– சில கருத்துப் பகிர்வுகள்
கனடாவுக்கான ஈழத்தமிழர்களின் வருகை பற்றிய பதிவுகள் 1950களின் நடுப்பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெறுகின்றன. ஆயினும் ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வானது சடுதியாக அதிகரித்த ஆண்டாக 1983 இனையும் அதற்குரிய பிரதான காரணியாக 1983 இல் பௌத்த சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் பின்புலத்துடன் இடம்பெற்ற ஆடிக்கலவரத்தையும் குறிப்பிடலாம். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்ற நாடான கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற மாகாணங்களாக ஒன்ராரியோவும் கியூபெக்கும் இருக்கின்றன. 1983 வரை சில நூறுகளிலேயே தமிழர்களின் சனத்தொகை இருந்தது. எனினும் 1991 குடிசனக் கணக்கெடுப்பின் பிரகாரம், ரொரன்றோவில் மிக வேகமாக அதிகரித்துவருகின்ற இனக் குழுமத்தினராக தமிழர் அடையாளங் காணப்பட்டிருந்தனர். அத்துடன் ஈழத்துக்கு வெளியே ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் நாடாகவும் கனடாவே இருந்துவருகின்றது. அந்த அடிப்படையில் கனடாவில் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளும் அவை சமூக அசைவியக்கத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும் ஈழத்திலும் கனடாவிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன. கனடாவிற்கு ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு ஆரம்பித்த தொடக்க நாட்களிலேயே அவர்களால் அமைப்புகளும் சங்கங்களும் உருவாக்கப்பட்டிருந்தன. கனடாவில் 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் இயக்கத்தின் கிளைகளில் ஒன்றாக கலை பண்பாட்டுக் கழகம் உருவாக்கப்பட்டு மாதந்தோறும் கலை, இலக்கிய முயற்சிகள் நடைபெற்றதையும் மொன்றியலில் 1984 இலேயே தமிழ் ஒளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டு தமிழ் வகுப்புகளும் முத்தமிழ் விழாக்களும் நடத்தப்பட்டமையையும் பேராசிரியர் இ, பாலசுந்தரம் பதிவுசெய்திருக்கின்றார். ஆரம்ப காலத்தில் பரந்துபட்ட அளவில் ஈழத்தமிழர்களை ஒன்றிணைக்கக் கூடிய இத்தகைய அமைப்புகளே உருவாக்கப்பட்டிருந்தன. இவை பொதுவாக ஈழத்தமிழர்கள் என்கிற பொது அடையாளத்தை வெளிக்காட்டுவனவாக இருந்தன. இவற்றின் தொடர்ச்சியாக, கணிசமான அளவில் குடிவரவு நிகழ்ந்தபின்னர் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள் போன்றன உருவாக்கப்பட்டன.
ஆரம்பகாலத்தில் இந்த அமைப்புக்களின் நோக்கங்களிலும் செயற்பாடுகளிலும் புதிய குடிவரவாளர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதும் மக்களை ஒன்றிணைப்பதும், தமது மொழியையும் பண்பாட்டையும் பேணுவதும் முக்கிய பங்குகளை வகித்தன. ஊரில் தாம் கொண்டாடிய விழாக்களை புலம்பெயர் நாடுகளில் கூட்டாக ஒன்றிணைந்து கொண்டாடுவதும் அவற்றையொட்டிக் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதும் வழமையாக இருந்தன. ஈழத்தமிழர்கள், தமது தாய்நாட்டில் நீண்டகாலமாக எதிர்கொண்ட ஒடுக்குமுறைகளுக்கும் போருக்கும் முகம் கொடுத்தவர்கள். அவர்கள் தமது புலப்பெயர்வுக்குப் பிறகும் தாயகத்துடன் அங்கு நடைபெறுகின்ற அரசியல் நிகழ்வுகளிலும் மாற்றங்களிலும் அக்கறை கொண்டவர்களாகவே இருந்தனர். இந்த அமைப்புகளூடாக நிவாரண உதவிகளும், அரசியல் தேவைகளுக்கான நிதிச்சேகரிப்புகளும் நடத்தப்பட்டன. அந்த வகையில் ஈழத்தின் சமூக, அரசியல் செல்நெறியில் பொருளாதார ரீதியிலான தாக்கத்தைச் செலுத்தியவையாகவும் இந்த அமைப்புகள் செயற்பட்டன. ஆரம்ப காலத்தில் பெரும்பாலான குடிவரவாளர்கள், போர் முடிந்தவுடன் ஈழத்திற்குத் திரும்புவோம் என்ற கனவுடனேயே இருந்துவந்தனர். ஆயினும் 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னர், நாடு திரும்புவது என்ற கனவு நடைமுறையில் சாத்தியமற்றது என்பதை பெரும்பான்மையினர் புரிந்துவிட்டனர் என்றே கருத முடிகின்றது. அதேநேரம் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற அமைப்புகள் தொடர்ச்சியாகவும் கலை நிகழ்ச்சிகளை புலம்பெயர் நாடுகளில் நடத்துவதுடன் மீள் நிர்மாணத்துக்கும், நிதி உதவித் திட்டங்களுக்கும் என்று நிதி உதவிகளை ஈழத்தில் உள்ள பாடசாலைகள், கோயில்கள் போன்றவற்றுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்க ஆரம்பித்தனர். இது முழுக்க நல்லெண்ணத்தின் அடிப்படையிலானது என்றாலும் கூட இவை ஈழத்தில் ஏற்படுத்துகின்ற அசமத்துவ நிலையைப் பற்றியும் மரபுச் சின்னங்களின் அழிப்பில் இவற்றின் பங்களிப்புப் பற்றியும் பேசவேண்டி இருக்கின்றது. இதுவே இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
போருக்குப் பிந்திய ஈழத்தில் மீள் கட்டுமாணம் என்ற பெயரிலும் அபிவிருத்தி என்ற பெயரிலும் பாடசாலைகள், கோயில்கள் போன்றவற்றை இடித்துப் புதிதாகக் கட்டுகின்ற போக்கு அதிகரித்துவருகின்றது. பெரும்பாலும் இவற்றுக்கான நிதி புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற பழைய மாணவர் சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள் என்பவற்றின் ஊடாகவே அனுப்பப்படுகின்றது. இவ்வாறாகக் கட்டடங்கள் இடிக்கப்படும்போது மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன என்கிற பிரக்ஞை இருக்கவேண்டியது மிக அவசியமானது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழமைவாய்ந்த சில கட்டடங்கள் கூட இப்படியாக அபிவிருத்தி என்ற பெயரில் இடிக்கப்பட்டன என்பதை நாம் இங்கே நினைவுகூரவேண்டும். அபிவிருத்தி என்ற பெயரில் மரபுரிமைகளை அழிப்பது ஒரு இனத்தின் அழிப்பிற்கான அடிப்படைகளில் ஒன்று என்பதை புரிந்துகொண்டு, மரபுரிமைகளையும் பேணுவதோடு அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடல் வேண்டும். அதுபோல ஊர்ச்சங்களின் உதவியுடன் கோயில்கள் இடித்துக் கட்டப்படும்போதும் அந்தக் கோயில்களின் நிர்மாணத்தில் பின்பற்றப்பட்டிருந்த பாணி, சிறப்பம்சம் போன்றன பற்றிய கவலையில்லாமல் அவை வெறும் கட்டடடங்களாகக் கட்டப்பட்டு வருகின்றன. இதுவும் ஒருவிதமான மரபுரிமை அழிப்பு என்றே சொல்லவேண்டும். எனவே பெரும்பாலும் நிதியுதவி வழங்குகின்ற புலம்பெயர் அமைப்புகள் மரபுரிமைகளைக் காப்பது என்ற அக்கறையுடன் மீள் கட்டுமாணம் போன்றவற்றைத் திட்டமிட வேண்டும்.
அதேநேரம் ஒரு சமூகத்தின் மரபுரிமையையும் பண்பாட்டையும் காக்கவேண்டும் என்பதைத் தமது அக்கறையாகக் காட்டிக்கொள்கின்ற புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற அமைப்புகளும் சங்கங்களும் பிற்போக்குத்தனத்தையும் ஒடுக்குமுறையையும் சடங்குகள் ஊடாகவும் நடைமுறைகள் ஊடாகவும் அடுத்த தலைமுறைக்கும் கடத்துகின்ற கருவிகளாக இருந்துவிடக்கூடாது என்பதிலும் அக்கறையாக இருக்கவேண்டும். மரபுரிமை என்றும் பண்பாடும் என்றும் முன்னிறுத்தப்படும் அம்சங்களினூடாக எவ்விதம் அதிகாரமும் ஒடுக்குமுறையும் தொடர்ந்து தொழிற்படுகின்றது என்பதைப் பற்றியும் நாம் பிரக்ஞை பூர்வமாக அணுகவேண்டும். சாதி, மதம், பால் போன்ற எந்தவிதமான ஒடுக்குமுறைகளையும் பேணுவதற்கும் கடத்துவதற்குமான தளங்களாக இந்த அமைப்புக்கள் இருக்கக் கூடாது என்பதும் அவற்றுக்கு எதிராகத் தொழிற்படவேண்டிய கடப்பாடு கொண்டவையாக இருக்கவேண்டும் என்பதும் அவசியமாகும். குறிப்பாக இந்த அமைப்புகள் தம்முள் வெவ்வேறு மதம், சாதி, வர்க்கம், பாலியல், பால்நிலை போன்ற பன்முகத்தன்மை கொண்டவர்களையும் சிறுபான்மைக் கருத்தியல் கொண்டவர்களையும் உள்வாங்கவேண்டும் என்பது அவசியமானதாகும்.
ஈழத்திலிருந்து மக்கள் புலம்பெயரத் தொடங்கிய பின்னர் அவர்களது நிதியளவிலான உதவிகள் தாயகத்தில் இருந்த அமைப்புகளுக்கு ஆதார பலமாக இருந்தன என்றாலும் அவற்றினால் ஏற்பட்ட சில எதிர்மறை அம்சங்களைப் பற்றியும் நாம் அக்கறை கொள்ளவேண்டும். இவ்வாறாகக் கிடைத்த நிதி உதவிகள் ஈழத்தில் இருந்த அமைப்புக்களின் தன்னிறைவுப் பொருளாதாரத்தைப் பாதித்தன என்று சொல்லலாம். ஓர் உதாரணமாக, எண்பதுகள் வரை ஈழத்தில் இருந்த கோயில்கள், சன சமூக நிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள், பாடசாலைகள் என்பன தமக்கான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அந்த அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடம் நிதி சேகரித்தும், சிரமதானங்கள் செய்தும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் நிதி திரட்டுவது என்கிற பொறிமுறைகளை வைத்திருந்தன. இதனால் மக்களுக்கும் சமூக நிறுவனங்களுக்குமான உறவுகள் பலமாக இருந்தன. சமூக நிறுவனங்களின் ஒவ்வோர் அசைவிலும் மக்கள் உணர்வு ரீதியாகவேனும் பங்கேற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் புலம்பெயர் நாடுகளின் இருக்கின்ற அமைப்புகள் ஈழத்தில் இருக்கின்ற சமூக நிறுவனங்களுக்கான பிரதான நிதி வருவாய் மூலங்களாக மாறத்தொடங்கியபோது மக்களுக்கும் சமூக நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்படத் தொடங்கிய இடைவெளி பெரிதாகிச் சென்றது. இதன் இன்னொரு விளைவாக, ஈழத்தில் இருக்கின்ற சமூக நிறுவனங்களின் முடிவுகள் பெரும்பாலும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற அமைப்புகளின் விருப்பத்திற்கேற்ப நடப்பனவாகவும் மாறத்தொடங்கி இருக்கின்றன. இது எதிர்காலத்தில் ஈழத்தில் இருக்கின்ற மக்களை பொருளாதார ரீதியில் மாத்திரம் அல்லாமல் நிர்வாக ரீதியிலும் தங்கி இருப்பவர்களாக மாற்றிவிடக்கூடிய அபாயம் இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற அமைப்புகள் ஈழத்தில் இருக்கின்ற சமூக நிறுவனங்களிற்கு நிதியுதவி அளிக்கின்றபோது நிர்வாக ரீதியிலான தலையீடுகள் செய்வதைக் கைவிடவேண்டும். அதுபோல உள்ளூர் மக்களின் பங்களிப்பையும் பங்கேற்பையும் தொடர்ச்சியாக உறுதி செய்வதிலும் அக்கறை செலுத்தவேண்டும்.
அரச ஒடுக்குமுறையாலும் சமூக ஒடுக்குமுறையாலும் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தம்மை மீளக்கட்டி எழுப்பும்போதும் டயஸ்போறாவினதும், புலம்பெயர் அமைப்புக்களினதும் பங்கு காத்திரமானதாகும். போருக்குப் பிந்திய ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கூட புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்களும் சங்கங்களும் மிக முக்கியமான வகிபாகத்தை எடுத்துவருகின்றது உண்மையே. அதேநேரம் அவை மரபுரிமைகளைக் காப்பது பற்றிய பிரக்ஞையையும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான முற்போக்குப் பாத்திரத்தையும் கொண்டிருப்பதோடு தாயகத்தில் இருக்கின்ற சமூகநிறுவனங்களையும் மக்களையும் தன்னிறைவாகவும் புற அழுத்தங்கள் இல்லாமலும் இயங்குவதற்கான தளங்களையும் பொறிமுறைகளையும் உருவாக்குவதிலும் அக்கறை காட்டவேண்டும். அதுவே அவற்றின் இருப்புக்கு நியாயம் செய்வதாக அமையும்.
இக்கட்டுரை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் கலையரசி 2017 மலரில் வெளியானது.
Leave a Reply