அரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும்

165479.2இந்தியக் கிரிக்கெட் வாரியம் தனியார் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புக்கான அனுமதியை விற்கத் தொடங்கியது நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் கிரிக்கெட்டின் பரவலிலும் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியதுடன் கிரிக்கெட் ஒளிபரப்பானது பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய அளவில் உதவக்கூடியது என்பதையும் நிரூபிப்பதாக இருந்தது.  இந்தியாவை எடுத்துக்கொண்டால் 1980 வரை கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக கிரிக்கெட் வாரியம் தூர்தர்ஷனுக்கு கட்டணம் செலுத்துகின்ற நிலைமையே இருந்தது.  மெல்ல மெல்ல இந்த நிலைமை மாறி 1992 இல் இடம்பெற்ற இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் இடம்பெற்ற தொடரினை கிரிக்கெட் வாரியம் Trans World International என்கிற தொலைக்காட்சிக்கு 600,000 டொலர்களுக்கு விற்றது.  அன்றைய நிலைமையில் கிரிக்கெட் ஒளிபரப்பு லாபம் கொழிக்கின்ற ஒரு துறையாக மாறுவதற்காக தொடக்கமாக அமைந்தது.  இதன் காரணமாக கிரிக்கெட் மிகப் பெரிய ஊடக கவனத்தைத் தொடர்ந்து பெற்றுக்கொள்கின்ற ஒரு விளையாட்டாக மாறியதுடன் அது நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவத் தொடங்கியது.  இந்தியாவில் சம காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் அப்போது ஈழத்தில் நிலவிய மின்சாரத் தடை மற்றும் போர்ச்சூழல் காரணமாக உடனடியாகப் பரவாமல் இருந்தது.  இப்படியான ஒரு பின்னணியில் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறுவதற்கான ஒழுங்குகளும் நடக்கின்றன.

1996 ஆம் ஆண்டிற்கு முன்னதாக, 1987 இல் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளை நடத்தியிருந்தன.  முதல் முறையாக இங்கிலாந்து வெளியில் இடம்பெற்ற இந்த உலகக் கிண்ணப் போட்டிகள் சரியான திட்டமிடலுடனும் தொழில்முறையில் நேர்த்தியுடனும் இடம்பெற்றபோதும் பணரீதியாக நட்டமே ஏற்பட்டிருந்தது. இந்தப் போட்டிகளை நடத்தியதில் இந்தியக் கிரிக்கெட் வாரியம் 40,000 டொலர்கள் நட்டமடைந்திருந்தது.  1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த அனைத்து உலகக் கிண்ணப் போட்டிகளையும் நடத்திய நாடுகள் நட்டத்துடன் அல்லது மிகக் குறைந்த அளவு இலாபத்துடனேயே போட்டிகளை நடத்தின. அதுவரை போட்டிகளை நடத்தும் நாடுகளே அந்தப் போட்டிகளுக்குப் பொறுப்பாக இருந்தன, அதில் வரும் இலாப நட்டங்களையும் போட்டியை  நடத்தும் நாடோ அல்லது நாடுகளோ பகிர்ந்துகொண்டன.  சில சமயங்களில் போட்டி நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் உதவிப்பணம் கொடுக்கின்ற வழமையும் இருந்தது.  ஆனால் இதனை முழுக்க முழுக்க மாற்றிப் போட்ட ஒரு நிகழ்வாக 1996 உலகக் கோப்பை அமைந்தது.  இதற்கு முன்னைய உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடந்தபோது அதனை நடத்திய நாடுகள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் போட்டிகளை நடத்திய நாடுகளில் ஒன்றான இலங்கை செலவுகளைப் பகிர்வதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தது. அதனால் இலாபத்திலும் இலங்கை பங்கேற்கமுடியாமல் போக, இந்தியாவும் பாகிஸ்தானும் 50 மில்லியன் டொலர்களை இலாபமாகப் பெற்றுக்கொண்டனர்.  ஆனால் போட்டிகளில் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெற்றி பெற்றதுடன் அந்த வெற்றியானது இலங்கை அணிக்கு பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகவும் சாதகமான ஓர் அம்சமாக மாறியது.  அதைப் பற்றிப் பேசமுன்னர் அந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது இலங்கையில் வடபகுதியில் நிலவிய அரசியல் சூழல் பற்றிப் பேசுவது அவசியமாகும்.

1996-World-Cupபோர்ச்சூழல் நிலவிய அன்றைய காலத்தில் வடக்கில் பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெற்றுவந்தன.  பல கிலோமீற்றர்கள் தொலைவில் இருந்தும் சைக்கிள் ஓடி, கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதற்காக தொடர்ச்சியாக வந்துபோன பலரை நான் அவதானித்திருக்கின்றேன்.  ஆயினும் மின்சாரம் இல்லாத அன்றைய சூழலில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை.  அதேநேரம், கிரிக்கெட் போட்டிகளை வானொலி வர்ணனைகளூடாக தொடர்ந்து கேட்டு வந்தவர்கள் பலர் இருந்தபோதும். இந்தியாவிலும் இலங்கையிலும் இடம்பெறும் போட்டிகளைத் தவிர ஏனைய போட்டிகளுக்கான வானொலி வர்ணனைகள் இலங்கையில் கேட்பது என்பது மிக சிரமமானது.  அத்துடன் மொழியும் ஒரு தடையாக இருந்தது.  இது தவிர இன்னொரு முக்கிய காரணமாக, வானொலி வர்ணனைகள் நேரடி காட்சி அனுபவத்தை தராதமையால் வானொலி வர்ணனைகளைக் கேட்டு ரசிகர்களானவர்கள் என்பது மிகச் மிகச் சொற்பமானவர்களே.

இதே காலப்பகுதியில், தனியார் கல்வி நிலையங்களில் வளர்ச்சியும் மிகவேகமாக இருந்தது.  கிட்டத்தட்ட அன்றைய காலப்பகுதியில் தனியார் கல்விநிலையங்களுக்குச் செல்லாதவர்கள் என்று எவருமே இருக்கவில்லை.  விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இருந்த பகுதிகளில் தனியார் கல்வி நிலைய ஒன்றியத்தின் ஊடாக தனியார் வகுப்புகளை நடத்துவதற்கான நேர வரையறைகள் இருந்தபோதும் கிட்டத்தட்ட ஒருநாளின் முழு நேரத்தையும் பாடசாலை நேரமும் தனியார் கல்விநிலைய நேரமுமாக சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டன என்றே சொல்லவேண்டும். இப்படியான சூழலில் 1995 ஒக்ரோபர் இறுதியில் இடம்பெற்ற யாழ்ப்பாண இடப்பெயர்வு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.  இந்த இடப்பெயர்வு இடம்பெற்றது முதல் வடமராட்சி, தென்மராட்சி பிரதேசங்களும் இராணுவத்தால் கைப்பற்றப்படும் வரையான ஆறுமாத காலமும் பாடசாலைகள் எதுவும் நடைபெறவில்லை.  தற்காலிகமாக மாலை நேர பாடசாலைகள் சில தொடங்கப்பட்டபோதும் கூட அவற்றுக்கு மாணவர் தொகை மிகக் குறைவாகவே இருந்தது.  இந்தக் காலப்பகுதிகள் தென்னிந்தியத் திரைப்படங்கள் விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால் மக்கள் மாலை நேரங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மின்பிறப்பாக்கிகள் (ஜெனரேற்றர்) மூலம் மின்சாரத்தைப் பாவித்துக் பார்க்கத் தொடங்கினர்.  ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் சேர்ந்து குழுமமாக வாழ்ந்ததால். இது பலருக்கு பொழுது போக்காக மாறியது.  அதேநேரம் கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புகளையும் பார்க்கத் தொடங்கினர்.  1996 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமான போது பலரது வீடுகளில் காலை முதல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டன.  தெரிந்தவர்கள் எல்லாரும் வந்து ஆட்டங்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்டன.  எனக்குத் தெரிந்து சாவகச்சேரியில் அப்போது இருந்த சண்முகம் உணவகத்தின் உரிமையாளர் சண்முகம் அவர்கள் இருந்த வீட்டில் தனியாக ஒரு கொட்டில் ஒன்று போடப்பட்டு கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பினார்.  மிகக் கூர்மையான கிரிக்கெட் ரசிகரான அவருக்குத் தெரிந்த இன்னும் சில ஆர்வலர்களும் அவருடன் இணைந்து இதனைச் செய்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.  நிறைய கிரிக்கெட் ஆர்வலர்கள் அங்கு வந்து கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்தனர்.  பல சந்தர்ப்பங்களில் தொலைக்காட்சியை அவர் இயக்கிவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவார்.  அதற்கும் முன்னால் அவருடன் பெரிய அறிமுகம் இல்லாத நானும் இன்னும் நிறைய நண்பர்களும் அங்கு சென்று போட்டிகளைப் பார்த்தோம்.  இப்படியாக வடமராட்சியிலும் தென்மராட்சியிலும் பல இடங்களில் நடைபெற்றன.  இளவயதினரான – அதற்கு முன்னர் எந்தக் கிரிக்கெட் நேரடி ஓளிபரப்புகளையும் பார்த்திராதவர்களும், அதற்கு முன்னர் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புகளை பார்த்தவர்களுமாக கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவருக்கும் வர்ண ஆடைகளுடனும் கவர்ச்சியான விளம்பரங்களுடனும் கூடிய அந்த கிரிக்கெட் போட்டிகள் மிகவும் ரசனைக்குரியதாக இருந்தன. அந்த ஈர்ப்பும் கவர்ச்சியும் கிரிக்கெட் ரசிகர்களாக அதற்கு முன்னர் இருக்காதவர்களையும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைப் பற்றியோ, கிர்க்கெட் பற்றியோ பெரிய அறிவில்லாதவர்களையும் கிரிக்கெட் போட்டிகளை நோக்கி ஈர்த்தது.  பெரிதாக எந்தப் பொழுது போக்குகளும் இல்லாத நிலையில் பாடசாலைகளும் இயங்காத ஒரு சூழலில் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புகளைப் பார்ப்பது என்பது மிக மிக வேகமாக பலரிடையே பரவியது.  அந்த ஒளிபரப்புகளில் கிரிக்கெட் பார்த்து கிரிக்கெட் ரசிகர்களாகவும் தீவிர ரசிகர்களாகவும் மாறியவர்கள் என்று பலர் உருவானார்கள்.

prv_04f1c_1420463449இதற்குச் சமாந்தரமாக இலங்கை கிரிக்கெட் அணியின் எழுச்சியும் புதிய உத்திகளுடன் கிரிக்கெட் ஆடுவதும் அமைந்தது.  1996 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கை ஆடிய கிரிக்கெட் தொடராக அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற அவுஸ்திரேலியா, மேற்கிந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் அமைந்திருந்தது.  இந்தத் தொடரில் முதல் முறையாக களுவிதாரனவும் ஜெயசூரியாவும் ஆரம்ப ஆட்டக்காரர்களாக இலங்கை அணியால் களம் இறக்கப்பட்டார்கள்.  டிசம்பரில் தொடங்கிய இந்தத் தொடருக்கு முன்னதாக சார்ஜாவில் இடம்பெற்ற தொடரில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மேற்கிந்திய அணியும் மோதி இருந்தன.  அதில் இலங்கை தொடரை வென்றபோதும் அதன் ஆரம்ப ஆட்டக்காரர்களாக சனத் ஜெயசூரியாவுடன் ஹத்துருசிங்கவும் மஹாநாமவுமே இறங்கினார்கள். களுவிதாரன கீழ் இடைநிலை ஆட்டக்காரராக விளையாடினார்.  அந்தத் தொடரில் இலங்கை, அதற்கு முன்னர் இருந்த ஒருநாள் போட்டிகளின் போக்கிலேயே விளையாடியது.  சனத் ஜெயசூரியா கூட அதிரடியாக ஆடவில்லை.  களுவிதாரன குறைவான ஓட்டங்களை எடுத்தபோதும் வேகமாக அவற்றைப் பெற்றிருந்தார்.  அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தொடரில் ஆரம்ப ஆட்டக்காரர்களாக களுவிதாரணவும் ஜெயசூரியாவும் ஆடுவது என்றும் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பிப்பது என்று இலங்கை அணி வியூகம் அமைத்திருந்தது.  அந்தத் தொடரில் களுவிதாரண வேகமாக ஆடி கவனத்தை ஈர்த்தபோதும் ஜெயசூரியா சிறப்பாக ஆடவில்லை.  பத்துப் போட்டிகளைக் கொண்ட அந்தத் தொடரில் ஜெயசூரியா வெறும் 173 ஓட்டங்களை மாத்திரம் 61.13 என்ற ஸ்ரைக் ரேட்டில் பெற்றிருந்தார்.  களுவிதாரனவின் ஸ்ரைக்ரேட் 91.24 ஆக இருந்தபோதும் அவர் பத்து போட்டிகளில் 250 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தார். எனவே இந்த ஆரம்ப இணையப் பற்றிய பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்கும்வரை இருக்கவில்லை.


புதிய சொல்லின் 8வது இதழில் இடம்பெற்ற இக்கட்டுரையினை 3 பகுதிகளாகப் பிரித்து பதிவேற்றுகின்றேன்.  அதன் முதலாவது பகுதியை வாசிக்க https://arunmozhivarman.com/2018/06/28/political-cricket/ என்ற இணைப்பிற்குச் செல்லவும்

கிரிக்கெட் பற்றிய எனது பெரும்பாலான தேடல்களும் கொண்டாட்டங்களும் சண்டைகளும் பெரும்பாலும் விசாகனுடன் தொடங்கி விசாகனிலேயே முடிவதாகவே ஒரு காலம் இருந்தது.  அந்த நாட்களினதும் விசாகனினதும் நினைவுகளிற்கு இக்கட்டுரைத் தொடர் சமர்ப்பணம்

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: