இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆசிரியர்களுக்கு இருக்கின்ற அதிகாரமும், அதனை உடல் உளவன்முறையாக மாணவர்கள் மேல் திணிப்பதுமாக பல்வேறு அவதானங்களை நாம் கடந்தே வந்திருப்போம். மாணவர்களைத் துன்புறுத்துவதிலும் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதையும் உளமார ஒருவித குரூர திருப்தியுடன் அனுபவித்துச் செய்யும் ஆசிரியர்கள் பலரை நான் ஈழத்தில் கல்விகற்ற நாட்களில் கண்டிருக்கின்றேன். பலதடவைகள் அவற்றைப் பதிவுசெய்யவிரும்பியிருந்தாலும் இப்போது அனேகம் ஓய்வுபெறும் வயதில் இருக்கக்கூடிய அந்த ஆசிரியர்கள் மீது ஒருவேளை இவை குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவிடுமோ என்று தவிர்த்தே வந்தேன். ஆயினும், இன்று மாணவர்கள் – ஆசிரியர் உறவுமுறை பெருமளவில் சிதைவடந்திருக்கின்ற ஒரு சூழலில், அது பற்றிய அக்கறையுடன் சில உரையாடல்கள் ஏற்படுகின்ற சூழலில் இந்தக் கட்டுரையை எழுதுவதும் ஒருவிதத்தில் பயனுடையதாகும் என்பதே நம்பிக்கை.
சம்பவம் – ஒன்று
நாம் ஒன்பதாம் ஆண்டு அல்லது எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த காலம். அப்போது எமக்குக் கற்பித்த ஆசிரியர் அவர். வகுப்பில் ஒரு மாணவன் அவர் படிப்பித்துக்கொண்டிருக்கின்றபோது கதைத்தான் என்பதற்காக முன்னே வரும்படி அழைத்து கரும்பலகைக்கு அருகில், அவனது ஒரு கன்னம் கரும்பலகையைப் பார்த்துக்கொண்டிருக்கும்படி நிறுத்தினார். நிறுத்திவிட்டு, அவனது தலைக்கும் கரும்பலகைக்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியை பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை ஒன்றுக்குக்கான ஆயத்தங்களைச் செய்கின்ற நேர்த்தியுடன் சரிபார்த்தார். அதன்பிறகு மாணவர்களைப் பார்த்து, உங்களுக்கு டபிள் ஷொட் என்றால் தெரியுமா என்று கேட்டார். அவர் எமக்கு வகுப்பெடுக்கத் தொடங்கி அப்போது சில வாரங்களே ஆகியிருந்தன. எவருக்கும் புரியவில்லை. தெரியாது என்றோம். சடாரென்று திரும்பி அந்த மாணவனின் கன்னத்தில் அறைந்தார். அறைந்தவேகத்தில் தலை போய் கரும்பலகையுடன் அடிபட்டுத் திரும்பிவந்தது. அவன் முழுக்க நிலைகுலைந்துவிட்டான். அவனை மீளவும் நிமிர்த்தி முன்னரைப் போலவே திரும்ப ஒரு அறை… இப்படி ஒரு தடவை அல்ல; பல தடவைகள். கரும்பலகை என்று சொல்லப்பட்டாலும் சுவரில் கறுப்பு வண்ணம் அடித்தே அந்த “கரும்பலகை” உருவாக்கப்பட்டிருந்தது. பாடம் நடத்துவதிலும் சுவாரசியமாக வகுப்பெடுப்பதிலும் மிகப் பிரபலமாக இருந்த இந்த ஆசிரியர் மாணவர்களை ஏன் இத்தனை குரூரத்துடன் துன்புறுத்தினார் என்பது இப்போதும் புரியாமலேயே இருக்கின்றது. ஒருமுறை எமக்கு அவர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது வேறுவகுப்பைச் சேர்ந்த சிலமாணவர்கள் பேசிக்கொண்டு சென்றனர் என்பதற்காக அதில் ஒருவனை அழைத்தார். தயங்கித் தயங்கி அருகில் வந்த மாணவனை சட்டையின் கழுத்துப் பிரதேசத்தில் பிடித்து இரண்டு கைகளாலும் சட்டையைப் பிரித்து இழுத்தார். அத்தனை பொத்தான்களும் அறுந்துவிழுந்தன. முகத்தில் ஓங்கிக் குத்தினார். உண்மையில் அவர் கோபம் தலைக்கேறி என்ன செய்கின்றார் என்று தெரியாமல் அடித்தார் என்று கூடச் சொல்ல முடியாது. ஒரு மாணவனை அடிக்கப் போகின்றார் என்றால் முதலில் தனது கைக்கடிகாரத்தைக் கழட்டி மேசையில் கவனமாக வைப்பார். அதன் பிறகு தனது முழுக்கைச் சட்டையின் கைமடிப்பை முழங்கை வரை மடித்துவிடுவார். சில சமயங்களில் கண்ணாடியையும் கழட்டி கண்ணாடிப் பெட்டியில் வைத்து மூடி மேசையில் வைப்பார். இவ்வளவையும் மிகுந்த நிதானத்தையும் செய்துவிட்டே அவரது வன்முறைத் தாக்குதல் அரங்கேறும்.
சம்பவம் – இரண்டு
இன்னொரு ஆசிரியர் இருந்தார். எட்டாம் ஆண்டில் நாம் கற்றுக்கொண்டிருந்தபோது அவர் முதலாம் தவணை முடியவே கற்பிக்க வந்தார். வந்தவர், முதல் நாள் வகுப்பு முழுவதும் தனது வகுப்பில் யாரும் சேட்டை விட்டால் எப்படித் தண்டிப்பேன் என்பதைச் சொல்லிக்காட்டினார். அவற்றுள் சில தண்டனைகள்:
- மாணவரின் ஒரு பக்கக் காதில் குமிழ்முனைப்பேனா ஒன்றினை சற்றே நுழைத்து அந்தத் தலையை சுவருடன் ஓங்கி அடிப்பதன்மூலம் பேனாவை மறுபக்கம் வெளிவரச்செய்தல்
- அரைச்சுவற்றில் கையை ஊன்றிக்கொண்டிருக்கும்படி சொல்லிவிட்டு பலமாக முழங்கையில் அடிப்பதன் மூலம் முழங்கை மூட்டை உடைத்தல்.
சம்பவம் – மூன்று
எமக்குப் பக்கத்து வகுப்பினருக்கு சங்கீதம் படிப்பித்த ஆசிரியர் அவர். ஒருமுறை அவரது வகுப்பில் கற்றுக்கொண்டிருந்த ஒரு மாணவன் “ஸநிதப…” என்பதை “சாணி தப்ப…” என்று நகைச்சுவைக்காக சொல்லியிருக்கின்றான். அதற்குத் தண்டனையாக அவனது தலையில் உண்மையான மாட்டுச் சாணியை எடுத்துத் தப்பச் சொல்லித் தண்டனை கொடுத்திருக்கின்றார் ஆசிரியர்.
சம்பவம் – நான்கு
எமக்குத் தமிழ் கற்பித்த இன்னொரு ஆசிரியர் இருந்தார். அவர் வகுப்பில் அடிக்கடி கட்டுரைகள் எழுதச் சொல்லுவார். அப்படி எழுதிய கட்டுரைகளை ஒவ்வொருவராக எழும்பி வாசிக்கச் சொல்வார். கட்டுரையின் தரம், எப்படி எழுதப்பட்டிருக்கின்றது எதுவுமே அவருக்கு முக்கியமில்லை. கட்டுரை வாசிக்கும் மாணவன் தனக்குப் பிடித்தவன் என்றால் அவனை “தூக்கி வைப்பதும்” பிடிக்காதவன் என்றால் இயன்றவரை உளவியல்ரீதியாக துன்புறுத்துவதுமே அவரது நோக்கமாக இருக்கும். பிடிக்காதவர்கள் கட்டுரை வாசிக்கின்றபோது முகத்தை அஷ்டகோணலாகச் செய்வதுடன், தனது உடல் முழுவதும் சொறிவதுபோல சொறிந்துகொள்வார், தலையை கொண்டுபோய் தூண்களுடன் இடிப்பதுபோல பாவனை செய்வார். உண்மையில் இந்தக் கட்டுரையாசிரியர் உட்பட பலர் இந்தச் சேட்டைகளால் நொந்துபோய் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றோம். அதன்பிறகு தனக்குப் பிடித்த மாணவர்கள் கட்டுரைவாசித்தால் கண்களைப் பரவசமாக அரைமயக்கத்தில் இருப்பதுபோல வைத்துக்கொண்டு பாவனை செய்வார். “ஆஹா ஆஹா” என்பார். பறக்கும் முத்தங்களைச் சிந்தவிடுவார். இவர் பெருமளவு அடிப்பது இல்லையென்றாலும், அடியாமலேயே உளவியல் வன்முறையை இவரைவிட மோசமாக வேறுயாராலும் பிறர்மீது செலுத்தமுடியாது என்றே நினைக்கின்றேன்.
சம்பவம் – ஐந்து
எமது பக்கத்து வகுப்பில் ஆசிரியர் படிப்பித்துக்கொண்டிருக்கின்றபோது மாணவன் ஒருவன் பக்கத்தில் இருந்தவனுடன் பேசினான் என்பதால் ஆத்திரமுற்ற ஆசிரியர் Compass இனைத் தூக்கி மாணவன் மீது எறிந்திருக்கின்றார். அது அவன் தலையில் பட்டு மண்டை உடைந்துவிட்டது. அந்த மாணவனின் தாய் அடுத்தநாள் இருபது ரூபாய் பணத்தைக் கொண்டுவந்து பாடசாலை அதிபரிடம் கொடுத்து, “ஆசிரியரிட்ட பிள்ளைகளுக்கு அடிக்கிறதென்டா இந்தக் காசில பிரம்பு வாங்கி அடிக்கச் சொல்லிச் சொல்லுங்கோ. இப்படிக் கொம்பாசைத் தூக்கி எறிந்து மண்டையை உடைக்கவேண்டாம் என்று சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டுச்சென்றார்
சம்பவம் – ஆறு
நாம் பாடசாலைக்குச் சென்ற முதல்வருடம், முதல் வாரம். நான் வகுப்பு முதல்வராக இருந்தேன். அப்போது வகுப்பில் கதைக்கின்ற மாணவர்களின் பெயர்களை கரும்பலகையில் எழுதவேண்டும் என்பது எனது கடமையாக இருந்தது. எமது வகுப்புக்கு அடுத்ததாகவே மாணவமுதல்வர்களின் அலுவலகம் இருந்ததால் சிறிய சத்தம் வந்தாலும் அவர்கள் கூப்பிட்டு விசாரிப்பார்கள் என்பதால் வகுப்பில் கதைத்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்களின் பெயரை கரும்பலகையில் எழுதிவிட்டேன். அதுவரை நான் படித்த ஆரம்பப் பாடசாலையில் இவ்வாறு எழுதுவது ஒரு சம்பிரதாயமாகவே இருந்ததே தவிர, மாணவர்கள் இதைவைத்துத் தண்டிக்கப்படுவதில்லை. அப்போது வகுப்புக்கு வந்த ஆசிரியர் அந்த இரண்டு மாணவர்களையும் அழைத்தார். அடுத்த கணமே கண்மண் தெரியாமல் இருவரையும் தாக்கத் தொடங்கினார். இரண்டு மாணவர்கள், வெறும் 10 வயதே ஆனவர்கள். வகுப்பு முழுவதும் போய் விழ விழ இழுத்து எழுப்பி அடித்தார். ஒரு விதத்தில் அதற்கு நானும் பொறுப்பாளி ஆகிவிட்டேன் என்பதால் இன்று வரை எனக்கு அதீத குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதாக அந்தச் சம்பவம் அமைந்துவிட்டது.
மாணவர்களை தோழமையுடன் நடத்திய நிறைய ஆசிரியர்கள் இருந்திருக்கின்றார்கள். அன்பும் அரவணைப்பும், தேவையானபோது பரிவுமாய் மாணவர்களை ஆதரித்து வழிகாட்டிய ஆசிரியர்கள் அவர்கள். ஆனால் அவர்களை வைத்து நான் மேலே குறிப்பிட்டவிதமாக வன்முறையைப் பிரயோகிக்கின்ற ஆசிரியர்களைக் கடந்துபோகமுடியாது. இன்றுவரை இவர்கள் செய்த துன்புறுத்தல்களால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலரை நான் கண்டிருக்கின்றேன். கிட்டத்தட்ட இந்தச் சம்பவங்கள் நடந்து 20 ஆண்டுகளுக்கு மேலானபின்னரும், கடந்துபோன பாடசாலை நாட்கள் பற்றி மகிழ்வோடு பேசிக்கொண்டிருக்கின்றபோது மனதில் நிலைத்துவிட்ட வடுக்களாக இந்தச் சம்பவங்களை மீளவும் விபரிப்பவர்களைக் கண்டிருக்கின்றேன். அவர்களுக்கெல்லாம், இவை மீட்டவேண்டிய நினைவுகளாக இல்லாமல் மனதில் நிலைத்துவிட்ட வடுக்களாகவே இருக்கின்றன என்பதையும் அறியமுடிந்தது. அதற்கும் அப்பாலாக குறிக்கப்பட்ட மாணவர்களின் ஆளுமை விருத்தியையும் உள ஆரோக்கியத்தையும் நிரந்தரமாகப் பாதிக்கின்ற சம்பவங்களாகவும் ஆசிரியர்களின் இந்த அணுகுமுறைகள் அமைந்திருக்கின்றன.
உண்மையில் எமது சமூகத்தில் இருக்கின்ற ஒருவித மந்தைத்தனம் எல்லாம் எமக்கு பாடசாலை முறைகளில் இருந்தே எம்மீது திணிக்கப்பட்டனவோ என்றே தோன்றுகின்றது. பெரியாரை மதித்தல், அவர்களுடன் எதிர்த்து கதைக்கக் கூடாது, அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கவேண்டும் என்று சிறுவயதில் சொல்லப்படுவன எல்லாம் பாடசாலைகளில் தான் நிறுவனமயமாக்கப்பட்டு மாணவர்கள் அடிமை மனதுகொண்டவர்களாய் முழுக்க முழுக்க மாற்றப்பட்டு சமூகத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றனர் என்றே கருதமுடிகின்றது. பிறரை மதிக்கின்ற பண்பும் அடுத்தவர் கருத்துகளைக் கேட்டுப் பரிசீலனை செய்கின்ற பண்பும் மிக முக்கியமானவையே; ஆனால் கேள்வியும் தேடலும் தனித்துவமும் நிரம்பி இருக்கவேண்டிய இளைய வயதிலேயே ஆசிரியர் எதிர் மாணவர் என்று துருவ நிலைகளாகக் கொண்டு ஆசிரியர்கள் எல்லாம் அறிந்தவர்கள் மாணவர்கள் அவர்களிடம் இருந்து அறியவேண்டியவர்கள், ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பவர்கள் மாணவர்கள் கேட்டுக் கொள்பவர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டுபவர்கள் மாணவர்கள் வழிநடப்பவர்கள் என்று மாணவர்களது சிந்தனை முறை கட்டமைக்கப்படுகின்றது. மாணவர்களை நோக்கி ஆசிரியர் கேட்பது கேள்வி என்றும் ஆசிரியரிடம் மாணவர்கள் கேட்பது சந்தேகம் என்றும் பொதுவழக்கில் வழங்கப்படுவதன் பின்னால் இருக்கக் கூடிய மனநிலை ஆராயப்படவேண்டியது. கேள்வி என்பது அதிகம் தெரிந்தவர்கள் / அறிவாளிகள் கேட்பது, சந்தேகம் என்பது முழுமையாகத் தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்பது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களை நோக்கிய இந்த எதிர்பார்ப்பு அல்லது அபிப்பிராயம் என்பது ஆசிரியர்களால் மாத்திரம் திணிக்கப்படுவதாக அல்லாமல் மாணவர்களும் மனதளவில் அதற்குத் தயார் நிலையிலேயே இருக்கின்றார்கள் என்பதே முக்கியமானது. சமூகமானது அவ்வாறே சிறுவயதில் இருந்தே இரு தரப்பினரையும் தயார்ப்படுத்துகின்றது. சமூக ஒழுங்குகளையும் அதிகாரத்தையும் பேணி நிலைநாட்டுவதற்கேற்ற படிநிலைகளுக்கு (Hierarchy) சிறுவயதிலேயே தயார்ப்படுத்தப்பட்டவர்களை உருவாக்குகின்ற பட்டறைகளாகவே பாடசாலைகள் இருக்கின்றன. இன்று பொதுவெளியில் கலை இலக்கியத்துறையிலும், செயற்பாட்டாளர்களாகவும் இருக்கின்ற இளைஞர்களை மூத்த தலைமுறையினர் இன்னமும் சிறுவர்களாகவே பார்க்கின்றனர். அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் தமக்குக் கீழான சிஷ்யப் பரம்பரை ஒன்றுதானோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது. ஒருவிதத்தில் இந்த மனநிலைதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கிடையில் தொடரவேண்டிய தோழமையுணர்வையும், அறிவு மற்றும் அனுபவங்களின் கையளிப்பையும் நிர்மூலமாக்கிவிடுகின்றது என்றே கூறவேண்டும். தேசிய விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடும் நாம் எமது போராட்டம் ஏன் தோற்றது என்று மீள மீள ஆராய்கின்றோம், சுயவிமர்சனங்களைக் கோருகின்றோம். ஆனால் எமக்குள் இருக்கின்ற மந்தைத் தனத்தை எமது தேசிய, சமூக விடுதலைப் போராட்டங்களில் பெற்ற பின்னடைவுகளுடன் இணைத்துப் பார்ப்பதை அனேகம் தவிர்த்தே விடுகின்றோம்.
ஒடுக்குமுறை ஒன்று தொடர்ந்து நிகழ்வதற்கு ஒடுக்குமுறை ஒன்றுக்கு உட்பட மனதளவில் தயாராகிவிட்ட மந்தைநிலையும் ஒருவிதத்தில் காரணமே என்பது பற்றி நாம் உரையாட ஆரம்பிப்பது முக்கியமானது. அதற்கான ஆரம்பங்களுள் ஒன்றாக பாடசாலைகளில் இருக்கின்ற ஆசிரியர் – மாணவர் உறவுபற்றியும் பேசவேண்டியிருக்கின்றது. இன்றும் கீழைநாடுகளில் இருக்கின்ற கல்விமுறை பாவ்லோ ஃப்ரைய்ரே குறிப்பிடுகின்ற “வங்கிமுறைக் கல்வி” ஆகும்.
“இன்றைய கல்விமுறை என்பது எடுத்துச் சொல்வது என்ற நோயால் அவதியுறுகின்றது. எடுத்துச் சொல்வது என்பதே வகுப்பறைக் கல்வியின் ஒரே அம்சம். இந்தஉறவு அடிப்படையில் எடுத்துச்சொல்வது ஒரு மனிதரையும் (ஆசிரியர்), பொறுமையோடு கேட்டுக்கொண்டே இருக்கும் ஒரு பருப்பொருளையும் இன்றைய கல்வி உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.”
என்று இந்நூலில் குறிப்பிடும் ஃப்ரைய்ரே இந்தக் கல்விமுறை நிலவுகின்ற சமூகச்சூழலில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்கள் பற்றிய 10 அவதானங்களைக் குறிப்பிடுகின்றார். அவை
- ஆசிரிய பாடம் நடத்துபவர் – மாணவர் நடத்தப்படுபவர்
- ஆசிரியருக்கு எல்லாம் தெரியும் – மாணவருக்கு எதுவும் தெரியாது
- ஆசிரியர் சிந்திப்பார் – மாணவர்கள் சிந்திக்கவைக்கப்படுவார்கள்
- ஆசிரியர் பேசுவார் – மாணவர்கள் கவனிப்பார்கள்
- ஆசிரியர்கள் நல்லொழுக்கம் போதிப்பவர்கள் – மாணவர்கள் நல்லொழுக்கம் அடைய வைக்கப்படுபவர்கள்
- ஆசிரியர் முன்மொழிவுகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்டவர் – மாணவர்கள் பின்பற்றுபவர்கள்
- திட்டத்தின் உள்ளடக்கத்தை, நிகழ்ச்சிப் போக்கை ஆசிரியர் தீர்மாணிப்பார் – மாணவர்கள் அதற்கேற்ப தம்மை வடிவமைத்துக்கொள்வார்கள்
- ஆசிரியர் தான் செயற்படுவார். ஆசிரியர்களின் செயற்பாடுகள் மூலம் தான் செயற்பட்டதான ஒரு மாய நிலையைத் திருப்தியை மாணவர்கள் அடைவார்கள்
- ஆசிரியர்கள் தங்களது தொழிலதிகாரத்தை பயன்படுத்தி அறிவின் அதிகாரத்தைக் குழப்பி அதை மாணவர்களின் சுதந்திரத்துக்கு மாற்றாக, எதிராக முன்வைக்கின்றார்கள்
- கல்விமுறையின் மனிதக் கூறு ஆசிரியர்தான், மாணவர்களோ பொருட்கூறுகளாகக் கருதத்தக்கவர்கள்
பாவ்லோ ஃப்ரைய்ரேயின் வங்கிமுறைக் கல்வி பற்றிய அவதானங்களும், அவர் எழுதிய Pedagogy of the Oppressed என்கிற நூலும் வெளிவந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை எட்டப்போகின்ற சூழலில் இதுபற்றிய கரிசனைகள் போதுமான அளவு எமது சூழலில் வரவில்லை என்றே கூறவேண்டும். அதன் தொடர்ச்சியாக இதே நிலைமைகள் இன்றும் எமது கல்விமுறையில் நிலவுகின்றது என்பதையும் அதுவே சரியாக ஒழுக்கமுறைமை என்று பெரும்பான்மை சமூகத்தால் எதிர்ப்பார்க்கப்படுகின்றது என்பதும் உண்மை. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் மீது நிகழ்த்துகின்ற வன்முறைகள் அனைத்துமே இந்தக் கல்விமுறையாலும் அது முன்வைக்கும் ஒழுக்க முறைமையாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே. ஒருவிதத்தில் அந்த ஒழுக்கமுறைமையை திணிக்கவும் ஆசிரியர் மாணவர் உறவின் ஊடாக எதிர்கால “ஒடுக்குமுறைச் சமூகத்துக்கான பிரதிநிதிகளை” தயார்ப்படுத்தவுமான பயிற்சிகளாகவே இந்த வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன என்றும் கூறலாம். இந்த அடிப்படையில் பாவ்லோ ஃப்ரைய்ரேயும் மாற்றுக்கல்வி முறைமைகள் பற்றியும் நாம் பேசவேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது.
ஆசிரியர்கள் மாணவர்களைத் தண்டிப்பதனை, மாணவர்களை நெறிப்படுத்துவதற்கான வழிமுறை என்கிற வாதங்களும் இருக்கின்றன. அதேநேரம் பல்வேறு ஆய்வுகளின் ஊடாகவும் அவதானங்களின் ஊடாகவும் இந்த கருதுகோள் தவறானது என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. வகுப்பறைகளிலும் அதற்கு வெளியிலும் மாணவர்களை கட்டுப்படுத்த வன்முறையினைக் கையில் எடுப்பது உடனடியாக உதவினாலும் நீண்டகால அடிப்படையில் பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும். சிறுவயதில் உடல் ரீதியாகத் தண்டிக்கப்பட்டவர்கள் பதின்பருவத்திலும் பெரியவர்கள் ஆகும்போதும் வன்முறைகளிலும் குற்றச் செயல்களிலும் அதிகம் ஈடுபடுபவர்களாக இருப்பதையும் ஒப்பீட்டளவில் குறைவாக உடல் ரீதியாகத் தண்டிக்கப்பட்டவர்களுடன் நோக்கும்போது கல்வியில் குறைவான நாட்டமுள்ளவர்களாகவும், உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களாகவும் போதைப்பாவனைகளுக்கு அடிமையானவர்களாக இருப்பதையும் Supporting Children in Their Home, School, and Community என்கிற நூலில் Dorothy H. Sailor சுட்டிக்காட்டுகின்றார்.
வங்கிமுறைக்கல்விக்கு மாற்றாக பிரச்சனைகளின் அடிப்படையிலான கல்விமுறையை (Problem-posing education) பாவ்லோ ஃப்ரைய்ரே முன்வைக்கின்றார். இந்த முறையானது ஆசிரியர் எதிர் மாணவர் என்கிற துருவநிலையை இல்லாமற் பண்ணி ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து உரையாடல்களின் மூலமாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதான ஒரு ஒழுங்கை முன்வைக்கின்றது. மாணவர்கள் என்போர் கேட்பவர்களாகவும் பின்பற்றுபவர்களாகவும் பார்வையாளர்களாகவும் இல்லாமல் உரையாடுபவர்களாகவும் சேர்ந்து பயணிப்பவர்களாகவும் பங்காளர்களாகவும் இங்கே பங்கெடுக்கின்றனர். சற்றே விலகி நோக்கும்போது, வங்கிமுறைக்கல்வி நிலவுகின்ற எமது சமூகத்தின் இயல்பாகி இருக்கின்ற உரையாடல்களில் நம்பிக்கை இல்லாமல் வன்முறையைக் கையில் எடுக்கின்ற போக்கிற்கும், நாயகத்துவத்தை நம்புகின்ற, மந்தைத்தனம் மிக்க மனநிலைக்கும் தீர்வாக பிரச்சனைகளின் அடிப்படையிலான கல்விமுறையைக் கையாள்வது ஆக்கபூர்வமானது என்றே தோன்றுகின்றது.
தனது அவதானங்களின் ஊடாக வங்கிமுறைக்கல்வியில் அதிகாரம் எப்படி ஆசிரியர்களிடம் குவிந்திருக்கின்றது என்பதையும், அது எவ்விதம் மாணவர்களை ஒடுக்கப்பட்டவர்களாகக்கொண்டு இயங்குகின்றது என்பதை இலகுவாக புரிந்துகொள்ளமுடிகின்றது. அதன் சாரமாக பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“எனவே வங்கிமுறைக் கல்வி மனிதர்களை எதற்கும் தக்கவாறு வடிவமைக்க முடிந்த, மேலாண்மை செலுத்த முடிந்தவர்களாகப் பார்ப்பதில் ஆச்சரியமே இல்லை. தன்னைச் சேமிப்புக் கிடங்காய்ப் பாவித்துக்கொண்டு மேலும் மேலும் அறிவைப் போட்டு நிரப்பிக்கொண்டு, எதிர்வினையும், எந்த ஒரு ஆராய்ச்சியும் இன்றி, ஆய்ந்தறியும் மனநிலையை இழந்துபோகும் ஒரு மாணவர் உலகை மாறுதல் அடையவைப்பவராகத் தன்னைக் கருதமுடியாதநிலைக்குத் தள்ளப்படுவார். தங்களுக்கு வழங்கப்பட்ட பணிவு நிலைக்கே மீண்டும் மீண்டும் ஆழமாகத் தன்னை ஆட்படுத்திக்கொள்ளும் ஒருவர் தன்னடக்கத்தின் ஆளுமைக்குப் பலியாக இருக்கும் உலக நிலைக்குத் தகுந்தாற்போல வளைந்துகொடுப்பதே வாழ்க்கை என நினைக்கும் நிலை மட்டுமல்ல; மனதின்கண் பதிவான ஆதிக்க அதிகாரச் சூழலே சிறந்ததென்று கூறும் நிலையும் ஏற்படலாம்”
எனவே விடுதலையை அவாவிநிற்கும் ஒரு சமூகம் முதலில் அதிகாரங்களுக்குக் கீழ்ப்படியாத, தன்னை சுயமரியாதை கொண்டதாக உணர்கின்ற நிலைக்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளவேண்டும். அந்த அடிமை மனநிலை அல்லது மந்தைத்தனமான மனநிலையை மாணவர்களுக்குள் ஆழமாகப் பதியவைக்கின்ற பாத்திரத்தை ஆதிக்கசக்திகள் பாடசாலைகளின் ஊடாகவும், கல்விமுறையின் ஊடாகவும், அவற்றினூடான பிரதான கருவிகளாக ஆசிரியர்கள் ஊடாகவுமே செயலாக்குகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அவற்றிலிருந்து விடுதலைபெறுவதற்காக முயற்சிகளும், புதிய கல்விமுறையின் ஊடாகவும், பாடசாலையினதும், ஆசிரியரதும் மீள் ஒழுங்குசெய்யப்பட்ட பாத்திரங்களின் ஊடாகவுமே முன்னெடுக்கமுடியும்.
பின்குறிப்பு
- எனது பாடசாலை நாட்களில் நான் நேரடியாகக் கண்ட அனுபவங்களும் அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய நெடுநாளான எனது அவதானமும் கரிசனையுமே இக்கட்டுரையை எழுதத் தூண்டியது. இன்னொருவிதத்தில் Paolo Freire எழுதிய Pedagogy of the Oppressed, Education: The Practice of Freedom என்கிற நூல்களை வாசித்தபோது இந்த அனுபவங்கள் ஏற்படுத்திய சலனமும் முக்கியமானது. இது தொடர்பாக மேலும் சிந்திக்க Michel Foucault இன் Discipline and Punish நூலும் Panopticism என்கிற கோட்பாடும் Nietzsche இன் The Genealogy of the morals நூலும் உதவும்.
- இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் 1990இற்உம் 1997இற்கும் இடைப்பட்ட காலங்களில் இடம்பெற்றவை. தற்போது நகர்ப்புறப் பாடசாலைகளைப் பொறுத்தவரை உடல்ரீதியான வன்முறைகள் பெருமளவில் குறைந்துவிட்டன என்றபோதும் உளரீதியான வன்முறைகள் தொடரவே செய்கின்றன. தவிர, தண்டணைகள் மாறியபோதும் பாடசாலைகள் ஊடாக தொழிற்படுகின்ற ஆசிரிய மாணவர் உறவும், அதிகார ஒழுங்கும் இப்போதும் தொழிற்படவே செய்கின்றது. மேலும், மிக நீண்ட காலமாக நிலவிய மேற்குறித்த ஆசிரிய மாணவ உறவும், மனநிலையும் இன்றுவரை சமூக உறவுகளிலும் சமூகத்தின் ஒவ்வோர் அசைவுகளிலும் தாக்கம் செலுத்தியே இருக்கின்றது.
இக்கட்டுரை புதிய சொல்லின் 6வது இதழில் வெளியானது.
இங்கே பாவிக்கப்பட்டுள்ள ஓவியம் www.cartoonstock.com என்ற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.