா 150 பற்றிய கனடா வாழ் தமிழர்களாகிய எமது பெருமிதங்கள் தான். கனடா 150 கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த அதே நேரம் Colonialism 150 என்ற பெயரிலும் காலனித்துவத்தின் 150 ஆண்டு வரலாறு என்றும் ஒட்டப்பட்ட சிறு சுவரொட்டிகளை ரொரன்றோ புறநகரில் காணமுடிந்தது. எங்கள் கனடா என்று பெருமிதம் கொள்ளுகின்ற உலகின் ஆகப்பெரிய இனப்படுகொலை செய்த நாடு கனடா என்பதை மறந்துவிடுகின்றோம். அதேநேரம் ஈழத்தில் எமக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கின்றோம். இந்த முரண் ஆரோக்கியமானதல்ல. ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி அதற்கு உலக மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்ற நாம் இன்னொரு ஒடுக்குமுறையைக் கொண்டாடவோ கண்மூடிக்கடக்கவோ கூடாது.
கனடா Residential School System என்பது கனடா செய்த இனப்படுகொலையில் எவ்வாறு முக்கிய பங்கெடுத்தது என்பது பற்றிய இந்த ஆவணப்படத்தை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.
ArumaiYana karuthu
LikeLike