ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு

பண்பாட்டுப் படையெடுப்பு என்பது பற்றிப் பலதடவைகள் வெவ்வேறு இடங்களில் பேசியிருக்கின்றோம் என்றாலும் இப்போதையை சூழலில் இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்றால் என்னவென்பதைப் பற்றி நாங்கள் சற்று ஆழமாக யோசிக்க வேண்டி இருக்கின்றது.  நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பின் தாக்கங்களும் அதன் விளைவுகளும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்திலும் தீவிரடைந்து இருப்பதை அண்மைக் காலங்களில் நிகழும் சம்பவங்கள் ஊடாக நம்மால் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

பொதுவாக படையெடுப்பு என்கிறபோது அதை போர் சம்பந்தமாகவும் ராணுவத்துடன் சேர்ந்து அடையாளப்படுத்தக் கூடிய ஒன்றாகவுமே நாம் இயல்பாகப் புரிந்துகொள்வோம்.  ஆனால், இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது சற்று வேறுபட்டது. தமிழகச் சூழலில் நிகழ்ந்து கொண்டிருந்த ஆரிய அல்லது பார்ப்பனியப் பண்பாட்டு தாக்கத்தை முன்வைத்து தந்தை பெரியார் அவர்களின் பேச்சுக்கள், எழுத்துக்கள், செயற்பாடுகள் என்பவற்றினை உள்வாங்கி அதன் அடிப்படையிலேயே இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்கிற கருத்தாக்கத்தை நான் புரிந்துகொள்கின்றேன்.  பெரியார் பொதுவாக எதையும் கோட்பாடுகளையும் மேற்கோள்களையும் சுட்டிக்காட்டி தனது வேலைத்திட்டங்களை வகுத்துக்கொண்டவர் அல்லர்.  சமூகம் பற்றிய அக்கறை, சமூக விடுதலை நோக்கியதான பயணம் என்பதனை அவர் அவர் தொடர்ச்சியான நடவடிக்கைகள், எதிர்வினைகள், தர்க்கபூர்வமான கேள்விகள்,  மக்களுடன் தொடர்ச்சியான உரையாடல்கள் என்பவற்றோடு மேற்கொண்டவர் அவர்.  அவற்றின் அடிப்படையில் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது பற்றி அவருக்குப் பிரக்ஞை பூர்வமான அறிதல் இருந்திருக்கின்றது.  பண்பாட்டுப் படையெடுப்பு என்பதை, ஒரு சமூகம் (சமூகம் அ) இன்னொரு சமூகம் (சமூகம் ஆ) மீது அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (சமூகம் ஆ) தாங்கள் அவர்களுக்குப் (சமூகம் அ) பண்பாட்டின் அடிப்படையில் கீழ்ப்பட்டவர்கள், தாழ்ந்தவர்கள் என்றும் நினைக்கும்படி அவர்களது சிந்தனையைக் கட்டமைத்துக் கொள்ளும் நிலைக்கான காரணி பண்பாட்டுப் படையெடுப்பு என்று கருதலாம்.  பண்பாட்டுப் படையெடுப்பு ஒன்று நிகழ்வதற்கு இரண்டு காரணிகள் முக்கியமாக அமைகின்றன,  முதலாவது காரணியாக இந்தப் பண்பாட்டுத் திணிப்பை நிகழ்த்துகின்ற தரப்பும், இரண்டாவது தரப்பாக இந்தப் பண்பாட்டுத் திணிப்பு நிகழ்வதை அனுமதித்துவிடுகின்ற தரப்பும் அமைந்துவிடுகின்றன. 

இந்த பண்பாட்டு படையெடுப்பு என்பது பற்றி நாங்கள் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் பேச வேண்டி இருக்கின்றது. அதன் முதற்கட்டமாக இந்த உரையாடலை தொடக்கும் பொருட்டு இந்தக் கட்டுரையில் நாங்கள் ஈழத்தவர்கள் மீது நிகழ்த்தப்படும் பண்பாட்டுப் படையெடுப்புடன் தொடர்பான மூன்று விடயங்களைப் பார்ப்போம். 

  1. பண்பாட்டுப் படையெடுப்பு என்ற விடயத்தில் ஊடகங்களின் வகிபாகம்.
  2. பண்பாட்டுப் படையெடுப்பின் மூலம் சடங்குகளில் நிகழ்கின்ற மாற்றங்களும் கலை, இலக்கியத் துறைகளில் செலுத்தப்படும் தாக்கங்களும்
  3. பண்பாட்டுப் படையெடுப்பினால் நிகழுகின்ற பொருளாதார ரீதியிலான தாக்கங்கள்

பண்பாடு என்பது எப்பொழுதும் நிலையானதாக இருப்பதில்லை அது தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பது என்பது எல்லோரும் அறிந்ததே.  அதேநேரம், இயல்பாக கால ஓட்டத்தில் நிகழும் மாற்றங்களிற்கும் புறக் காரணிகளின் நேரடியான பாதிப்பினால் அல்லது தூண்டலினால் நிகழும் சடுதியான மாற்றங்களிற்கும் வேறுபாடு இருக்கின்றது. பண்பாடு பற்றியும் மரபுரிமை பற்றியும் பேசுகின்றபோது ஒரு விடயத்தில் கூடுதல் அக்கறையாக இருக்க வேண்டும்.  பண்பாட்டையும் மரபுரிமையையும் காப்பதாகச் சொல்லுகின்றபோது அவற்றில் இருக்கக் கூடிய பிற்போக்குத்தனங்களும், ஒடுக்குமுறைகளைச் செய்வதற்கான தளங்களை வழங்கக் கூடியதாக அவற்றில் இருக்கின்ற அம்சங்களையும் நாம் சரியாகவும் கவனமாகவும் இனங்கண்டு அவற்றைப் பற்றிய உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவேண்டும்.  எனவே பண்பாட்டுப் படையெடுப்பு என்று பேசும்போதும் அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பால் நிகழ்த்தப்படுகின்றன அடிமைப்படுத்தும் சிந்தனைமுறையையும் அதற்குப் பின்னால் இருக்கின்ற  பண்பாட்டு ஆதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் என்பனபற்றிய உரையாடல்களையும் பிரக்ஞையையும் ஏற்படுத்தவேண்டும் என்பது முக்கியமானது. 

தொடர்ச்சியாக பண்பாடு சார்ந்த அம்சங்கள் மாறிச் செல்லும்போது உணவுப் பழக்கவழக்கம் மாறாது நீண்டகாலம் இருக்கக்கூடியது என்பதாக ஒரு கருத்து இருக்கின்றது.  ஆனால் நாளாந்த வாழ்வின் உதாரணங்களின் அடிப்படையில் குறுகியகாலத்தில் ஈழத்தவர்களின் உணவுப்பழக்கங்களில் இடம்பெற்ற மாற்றங்களைப் பார்ப்போம்.  ஈழத்திலும் சரி, கனடாவிலும் சரி திருமண விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பரிமாறப்படும் உணவுகள், சிற்றுண்டிகள் என்பவற்றில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துக்கொண்டால், வழமையாக இருந்த உணவுகள் மாறி சடுதியாக பனீர் மசாலா, பட்டர் சிக்கன், நாண் உள்ளிட்ட உணவுப்பொருட்களும் சிற்றுண்டிகளுமே பிரதானமாகப் பரிமாறப்படுகின்றன.  உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகள், சிற்றுண்டிகளிலும் அவற்றின் தயாரிப்பு முறையிலும் தென்னிந்திய வட இந்திய முறைகளே திடீரென்று பரவலடைந்துள்ளன.  கனடாவில் இந்தப் போக்கினை தெளிவாக இனங்காணக் கூடியதாக இருக்கின்றது.  நீண்டகாலமாக மக்கள் மத்தியில் நிலைத்த பெயரைக் கொண்ட கனடிய உணவகம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய சமையல் கலைஞர் ஒருவரிடம் பயிற்சிபெற்ற சமையல் கலைஞர்களை வைத்து அந்தத் தென்னிந்திய சமையல் கலைஞர் வழங்கிய உணவு தயாரிப்பு முறைகளின்படி (Recipe)  தமது உணவுகள் தயாரிக்கப்படுவதாக விளம்பரம் செய்தது நல்லதோர் உதாரணம்.  நாம் சிலவிடயங்களை ஆராயலாம்.

குறித்த சமையல் கலைஞர் தமிழகத்தில் இருந்து வெளிவருகின்ற இதழ்களில் கடந்த சில ஆண்டுகளாக உணவு தயாரிப்பு முறைகள் குறித்துத் தொடர்ச்சியாக எழுதிவந்தவர்.  பின்னர் தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் தொடர்ச்சியாகப் பங்கெடுத்து சமையல் குறிப்புகள் வழங்கிவந்தவர்.  தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் பார்க்கின்ற வழக்கம் ஈழத்தவர்களிடம் நீண்டகாலமாக இருந்தது என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக அது வேகமாக அதிகரித்தது, ஒவ்வொரு வீடுகளிலும் முழுநேரமும் ஏதாவது ஒரு தென்னிந்திய தொலைக்காட்சி இயங்குகின்ற வழக்கம் இப்போது பொதுவானதாகிவிட்டது.  குறித்த சமையல் கலைஞரும், அவர் வழங்குகின்ற சமையல் குறிப்புகளும், உணவு தயாரிப்பு முறைகளும் இந்த ஊடகங்களூடாக மக்கள் மத்தியில் பிரபலமாகின்றன.  அந்தப் பிரபலத்தை வைத்துத் தமக்கு விளம்பரமாக்க குறித்த உணவகம் நினைக்கின்றது.  இந்தச் செயற்பாடுகளினூடக சமகாலத்தில் உணவுப் பண்பாடு மாற்றமடைகின்றது. இதனை ஒரு வியாபார, விளம்பர உத்தியாக எடுத்துக்கொண்டு ஏனைய உணவகங்களும் தாம் பரிமாறும் உணவுகளையும் உணவுத் தயாரிப்பு முறைகளையும் மாற்றுவார்கள், புதிது புதிதாக சமையல் கலைஞர்களை “விம்ப உருக்களாக” இறக்குமதி செய்வார்கள்.  இப்படியாக உணவுப் பண்பாடு மாற்றமடைவது சேர்த்து அவற்றுக்கான மசாலாப் பொருட்கள், உணவு மூலப் பொருட்கள் என்று பெரியதோர் சந்தையும் நுகர்வுக் கலாசாரமும் இந்தியாவை நோக்கிச் செல்லும். 

தென்னிந்தியத் தொலைக்காட்சிகளில் அண்மைக்காலங்களில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வட இந்திய நாடகங்களும் பெருமளவில் ஒளிபரப்பாகின்றன.  தவிர, அவற்றில் ஒளிபரப்பப்படுகின்ற இதர நிகழ்வுகளிலும் கூட வட இந்தியப் பாணியிலான ஆடைகளும் அணிகலங்களும் அதிகம் பாவிக்கப்படுகின்றன.  புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை குழந்தைகளும் சிறுவர்களும் தென்னிந்தியத் தொலைக்காட்சி, திரைப்படங்கள் என்பவற்றின் ஊடாகவே தமிழ்மொழியுடன் பரிச்சயம் அடைகின்றார்கள் என்றபோதும் அவற்றிலிருந்து பெற்றுக்கொள்வதையே தமது பண்பாட்டு வாழ்வியல் அம்சங்களாகக் கருதிக்கொள்கின்றார்கள் என்பது கசப்பான உண்மையே.  அதேநேரம் அவர்கள் அவற்றிலிருந்தே சடங்குகளையும், ஆடைகளையும், அணிகலங்களையும் தமிழர் பண்பாடு என்ற புரிதலுடன் செய்யத் தொடங்கிவிடுகின்றார்கள்.  அதன் தொடர்ச்சியாக தாமும் அந்தச் சடங்குகளைக் கடைப்பிடிக்கவும், சடங்குகளிலும் விசேட நிகழ்வுகளிலும் அதே ஆடைகளையும் அணிகலங்களையும் அணியவும் பழகிக்கொள்ளுகின்றார்கள்.    பெற்றோர்களுக்கும் இதுபற்றிய பிரக்ஞை இருப்பதாகத் தெரியவில்லை.  சில ஆண்டுகளுக்கு முன்னர் ரொரன்றோவில் இடம்பெற்ற Tamil Street Festival ஒன்றில் தமிழ்ப் பண்பாட்டில் ஆடை அணிந்தவர்கள் நடைபவனி வருகின்றனர் என்ற அறிவுப்பு ஒலிபெருக்கியில் தொடர்ந்துகொண்டிருக்க குர்தாவும் சஃபாரியும் அணிந்த சில இளைஞர்கள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருந்தார்கள்.  அதுமட்டுமல்லாமல், இந்தப் புரிதலின்மையின் காரணமாக திருமண விழாவிற்கு முன்னர் பஜன் பாடல், மெஹந்தி அணிதல் ஆகியன இப்போது புலம்பெயர் நாடுகளில் ”புதிய தமிழ்ப் பண்பாடுகள்” ஆகிவிட்டன. 

அதன் தொடர்ச்சியாக மீண்டும் இன்னொரு விதமான நுகர்வுக் கலாச்சாரத்திற்கும்  பொருளாதாரச் சுரண்டலிற்கும் அவர்கள் ஆளாகிவிடுகின்றார்கள்.  உதாரணமாக அரங்கேற்றம் ஒன்று நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்குத் தேவையான ஆடைகள், அணிகலங்களை வாங்குவதற்கு இந்தியாவிற்குச் செல்கின்ற ஒரு வழக்கம் இப்போது வந்திருக்கின்றது.  அதற்காகவே மாணவர்களுடன் மாணவர்களது பெற்றோரும் ஆசிரியரும் இந்தியா செல்கின்ற வழமையும் இருக்கின்றது.  இதனூடாக குறித்த அந்த மாணவி அல்லது மாணவருக்கான ஆடைகள் அவர்களது ஆசிரியர்களுக்கான ஆடைகள் மற்றும் போய்வருவதற்கான விமானச் சீட்டுகள் என்றும் பெருந்தொகை பணம் செலவாகின்றது.  இதுபோலவே திருமண வீடுகள், பூப்புநீராட்டு விழா போன்றவற்றில் நெருங்கிய உறவினர்களுக்கு சேர்த்தே உடைகளும் அணிகலங்களும் வாங்குகின்ற வழமையும் இருக்கின்றது.  இவற்றுக்கு என்று செலவழியும் பணம் பல்லாயிரக் கணக்காக டொலர்கள் என்பதுடன் இவ்வளவு தொகை கொடுத்து வாங்கப்படும் ஆடைகளும் அணிகலங்களும் ஒரு தடவைக்கு மேல் அணியப்படுவது இல்லை.  ஊடகங்களினூடாக் இவ்விதமாக திணிக்கப்படும் பண்பாட்டுப் படையெடுப்பின் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு வழிமுறைகள் ஊடாக பண்பாட்டு அழிப்பு நடக்கின்றது; ஒன்று இருக்கின்ற ஒன்றை இல்லாமல் ஆக்குவது,  அதே சமயத்தில் அதற்கு மாற்றாக இல்லாத ஒரு விடயத்தை புதிதாகப் புகுத்துவது.


அடுத்ததாக கலை இலக்கியம் போன்ற துறைகளில் இருக்கும் இந்திய மோகம் என்பது இந்திய / தென்னிந்திய கலை, இலக்கியம் குறித்த அடிப்படையில்லாத கற்பிதங்களால் வருகின்ற ஒருவிதமான அடிமை மோகம் என்று குறிப்பிடலாம்.  துரதிஸ்ரவசமாக எமது நண்பர்கள் பலர் கூட இந்த மோகத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள் என்பதைச் சொல்லிக்கொண்டுதான் இதைப்பற்றிப் பேசவேண்டி இருக்கின்றது.  சாதாரணமாக நண்பர்களுடன் நடைபெறும் சில உரையாடல்களில் இந்த விடயம் பற்றிப் பேசும்பொழுது ”என்ன இருந்தாலும் இந்தியர்கள் எழுதுவதுதான் எழுத்து அவர்கள், பெரிய ஆட்கள்” என்ற சொல்லாடல்களை அடிக்கடி கேட்கக்கூடியதாக இருக்கின்றது.  இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அம்சம் அடிமைத்தனமாக சிந்தனைமுறையால் கட்டமைக்கப்பட்ட பண்பாட்டு அடிமைத்தனம் என்றே சொல்லவேண்டி இருக்கின்றது.  சமகாலத்தில் ஈழத்தவர்கள் தமது நிலம்சார்ந்த உணவுசார்ந்த பண்பாட்டு பழக்க வழக்கங்கள் சார்ந்த விடயங்களை உள்வாங்கி எழுதும்போது / பேசும்போது அதற்கான வழக்காறுகளை பேச்சுவழக்கிலும் மொழிநடையிலும் பயன்படுத்தும்போது இந்திய வாசகர்களுக்கு அவை தடங்கலாக இருக்கிறது என்பதற்காகவே ஒரு செயற்கையான மொழிநடை பேச்சுவழக்கிலும் எழுத்துவழக்கிலும் பயன்படுத்தப்படுகின்ற வழக்கம் ஓர் உத்தியாகக் கையாளப்படுகின்றது.  ஈழத்தில் இதழியலும் பதிப்பு முயற்சிகளும் இன்னமும் தொழில்முறையாக மாறாத சூழலில் அங்கு எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் மற்றும் ஏனைய கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களும் எதிர்கொள்ளும் சவால்கள் நிறைய இருக்கின்றன.  இதற்குமேலாக இன்னொரு சவாலாக ஈழத்துப் படைப்புகள் பலவற்றை இந்தியாவில் சந்தைப்படுத்த முடியாத நிலை ஓர் இந்திய சட்டமாகவோ அல்லது வழிமுறையாகவோ இருக்கின்றது என்பதையும் நாங்கள் நினைவிற்கொள்ள வேண்டும். இன்றுவரை தமிழகத்தில் இருக்கும் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் இது குறித்து ஓர் இடத்திலும் பேசியதாகவோ அல்லது எதிர்க்குரல் எழுப்பியதாகவோ நாம் அறியவில்லை.  அவர்கள் அதற்குச் சொல்கின்ற தீர்வு எல்லாம் நீங்கள் ஏன் வீணாக ஈழத்து இதழ்களில் எழுதிவருகின்றீர்கள், தமிழகத்தில் எத்தனையோ இதழ்கள் வருகின்றனதானே, தமிழகத்துப் பதிப்பகங்களில் உங்கள் புத்தகங்களைப் பதிப்பிக்கலாம் தானே?  என்பதாகவே இருக்கின்றது.  தற்போதையை நிலையில் இப்படியாக அவர்கள் கூறுவது கூட பண்பாட்டு ரீதியில் அடக்குகின்ற ஓர் அம்சமாகவே கருத்தப்படவேண்டும்.  தற்போதைய நிலை மாற்றமடைந்து இந்திய நூல்கள் எப்படி ஈழத்துக் கடைகளில் விற்கப்படுகின்றனவோ அதுபோல ஈழத்து நூல்கள் இந்தியாவில் உள்ள கடைகளில் நேரடியாகவே விற்கலாம் என்கிற  நிலைவரவேண்டும், அதுவரை ஈழத்தவர் இதழ்களையும் நூல்களையும் தமக்குக் கிடைப்பதில்லை என்பதுவும், அவர்களை தமிழகத்து இதழ்களில் எழுதவேண்டும் என்பதைப் பரிகாரமாக முன்வைப்பதும் அறம் சார்ந்ததாகமாட்டா. 

பொதுவாக கலை இலக்கியம் என்று சொல்கின்ற பொழுது எழுத்து சார்ந்த விடயங்களை மட்டும் நாங்கள் கவனத்தில் கொள்ளக்கூடாது; அதற்கு மேலாகவும் ஏனைய கலை வடிவங்கள் குறித்தும் பேசவேண்டும்.  தமிழகத்தில் திரைப்படம் என்ற பெயரில் எடுக்கப்படுகின்ற  அனைத்துவிதமான குப்பைகளும் கூட உடனடியாக ஈழத்திற்கும் புலம்பெயர் நாடுகளிற்கும் சென்றடைந்துவிடுகின்றது.  தமிழக திரைப்படத்துறையில் வணிக ரீதியான வளர்ச்சிக்கு புலம்பெயர் நாடுகளில் வளரும் ஈழத்தமிழர்களே முக்கிய காரணிகள்.  அப்படி இருக்கின்றபோதும், ஈழத்தில் அல்லது புலம்பெயர் நாடுகளில் எடுக்கப்பட்ட நல்ல / கவனத்திற்கொள்ளப்படவேண்டிய திரைப்படங்கள் கூட இந்தியாவில் திரையிடப்படுவதில்லை.  அப்படித் திரையிட முயற்சி எடுக்கப்பட்ட கனடாவில் வெளியான ஒரு படத்திற்கு படத்தில் இருக்கின்ற பேச்சு வழக்கினை “இந்தியத் தமிழிற்கு” டப் பண்ணவேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாகச் சொன்னதாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது.  மேலும் I Scream என்ற கனடாவில் வெளியான ஒரு திரைப்படத்தின் இறுவட்டில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்னர்  பின்வரும் அறிவிப்பு விடப்பட்டிருக்கின்றது, “இந்தத் திரைப்படத்தில் உள்ள உரையாடல்கள் தமிழ்நாட்டு திரைப்பட பேச்சு வழக்கில் இடம்பெற்றுள்ளது.  வியாபாரமாக்கவேண்டிய தேவை இருப்பதால் இதை மாற்றியமைத்துள்ளோம்”.  இங்கு கவனிக்க வேண்டியது நாம் முன்னரே சொன்னது போல ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு என்பது நடப்பதற்கு அந்தப் பண்பாட்டை திணிக்கின்ற தரப்பு ஒன்றும் அந்தத் திணிப்பை ஏற்றுக்கொள்ளும்படியாகக் கட்டமைக்கப்பட்ட அடிமைத்தனமாக சிந்தனைமுறையைக் கொண்ட இன்னொரு தரப்பும் தேவையாக இருக்கின்றது என்பதை மீளவும் நினைவில் கூறவேண்டியிருக்கின்றது. 

கனடாவில் கிட்டத்தட்ட 100 க்கு மேற்பட்ட ஊர்ச்சங்கங்களும் பாடசாலைச் சங்கங்களும் இருக்கின்றன என்று ஒரு கணக்குச் சொல்லப்படுகின்றது.  இவை  ஒருங்கிணைக்கின்ற ஆண்டு விழாக்களிலும் கொண்டாட்ட நிகழ்வுகளிலும் தென்னிந்தியக் கலைஞர்கள், தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள், சுப்பர் சிங்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்ற கலைஞர்கள் வந்தால்தான் அந்த நிகழ்விற்கு மக்கள் வருவார்கள் என்றும் அவைதான் கொண்டாட்டமானவை, இவர்கள் வந்தால்தான் விளம்பரதாரர்கள் விளம்பர அனுசரனை வழங்குவார்கள் என்றும் ஒரு நம்பிக்கை அல்லது ஒரு சமாளிப்பு அடிக்கடி சொல்லப்படுகின்றது.  சரி அப்படியே விளம்பரதாரர்கள் இதற்காகத்தான் பணம் தருவார்கள் என்று வைத்துக்கொள்வோம்; ஆனால் மேலே சொன்ன கலைஞர்களைக் கொண்டு வருவதற்கு இங்கு கொடுக்கப்படுகின்ற டிக்கெட் செலவு, அவர்கள் இங்கு வந்து நிற்பதற்கான தங்குமிடச் செலவு, அதைத் தவிர அவர்கள் இங்கு இருக்கின்ற காலங்களுக்கு செலவழிக்கப்படுகிற செலவுகள் உட்பட எல்லாவற்றையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் இந்த விளம்பரதாரர்கள் தருகின்ற பணத்தை விடக்கூடுதலாக மேலே சொன்ன கலைஞர்களைக் கூப்பிடுவதால் வருகின்ற செலவு அமைந்துவிடுகின்றது.  தவிர, இப்படியானவர்கள் வந்து செய்கின்ற நிகழ்ச்சிகள் கூட மிகப் பிற்போக்குத்தனமாகவையாக, கருத்தியல் ரீதியில் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவையாக, வெறுமே திரைப்பட ஆபாசங்களாகவோ அமைந்துவிடுகின்றன.   ஊர்ச்சங்கங்களும் பாடசாலைச் சங்கங்களும் பண்பாட்டைக் காப்பாற்றுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு இதுதான் பண்பாடு என்று சொல்லி இளைய தலைமுறைக்கும் இந்தச் சீரழிவுகளை சொல்லிக்கொடுப்பதை விட பண்பாடு என்பது பற்றிய எந்த அறிவும் இல்லாமல் அடுத்த தலைமுறை வளர்வதே ஆரோக்கியமாக இருக்கும். 

இப்படியாக பிற்போக்குத்தனமான, சமூகத்திற்கு எந்தவிதத்திலும் பிரயோசனம் இல்லாத கருத்துக்களைப் பரப்புவதை விட அரசியல் நுண்ணுணர்வுடன் கலைத்துவமும் நிறைந்த நிகழ்வுகளைப் படைக்கக் கூடிய ஈழத்துக் கலைஞர்களும் கலைவடிவங்களும் இருக்கின்றன.  அவர்களை வைத்து சரியான ஒருங்கிணைப்பில்  புலத்திலும் ஈழத்திலுமாக நாங்கள் வாழ்கின்ற நிலங்களது பேசவேண்டிய பிரச்சினைகளை சமூகநீதியையும் மானுடவிடுதலையையும் நோக்கியதாக, அனைத்துவிதமான அடக்குமுறைளுக்கும் எதிரானதான நிகழ்ச்சிகளை எம்மால் தயாரிக்கமுடியும்.  அப்படியாக நிகழ்வுகளை நடத்துவதுதான் சமூகத்திற்கும் மக்களுக்கும் இளைய தலைமுறைக்கும் நாம் செய்கின்ற பொறுப்பான செயலாக அமையும். 


இந்தக்கட்டுரையை வாசிப்பவர்கள் பலரும் ஏதோ ஒரு விதத்தில் வாசிப்புடன் தொடர்புடையவர்கள்.  உங்களிடம் பகிரவேண்டிய இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால், புலம்பெயர் நாடுகளில் இருந்தும் ஈழத்திலிருந்தும் வெளிவருகின்ற பத்திரிகைகள் இதழ்கள் என்பன இலவசமாகக் கொடுக்கப்படவேண்டியன அல்லது இலவசமாக கொடுப்பதற்கான தகுதியையே உள்ளடக்கத்தில் கொண்டிருப்பன என்கின்ற ஒரு விதமான சிந்தனை எம்மில் பலருக்கு இருக்கின்றது.  இது மிக மோசமான சிந்தனை என்று தான் சொல்ல வேண்டும்.  கனடாவை எடுத்துக்கொண்டால் பலசரக்குக் கடைகள் பலவற்றில் கூட ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் முதல் ஆவிகள் உலகம் வரை பல இதழ்கள் விற்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தரத்திலும் உள்ளடக்கத்திலும் இவற்றை விட சிறந்ததாக இருக்கக் கூடிய பல ஈழத்துப் பத்திரிகைகளையும் இதழ்களையும் வாங்குவதற்கு அவர்கள் தயாராக இருப்பதில்லை.  இந்த மனநிலைக்கான காரணம் அவர்களது சிந்தனைமுறையைக் கட்டமைக்கும்படியாக நிகழ்ந்துவருகின்ற பண்பாட்டுத் படையெடுப்பு என்பதைத்தான் மீளவும் வலியுறுத்தவேண்டியுள்ளது.  பெரியார், ஆரியரின் ஆதிக்கம் அல்லது அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு பற்றிப் பேசுகின்ற பொழுது அந்த ஆரியர்களுகளை விட அல்லது பார்ப்பனர்களை விடத் தாம் கீழானவர்கள், தாழ்வானவர்கள் என்பதை ஒவ்வொரு விடயத்திலும் நம்பிவிடும்படியான மனநிலை எப்படி திராவிடர் அல்லது தமிழர் மனதில் கட்டமைக்கப்பட்டது என்பது பற்றிப் பேசுகின்றார்.  அதன் தொடர்ச்சியாக புராணங்களும் சடங்குகளும் மதமும் இவற்றில் ஆற்றிய பங்கினைப் பற்றிக்கூறியதுடன் அந்த அடிப்படையில் சுயமரியாதைக்கும் சமத்துவத்துக்கும் எதிராகவும் சுயமரியாதையும் சமத்துவமும் இல்லாத அடிமைத்தனமான சிந்தனை முறையுடன் மனிதர்களை உருவாக்குவதற்கும் இந்த பண்பாட்டு படையெடுப்பே காரணமாக இருக்கின்றது என்ற அடிப்படையில்தான் அவர் தனது செயற்பாடுகளைத் தொடர்ந்தார்.  அந்த விதத்தில் பண்பாட்டுப் படையெடுப்பு என்ற விடயம் இன்று ஈழத்தவர்களுக்கும் பொருத்தமானதாகத்தான் இருக்கின்றது.  நாங்கள் இந்தியர்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் பண்பாட்டு ரீதியில், அல்லது இந்தியக் கலை வடிவங்களுக்கு அடிமைப்பட்டவர்கள், அவையே உன்னதங்களாக இருக்கின்றன, நம்மிடம் ஒன்றும் இல்லை, நாம் அவர்களில் தங்கியிருக்க வேண்டியவர்கள், அவர்களது தயவுடன் இருக்கவேண்டியவர்கள் என்கின்ற மனப்பான்மை இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பினாலும் அதன் தாக்கத்தினாலும் எமது மூளையில் பதிக்கப்பட்டுவிட்டது.  அன்று கதாகாலட்சேபமும் சடங்குகளும் புராணங்களும் செய்தவற்றை இன்று ஊடகங்களும் திரைப்படங்களும் சில கலை இலக்கியக்காரர்களும் சேர்ந்தே செய்கின்றனர்.  இவர்கள் குறித்து நாம் விழிப்பாக இருக்கவேண்டும்.


ரகறொன்ரோவில் இடம்பெற்ற 48வது இலக்கியச் சந்திப்பில் ஜுன் 3, 2018 அன்று ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.

இந்தக் கட்டுரை வடிவம் தாய்வீடு ஒக்ரோபர் 2020 இதழில் வெளியானது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: