நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து…

ஈழப்போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் குறித்தும் தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்தும், பின்போர்க்கால நிலைமைகள் குறித்ததுமான பல்வேறு தொகுப்புகளும் அறிக்கைகளும் பதிவுகளும் வெவ்வேறு தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ளன என்றாலும் இன்று வரை போரினால் நிகழ்த்தப்பட்ட அழிவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு முடியவில்லை என்பதே உண்மை.  அதுபோல போர் நிறைவடைந்த பின்னரும் தொடருகின்ற பண்பாட்டு இனப்படுகொலையும் அதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அம்பலப்படுத்தப்படவில்லை.  இவை குறித்த செய்திகளும் பதிவுகளும் பெரும்பாலும் தனித்த சம்பவங்களாகவே கடந்து செல்லப்படுகின்றன.  இத்தகைய சூழலில் இந்த அழிவுகளை ஆவணப்படுத்துவதில் இருக்கின்ற குறைகளைப் பற்றிய பிரக்ஞையுடன் ஊறுகாய் மற்றும் வொய்ஸ் வெளியீடாக “நந்திக்கடல் பேசுகிறது : பின்போர்க்காலமும் களப்பதிவுகளும்” என்கிற நூல் ஜெராவைத் தொகுப்பாசியராகக் கொண்டு 2019 இல் வெளியாகி இருக்கின்றது.  இத்தொகுப்பின் நோக்கம் என்னவென்பது குறித்து நூலுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்,

”போர் நிறைவடைந்து பத்தாண்டுகளுக்குள் தமிழர்களாகிய நாம் ஆவணப்படுத்தி வரலாற்றுப் பாடமாக சந்ததி கட த்த வேண்டிய பல்வேறு விடயங்கள் பேசப்படாமல் இருக்கின்றன. ஆவணப்படுத்தப்படாமல் இருக்கின்றன. வேகமாக அழிந்து வரும், கலப்புக்கு உள்ளாகி வரும் இனம் என்ற வகையில் நம் முன் இருக்கும் முக்கிய பணியை தவறவிட்டு வருவது பரவலாக உணரப்படுகின்றது”

போரின்போதும் போருக்குப் பின்னைய காரணிகளாலும் ஏற்பட்ட “பின்போர் விளைவுகளையும்” திட்டமிட்ட முறையில் தொடர்ந்து நடத்தப்படும் பண்பாட்டு இனப்படுகொலையையும் பதிவுச்செய்வதாகவும் ஆவணப்படுத்துவதாகவும் இத்தொகுப்பு அமைகின்றது.  அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்ட 41 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.  முள்ளிவாய்க்கால் போர் தொடர்பாகவும் போருக்குப் பிந்தைய நிலைமைகள் தொடர்பாகவும் வெளிவந்த பெரும்பாலான அறிக்கைகளும் ஆய்வுகளுடம் தரவுகள், புள்ளிவிபரங்கள் போன்றவற்றை உள்ளடக்கி ஐநா மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்குச் சமர்ப்பிக்கின்ற நோக்குடன் எழுதப்பட்டவையாகவோ அல்லது ஆய்வுநோக்கில் எழுதப்பட்டவையாகவோதான் அமைந்திருக்கின்றன.  மாறாக இந்த நூலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள காணமற்போனவர் பிரச்சனைகள், நுண்கடன் பிரச்சனைகள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் சென்று உரையாடி அவர்களது வாய்மொழிப்பதிவுகளைத் தொகுத்துக் கட்டுரையாக்கும் போக்கு தனித்துவமாகத் தெரிகின்றது.  பாதிக்கப்பட்டவர்களின் குரல்களிலேயே அவை தொகுக்கப்பட்டிருப்பதுடன் அதனால் உருவாகக்கூடிய ஜனநாயகத்துக்கான வெளியும் முக்கியமானதாகும்.  சமகாலத்தில் நடக்கின்ற அபிவிருத்தி என்ற பெயரால் நிகழ்த்தப்படும் குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்பு, நினைவேந்தலின் தேவையும் நினைவுகூரும் உரிமை மறுக்கப்படுதலும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் உருவாக்கம், கடல் அபகரிப்பு, மரபுரிமைகள் அடையாளம் மாற்றப்பட்டல் ஆகிய பிரச்சனைகளைப் பற்றியதாக அமைந்திருக்கின்ற ஏனைய கட்டுரைகளும் கூட எளிமையாகவும் சுருக்கமாகவும் அமைந்திருப்பதும் முக்கியமானதாகும்.  குறித்த நோக்கத்திற்காக செயற்படுபவர்கள் அந்த விடயம் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் பரவலாக மக்களைச் சென்றடையவேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியமானது.  இந்த நூலின் உள்ளடக்கமும் வடிவமும் நூல் பரந்துபட்ட மக்களைச் சென்றடையக் கூடியதாக அமைகின்றது. 

பின்போர்க்க்காலத்தின் மோசமான விளைவுகளில் ஒன்றாக நுண்கடன் பிரச்சனைகளைச் குறிப்படலாம்.  இத்தொகுப்பில் செ. ராஜசேகர் எழுதியிருக்கின்ற “கையேந்தும் கலாச்சாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009” என்கிற கட்டுரை நுண்கடன்களால் நிகழும் கொடுமைகளைப் பற்றிக் கூறுகின்றது.  வங்கிக் கடன்களுக்கான வட்டி  8% ஆகவும், சுயதொழிலுக்கான கடன் வட்டி 14% ஆகவும், அடகு வைக்கும்போதான வட்டி 15 – 21% ஆகவும் இருக்கின்றபோது நுண்கடன் 40% – 220 % இருப்பதாக க் கூறும் இக்கட்டுரை நுண்டகடன்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலரின் கதைகளையும் கூறுகின்றது.  நுண்கடன்களை வழங்குபவர்கள் பெண்களைப் பொறுப்பாக வைத்தே நுண்கடன்கள் வழங்கும் நடைமுறையைக் கொண்டுள்ளனர், இது ஒருவிதத்தில் சமூகத்தில் பெண்கள் பற்றி இருக்கக்கூடிய பொதுப்புத்தி சார்ந்த அடையாளத்தைப் பேணுகின்ற போக்கினை வைத்துச் செய்கின்ற சுரண்டலேயாகும்.  அதிகரித்து வருகின்ற தற்கொலைகள், மன அழுத்தம் / உளவியல் தாக்கம் என்பவற்றுக்கும் நுண்கடன்களுக்கும் இருக்கின்ற தொடர்புகள் குறித்து ஆராய்வதுடன் நுண்கடன்கள் கொடுப்பவர்களுக்கான நிதிமூலங்கள் யாவை, புலம்பெயர் தமிழர்களுக்கும் நுண்டகடன்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்பன குறித்தும் ஆய்வுகளை நீட்டிப்பது அவசியம் என்றே கருதுகின்றேன்.

இத்தொகுப்பில் பரணி கிருஷ்ணரஜனி எழுதிய “இன அழிப்புப் பின்புலத்தில் பெண்கள்”, ”நந்திக்கடல் கோட்பாடு ஒரு அறிமுகம்” என்கிற இரண்டு கட்டுரைகள் இருக்கின்றன.  இன அழிப்புப் பின்புலத்தில் பெண்கள் என்கிற கட்டுரை இனப்படுகொலைகளின் போது பெண்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள் குறித்தும் அவை குறித்த இனத்தவருக்கு ஏற்படுத்தக்கூடிய உளவியல் தாக்கம் குறித்தும் கூறுகின்றது; அவை முக்கியமான விடயங்கள்.  ஆனால் அவற்றுக்கான தீர்வுகளாக இந்தக் கட்டுரை குடும்ப அமைப்பைப் பேணுவதையும் குழந்தைகளை அதிகம் பெற்றுக்கொள்வதையும் முன்வைக்கின்றது.  இந்தக் கட்டுரையில் சொல்லப்படுகின்ற பிரச்சனைகள் இருப்பது உண்மையென்றாலும் அதற்காக முன்வைக்கின்ற தீர்வு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.  பெண்ணுரிமையையும் இனத்தின் பண்பாட்டையும் ஒரே சமயத்தில் காப்பதில் சிக்கல்கள் இருப்பதாகப் பேசுகின்ற இந்தக் கட்டுரை இனத்தூய்மையையே மறைமுகமாக முன்னிறுத்துவதாகத் தெரிகின்றது.  அதற்காகப் பெண்ணுரிமையை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று மறைமுகமாக அழுத்தம் கொடுக்கின்றது.  தேசியவாதத்தை முன்வைத்துச் செயற்படுபவர்கள் அதன் உள்ளடக்கமாக சமூகநீதி இருக்கவேண்டும் என்பதை கட்டாயமான நிபந்தனையாக கவனத்திற்கொள்ளவேண்டும்.  அப்படி இல்லாமல் இனத்தூய்மையின் அடிப்படையில் தேசியத்தைக் கட்டவெளிக்கிட்டால் அது பாசிசத்துக்கே அழைத்துச்செல்லும்.    அதுபோல பரணி கிருஷ்ணரஜனி எழுதியுள்ள மற்றோரு கட்டுரையான ”நந்திக்கடல் கோட்பாடுகள் ஓர் அறிமுகம் என்ற கட்டுரையும் அதில் அவர் முன்வைக்கின்ற விடயங்களும் கடுமையாக விமர்சிக்கவும் நிராகரிக்கவும்பட வேண்டியன.  தற்செயல் நிகழ்வுகளையெல்லாம் திட்டமிட்ட தந்திரோபாயங்களாகவும் வியூகங்களாகவும் கட்டமைத்து எழுதிக் குவிக்கும் இப்படியான கட்டுரைகள் மக்களை ஏமாற்றும், வீணாக உணர்ச்சிவசப்பத்தி மந்தைத்தனமாக வைத்திருக்கும் செயல். 

குடியேற்றத் திட்டங்களின் மூலம் செய்யப்படும் நில அபகரிப்பு, அபிவிருத்தித் திட்டம் என்ற பெயர்களில் தொடர்ந்து நடந்துவரும் நில அபகரிப்பு என்பன குறித்த கட்டுரைகள் மகாவலி அபிவிருத்தித் திட்டம், வெலி ஓயா அபிவிருத்தித் திட்டம், வவுனியாவில் நடந்துள்ள குடியேற்றங்கள், பெயர் மாற்றங்கள் என்பற்றைப் பற்றிக் கூறுகின்றன.  ஜெனோஜன் எழுதியிருக்கின்ற ”தமிழர் நீக்கம் செய்யப்படும் தமிழர் தலைநகரம்” என்ற கட்டுரையில் திருகோணமலையை மையமாக வைத்து நடக்கின்ற

  • அபிவிருத்தியின் பெயரிலான நில அபகரிப்பு
  • முஸ்லிம்களாலும் இராணுவத்தினராலும் பழங்குடி மக்களின் நிலம் அபகரிக்கப்படுதல்
  • வனவளத் திணைக்களத்தினூடாக நிலம் அபகரிக்கப்படலும் சேனைப்பயிர்ச்செய்கையைத் தடைசெய்துவருவதால் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடிகளும்
  • தொல்பொருட் திணைக்களத்தின் நிலக்கையகப்படுத்தல்கள் (பல்வேறு வரலாற்றுப் பின்னணி கொண்ட இடங்கள் பற்றி வரலாற்றுத் திரிபொன்றை ஏற்படுத்தி மக்கள் குடியேறவோ கடமைகளைச் செய்யவோ முடியாத இடமாகப் பிரகடனம் செய்தல்)
  • புத்தர் சிலைகளை நிறுவி அதனூடாப் புனையப்படும் வரலாறு

ஆகியவற்றைப் பற்றிச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் எழுதப்பட்ட நல்லதோர் கட்டுரை.  வரலாற்று ரீதியாக தமிழர்கள் தொடர்ந்து வாழ்கின்ற பல்வேறு பிரதேசங்களிலும் நடக்கின்ற திட்டமிடப்பட்ட அரச ஆக்கிரமிப்புகளை இந்தக் கட்டுரையைச் சட்டகமாக வைத்து இலகுவாகப் புரிந்துகொள்ளமுடியும். 

ஈழத்தமிழருக்கு நடந்த இனப்படுகொலைக்கு நீதிவேண்டி போராடிவருகின்ற அமைப்புகள் கூட இனப்படுகொலை என்றால் என்ன என்பது பற்றிய பிரக்ஞையை வெகுஜனமக்களிடம் எடுத்துச் செல்வதற்காகப் போதியளவு வேலைசெய்யவில்லை என்றே சொல்லவேண்டும்.  இனப்படுகொலை என்பது வெகுஜன மக்களிடம் ஒரு “சொல்லாகவே” பதியவைக்கப்பட்டிருக்கின்றதே அன்றி ஒரு அரசியல் சொல்லாடலாக அது சென்றடையவில்லை.  அந்தவிதத்தில் பார்க்கின்றபோது சேரனும் ஷெரின் ஐக்கனும் சேர்ந்து எழுதியுள்ள “ருவாண்டா மற்றும் இலங்கை” இரு இனப்படுகொலைகளின் கதை என்கிற கட்டுரை முக்கியமானது.  இக்கட்டுரை ருவாண்டாவிலும் இலங்கையிலும் நடந்த இனப்படுகொலைகள் குறித்தும் அவற்றிற்கிடையிலான பொதுத்தன்மைகள் குறித்தும் கூறுகின்றது.  ஈழத்தமிழர்கள் தமது உரிமைகளுக்குக் குரலெழுப்பும்போது அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என்று, பிறநாடுகள் மீதும் தேசிய இனங்கள் மீதும் ஒடுக்குமுறையைச் செய்கின்ற நாடுகளிடமே தமக்கு ஆதரவு கேட்பது வழமை. மாறாக இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தேசிய இனத்தவர்களுடன் உரையாடுவதும் அவர்களை எமது உணர்வுத்தோழமைகளாக வென்றெடுப்பதுமே ஆக்கபூர்வமானதும் வினைத்திறன் தருவதுமாகும்.

நினைவேந்தல்களின் தேவையும் நினைவுகூர்வதற்கான உரிமைகள் மறுக்கப்படுவதும் பற்றிய கட்டுரைகளில் வண. பிதா அருட்திரு. எழில்ராஜன் எழுதிய பின் – முள்ளிவாய்க்கால் வரலாற்றுத்தளத்தில் நினைவுத்திறம் என்கிற கட்டுரையும் பாசன அபேவர்த்தன எழுதிய ”பத்தாண்டுகளில் முள்ளிவாய்க்கால் மரபு” என்ற கட்டுரையும் முக்கியமானவை.  இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டு இத்தொகுப்பு வெளிவந்தபோது இருந்ததை விட நினைவுகூர்வதற்குரிய உரிமைகள் மோசமாக மறுக்கப்பட்டிருக்கின்ற சூழலில் இந்தக் கட்டுரைகள் இன்னும் முக்கியத்துவமானவை.  இலங்கையின் நீதி என்கிற கட்டுரையும் போருக்குப் பின்னரான பத்தாண்டுகளில் தமிழ் ஊடகத்துறை என்கிற கட்டுரையும் ஊடகத்துறையும் நீதித்துறையும் எப்படி செயலிழந்துபோயுள்ளன என்பதைக் காட்டுவன,  குறிப்பாக நீதித்துறை பற்றிய கட்டுரையில் 1996 இல் மூதூர் குமாரபுரத்தில் நடைபெற்ற கொலைகளுக்கும் 2006 ஜனவரியில் திருகோணமலை கடற்கரையில் வைத்து 5 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்குமான நீதிமன்ற விசாரணைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டுகின்றது. 

இத்தொகுப்பில் உள்ள விடயங்களை ஏற்கனவே தெரிந்தவையும் கேள்விப்பட்டவையும் என்று தோன்றக்கூடும்.  ஆனால் ஒரு தொகுப்பாக அவை நூலுருவில் வெளிவந்திருப்பது முக்கியமானது.  அதனூடாக ஒரு உரையாடலையும் அறிவூட்டலையும் ஒருங்கே தொடக்கக் கூடியதாக இருக்கின்றது. 


டிசம்பர் 15, 2019 அன்று ரொரன்றோவில் இடம்பெற்ற நந்திக்கடல் பேசுகிறது நூல்வெளியீட்டுவிழாவில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். இது மே 2021 தாய்வீடு இதழில் பிரசுரமானது

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑