மானுடத்தின் வரலாற்றுக் களங்கம்

முற்குறிப்பு

ஈழத்தில் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயருடன் நுழைந்து பேரழிவுகளையும் போர்க்குற்றங்களையும் அரங்கேற்றி இவ்வாண்டு 30 ஆண்டுகள் ஆகின்றது.  இந்த நேரத்தில் ரொரன்றோவில் இருந்து வெளிவருகின்ற தாய்வீடு என்கிற மாதப் பத்திரிகை மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் என்ற பெயரில் ஒரு சிறப்புப் பகுதியினை ஓகஸ்ட் 2017 இற்குரிய இதழில் வெளியிட்டுள்ளது.  அதன் முக்கியத்துவம் கருதி இத்தொகுப்பிற்கான முன்னுரையையும் சிறப்புப்பகுதியின் PDF இனையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.


மானுடத்தின் வரலாற்றுக் களங்கம்

ind sl bond

ஈழத்தமிழர்களின் பண்பாட்டிலும் வரலாற்றிலும் இந்தியாவின் செல்வாக்கு மிகப்பெரியளவில் தாக்கம் செலுத்துவதாகவே வரலாற்றுக் காலந்தொட்டு இருந்துவருகின்றது.  எமக்கான தனித்துவமான கலை, இலக்கிய பண்பாட்டு அம்சங்களைத் தாண்டியும் தம்மை இந்திய அடையாளங்களுடன் இணைத்து உணர்பவர்களாகவே ஈழத்தமிழர்கள் பலர் இருந்துள்ளனர்.  தமிழகத்து ஊடகங்களும் – குறிப்பாக தமிழகத்தில் இருந்து வெளிவருகின்ற இதழ்களும் திரைப்படங்களும் அண்மைக்காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இந்த உணர்வை உருவாக்கியதிலும் ஊடுருவப்பண்ணியதிலும் தாக்கம் செலுத்தி இருக்கின்றன.  இந்தப் பண்பாட்டு ஊடுருவல் இன்றுவரை அதிகமாகிவருகின்ற அதேநேரம் ஈழத்தில் இந்தியப் படை என்கிற விடயம் மிகக் கசப்பானதாகவும் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய பேரவலமுமாகவே ஈழத்தவர்கள் நினைவுகளில் இருக்கின்றது.

ஈழத்தில் இனப்பிரச்சினை தீவிரமடைந்த காலம் முதலாக இந்தியா கைவிடாது என்பது பெரும்பாலான ஈழத்தமிழர்களின் ஆதார நம்பிக்கையாக இருந்தது.  அவர்கள் மனதில் தமிழகத்து அரசியல்வாதிகளும் தலைவர்களும் மட்டுமல்லாமல் இந்தியத் தலைவர்கள் பலரும் கூட தமக்கு நெருக்கமானவர்கள் என்றும் அணுக்கமானவர்கள் என்றும் நம்பிக்கை இருந்தது.  எண்பதுகள் வரை பல ஈழத்தமிழர்கள் வீடுகளின் கூடங்களில் காந்தி, நேரு, சுபாஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களின் படங்களே மிகப்பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்தன என்பதை இப்போது கூட நினைவுகளில் இருந்து மீட்ட முடிகின்றது.  குறிப்பாக ஆரம்ப காலங்களில் இயக்கங்களுக்கான ஆயுதப் பயிற்சிமுகாம்கள், தங்கும் வசதிகள், அலுவலகங்கள் போன்றனவும் இந்தியாவிலேயே அமைந்திருந்தது மக்களின் நம்பிக்கையை இன்னமும் பலமாக்கியது என்றே சொல்லவேண்டும்.  ஆயினும் இந்தியாவைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க தனது சுய லாபத்துக்காவும் பிராந்திய செல்வாக்கை நிலைநிறுத்தவேண்டும் என்ற வல்லாதிக்கக் கனவுக்காகவுமே ஈழப்பிரச்சனையைக் கையாண்டது, ஈழத்தமிழர்களை வைத்துப் பகடையாடியது.  அது ஈழத்தமிழர்களை முழுமையாக வஞ்சித்ததுடன் மானுட குலமே வெட்கித் தலைகுனியவேண்டிய அவலங்களை ஈழத்தில் அரங்கேற்றியது.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இனப்படுகொலை என்பது மிகக் குரூரமாக முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது என்றாலும் அதில் இலங்கை அரசு இழைத்த பல்வேறு போர்க் குற்றங்களை அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே இழைத்து இனப்படுகொலையை நடத்தியது இந்திய அரசு.  குறிப்பாக யாழ்ப்பாண வைத்தியசாலைப் படுகொலைகள், போர் அழிவுகள் வெளியில் பரவுவதைத் தடுக்கும் நோக்குடன் ஊடகங்களை மிரட்டியும், அழித்தும் இயங்கவிடாமல் செய்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பியமை, வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்களை சுட்டுக்கொன்றமை, போர் நிறுத்தப் பிராந்தியம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், மரபுரிமைகளையும் அறிவுச்சொத்துக்களையும் அழித்தமை என்று இலங்கை அரசின் பின்னைய இனப்படுகொலைக்கான விடயங்களை ஈழத்திலே முதலில் இந்திய அரசின் பூரணமான சம்மதத்துடன் நிறைவேற்றியது இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் வந்த ஆக்கிரமிப்புப் படையே.

ஆயினும் ஈழத்தில் இந்திய இராணுவம் நிகழ்த்திய அழித்தொழிப்புப் பற்றிய பதிவுகளோ, கணக்கெடுப்புகளோ இன்னும் சரியான முறையில் பரவலாக்கப்படவில்லை என்பது முக்கியமானது.  மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு எழுநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகின்றபோதும் இழப்புகள் இதைவிட அதிகமாக இருக்கும் என்றும் பலகோடி பெறுமதியான சொத்து அழிப்புகள், உளரீதியான தாக்குதல்கள், அங்கவீனமானோர், தாக்குதலுக்கு உள்ளானோர் என்று குறுகிய காலத்தில் இந்திய இராணுவத்தினூடாக இந்திய அரசாங்கம் நிகழ்த்திய பேரழிவு மிகப்பெரியது.  ஆயினும் இயல்பாகவே ஈழத்தமிழர்கள் பலருக்கு இந்தியா மீதிருக்கின்ற மென்மையான அணுகுமுறை காரணமாகவும், இந்திய ஊடகங்களில் செல்வாக்குக் காரணமாகவும் இந்திய இராணுவம் செய்த இந்த அழிவுகள் மறைக்கப்பட்டும், அதற்கு நியாயம் கற்பிக்கின்ற வாதங்கள் பரப்பட்டும் மனிதத்தின் ஆன்மாவையே அழிக்கின்ற முயற்சிகளும் நடந்தே வருகின்றன.  ஆரம்ப காலங்களில் இந்திய இராணுவத்தைச் சார்ந்தவர்களும் இந்திய வல்லாதிக்கக் கனவுகளைப் பிரதிபலிப்பவர்களுமாக ஆங்கிலத்தில் நூல்கள் ஊடாகவும் கருத்துதிர்ப்புகள் ஊடாகவும் சர்வதேச அரங்கில் பரப்பிய பொய்யான தரவுகளும் தகவல்களும் உலகத்தின் கண்களுக்கு உண்மையை மறைப்பதற்கு உதவின.  இதன் கொடூரமான தொடர்ச்சியாக படைப்பாளிகளும் எழுத்தாளர்களும் கூட மானுடத்தைக் கொன்றொழித்த இந்திய இராணுவ நடவடிக்கைகளைப் பூசி மெழுகுகின்ற நடவடிக்கைகளை அண்மைக்காலமாக முன்னெடுப்பதையும் காணமுடிகின்றது.  வரலாறு என்பது எப்போதும் வெற்றிபெற்றவர்களாலும் ஆதிக்கம் கொண்டவர்களாலும் எழுதப்படுவது என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு.  ஆயினும் வரலாற்று எழுதியலில் சமகாலத்தில் ஏற்பட்டிருக்கின்ற பிரக்ஞை காரணமாக ஒடுக்கப்பட்டவர்களும் தோற்கடிக்கப்பட்டவர்களும் ஒதுக்கப்பட்டவர்களும் தமது வரலாற்றைப் பதிவுசெய்யவேண்டும், தமது நினைவுகளைப் பதிவுசெய்யவேண்டும், தமது கூட்டுநினைவுகளைப் பதிவுசெய்வதன் மூலம் வரலாற்றினை உண்மையை நோக்கி நகர்த்திச்செல்ல முடியும் என்கிற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.  நினைவு கூர்தல் நிகழ்வுகளை நடத்துவது மூலமும் தமது நினைவுகளை வாய்மொழியாகவும், எழுத்துப் பதிவுகள் மூலமும் கலை இலக்கிய வெளிப்பாடுகள் மூலமும் பதிவு செய்வது முக்கியமானதாகக் கருதப்படுவதுடன் ஒடுக்கப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகங்களின் மிகக் காத்திரமான ஒரு அரசியல் நடவடிக்கையாகவுமே கொள்ளப்படுகின்றது.  அந்தவிதத்தில் ஈழத்தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, அவலங்களை, போர்க் குற்றங்களை, தம்மீது கட்டவிழ்க்கப்பட்ட இனப்படுகொலையை தொடர்ச்சியாக நினைவுகூரவும் அவற்றைப் பதிவுசெய்யவும் வேண்டிய வரலாற்றுக்கடமையுள்ளவர்களாக இருக்கின்றனர்.  இதனைப் பிரக்ஞைபூர்வமாக உணர்ந்தவர்களாகவே தாய்வீடு பத்திரிகையின் ஓகஸ்ட் 2017 மாத வெளியீட்டினை ஈழத்தில் இந்தியப் படை நிகழ்த்திய அழிவுகளை நினைவுகூரும் சிறப்புத் தொகுப்பாக வெளியிடுகின்றோம்.  இந்தத் தொகுப்பிற்கான தலைப்பு என்னவென்று யோசித்தபோது மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் என்பதைத் தவிர பொருத்தமானதாக வேறெதுவும் தோன்றவில்லை, மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் என்பதைத் தவிர சுருக்கமான விபரணமும் இந்திய இராணுவம் நிகழ்த்திய பேரவலத்தை வெளிப்படுத்தப் பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

ஜூலை மாதம் 1987 இல் இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயருடன் இந்திய -இலங்கை அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஈழத்திற்குள் நுழைந்த இந்திய இராணுவப் படை, மிகக் குறுகிய காலத்திலேயே தனது முகமூடியைத் தானே அகற்றிவிட்டு, மார்ச் 1990 இல் ஈழத்தைவிட்டு வெளியேறும்போது வந்தது அமைதி காக்கும் படை அல்ல, சாத்தானின் படை என்பது அம்பலமாகி இருந்தது.  ஆயினும் அது பற்றிய பதிவுகளும் தொகுப்புகளும் அழிந்தும் அழிக்கப்பட்டும் அருகிவருகின்ற காலப்பகுதியில், ஆன்மாவைப் புதைத்துவிட்டு ஈழத்தில் இந்திய இராணுவம் இழைத்தவற்றைப் பற்றி உண்மைக்குப் புறம்பான மோசடி வரலாறும் நச்சுக் கருத்துகளும் பரப்பப்பட்டுக்கொண்டிருகின்ற காலப்பகுதியில் நாம் இன்னமும் தீவிரமாகச் செயற்படவும் பதிவுகளை மேற்கொள்ளவும் ஏற்கனவே இருக்கின்ற பதிவுகளைப் பரவலாக்கவும் வேண்டி இருக்கின்றது.  அந்த வகையில் இது ஒரு விதத்தில் மறதிக்கெதிரான நினைவின் போராட்டம், மறதிக்கெதிராக நினைவுகளைத் தொகுக்கின்ற போராட்டம்.

இந்திய இராணுவம் ஈழத்தில் நிகழ்த்திய அழிவுகள் பற்றிய இந்தச் சிறப்புத் தொகுப்புக்காக நாம் தகவல்களைத் திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டபோது போர் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் பத்திரிகைகள் தாக்கப்பட்டு, முழுமையான செய்தித் தணிக்கை திணிக்கப்பட்டதனால் திகதி வாரியாகச் செய்திகளைத் திரட்டுவதில் சிரமம் ஏற்பட்டது.  அத்துடன் அக்காலத்தில் வெளியிடப்பட்ட பிரசுரங்களும் வெளியீடுகளும் கூட இலுகவாகப் பெறக்கூடியதாக இருக்கவில்லை.  இந்தியாவின் தலையீடு குறித்தும், இலங்கை இந்திய ஒப்பந்தம் குறித்தும், ஈழத்திற்கு இந்திய இராணுவத்தின் வருகை குறித்தும் இடது சாரி அமைப்புகளும் இயக்கங்களும் சில பிரசுரங்களை வெளியிட்டிருந்தபோதும் கூட அவை பொதுவாக தனிப்பட்டவர்களின் சேகரங்களாக இருக்கின்றனவே தவிர உசாத்துணை செய்யக்கூடிய பொதுத்தளங்களுக்கு இன்னமும் வரவில்லை என்பது ஒரு குறையே.  அதுபோல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக வெளியிடப்பட்ட அம்மாளைக் கும்பிடுகிறானுகள், வில்லுக்குளத்துப் பறவைகள் என்பனவும் கூட மிகச் சிலரிடம் மாத்திரமே இருக்கின்றன.  இவையெல்லாம் பரவலாக மக்களையும் அரசியற் செயற்பாட்டாளர்களையும் சென்றடையவேண்டியது அவசியமாகும்.  இந்தத் தொகுப்பில் இந்திய இராணுவத்தின் வருகை, வெளியேற்றம் என்கிற கட்டுரைகளுடன் திலீபனின் உண்ணாவிரதம், பிரம்படி லேன் படுகொலைகள், சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும் என்கிற கட்டுரைகளுடன் உண்மைச் சம்பவங்களின் நினைவுப் பதிவுகளாகவும், தன்னனுபவப் பதிவுகளாகவும் வரலாற்றுச் சாட்சியங்களைத் தொகுத்திருக்கின்றோம்.  இதுதவிர இலக்கிய சாட்சியங்களாகவும் இயன்றவரை பொருத்தமான சில மாதிரிகளைத் தொகுத்திருக்கின்றோம்.  மாதப் பத்திரிகை ஒன்றில் இத்தனை பக்கங்களில் சிறப்புத் தொகுப்பு ஒன்றினை வெளியிடுவது என்பது புலம்பெயர் சூழலில் எவ்வளவு சவாலானது என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.  அந்தச் சவாலையும் பல்வேறு விதமான நெருக்கடிகளையும் எதிர்கொண்டவாறே ஒரு முக்கியமான பணியை ஆற்றிய நிறைவுடனும் இன்னமும் பல்வேறு ஆக்கங்களும் தரவுகளும் பதிவுகளும் சேர்க்கப்பட்டு இது இன்னமும் முழுமையாக்கப்படவேண்டியது என்கிற புரிதலுடனும் இந்த முயற்சியில் அக்கறையும் பிரக்ஞையும் கொண்ட இன்னும் பலரும் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்கிற உறுதியான நம்பிக்கையுடனும் இந்தச் சிறப்புத் தொகுப்பினை உங்களுக்குக் கையளிக்கின்றோம்.

கைவிடப்பட்டோர்

அவர்கள் தங்களுக்கு
வாக்களிக்கப்ப்ட்ட பூமிக்காய் ஏங்கினர்
தொடர்ந்து வந்த
அவமானங்களிலும்
இழிவுகளிலும் இருந்து மீள
“மெசியா”வுக்காய் காத்திருந்தனர்.

வானிலிருந்து
“மன்னா” பொழிந்த போதும்
தூதர்கள் இறங்கிய போதும்
அகம் மகிழ்ந்து வாழ்த்தினர்.

ஆயினும் அவர்கள் மகிழ்வு
நீடிக்கவேயில்லை.

”வாளேந்திய சிங்கமும்
தூணேந்திய சிங்கங்களும்”
இணைந்தபோது
கைவிடப்பட்டோர் ஆகி
சிதறிக்கப்பட்டனர்.

மீண்டும் தாய்மார்
இழுத்துச் செல்லப்படும் புதல்வர்களுக்காய்
அந்நிய ஜீப்புகளின் பின்னால்
தலைவிரி கோலமாய்
கதறத் தொடங்கினர்

-மு. புஷ்பராஜன் – 1988/மீண்டும் வரும் நாட்களில்


மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் தொகுப்பின்  PDF இங்கே இணைக்கப்பட்டுள்ளது

IPKF-thaiveedu-Aug-17

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: