அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பாடசாலையில் மதிய இடைவேளையில் பக்கத்து வகுப்பு மாணவர்களுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவது வழக்கம். வழமையான போட்டிகளின்போது ஸ்கோர் பதிவுகளைச் செய்கின்ற மாணவன் வராத நாளொன்றில் என்னை ஸ்கோர் பண்ணுமாறு கேட்டார்கள். நானும் கொப்பி ஒன்றின் பின்பக்கத்தில், விளையாடுகின்ற ஒவ்வொருவரது பெயரையும் எழுதி பந்துவீச்சில் கொடுத்த ஓட்டங்கள், துடுப்பாட்ட வீரர்கள் எடுத்துக்கொண்ட ஓட்டங்கள் என்று பதிவுசெய்தேன். ஒவ்வொரு வீரரும் எப்படி ஆட்டமிழந்தார்கள், யாரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்கள் என்கிற விபரங்களை எல்லாம் குறித்தேன். ஒவ்வொரு பந்துவீச்சாளர்களும் எத்தனை ஓவர்கள் பந்து வீசினார்கள், எத்தனை மெய்டன் ஓவர்கள் வீசினார்கள், எத்தனை ஓட்டங்களைக் கொடுத்து எத்தனை விக்கட்டுகளைக் கைப்பற்றினார்கள் என்று குறித்துவைத்தேன். மைதானச் சுவரில் மூன்று கோடுகளைக் கீறி விக்கட்டுகளாக வைத்துக்கொண்டு மறுமுனையில் காலில் போட்டிருக்கும் செருப்புகளைக் கழட்டி வைத்து ஸ்டம்புகளாகப் பாவித்துக்கொண்டு பை, லெக்பை என்ற எதுவும் இல்லாது விளையாடிய வகுப்புகளுக்கு இடையில் விளையாடப்படும் கிரிக்கெட்டில் போட்டிகளில் ஸ்கோர் பதிவதென்பது வெறுமனே அணியின் ஓட்டங்களை மட்டுமே எழுதிச்செல்வதாக இருந்தது; அதனால் நான் ஸ்கோர் பண்ணிய விதம் புதியதாக இருந்தது.
அண்மையில் அப்பா இறந்துவிட்ட பின்னர் கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பது பற்றிய நினைவுகள் அப்பாவினுடனான நனவிடை தோய்தலின் ஒரு கீற்றாக அமைவதுண்டு. இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின்போது பெரியம்மா ஒருவரின் வீட்டில் இடம்பெயர்ந்திருந்தபோது எட்டு வயதாகியிருந்த எனக்கு அங்கிருந்த பழைய ஸ்போர்ட்ஸ் ஸ்ரார் ஒன்றைக் காட்டி கிரிக்கெட் ஸ்கோரை எப்படி வாசிப்பது என்று அப்பா காட்டித்தந்தார். விருப்பமான பாடமொன்றினை, விருப்பமான ஆசிரியர் ஒருவரிடம் கேட்டுக் கேட்டுப் படிக்கின்ற மாணவன் போன்ற தீராக்காதலுடன் கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பது பற்றியும் கிரிக்கெட் புள்ளிவிபரங்களை எப்படிப் பார்ப்பது என்பது பற்றியும் அப்பாவிடம் கேட்டுக் கேட்டுப் படித்துக்கொண்டேன். பின்னர் வெவ்வேறு பாடசாலைகளுக்கு இடையிலும் கழகங்களுக்கு இடையிலும் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது ஆட்டங்களைப் பார்ப்பதுபோலவே ஸ்கோர் பதிபவர்கள் ஸ்கோர் பதிவதை சில நிமிடங்களாவது வேடிக்கபார்ப்பதிலும் ஆர்வம் இருந்தது. 1992 ஆம் ஆண்டு நானும் இரண்டு நண்பர்களும் சேர்ந்து காசு சேர்த்து ஒரு ஸ்கோர் பதிகின்ற கொப்பியினை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு முன்னர் இருந்த கடையொன்றில் வாங்கி, கழகங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும்போது நாமும் மைதானத்தின் இன்னோர் மூலையில் இருந்து ஸ்கோர் பதிவதை மிகவும் ஆர்வத்துடன் செய்தோம்.
எனது சிறுவயதில் விளையாட்டுகளில் அதிகளவு ஆர்வம் காட்டியிராத எனக்கு விளையாட்டுக்களுடனான அறிமுகம் கிரிக்கெட்டின் ஊடாகவே நடந்தது என்றே சொல்லவேண்டும். எனது ஆரம்பக் கல்வியை மானிப்பாயிலும் நவாலியிலும் சுதுமலையிலும் சென்ற் ஆன்ஸ், நவாலி மகா வித்தியாலயம், சுதுமலை சிந்மய பாரதி வித்தியாசாலை ஆகிய சிறு பாடசாலைகளிலேயே கற்றிருந்தேன். 1990 ஆம் ஆண்டில் நான் யாழ் நகருக்குக் கல்விகற்கச் செல்லும் வரை எமது கிராமங்களில் எம் வயதினை ஒத்தவர்களிடம் கிரிக்கெட் விளையாடுவது பெரிதாக அறிமுகமாகவில்லை. எனவே கிரிக்கெட் பற்றிய எனது அறிமுகமும் ஆர்வமும் அதனை நேரடியாக விளையாடி ஏற்பட்டதல்ல, மாறாக கிரிக்கெட் பற்றிய வாசித்த செய்திகளின் ஊடாகவே உருவானது.
அப்போது கல்கண்டு, ஆனந்த விகடன், குமுதம் போன்ற தமிழக இதழ்களில் கிரிக்கெட் பற்றி செய்திகளும் கட்டுரைகளும் வரும். அதுபோல 80களின் இறுதியில் ஈழத்தில் நியூ உதயன் பப்ளிஷேர்ஸ் (உதயன் பத்திரிகை) அர்ச்சுனா என்கிற சிறுவர் இதழ் ஒன்றினையும் நடத்தி வந்தனர். அந்த இதழிலும் கிரிக்கெட் பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. தி. தவபாலன் என்பவர் அடிக்கடி கட்டுரைகளை எழுதி வந்தார். வாசிப்பில் இருந்த ஆர்வம், கிரிக்கெட்டினை வாசிப்பின் ஊடாக இன்னும் நெருங்கச் செய்தது. அப்போது என்னைவிட எட்டு வயது பெரியவராக என் ஒன்று விட்ட சகோதரர் ஒருவரிடம் இருந்து சில பழைய ஸ்போர்ட்ஸ்ரார் இதழ்கள் கிடைத்தன. இந்துப் பத்திரிகைக் குழும வெளியீடுகளில் ஒன்றான ஸ்போர்ட்ஸ்ரார் அனேகம் கிரிக்கெட்டிற்கே முக்கியத்துவம் கொடுத்தது என்று சொல்லலாம். எனக்குக் கிடைத்த இந்த ஸ்போர்ட்ஸ்ரார் இதழ்கள்1987/88 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்தவை. அவற்றின் அட்டைகளும் முன் மற்றும் கடைசி இரண்டு பக்கங்களும் பளபளப்பான அட்டைகளில் வெளியாகுவது வழமையாக இருந்தது. அந்த இதழ்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு எனக்குக் கிரிக்கெட் மீதான ஈர்ப்பாக வளர்ந்தது என்று சொல்லலாம்.
1990ம் ஆண்டுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இல்லாததால் தொலைக்காட்சி பார்க்கின்ற வாய்ப்பு எமக்கு இருக்கவில்லை. மின்கலங்களும் தடை செய்யப்பட்டிருந்ததால் வானொலி கேட்பதும் கூட மட்டுப்படுத்தப்பட்ட அளவே இருந்தது என்று சொல்லலாம். இப்படியான சூழலில் அச்சு ஊடகங்களூடாகவே கிரிக்கெட் பற்றிய தகவல்களும் போட்டி விபரங்களும் எமக்குக் கிடைத்துக்கொண்டிருந்தன. அன்றைய போர்க்கால சூழலில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளில் பின் பக்கத்தில் கிரிக்கெட் செய்திகள் சிறிதாக வரும். பத்திரிகைகளை கடைசிப் பக்கத்தில் இருந்து படிக்கின்ற வழக்கம் எனக்கு உருவாக இவ்விதம் கடைசிப்பக்கங்களில் இடம்பெற்ற கிரிக்கெட் செய்திகளே காரணமாயின எனலாம். அதுபோல தபால் மூலமாக கொழும்பிலிருந்து The Island, Sunday Times போன்ற பத்திரிகைகள் எமக்கு வரும். அவற்றிலும் விளையாட்டுப் பகுதியில் இருந்து கிரிக்கெட் பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் படிக்கின்ற வழக்கம் இருந்தது. இதற்கு அப்பால் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற பழைய புத்தகக் கடைகளைத் தேடித் தேடிப் போய் கிரிக்கெட் தொடர்பான சஞ்சிகைகளை வாங்கும் வழக்கமும் உருவானது.
ஸ்போர்ட்ஸ்ரார், Wisden வெளியிடுகின்ற The Cricket, ஒவ்வோராண்டும் வெளிவருகின்ற Wisden Almanack என்பவற்றை தேடித்தேடி பழைய புத்தகக் கடைகளில் வாங்கிவந்தேன். அக்காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளுக்கு இடையிலும் கழகங்களுக்கு இடையிலும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்று வந்தன. இவற்றைப் பற்றிய விரிவான செய்திகளை யாழ்ப்பாணத்தில் இருந்து அப்போது வெளிவந்துகொண்டிருந்த பத்திரிகைகள் வெளியிட்டும் வந்தன. அவற்றுக்குக் கணிசமான வரவேற்பும் கிடைத்தது என்றே நினைக்கின்றேன். இந்த கிரிக்கெட் ஆர்வத்தால் நிறைய நண்பர்களும் கிடைத்தார்கள். அப்படி இரண்டு நண்பர்களுடன் (மமான்ஸ் ஜான்சன், தற்போது இலங்கையில் மருத்துவராகக் கடமையாற்றுகின்ற செல்வரத்தினம் பிரசன்னா) இணைந்து எமது பன்னிரண்டாவது வயதில் கிட்டத்தட்ட கையெழுத்துப் பிரதியாக 320 பக்கங்கள் வரத்தக்க கிரிக்கெட், கிரிக்கெட் வீரர்கள் பற்றிய குறிப்புக்களுடனும் முக்கியமான ஆட்டங்களின் ஸ்கோர் விபரங்களுடனும் கூடிய ஒரு தொகுப்பினை எழுதினோம். வீரர்களின் சாதனைப்பட்டியலை இற்றைப்படுத்தி வைக்கவேண்டும் என்ற நோக்குடன் முக்கியமான வீரர்கள் ஒவ்வொரு ஆட்டங்களிலும் பெறுகின்ற ஓட்டங்கள், விக்கெட்டுகள் குறித்த விபரங்களைக் குறித்து வைத்து தொடர்ச்சியாக அந்த விபரங்களை இற்றைப்படுத்தியும் வந்தோம். ஒரு விதத்தில் பார்க்கின்றபோது எழுத்தின் மீதும் வாசிப்பின் மீதும் ஆய்வுகள், வெளியீடுகள் குறித்ததுமான எனது ஆர்வத்தின் ஊற்றாக கிரிக்கெட் மீது எனக்கு இருந்த ஈர்ப்பே காரணம் எனலாம்.
இக்காலப்பகுதியில் எனக்குத் தெரிந்த கிரிக்கெட் ரசிகர்களின் அவதானித்த சில பொதுத்தன்மைகளைக் குறிப்பிடுவது இந்தக் கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன். அப்போது நான் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்ததால் அந்த அவதானங்களின் அடிப்படையில் 1994ம் ஆண்டளவில் இருந்த அவதானங்களை வைத்துப் பார்த்தால், அனேகமான இளைஞர்கள் இந்திய அணி ஆதரவாளர்களாக இருந்தார்கள். கொழும்பு மற்றும் வடக்குக் கிழக்கு அப்பால் கல்வி கற்றவர்களும், அங்கே நெடுங்காலம் வசித்தவர்களும் அனேகமாக இலங்கை அணி மற்றிய நல்ல மதிப்பும் ஆதரவும் கொண்டவர்களாக இருந்தார்கள். அந்தக் காலப்பகுதியில் இலங்கை அணி மிகவும் பலவீனமான ஓர் அணியாகவே இருந்தது என்றபோதும் ரஞ்சன் மடுகல்ல, ரோய் டயஸ், அரவிந்த டி சில்வா ஆகிய இலங்கை அணி வீரர்களின் திறமை குறித்த பெருமிதம் அவர்களிடம் வெளிப்படையாகவே இருந்தது. அப்போது முத்தையா முரளிதரன் பிரகாசிக்கத் தொடங்கவில்லை, 1989 இல் ஒரு சகலதுறை ஆட்டக்காரராக அணியில் சேர்க்கப்பட்ட சனத் ஜெயசூரியா இந்தக் காலப்பகுதியில் தான் (1994) அணியில் தனது இடத்தினை திடப்படுத்திக் கொண்டார் என்று சொல்லாலாம். அதே நேரத்தில் அப்போது மத்திம வயதுகளில் இருந்தவர்களுக்கு மேற்கிந்திய கிரிக்கெட் அணி பற்றிய பெருமிதங்களின் தொடர்ச்சியே இருந்தது.
ஈழத்தமிழர்கள் இடையே தென்னிந்தியப் பத்திரிகைகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதும் அவற்றினூடாக தகவல் பரிமாற்றம் இடம்பெறுவதும் ஒரு விதத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி ரசிகர்களாக ஈழத்தமிழர்களை மாற்றியதில் பங்காற்றியது எனலாம். அன்றைய நிலையில் மிகச் சாதாரணமான ஓர் அணியாகவும், தொடர்ச்சியாக வெளிநாடுகளில் பலத்த தோல்விகளைச் சந்திக்கின்ற அணியாகவும் இருந்த இந்திய அணி பற்றி தமிழக ஊடகங்கள் அன்று சித்திகரித்த விதமானது நாயக விம்பங்களைக் கட்டியெழுப்பும் விதத்தில் இருந்தது. இந்திய அணியில் தனிப்பட்ட அளவில் சாதனைகளைப் புரிந்தவர்களாக கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர் போன்ற பலர் இருந்தபோதும் அதற்கும் அப்பால் தமிழகப் பத்திரிகைகள் ஊதிப் பெருப்பித்த விம்பம் பெரியது. குறிப்பாக ஸ்ரீகாந்த் குறித்து தொடர்ச்சியாக எழுதியவற்றையும் பல வீரர்களது ஆரம்ப காலகட்டங்களிலேயே அவர்களை மிகப்பெரிய சாதனையாளர்களாகவும் சிகரங்களாகவும் சித்திகரித்து எழுதியவற்றையும் குறிப்பிடலாம். இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணி 1983 உலகக் கிண்ணத்தினை வெற்றி பெற்றபோது இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு ஏற்பட்ட பரவலான வரவேற்பின் தாக்கம் இந்திய ஊடகங்களூடாக ஈழத்திற்கும் பரவியது எனலாம். இன்னொரு விதத்தில், இதே காலப் பகுதியில் இலங்கையில் இனப்பிரச்சனை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாக மாறியபோது ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட இந்தியா தமது தோழமை நாடு என்கிற உணர்வும் இந்த நிலைப்பாட்டில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். மிக முக்கியமாக, அன்றைய காலப்பகுதியில் இலங்கைக்கும் இந்திய அணிக்கும் இடையிலான போட்டிகளின்போது மிகப் பெரும்பாலான யாழ்ப்பாணத்து இளைஞர்கள் இந்திய அணி ஆதரவாளர்களாகவே இருந்தார்கள். இதற்கு ஊடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றால் ஈழத்தமிழர்கள் இடையே வளர்த்தெடுக்கப்பட்ட இந்திய மோகமும் ஈழத்தமிழர்கள் “இலங்கை” அடையாளத்தைவிட்டு அந்நியபமாக உணர்வது அதிகரித்துச் சென்றது காரணமாக இருக்கலாம்.
புதிய சொல்லின் 8வது இதழில் இடம்பெற்ற இக்கட்டுரையினை 3 பகுதிகளாகப் பிரித்து பதிவேற்றுகின்றேன். இக்கட்டுரையில் பாவிக்கப்பட்டுள்ள தவபாலனின் கட்டுரைக்கான முகப்புப் படம் நூலகம் இணையத் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அர்ச்சுனா ஏப்ரல் 1989 இதழில் இருந்து பெறப்பட்டது.