இலங்கையின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து, ‘கேரள டயரீஸ்’ புத்தகத்தை கையளித்தேன் என்று ஒரு நிலைத்தகவலை அருளினியன் தனது முகநூலில் பதிவுசெய்திருப்பதனைக் காணக் கிடைத்தது, அவரது முழுமையான நிலைத்தகவல் பின்வருமாறு அமைகின்றது,
இலங்கையின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து, ‘கேரள டயரீஸ்’ புத்தகத்தை கையளித்தேன்.
சில சாதி, சைவ அமைப்புகளால், யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் புத்தக வெளியீட்டு நாளில் நான் எப்படியாக அலைக்கழிக்கப்பட்டேன் மிரட்டப்பட்டேன் என்பதையும், தற்போது சில சாதி, சைவ அமைப்புகள் ‘கேரள டயரீ’ஸை தடைசெய்ய எடுத்து வரும் முயற்சிகளைப் பற்றியும் கூறினேன்.
இது தொடர்பான விபரங்களை தான் ஏற்கனவே அறிந்திருந்தாக கூறியவர், இலங்கை என்ற ஜனநாயக தேசத்தில் தான் ஜனாதிபதியாக இருக்கும்போது, எந்த சாதி, சமய அமைப்புகளாலும் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதை அனுமதிக்க மாட்டேன் என உறுதி அளித்தார்.
மனிதனின் பிறப்புரிமையான ‘கருத்து சுதந்திர’த்தின் பக்கம் நிற்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐயாவிற்கு மனம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
அண்மையில் அவரது கேரள டயறீஸ் புத்தக வெளியீடு அறிவிக்கப்பட்டது முதலாக தொடர்ச்சியாக இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்தும், இந்தப் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகின்ற 2012 நவம்பரில் ஆனந்தவிகடன் இதழில் முன்னாள் போராளி ஒருவருடன் அருளினியன் எடுத்ததாகச் சொல்லப்படுகின்ற பேட்டி மற்றும் அதன் பின்னணி குறித்தும் விரிவாகப் பேசவேண்டிய தேவையை அருளினியன் மறுபடியும் ஏற்படுத்தி இருக்கின்றார்.
2012 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி வெளியான ஆனந்த விகடன் இதழில், ”நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! – ஒரு பெண் போராளியின் உண்மைக் கதை” என்கிற தலையங்கத்துடனும், உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை… ‘இதுதானடா தமிழா… இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார் என்கிற முத்தாய்ப்புடனும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த பெண் போராளி ஒருவரிடம் அருளினியன் எடுத்த நேர்காணல் என்ற பெயரில் ஒரு ”நேர்காணல்” வெளியாகி இருந்தது. அந்நேர்காணல் வந்த உடனேயே அப்போது பரவலடைந்து வந்த முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் வலைத்தளங்களிலும் அந்த நேர்காணலை ஒட்டிய உரையாடல்களும் விவாதங்களும் இடம்பெற்றிருந்தன. அந்த “நேர்காணலுக்குக்கு” வந்த எதிர்வினைகளில் பெரிதும், பெண் போராளிகள் ஒருபோதும் பாலியல் தொழிலில் ஈடுபடமாட்டார்கள், இல்லாத ஒரு பிரச்சனையை இந்நேர்காணல் பேசுகின்றது என்றும் தொடர்ச்சியாக வாதிடப்பட்டது. அத்துடன் எதிர்காலத்தில் போர் என்று ஒன்றினை தமிழ்தரப்பு முன்னெடுத்தால் இணைந்து போராட எவரும் வரமாட்டார்கள் என்கிற தொனியும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. அந்தப் பேட்டி குறித்து இப்போது கூறுகின்ற விளக்கங்களையோ, மன்னிப்புக் கேட்டலையோ அப்போது அருளினியன் செய்யவில்லை. அதேநேரம் இந்த நேர்காணல் உண்மையில் நடக்கவே இல்லை என்கிற வாதங்களுடன் அருளினியனதும் ஆனந்த விகடனதும் நம்பகத்தன்மையைக் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அருளினியன் சார்பிலும் ஆனந்த விகடன் சார்பிலும் மௌனம் சாதிக்கப்பட்டது.
உண்மையில் போரிற்குப் பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற பெண்களின் தொகை அதிகரித்திருப்பதையும், அவர்களிற் பெரும்பாலோனோர் போர்க்காலத்தில் நலிவடைந்த, கைவிடப்பட்ட குடும்பப் பின்னணிகளைச் சேர்ந்த பெண்கள் என்பதும் கசப்பான உண்மையே. நாம் எப்போதும் சில புனிதங்களைக் காக்கவேண்டும் என்று தொடர்ச்சியாக நிழல் யுத்தம் நடத்துபவர்களாக இருக்கின்றோம், அதனாலேயே இப்படியான வெளிப்படையாகத் தெரிகின்ற சமூகப் பிரச்சனைகளையும் நாம் இல்லை என்று வாதிடவும், அல்லது அது மிகக் குறைவாகவே உள்ளது என்று சமாளித்துத் தப்பிவிடவும் தொடர்ச்சியாக முயற்சி செய்கின்றோம். பாலியல் தொழில், வறுமை, நுண்கடன்கள், இதர பாலியல் சார் குற்றங்கள் என்று போருக்குப் பிந்திய காலத்தில் அதிகரித்து வருகின்ற சமூகப் பிரச்சனைகளை சமூகமாக எப்படி எதிர்கொள்வது என்றும், அவற்றிலிருந்து மீண்டெழுவதற்கான பொறிமுறைகளையும் செயற்திட்டங்களையும் உருவாக்குவதற்கும் சமூக, மற்றும் அரசியற் செயற்பாட்டாளர்கள் விசேட கவனம் எடுக்கவேண்டியது அவசியமே. ஆனால், அருளினியனின் அந்தப் பேட்டியில் இருக்கின்ற தொனியும், அது கவனப்படுத்தும் விடயங்களும் ஆணாதிக்க, கேளிக்கையாக நோக்குகின்ற மொழியில் எழுதப்பட்டிருக்கின்றதே அன்றி அது பாதிக்கப்பட்டவரின் குரலாக தெரியவே இல்லை. தவிர, அதன் உள்ளடக்கத்தில் இருக்கின்ற கருத்துகளை ஒரு போராளியின் நேர்காணல் என்று சொல்லி வெளியிட்டமையை மோசமான ஊடகச் செயற்பாடாகவும், மோசமான அரசியற் பிரச்சாரச் செயற்பாடகவுமே பார்க்கவேண்டி இருக்கின்றது. இந்தப் பிரச்சனை நடந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக இது குறித்து பொதுவெளியில் மௌனம் காத்த அருளினியன், கேரள டயரீஸ் வெளியீட்டிற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மீண்டும் இதுபற்றிப் பேசி இருந்தார்.
கேரள டயரீஸ் புத்தக வெளியீடு பற்றிய அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே, கேரள டயரீஸ் புத்தகத்தில், 2012 இல் வெளியாகி இருந்த மேற்குறித்த பேட்டியும் இடம்பெற்றிருப்பது போல தோற்றம் தரக்கூடிய ஒரு போலி அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதுடன் மீண்டும் இந்தப் பிரச்சனை கிளப்பப்பட்டது. ஒரு பத்திரிகையாளர் என்ற வகையிலும், அபுனைவு எழுத்துகள் என்ற வகையிலும் அவரது வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட எழுத்துகளை ஒன்றின் தொடர்ச்சியாக ஒன்றை வைத்து ஆய்வது வேறு, இது போன்ற மோசடித்தனமாக, வதந்திகளைப் பரப்புவது வேறு. அருளினியனின் புத்தகத்தில் கேரளத்திற்கும் ஈழத்தமிழர்களிற்கும் உள்ள உறவு பற்றியும், நாவலர் பற்றியும் சாதியம் பற்றியதுமான கட்டுரைகள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தக் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களும், அந்தக் கருத்துகள் தாம் நம்புகின்ற அரசியற் கருத்துகளிற்கு எதிரானவை என்றும், அவற்றுக்கு ஊறு விளைவிப்பவை என்று நினைப்பவர்கள் தமது கருத்துகளை இன்னும் ஆழமாகவும், பரவலாகவும் பரப்புரை செய்யவும், பதிவுகளை மேற்கொள்ளவும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபடவேண்டும், அருளினியனின் நூல் நிகழ்த்துகின்ற உரையாடலுக்கான முரண் உரையாடலை நிகழ்த்தவேண்டும். நற்பேறற்ற விதத்தில் அருளினியனின் நூல் வெளியீடு விவகாரத்தில் நடந்தது அப்படி அல்ல. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற உரையாடல்களில் பேசப்பட்ட கருத்துக்களை வெறுமனே ஒதுக்கிவிட்டுப் போக முடியாது. எமக்கு பிடிக்காத அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகளை ஒருவர் கொண்டிருக்கின்றார் என்பதற்காக அவர் ”களையெடுக்கப்படலாம்” என்கிற கருத்துகள் மீண்டும் வலுப்பெற்றுவருவது ஆரோக்கியமானது அல்ல. சமூக வலைத்தளங்களில் இப்படியான கருத்துகள் பரப்பப்படுவதும் மிரட்டல் விடுக்கப்படுவதும், சீண்டிவிடப்படுவதும் தொலை நோக்கில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். குறித்த கணத்தில் உணர்ச்சி மேலீட்டால் பேசப்படும் இந்தக் கருத்துகள், இன்னொருவரை உண்மையிலேயே வினையாற்றத் தூண்டிவிடும் என்கிற பொறுப்புணர்வு இருக்கவேண்டும். தமது செயல்களுக்கும் அவை சமூகத்தில் நிகழ்த்துகின்ற பாதிப்புகளுக்குமான பொறுப்புக்கோரல் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக அரசியல், சமூக, கலை, இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கு இருக்கவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தவேண்டி இருக்கின்றது. அருளினியனின் புத்தகங்களுக்கும் அவரது செயற்பாடுகளுக்கும் கருத்துநிலைக்கும் எதிரான விமர்சனங்களைக் காத்திரமாகவும் பரவலாகவும் தொடர்ச்சியாக செய்வது அவசியமானதாக இருக்கலாம். ஆனால், அவரது புத்தக வெளியீட்டை மிரட்டல்களால் தடுத்துநிறுத்த முயல்வதும், தனிப்படவும் பொதுவெளியிலும் மிரட்டல்களை விடுவிப்பதும் வன்முறையைத் தூண்டிவிடும்படியாக கருத்துகளைப் பரப்புவதும் ஆபத்தானது. இது அருளினியனுக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் பொருத்தமானதே.
அதேநேரத்தில் இந்த நூல் வெளியீட்டிற்கு முன்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அருளினியன் மேலே குறிப்பிடப்பட்ட பேட்டி குறித்து கொடுத்த விளக்கமானது மிகவும் சந்தர்ப்பவாதமான ஒன்றே. தேவை கருதி அவரது விளக்கத்தை கீழே பகிர்ந்துகொள்ளுகின்றேன்,
கடந்த 2012ஆம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிகையில் மாணவ பத்திரிக்கையாளனாக பணியாற்றிக்கொண்டு இருந்தேன் அப்போது எனக்கு மாத சம்பளம் 500 ரூபாய் தான். அக்கால பகுதியில், ஆனந்த விகடன் பத்திரிக்கை பீடத்திற்கு , ஒரு பெண் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தான் முன்னாள் பெண் போராளி பேசுவதாகவும் , சில விடயங்களை தெரிய படுத்த வேண்டும் எனவும் கூறியதாக ஆசிரிய பீடத்தினர் தெரிவித்தனர்.
அப்போது அவர் பேசிய மொழி நடை ஆசிரிய பீடத்தில் உள்ளவர்களால் விளங்கி கொள்ள முடியவில்லை. அதனால் என்னை அவருடன் கதைக்குமாறும் , அவர் சொல்வதனை கேட்டு எழுதி தருமாறும் ஆசிரிய பீடத்தில் இருந்தவர்கள் கூறினார்கள்,
அதனை தொடர்ந்து நான் அவருடன் தொலைபேசியில் பேசி அவரின் பேட்டியை எடுத்தேன். அதனை அப்படியே எழுதி கொடுத்தேன். அதில் என்னுடைய வேலை அவர்கள் சொன்னதை செய்து கொடுத்தது தான். என்னுடன் கதைத்தவர் போராளியா என்பது கூட எனக்கு தெரியாது. அவர் பாலியல் தொழில் செய்தாரா என்பது கூட எனக்கு தெரியாது.
ஆனந்த விகடன் சொன்ன வேலையை செய்து கொடுத்தேன். ஏனெனில் எனக்கு ஆனந்த விகடன் மேல் பெரிய மரியாதை உண்டு. பெண் போராளிகள் தொடர்பில் எழுதிய கட்டுரைக்கு நான் மனவருந்துகிறேன். அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.
அக்கால பகுதியிலையே அதற்காக நான் மன்னிப்பு கேட்க விரும்பினேன். ஆனால் அதற்கு ஆனந்தவிகடன் அனுமதி அளிக்கவில்லை. தாம் அதற்கான விளக்கத்தை கொடுப்பதாக எனக்கு தெரிவித்தார்கள்.
நான் அந்நேரம் ஆனந்த விகடனில் பணியாற்றிக்கொண்டு இருந்ததால் , நிறுவனத்தின் சில ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்பட வேண்டிய தேவை இருந்ததால் , நான் அதற்கு கட்டுப்பட்டேன்.
அப்போது இளவயதான, மாணவ பத்திரிகையாளராக பயிற்சியில் அவர் இருந்திருந்தாலும், சாதாரணமாக ஒருவருக்கு இருக்கவேண்டி அறம் சார் நிலைப்பாடு கூட இல்லாத ஒருவராலேயே அவர் சொல்கின்றபடி விகடன் கேட்டதை எந்தப் பொறுப்புணர்வும் இல்லாமல் எழுதிக்கொடுப்பவராக இருந்திருக்கக் கூடும். மேலும், இத்தனை ஆண்டுகாலமாக அவர் மௌனமாக இருந்துவிட்டு, தனது புத்தக வெளியீடு நடைபெறவேண்டும் என்பதற்காகவே அதனை ஆனந்த விகடனில் பழிபோடுவது மூலம் கடந்து செல்ல முயல்கின்றார் என்றே கருதமுடிகின்றது. அதே நேரத்தில், பகிரங்கமாக அருளினியன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த இந்தத் தன்னிலை விளக்கம் குறித்து ஆனந்த விகடன் தற்போதும் மௌனமாகவே இருக்கின்றது. இந்தப் பேட்டியில் ”வித்யா ராணி 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி ‘ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன ‘சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர்” என்று குறிப்பாகவும் மிகுந்த உண்மைத்தன்மையுடனும் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன் அவரது படையணி என்றெ பெயரில் போராளிகளின் முகங்கள் மறைக்கப்பட்ட ஒரு படமும் பாவிக்கப்பட்டிருந்தது. அருளினியன், ஆனந்த விகடன் கூட்டணியில் ஊடக அறத்தையெல்லாம் தூக்கு எறிந்துவிட்டிருக்கும் மிகப்பெரும் மோசடி இது. அருளினியன் குறித்துப் பேசுவதுடன் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரவலாக அறிமுகமாகி, புலம் பெயர் நாடுகளில் கூட மிக அதிக அளவில் விற்கப்படுகின்ற ஆனந்த விகடனின் இந்த அறப்பிறழ்வு பற்றியும் நாம் கவனம் செலுத்தவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.
கருத்துச் சுதந்திரத்துக்காகவும், பெருகிவருகின்ற சகிப்புத் தன்மையின்மை பற்றிய அதிருப்தியின் காரணமாகவும் அருளினியனின் புத்தக வெளியீடு தொடர்பாக ஓரளவு சாதகாமன நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தவர்களையும் ஏமாற்றம் அடையச் செய்வதாக அருளினியன் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினைச் சந்தித்தது குறித்து வெளியிட்ட நிலைத்தகவலும் அந்தச் சந்திப்புக் குறித்த அவரது தன்னிலை விளக்கமும் அமைந்திருக்கின்றது. கருத்துச் சுதந்திரத்தின் காவலராக ஜனாதிபதியை அவர் குறிப்பிடுகின்றார். மதவாதமும் பேரினவாதமும் ஆதிக்கத்தில் இருக்கின்ற ஒரு நாட்டின் ஜனாதிபதியை, அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒருவரை, குறுகிய நோக்கக்ங்களுக்காக கருத்துச் சுதந்திரத்தின் காவலராகச் சித்திகரிப்பது அறப்பிறழ்வு, அல்லதை அதைவிடவும் மோசமான ஒரு நிலைப்பாடு. ஒரு பத்திரிகையாளராக அறியப்படுகின்ற, இனவரலாறு, சாதிய ஒடுக்குமுறை, மதவாதம் என்பன பற்றி எல்லாம் எழுதத் தலைப்படுகின்ற ஒருவருக்கு இந்தப் புரிதல் கூட இல்லை என்பதை எப்படி நோக்குவது? அருளினியன் தனது செயல்களாலேயே தன்னை மீள மீள நிரூபித்துக்கொண்டிருக்கிறார் என்றே கருதவேண்டி இருக்கின்றது.
- படத்திற்கு நன்றி – http://newsmediaworks.com.au/
- அருளினியன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதன் எழுத்துவடிவம் நன்றி, http://www.uyirpu.com
Leave a Reply