யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்புவில் இடம்பெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் 22ம் திகதி ரொரன்றோவில் இந்நூலின் அறிமுக வெளியீட்டுவிழாவினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினரும் நூலக நிறுவனத்தினரும் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர்.
புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகின்ற பழைய மாணவர் சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள் போன்றன தமது செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்து, தாம் எவற்றை முன்னெடுக்கப் போகின்றோம் என்று தீர்க்கமான முடிவொன்றிற்கு வரவேண்டியது அவசியமாகும். குறிப்பாக, ஆடம்பரமான ஆண்டுவிழாக்கள் நடத்துவது, அபிவிருத்தி என்ற பெயரில் ஊரில் முறையான திட்டமிடலும், மரபுரிமைப் பாதுகாப்புப் பற்றிய அக்கறையும் இன்றி கட்டடங்களை இடித்துக் கட்டுவது போன்ற செயற்பாடுகளை அனேகம் முன்னெடுக்கின்ற நிலையிலிருந்து புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற அமைப்புகள் தம்மை விடுவித்திக்கொண்டு சரியான திட்டமிடலுடனும் தொலைநோக்குடனும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். அந்த விதத்தில் இப்படியான ஒரு தொகுப்பினை வெளியிட்டிருக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையும் அதன் வெளியீட்டு நிகழ்வினை நூலக நிறுவனத்துடன் இணைந்து ரொரன்றோவில் ஒருங்கிணைத்திருக்கும் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினரும் பாராட்டுக்குரியவர்கள்.
சிறுநூல்களாகவும் தனித்தனிக் கட்டுரைகளாகவும் எழுதப்பட்டவை முறையாகத் தொகுக்கப்படும்போது அவை ஆய்வுகளுக்கும் பெரிதும் உதவும். ஈழத்தைப் பொறுத்தவரை மிக நீண்ட இலக்கிய, இதழியல் பாரம்பரியம் இருந்தபோதும் கூட முக்கியமான பல்வேறு ஆளுமைகளின் எழுத்துக்கள் இன்னமும் கூட தொகுக்கப்படாமல் இருப்பது ஒரு குறையே. குறிப்பாக பேராசிரியர் கணபதிப்பிள்ளை, எஃப்.எக்ஸ்.சி நடராசா, கணேசய்யர், சரவணமுத்துப்பிள்ளை, கலைப்புலவர் நவரத்தினம் என்று அண்மைக்காலத்தில் நான் படித்து முக்கியமாகக் கருதிய பல்வேறு ஆளுமைகளின் எழுத்துகள் இன்னும் தொகுக்கப்படவில்லை. ஞாபகத்தில் இருந்து குறிப்பிடும் இந்தப் பெயர்களை விடுத்து, நிதானமாக ஒரு பட்டியல் இட்டால் அமையக்கூடிய மிக நீண்ட பட்டியல் நாம் செய்யவேண்டிய பணி மிக மிகப் பெரியதாக உள்ளதை அறியக்கூடியதாக இருக்கும். அண்மைக்காலத்தில் (கடந்த மூன்று ஆண்டுகளில்) உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தத் திரட்டு, மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு, புதுசு இதழ்களின் தொகுப்பு, செ. கதிர்காமநாதனின் எழுத்துக்களின் தொகுப்பு என்று முக்கியமான தொகுப்புகள் வந்திருப்பது நம்பிக்கையளிக்கும் சமிக்ஞையாக இருந்தாலும் இந்த முயற்சிகள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களும் பெரிதாகவே உள்ளன.
தொகுப்புகள் என்று பொதுவாகச் சொன்னாலும் இதழ்களின் தொகுப்பு, ஒவ்வொரு எழுத்தாளர்களின் எழுத்துகளின் தொகுப்பு, பிரதேசவாரியான எழுத்துக்களின் தொகுப்பு, காலவாரியாக எழுத்துகளின் தொகுப்பு, விடயவாரியான எழுத்துக்களின் தொகுப்பு என்று பல்வேறு வகைப்பட்ட தொகுப்புகள் செய்யப்படவேண்டியது அவசியமானது. இவற்றுக்கான நிதி ஆதாரங்களை புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற அமைப்புகள் வழங்குவது ஆக்கபூர்வமான ஒரு முன்னெடுப்பாக அமையும். அந்த வகையில் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் எழுத்துகளின் தொகுப்பினையும் வெளியீட்டு நிகழ்வுகளையும் ஒரு பழைய மாணவர் சங்கம் ஒருங்கிணைப்பதும், அதற்கான நிதி ஆதாரங்களை திரட்டிக் கொடுப்பதும் ஒரு நல்ல முன்னுதாரணம் என்றே சொல்லவேண்டும்.
அதேநேரத்தில் தனி நபர்களின் எழுத்துகளைத் தொகுக்கின்றபோது, அந்தத் தனிநபர் யாராக இருந்தார், அவர் எந்தக் கருத்தியலை முன்னெடுத்தார், அவரது சமூகப் பார்வை எப்படியாக இருந்தது, அவர் எதனை நோக்கிப் பயணித்தார், அவர் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அவர் வாழ்ந்த காலத்தின், சமூக, வரலாற்று, அரசியல் பின்னணி என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சீர் தூக்கி ஆய்வதுடன் அவற்றினையும் அந்தத் தொகுப்பு முயற்சியை முன்னெடுப்பவர்களையும் ஒன்றிணைத்து ஆய்வதும் அவசியமாக இருக்கின்றது. உதாரணமாக மவே. திருஞானசம்பந்தப்பிள்ளை யாராக இருந்தார் என்பதனைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
1885 – 1955 வரை வாழ்ந்த ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் 1912 – 1947 வரை ஆசிரியராகப் பணியாற்றிய அதேவேளை இந்து சாதனம் பத்திரிகைக்கு 1912 முதல் உதவி ஆசிரியராகவும் 1921 முதல் 1951 வரை பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றியவர். அத்துடன் இவர் புனைகதை ஆசிரியராகவும், பதிப்பாசியராகவும், பாடநூல் எழுத்தாளராகவும், நாடகாசிரியராகவும், நாடகக்கலைஞராகவும், பிரசங்கியராகவும் விளங்கியதாக இத்தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தமிழின் மிக ஆரம்ப கால நாவலாசிரியர்களில் இவரும் ஒருவராவார். காசிநாதன் – நேசமலர் (1924), கோபால நேசரத்தினம் (1927), துரைரத்தினம் – நேசமணி (1927) என்ற மூன்று நாவல்களையும் எழுதி உள்ள இவர் உலகம் பலவிதம் என்கிற பெயரில் தொடர் பத்திகளையும் எழுதி இருக்கின்றார். இந்தப் பத்திகளின் ஊடாக ம.வே. திருஞானசம்பந்தப் பிள்ளையை வாசிக்கின்றபோது, அவர் அன்றைய அரசியல், சமூக நிகழ்வுகளுக்கு தொடர்ச்சியாக எதிர்வினையாற்றி இருப்பதை அறியமுடிகின்றது. நாவலரின் பெறாமகனும் ஆறுமுகநாவலர் சரிதத்தை எழுதியவருமான த. கைலாசப்பிள்ளையால் நாவலரது பணிகளை முன்னெடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டதே இந்துசாதனம். அதன் ஆரம்ப கட்டத்திலேயே அதன் உதவி ஆசிரியராகவும் பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றிய ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையும் ஆறுமுக நாவலரது கருத்துக்களால் உள்வாங்கப்பட்டு அதனை முன்னெடுத்தவராகவே இருக்கின்றார். அந்தப் புரிதலுடனும் விமர்சனத்துடனுமே இந்தத் தொகுப்பினை அணுகவேண்டியது அவசியமாகும்.
உலகம் பலவிதம் என்கிற இந்தத் தொகுப்பானது ம.வே. திருஞானசம்பந்தப் பிள்ளை இந்து சாதனத்தில் எழுதிய எழுத்துகளின் தொகுப்பேயாகும். அதிலும் சில இதழ்கள் கிடைக்கவில்லை என்பதை இந்தத் தொகுப்பின் பதிப்பாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்,
திருஞானசம்பந்தப்பிள்ளை 1912இலிருந்து 1920 வரை இந்துசாதன உதவி ஆசிரியராக இருந்தகாலத்து இதழ்களோ எழுத்துக்களோ கிடைக்கவில்லை. அவர் எழுதி நூல்வடிவில் வந்த முதலாவது நாவலாகக் குறிப்பிடப்படும் காசிநாதம் – நேசமலரும் கிடைக்கவில்லை. அவர் இந்து சாத ஆசிரியராக இருந்த காலத்திற்குள்ளும் 1936-1944 காலப்பகுதி இதழ்கள் இல்லை. நூலாக வெளிவந்த துரைரத்தினம் – நேசமணி எனக்குக் கிடைக்காததால் பத்திரிகைத் தொடராகவே அது இங்கே சேர்க்கப்பட்டுள்ளது -பக்கம் 7,8
ஒரு சமூகத்தின் ஒழுங்கிலும் கருத்துநிலை உருவாக்கத்திலும் அவற்றின் வளர்ச்சியிலும் அதன் மாற்றத்திலும் இவற்றுக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சமூக, அரசியல் வரலாற்றுப் போக்குப்பற்றிய அறிவும் தெளிவும் இருக்கவேண்டியது அவசியம். ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் போன்ற தொகுப்புகள் அந்த வகையில் இலக்கிய ஆதாரங்களாக அமையவல்லன. கடந்தகாலத்தில் வெளியான எழுத்துக்களை மீளக் கொண்டுவரும்போது சமகாலத்துடன் ஒப்பிட்டு சமூகம் எவ்வாறு மாறிவந்துள்ளது என்று அறியவும், சமூக இயக்கம் எவ்வாறு அன்றைய காலத்தில் தொழிற்பட்டது என்று அறியவும் வாய்ப்பாக அமையும். அதேசமயத்தில், இவ்வாறான எழுத்துகள் பழமையை மீளுருவாக்கம் செய்யவும், ஒரு காலத்தில் இயங்கிய பிற்போக்குத்தனங்களும் சமூகத்தளைகளும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு குறித்த ஒரு பகுதியினரின் நலம் பேணப்படுவதற்கான முயற்சிகளுக்கு துணைபோய்விடக்கூடாது என்பதில் அவதானமாக இருக்கவேண்டும். குறிப்பாக ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை சுவாரசியமாகக் கதைசொல்லும் ஆற்றலும் நகைச்சுவை நிரம்பிய எழுத்தாற்றலும் கொண்டவராக இருந்தாலும் அவரது சமூகப் பார்வை மிகவும் பிற்போக்குத்தனமாகவே இருக்கின்றது.
காலனிய காலத்தில் எழுந்த முரண் இயக்கங்களில் ஒன்றான ஆறுமுகநாவலரின் வழி வந்தவராக ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் சமூகப் பார்வையைப் பார்க்கின்றபோது அவர்கள் முன்னெடுத்த காலனித்துவ எதிர்ப்பின் உள்ளடக்கம் எவ்வளவும் பிற்போக்குத்தனமாக இருந்தது என்பது மீளவும் நிரூபனமாகின்றது. பதிப்பாசிரியர் உரையில் குறிப்பிடப்படுவது போன்று,
யாழ்ப்பாணத்தில், அக்காலத்தில், காலனியத்தை எதிர்கொள்ளும் ஆளுமையுடன் இருந்தவர்கள் எத்தகைய சமய, மொழி, சமூகநிலை, பால்நிலை, ஒழுக்கவியல் அடிப்படைகளிலான சமூக உருவாக்கமொன்றைக் கருத்திற்கொண்டிருந்தார்கள் என்பதை இத்தொகுப்பிற்காணலாம்.
அதேநேரம், ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை முன்வைக்கின்ற கருத்துகளை காலனித்துவ எதிர்ப்பின் குரல் என்றும் அவர் வாழ்ந்த காலகட்டத்தின் குரல் என்று சொல்லியும் கடந்துபோய்விட முடியாது. அவர் வாழ்ந்து, தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த அதேகாலப்பகுதியிலே தான் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் செயற்பட்டிருக்கின்றது. விபுலானந்தர், சரவணமுத்துப் பிள்ளை போன்றவர்கள் சாதியத்துக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் பேசி இருக்கின்றார்கள். மங்களம்மாள் மாசிலாமணிப்பிள்ளையின் தமிழ் மகள் இதழ் இதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிக்கொண்டிருந்தது. தவிர, ஈழத்தின் பண்பாட்டுச் செயற்பாடுகளில் அதிகம் தாக்கம் செலுத்துவதாக அன்று தொட்டு இருந்துவருகின்ற தமிழ்நாட்டில் இதே காலப்பகுதியில் தான் பெரியாரின் தொடர்ச்சியான பெண்விடுதலை, சாதிய ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளும், மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி போன்றோரின் செயற்பாடுகளும் இருந்தன. தவிர அமெரிக்கன் மிஷனின் தாக்கத்தால் நவீனவாக்கமும், கல்வி விருத்தியும் பரவலடைந்து வந்தன. அவற்றின் தாக்கத்தால் சமூக ஒழுங்கிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கின்றபோது ம.வே திருஞானசம்பந்தப்பிள்ளையின் எழுத்துக்களில் அந்த சமூக மாற்றம் குறித்த பதற்றத்தையே – குறிப்பாக பெண்களுக்கான கல்வி, பெண்களின் சமூக நிலை மாற்றம் குறித்த பதற்றத்தையே அதிகம் உணரமுடிகின்றது. யாழ்ப்பாணத்தில் பெண்கள் கல்வி என்கிற குறமகளின் ஆய்வுநூலையும், இலங்கையில் தமிழர் வளர்ச்சியும் அமெரிக்கன் மிஷனும் என்கிற நூல்களையும் ஒப்புநோக்கி அவற்றில் மிஷனரிகளின் பெண்கள் கல்வியில் கற்பிக்கப்பட்ட விடயங்களையும் கருத்திற்கொள்ளும்போது ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் பதற்றம் அவரது மிகையான கற்பனையின் பாற்பட்டது என்பது புலனாகின்றது. 688 பக்கங்களைக் கொண்டு வெளியாகியுள்ள இந்தப் புத்தகம் குறித்து விரிவான ஆய்வொன்றின் வழியாகவே அதன் வகிபாகத்தை மதிப்பீடு செய்யமுடியும். ஆயினும், ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை முன்வைக்கின்ற கருத்தியலின் அடிப்படையில் விமர்சன பூர்வமாக இந்தத் தொகுப்பின் கருத்துகளை அணுகவேண்டியது அவசியம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அதேநேரம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் இந்த முயற்சியானது ஒரு நல்ல முன்னுதாரணம் என்பதையும் இதே போன்ற முயற்சிகளில் ஏனைய பழைய மாணவர் சங்கங்களும் இதர அமைப்புக்களும் ஈடுபடவேண்டும். அதேநேரம் அந்த முயற்சிகளில் மாற்றுக் கருத்துக்களுக்கும் சிறுபான்மைக் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பதையும் ஒரு முன்நிபந்தனையாகப் பரிந்துரைக்கின்றேன்.
- ஒக்ரோபர் 22, 2017 அன்று ரொரன்றோவில் இடம்பெற்ற உலகம் பலவிதம் நூலின் அறிமுக வெளியீட்டு நிகழ்வினை நூலக நிறுவனம் சார்பாகவும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் சார்பாகவும் தொடக்கி வைத்துப் பேசியதன் கட்டுரை வடிவம்.
- இது நவம்பர் 2017 தாய்வீடு பத்திரிகையில் வெளியானது
Leave a Reply