In the mood for love திரைப்படத்தின் இயக்குனர் என்றே எனக்கு அறிமுகமான Wong Kar-wai, அதற்கு முன்னதாகவே இயக்கிய முக்கியமான திரைப்படமான Happy Together 1997 இல் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றது. 1997 ஆம் ஆண்டுக்குரிய கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை வொங் கார்-வைக்குப் பெற்றுத்தந்த இத்திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் Tony Leung Chiu-wai, Leslie Cheung, Chang Chen ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.
ஹொங்கொங்கில் இருந்து ஆஜெந்தீனாவிற்குப் புலம்பெயர்ந்திருக்கின்ற ஆண் இணைகளான Tony Leung Chiu-wai, Leslie Cheung இன் உறவு வன்முறை நிறைந்ததாக இருக்கின்றது. அத்துடன் ரொனி லுங் உறவில் உண்மையுடன் இருக்க, லெஸ்லி சாங்க் அடிக்கடி தனது இணையை ஏமாற்றுபவனாகவும், தனது சுய நலத்துக்காக ரொனியைப் பயன்படுத்துபவராகவும் இருக்கின்றான். ஒரு கட்டத்தில் இவர்கள் பிரிந்துவிடுகின்றான்கள். இந்தப் பிரிவிற்குப் பிறகு ரொனி லுங் தனிமையைப் போக்க கடுமையாக வேலை செய்யத் தொடங்குகின்றான். அப்போது அவனுடன் உணவகம் ஒன்றில் வேலை செய்கின்ற சாங்க் சென் என்பவனுடன் அவனுக்கு ஏற்படுகின்ற நட்பு மெல்ல மெல்ல நெருக்கமாகிச் செல்கின்றது. கதையின் போக்கில் சாங்க் சென்னும் ஒரு “கே” என்பது சில குறிப்புகளால் காட்டப்படுகின்றது.
சில நாட்களின் பின்னர் கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயமடைந்த நிலையில் தன்னைத் தேடிவருகின்ற லெஸ்லி சாங்கின் மீது இரக்கப்பட்டு அவரை வைத்துப் பராமரிக்கின்றான். இருவரது கதாபாத்திரங்களும் இந்தக் காட்சிகளில் திறம்பட தமது குண இயல்புகளை வெளிப்படுத்தப்படுகின்றன. கடுமையாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்ற ரொனி லுங்கிடம் தனக்கு சூப் செய்து தரும்படி கேட்கிறான் லெஸ்லி சாங்க். காயங்களிலிருந்து குணமடையும் வரை பொறுப்பானவன் போல இருக்கின்ற லெஸ்லி சாங்க் சுகமடைந்ததும் மீண்டும் வேறு ஆண்களுடனும் உறவை ஏற்படுத்துகின்றான். தனது தேவைகளுக்காக மாத்திரம் லெஸ்லி சாங்க் தன்னைப் பயன்படுத்துகின்றான் என்பதை ரொனியும் உணர்ந்துகொள்ளுகின்றான். காயமடைந்து முழுமையாகத் தன்னில் லெஸ்லி சாங்க் தங்கியிருந்த நாட்களை நினைவு கூரும் ரொனி லுங் அவற்றைத் தமது மகிழ்ச்சியான நாட்களாகவும் லெஸ்லி குணமடைவது தாமதமாவதைத் தான் விரும்பியதாகவும் ஒரு கட்டத்தில் குறிப்பிடுகின்றான்.
இதே காலப்பகுதியில் ரொனி லுங்கிற்கு சாங்க் சென்னுடன் உறவு இன்னும் நெருக்கமாகின்றது. ரொனி லுங்கிற்கும் லெஸ்லி சாங்கிற்கும் இடையிலான உறவு கொப்பளிக்கும் காமமும், வன்முறையும் நிறைந்ததாக இருக்கின்றது. அதேநேரம் ரொனி லுங்கிற்கு சாங்க் சென்னிடம் உருவாகின்ற உறவு, ஆழமான, நிதானமானதாக மலர்கின்றது. இவர்கள் இடையில் எதுவிதமான பாலியல் உறவும் இருப்பதாகக் காட்டப்படவில்லை. ஆயினும், தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தமிழ்த் திரைப்படங்களில் காண்பிக்கப்பட்ட ”காமம் கடந்த காதல்” போன்றதோரு காதல் இவர்களது உறவில் காண்பிக்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ரொனி லுங்க் எப்போதும் இறுக்கமானவராகவும் லெஸ்லி சாங்க் எதைப்பற்றியும் கடுமையாக யோசிக்காத, தன்னைப் பற்றி மட்டும் அக்கறைப்படுபவராகவும் சாங்க் சென் தன்னிறைவான, நிதானமானவராகவும் சித்திகரிக்கப்பட்டிருக்கின்றனர். ரொனி லுங்கின் கதாபாத்திரத்தில் நடித்தவரும் சாங்க் சென்னின் கதாபாத்திரத்தில் நடித்தவரும் மிகச் சிறப்பாக தமது கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கின்றனர்.
தனக்கு உண்மை இல்லாமலும் சுய நலத்துடனும் லெஸ்லி இருந்தாலும் கூட, அவருடனான உறவைத் தக்கவைக்கவே ரொனி விரும்புகின்றான். லெஸ்லியின் கடவுச் சீட்டை ஒளித்துவைக்கின்ற ரொனி, அவர்களது உறவு முறிவடைந்து, லெஸ்லி பலமுறை கேட்டும் கூட கொடுக்க மறுத்துவிடுகிறான். இதைக் கூட, ஒரு விதத்தில் லெஸ்லி தன்னை விட்டுப் பிரிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் நீட்சியாகப் பார்க்கலாம்.
தொன்மங்களும் நம்பிக்கைகளும் கதையைக் காவிச் செல்வது வொங் கார்-வையின் படங்களில் இருக்கின்ற உத்திகளில் ஒன்று என்று நினைக்கின்றேன். இப்படத்தில் தென் அமெரிக்காவின் கடைசி முனையில் இருக்கின்ற வெளிச்சவீட்டில் போய் துயரங்களைச் சொன்னால் அவை நீங்கிவிடும் என்ற நம்பிக்கை ஒன்று காட்டப்படுகின்றது. ரொனியை நீங்கி பயணத்தை ஆரம்பிக்கின்ற சாங்க், அந்த வெளிச்சவீட்டுக்கும் போகின்றான். ஒலிப்பதிவுக் கருவி ஒன்றில் ரொனியின் மனதில் இருக்கின்ற துயத்தைப் பதிவு செய்து தரும்படி சாங்க் கேட்க, முதலில் தனக்கு எந்தத் துயரும் இல்லை என்று கூறுகின்ற ரொனி, பின்னர் ஆராத்துயருடன் அழுகின்றான். அந்த அழுகை ஒலிப்பதிவுக் கருவியில் பதிவாகின்றது. அதுபோல தனது தந்தையிடம் மன்னிப்புக் கேட்பதற்காக தபாலட்டை ஒன்றில் சிறு கடிதம் எழுத முற்படுகின்ற ரொனி மிக நீண்ட ஒரு கடிதமாக அதனை நிறைவுசெய்கின்றான். தனிமையும் துயரும் நிரம்பிய மனநிலையைக் கடக்க முற்படுகின்ற ஒருவனின் ஆற்றுப்படுத்தல் முயற்சிகளாக இவற்றைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
சாங்கும் பிரிந்து சென்ற பின்னர் தனிமையும் பிரிவுத்துயரும் உளைக்க பொதுக் கழிப்பறை, திரையரங்கு என்று பொது இடங்களில் காண்கின்ற வெவ்வேறு ஆண்களுடன் காமத்துக்காக மட்டும் உறவு கொண்டு பிரிகின்றான் ரொனி. தானும் லெஸ்லி போல ஆகிவிட்டதாக நினைப்பதுடன், தனிமையாக உணர்பவர்களின் செயல்கள் இப்படித்தான் இருக்குமோ என்றும் யோசிக்கின்றான். இகாஸா (Iguassu) என்கிற ஆஜெந்தினாவில் தொன்மங்களுடன் நினைவுகூரப்படும் நீர்வீழ்ச்சி நோக்கி தனியே பயணம் செய்கின்றான் ரொனி. அங்கிருந்து திரும்பும்போது, சாங்கைத் தேடிச் செல்கின்ற ரொனி, சாங்கின் புகைப்படம் ஒன்றினை அவன் நினைவாக எடுத்துச் செல்கின்றான்.
ரொனியின் பிரிவினை உணரத் தொடங்கும் வெஸ்லி, அவனை தேடியும் காணமுடியாமல் அலைகின்றான். இந்தக் காட்சி திரைப்படத்தில் மிக அருமையாக சித்திகரிக்கப்பட்டுள்ளது. ரொனியுடன் இருக்கும்போது ரொனி வாங்கித் அடுக்கி வைக்கின்ற சிகரெட் பெட்டிகளை அறையெங்கும் வீசி எறியும் லெஸ்லி இக்காட்சிகள் அவற்றை மீளவும் அடுக்கிவைக்கின்றான். ரொனியை லெஸ்லி தாக்குகின்றபோது அவன் நிலத்தில் விழுந்த இடங்களை எல்லாம் துப்புரவு செய்கின்றான். இழந்துபோன உறவொன்றை ஒட்ட வைப்பதுபோலவும் தனது பக்கத் தவறுகளை தானே திருத்திக்கொள்வது போலவும் இந்தக் காட்சி விரிகின்றது.
வொங் கார்-வையின் திரைப்படங்களில் வருகின்ற பின்னணி இசைகள் ஆன்ம நெருக்கத்தைத் தரவல்லன. இத்திரைப்படத்திலும் படத்தின் கடைசி அரைமணி நேரத்தில் பின்னணி இசை வேறு ஒரு தளத்துக்கு திரைப்படத்தை எடுத்துச் செல்கின்றது. யூ ட்யூப்பில் இந்தத் திரைப்படம் பார்க்கக் கிடைக்கின்றது. ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் என்று உறுதியளிக்கின்றேன்.
இக்கட்டுரை ஒக்ரோபர் 2017 தாய்வீடு பத்திரைகையில் வெளியானது.
Leave a Reply