கண் தெரியாதவருக்கு வண்ணங்கள் எப்படி இருக்கும் என்று உங்களால் புரியவைக்க முடிந்தால், இந்த உலகத்தில் உங்களால் எதையும் புரியவைக்க முடியும்!-@nesamani89
இந்தக் ட்வீற்றர் பதிவினை 18-04-2016 குங்குமம் இதழில் காணக்கிடைத்தபோது பதின்மங்களின் நினைவொன்று மீண்டும் துளிர்விட்டது. நினைவுகள் என்னைத் தாலாட்டும்போதும் வாட்டும்போதும் வாழ்க்கையை வாழவேண்டும் என்று எண்ணும் தோறும் நான் பேச விழையும் நட்பான விசாகனுடன் இந்த ட்வீற்றரினைப் பார்த்தவுடன் தொலைபேசியில் அழைத்துப் பேசி இருந்தேன். அப்போது மீட்டிய நினைவுகளை இப்போதும் காவித்திரிந்து அவனது ஆறாம் மாத நினைவுகளுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
1995ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வினால் யாழ்ப்பாணத்தில் இருந்தும் இடம்பெயர்ந்து தென்மராட்சியில் வசித்துவந்த நாம் 1996 ஏப்ரலில் தென்மராட்சியும் இராணுவத்தால் கைப்பற்றப்பட மீண்டும் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழான யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியிருந்தோம். வெறுமே பாடல்களைக் கேட்டு ரசித்த காலம்போய், நண்பர்கள் குழுவாக பாடல்களை ஒலிக்கவைத்து, அவற்றில் இருக்கின்ற வரிகளையும், ரசனைகளையும் எமக்குள் பரிமாறி பேசிக்கொண்டிருப்போம். விசாகனுடன் நானும் தயாவும் திரைப்படப் பாடல்கள் புத்தகங்களாகவும் வாங்கி குவித்துக்கொண்டிருந்த காலம். அப்போது குணாளனும் சயந்தனும் தெய்வீகனும் எம்மோடு சேர்ந்து அந்த உரையாடல்கள் நடந்துகொண்டிருந்தன. பாட்டுப் புத்தகங்கள் கிடைக்காதபோது வானொலியில் கேட்கின்ற பாடல்களை அப்படியே கேட்டுக் கேட்டு எழுதி பதிவுசெய்துகொண்டும் இருந்தோம். அந்தக் காலப்பகுதியில்தான் மின்சாரக் கனவு பாடல்கள் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றிருந்தன. எங்கே போனாலும் கால்மணித்தியாலத்துக்கு ஒருமுறையாவது மின்சாரக் கனவு படத்தில் இருந்து ஏதாவது ஒரு பாடல் காதில் விழுந்துகொண்டேயிருக்கும். இப்படத்தில் மானா மதுரை மாமரக்கிளையிலே பாடலிலே கதைப்படி நாசர் கண்பார்வை அற்றவர். அவரது குரலில் பாடல் பின்வருமாறு வரும்:
மானாமதுரை மாமரக்கிளையிலே
பச்சைக்கிளி ஒண்ணு கேட்டது கேட்டது கேள்வியென்ன
என் கண்ணு ரொம்ப அழகா? என் றெக்கை ரொம்ப அழகா?
இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன்?
கண்பார்வையிழந்த தன்னால் எது அழகு என்கிற கேள்விக்கு எவ்விதம் பதிலளிக்கமுடியும் என்று கதாபாத்திரம் மூலம் கேட்கும் பாடலாசிரியர் பாடலில் பின்னர் தொடருவார்,
மேற்குச் சாலையிலே மாட்டு வண்டியிலே
போறாளே பொண்ணு ஒருத்தி
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன்
வானவில்லின் வண்ணம் என்றாள்
மழைத்துளி மண்ணில் வந்து சிந்தச் சிந்த எழுகிறதே ஒருவாசம்
அது என்னை வானவில்லில் கொண்டுசேர்த்துவிடுகிறதே சிலநேரம்
மேற்குச் சாலையிலே மாட்டுவண்டியிலே போகின்றவள் ஒரு பெண்தான் என்ற கேள்வியைத் தவிர்த்துவிட்டுப் பார்ப்போம். அந்தப் பெண் சேலையாகக் கட்டியிருப்பது வானவில்லின் வண்ணம் என்றும், அந்தப் பெண் வானவில்லின் நிறத்தில் சேலை கட்டியிருக்கின்றாள் என்றும் பொருள்கொள்ளலாம். இதில் பின்னதே அதிகம் பொருத்தமானது. ஆனால் கண்பார்வை இல்லாவதவனுக்கு வானவில்லின் வண்ணம் எப்படித் தெரியும்? அவன் அதை அனுபவித்திருக்கமாட்டான் அல்லவா? பாடலாசிரியர் என்ன செய்கின்றார் என்றால், கண்ணால் பார்த்து அனுபவிக்கவேண்டிய ஒரு ரசனையை, அது தரும் இன்பத்தை அவ்விதம் துய்ப்பதற்குக் கண்பார்வை இல்லாத ஒருவன், கண் இல்லாத வேறு புலனொன்றினால் பெறக்கூடிய பேரனுபவம் ஒன்றுடன் தொடர்புபடுத்தி, அந்தப் பேரனுபவம் தரும் அனுபவத்தையொத்த அனுபவத்தையே கண்பார்வையால் உணரக்கூடிய இந்த அனுபவமும் தரும் என்பதாக பாடலாக்குகின்றார். கண்ணால் பார்த்து வானவில்லின் அனுபவத்தை துய்க்கமுடியாத ஒருவன், மழைத்துளி மண்ணில் விழுந்து எழுகின்ற மண்வாசனையை உச்ச அனுபவமாகக்கொண்டு, அது தருகின்ற இன்பத்தைத் தரக்கூடிய ஒன்றாக வானவில்லும் இருக்கும் என்கிறார். ஆனைக்கோட்டையிலும், சுதுமலையிலும், யாழ்ப்பாணத்து வீதிகளிலும் தொலைபேசியூடாகவுமாக நானும் நண்பன் விசாகனுமாக திருப்பித் திருப்பி நான் சொல்ல அவனும், அவன் சொல்ல நானுமாய்க் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நட்பதிகாரங்கள் படித்தவர்களுக்கெல்லாம் நட்பே வானவில்வின் வண்ணத்தையும், மழைத்துளி மண்ணில் சிந்தச் சிந்த எழும் வாசத்தையும் நினைவூட்டிக்கொண்டிருக்கும்!
இப்போது விசாகன் இல்லாத நான் என்கிற மிக துர்ப்பாக்கியமான வாழ்வை வாழும்படி அமைந்துவிட்ட எனக்கு ஊட்டமளிப்பவை இதுபோன்ற நினைவுகள் தான்…!
பாடல்கள், திரைப்படம், அரசியல், வரலாறு, சமூகம் என்று மட்டுமல்ல, எதைப்பற்றி நான் பேச விரும்பினாலும் பேசக் கிட்டியவன் அவன் தான். அவனது ஆறாம் மாத நினைவுநாள் நண்பர்கள் தினமாக அமைந்தது என்பது வெறும் தற்செயலாக இருக்கலாம். அவனது நினைவுகள் இருக்கும் எல்லாநாளும் எனக்கு நண்பர்கள் நாளே!
விசாகனுடனான எனது நினைவுகளை தொடர்ந்து நட்பதிகாரம் என்ற பெயரில் அவ்வப்போது எழுதுவேன். ஒவ்வொருநாளும் அவனுடன் பேசிக்கொண்டிருந்த எனக்கு, அவனது நினைவுகளைப் பதிய இதுவும் ஒரு சிறு வழி…
Leave a Reply